Saturday, August 16, 2014

'தண்டச்சோறுகள்'!

15 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டோரில் 20 சதவீதம் பேர் வேலையில்லா இளைஞர்கள். குறிப்பாக சத்திஸ்கர், மத்தியப் பிரதேசம் மேற்க வங்கம், இராஜஸ்தான், ஹிமாசலப்பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களில் வேலையில்லா இளைஞர்கள் 25 சதவீதத்திற்கும் மேல் உள்ளனர். மோடியால் ‘வளர்ச்சி’ கண்ட குஜராத்திலும், தொழில் 'வளர்ச்சி' கண்ட மகாராஷ்டிராவிலும்கூட 12 சதவீத இளைஞர்களுக்கு வேலை இல்லை. இளம் வயது வட இந்தியர்களுக்கு அங்கே வாழ வழி இல்லாததால்தான் பெருமளவில் தமிழகத்தில் தஞ்சம் அடைகின்றனரோ!

பையன் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் வீட்டிலேயே இருந்தால் அவனை 'தண்டச்சோறு' என வசை பாடுகிறோம். நமது வீட்டில் மட்டுமல்ல, நாடெங்கிலும் 'தண்டச்சோறுகள்' பெருகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நமது வீட்டுப் பையன்கள் ஏன் 'தண்டச்சோறு'களானார்கள் என நாம் என்றைக்காவது சிந்தித்ததுண்டா? 

தரமான கல்வி கிடைக்காதது, வேலைவாய்ப்புகள் குறைவாக இருப்பதே வேலையின்மைக்கான முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன.

இந்தியாவில் 5 முதல் 14 வயது வரை உள்ள சுமார் 25 கோடி சிறுவர்கள் படிப்பதற்காக 14 இலட்சம் பள்ளிக்கூடங்களும், உயர் நிலை பள்ளி கல்விக்கு 71,000 மேனிலைப் பள்ளிகளும், 25,938 கல்லூரிகளும், 436 பல்கலைக் கழகங்களும் இருந்தும் தரமான கல்வி கிடைக்காததற்கு இதுவரை ஆண்ட மத்திய மாநில அரசுகள் காரணம் இல்லையா?

மோடியின் வாய்ச்சவடாலை உணர்ச்சிமிக்க பேச்சு என்றும் இந்தியாவை அவர் நிச்சயம் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வார் எனவும் உச்சி குளிரும் ஊடகவியலாளர்கள், அவர் ஆண்ட குஜராத்தில் 12 சதவீத இளைஞர்கள் வேலையின்றி திரிவதற்கு அதாவது 'தண்டச்சோறு'களானதற்கு மோடி காரணமில்லையா என ஏன் கேள்வி எழுப்புவதில்லை?

நாட்டின் வளர்ச்சிக்கு மோடி என்கிற தனிநபரை முன்னிலைப் படுத்துவதன் மூலம் பா.ஜ.க என்கிற கட்சி இருந்தாலும், மோடி இல்லாத கட்சியின் மூலம் வளர்ச்சி சாத்தியமில்லை என்றுதானே பொருள் கொள்ள முடிகிறது. மோடி இல்லாத பா.ஜ.கவை காலி பெருங்காய டப்பா என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தானோ என்னவோ, வட மாநிலங்களில் பா.ஜ.க பல ஆண்டு காலம் ஆட்சி நடத்தியும் தரமான கல்வியைக்கூட தரமுடியவில்லை! வேலை இன்மையைப் போக்க முடியவில்லை! 

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பை மையமாக வைத்து ஆட்சி நடத்துவதற்குப் பதிலாக மோடி என்கிற ஒற்றை நபரை முன்னிலைப்படுத்துவதன் மூலம் ஹிட்லர் - முசோலினி வழியில் இந்தியாவைக் கொண்டு செல்கிறார்களோ என்கிற அச்சம் எழத்தானே செய்கிறது. 

இங்கே சீமானும் வைகோவும் சீறுவதைப் போலத்தான் அங்கே மோடி சீறிக் கொண்டிருக்கிறார். வறுமையை விரட்ட “ஹரிபி ஹடாவோ” என இந்திராகாந்தி சீறியதை நாம் பார்க்கவில்லையா? வறுமை விரட்டப்பட்டதோ இல்லையோ காங்கிரசை மக்கள் விரட்டியதுதான் மிச்சம். 

இந்தியா சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் என்ன, ஆராயிரம் ஆண்டுகள் ஆனாலும் சீறுவோர் சீறிக் கொண்டுதான் இருப்பார்கள். மக்கள் என்னவோ சீந்துவாறின்றிதான் கிடப்பார்கள். இதுதான் இந்திய ஜனநாயகத்தின் மகத்துவம்.

(குறிப்பு: புள்ளி விவர ஆதாரம்: (THE HINDU, 15.08.2014, Chennai)

Thursday, August 14, 2014

மதக்கலவரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியுமா?

ஒரு இந்துப் பெண் கற்பழிக்கப்பட்டு இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டதாகக்கூறி மீரட்டில் மிகப்பெரிய கலவரத்தை நடத்தின சங்பரிவார அமைப்புகள். மதமாற்றம் குறித்து ஆதாரமற்ற அறிக்கைகளை ஜெயதி பாரதம் போன்ற அரசுசாரா அமைப்புகள் அறிக்கை வெளியிடுவதை மிக வன்மையாகக் கண்டித்திருக்கிறது உச்சநீதி மன்றம்.

2014 ல் ஏப்ரல் முதல் சூன் வரை மூன்று மாத காலத்தில் நாடு முழுக்க நடைபெற்ற 149 கலவரங்களில் உத்தரப்பிரதேசத்தில் 32 கலவரங்களும், மகாராஷ்டிராவில் 26 கலவரங்களும், மத்தியபிரதேசத்தில் 17 கலவரங்களும் நடந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. அதே போல 2013 ல் நாடு முழுக்க நடைபெற்ற 823 கலவரங்களில் உத்தரப் பிரதேசத்தில் 247 கலவரங்களும், மகாராஷ்டிராவில் 88 கலவரங்களும், மத்தியபிரதேசத்தில் 84 கலவரங்களும், கர்நாடகாவில் 73 கலவரங்களும், குஜராத்தில் 68 கலவரங்களும் நடந்திருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. 


காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமானால் மதக்கலவரங்கள் தேவைப்படுகிறது. அதே போல பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும் அக்கட்சிக்கு மதக்கலவரங்கள் தேவைப்படுகிறது. எனவே மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் மதக்கலவரங்கள் அதிகரித்துவிட்டன என்பது ஒன்றும் ஆச்சரியம் தரக்கூடிய செய்தியோ அல்லது அதிர்ச்சி தரக்கூடிய செய்தியோ அல்ல. மதக்கலவரங்களே நடக்கவில்லை என்றால்தான் நாம் ஆச்சரியப்பட வேண்டும். 

சங்பரிவார அமைப்புகளின் வளர்ச்சிக்குப் பிறகே இந்தியாவில் மதக் கலவரங்கள் அதிகரித்துள்ளன. எனவே, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகள் நீடிக்கும் வரை மதக்கலவரங்கள் தொடரவே செய்யும். 

Tuesday, August 12, 2014

கல்யாணம் முதல் கருமாதி வரை விடாது துரத்தும் சமஸ்கிருதம்!

100 கோடி பேருக்கு மேல் வாழக்கூடிய இந்திய நாட்டில் வெறும் 14,135 பேர் மட்டுமே சமஸ்கிருத மொழியை தங்களது தாய்மொழி என அறிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம், வடக்கு தெலிங்கானா, தெற்கு இராஜஸ்தான், நாக்பூர், மற்றும் ஹரித்துவார் போன்ற ஒரு சில இடங்களில் மட்டுமே குறிப்பிடத்தக்க ஒரு சிலர் சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.

சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்டுள்ளோர்:

சித்பூர் மாவட்டம் (உத்தரப்பிரதேசம்) : 550
யுன்னாவோ (உத்தரப்பிரதேசம்)      : 334
லக்னோ (உத்தரப்பிரதேசம்)          : 307
கோரக்பூர் (உத்தரப்பிரதேசம்)         : 300
ஹரித்துவார் (உத்தரகாண்ட்)         : 288
டெல்லி                              : 279
பெங்களூரு                          : 235
அடிலாபாத் (தெலிங்கானா)          : 134

1981 ல் 6,106 பேரும், 1991 ல் 49,736, பேரும், 2001 ல் 14,135 பேரும் சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்டிருந்ததாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், மத்தியப்பிரதேசத்துக்கு கிழக்கே உள்ள மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர், தமிழ்நாடு, கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்டோர் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம்.

சென்னை மாகாணத்தில் 315 பேர் சமஸ்கிதத்தை தாய்மொழியாகக் கொண்டிருந்ததாக 1921 ஆண்டு புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அதன் பிறகு சமஸ்கிதத்தை தாய்மொழியாகக் கொண்டோர் 1981 ல் 6,106 பேரும், 1991 ல் 49,736, பேரும், 2001 ல் 14,135 பேரும் என ஏற்ற இறக்கங்கள் கண்டுள்ள ஒரே மொழி சமஸ்கிருதம் மட்டுமே. ஒரு வேளை இது புள்ளி விவரக் கணக்கெடுப்பில் நேர்ந்துள்ள தவறாக இருக்குமோ என ஒரு சிலர் கருதக்கூடும். உடனடி அரசியல் தேவைகளுக்காக இவர்கள் அடிக்கடி தாய்மொழியை மாற்றிக் கொள்வதே இந்த ஏற்ற இறக்கங்களுக்குக் காரணம்.

மேற்கு இந்தியாவில் வாழும் பல்வேறு குழுக்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் பேசும் ‘பில்’ (BHIL) மொழியை தங்களது தாய் மொழி என அறிவித்ததால் 1991 மற்றும் 2001 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் அம்மொழி பேசுவோர் எண்ணிக்கை இரட்டிப்பாகியது. இவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசினாலும் பில் மொழிதான் தங்களது தாய்மொழி என் அறிவித்ததற்குக் காரணம் ஜார்கண்ட்டைப் போல தங்களுக்கு ஒரு தனி மாநிலம் தேவை என்பதற்காகத்தான்.

இந்திக்கு அடுத்தபடியாக பேசப்படும் வங்காளி மொழி பேசுவோரின் எண்ணிக்கை மேற்கு வங்கத்தில் அம்மாநில மக்கள் தொகையைவிட அதிகமாக உள்ளது. மேற்கு வங்கத்தில் குடியேறிய வங்காள தேசத்தினர் தங்களது தாய்மொழி உருதுவாக இருந்த போதிலும் “இந்தியக் குடியுரிமை“ கிடைக்கும் என்பதற்காக அவர்கள் தங்களது தாய்மொழி வங்காளம் என்று அறிவித்ததே  மேற்கண்ட எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்குக் காரணம். இது கடந்த முப்பது ஆண்டு கால விவரக் கணக்கு.

கௌரவத்திற்காகவும், இந்திய அரசமைப்பில் சமஸ்கிருதத்திற்கு சிறப்புத் தகுதிகள் வழங்கப்பட்டிருப்பதனாலும் ஒரு சிலர் தங்களது தாய்மொழி சமஸ்கிருதம் என போலியாக அறிவித்துள்ளனர். இல்லை எனில் சமஸ்கிருதம் பேசுவோரின் எண்ணிக்கை மேலும் மிகக் குறைவாகத்தான் இருக்கும்.

இந்தியாவின் ஏதோ ஒரு மூளையில் இன்னமும் சமஸ்கிருதம் பேசப்படுவதாக ஒரு சிலர் உணர்வதால்தான் (feel) இம்மொழி செல்வாக்கு செலுத்துவதாகக் கருதப்படுகிறது. ஆனால் கர்நாடகாவில் உள்ள சமஸ்கிருத கிராமம் என வர்ணிக்கப்படும் மட்டூர் (mattur) கிராமத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே சமஸ்கிருதத்தை தங்களது தாய்மொழியாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.


வெறும் 0.000014135 சதவீதம் பேரின் தாய்மொழியாக இருக்கக்கூடிய சமஸ்கிருதம் எவ்விடத்திலும் எப்பொழுதும் இல்லாத ஒரு மொழியாக இருந்த போதிலும், அது நமது கருத்துக்களில், எண்ணங்களில் நம்முடன் வாழ்கிறது. அம்மொழியோடு ஒரு உணர்ச்சி பூர்வமான பிணைப்பு இருக்கிறது. புராண - இதிகாசங்கள் மீதும், சடங்குகள் - சம்பிரதாயங்கள் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கைகள் நீடிக்கும் வரை சமஸ்கிருதம் செல்வாக்கு செலுத்தவே செய்யும்.

வறட்சி - புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களின் விளைவால் ஏற்படும் கேடுகளிலிருந்தும், அரசியல் -  பொருளாதார – பண்பாட்டுச் சூழலை கட்டுப்படுத்தும் சமுதாயச் சக்திகள் ஏற்படுத்தும்  கேடுகளிலிருந்தும் மந்திரச் சடங்குகள் செய்வதன் மூலம் தனக்குத் துன்பங்கள் நேராதிருக்கவே ஒவ்வொருவரும் விரும்புகின்றனர். அடிமை உடைமைச் சமுதாயம் தொடங்கிய காலத்திலிருந்து  மந்திரங்கள் சமய வடிவில் பிரதிபலிப்பதாலும், இந்தியாவைப் பொருத்தவரை வேத - மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் இருப்பதாலும், மந்திரம் ஓதுவது ஒரு முழுநேரத் தொழிலாக இருப்பதாலும் இறப்பிற்குப் பிறகும் மந்திரங்கள் மனிதனை துரத்திக் கொண்டிருக்கின்றன.

அதனால்தான் சமஸ்கிருதத்தை தாய்மொழியாக யாரும் ஏற்றுக் கொள்ளாமலேயே அல்லது சமஸ்கிருதம் பேச்சு மொழியாக இல்லாமலேயே பூமிபூஜைகளிலும், கிரகப்பிரவேசங்களிலும், கணபதி ஹோமங்களிலும், பூப்புனிதநீராட்டு விழாக்களிலும், கல்யாணம் – கருமாதி – திதிகளிலும், கோவில்களில் அன்றாட வழிபாடு மற்றும் பரிகாரப் பூஜைகளிலும் சமஸ்கிருதம் கோலோச்சுகிறது.

சமஸ்கிருதம் மக்களின் அன்றாட வாழ்வில் ஆதிக்கம் செலுத்துவதை அறிவால் மட்டுமே ஒழித்துவிட முடியாது. இயற்கைக் கேடுகளிலிருந்தும், சமூகக் கேடுகளிலிருந்தும் மனிதனை பாதுகாக்கக்கூடிய, மனித வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரக்கூடிய ஒரு சமூகம் அமையும் பட்சத்தில் சமய வடிவில் பிதிபலித்து நிற்கும் சடங்குகளும் மந்திரங்களும் மறைந்தொழியும். அப்பொழுது மந்திரங்களில் மட்டுமே ‘உயிர் வாழும்’ சமஸ்கிருதமும் நம் அன்றாட வாழ்விலிருந்து மறையும். இதற்கு தனிமனித செயலைவிட ஒரு சமுதாயச் செயலே இன்றைய தேவையாக இருக்கிறது.


(குறிப்பு: புள்ளி விவர ஆதாரம்: THE HINDU, Chennai. 10.08.2014)

தொடர்புடைய பதிவுகள்:

Saturday, August 9, 2014

கட்டமைப்பை அவன் செய்வானாம்; கால அட்டவணையை இவன் போடுவானாம்!

“பாதுகாப்புத் துறையில் 49 சதவீதம் நேரடி அந்நிய முதலீடு”.

இனி தளவாட உற்பத்தி பல்கிப் பெருகும். கார்கில்களும் பெருகும். நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்யும் 'வீரர்கள்' உங்கள் வீட்டிலும் இருப்பார்கள்.

”தொலைத் தொடர்புத் துறையில் ஒரு இலட்சம் பேருக்கு விருப்ப ஓய்வு”.

ஓய்வுத் தொகையை வைத்துக் கொண்டு வெங்காயம் கூட வாங்க முடியாது. இனி ‘அம்மா’ உணவகங்களிலும் ‘அண்ணா’ உணவகங்களிலும் கூட்டம் அலை மோதும். கூட்ட நெரிசலை சமாளிக்க ‘மாத்தா’ உணவகங்கள் ‘பாரத’மெங்கும் விரிவடையும்.

“காப்பீட்டுத்துறையில் 49 சதவீதம் நேரடி அந்நிய முதலீடு”.

“உஷார்! உஷார்! உயிருக்கு ஆபத்து!” என கூவிக் கொண்டே இனி மிரட்டிப் பணம் பறிக்கும் கூட்டம் உங்கள் வீட்டுக் கதவை தட்டப் போவது நிச்சயம்.

”இரயில்வே துறையில் கட்டமைப்புப் பணிகளில் 100 சதவீதம் நேரடி 
அந்நிய முதலீடு”.

இரயில்வேயில் கட்டமைப்பை அந்நியன் எடுத்துக் கொண்டால் எஞ்சி
இருப்பது கால அட்டவணை மட்டும்தானே. கட்டமைப்பை அவன் செய்வானாம்; காலஅட்டவணையை இவன் போடுவானாம்!

Friday, August 8, 2014

வருண பகவானை மீட்க விரைந்துள்ள வானரப்படைகள்!

எங்கே வீடு?

“இந்தியாவின் நகர்ப்புறங்களில் 1.88 கோடி கும்பங்களுக்கு வீடுகள் இல்லை. அதாவது நகர்ப்புறங்களில் சுமார் 9.4 கோடி மக்கள் விடு இல்லாமல் தவிக்கின்றனர். 

தமிழ் நாட்டின் நகர்ப்புறங்களில் 12 லட்சம் குடும்பத்தினர் வீடின்றி தவிப்பு; அதாவது தமிழ் நாட்டின் நகர்ப்புறங்களில் சுமார் 60 லட்சம் பேர் 'பிளாட்பார' வாசிகள். 

அதே போல குஜராத்தின் நகர்ப்புறங்களில் 9 லட்சம் குடும்பத்தினர் வீடின்றி தவிப்பு; அதாவது குஜராத்தின் நகர்ப்புறங்களில் 45 லட்சம் பேர் 'பிளாட்பாரவாசிகள்'”.

சில குச்சிகளை மட்டும் நட்டு அதன் மேலே ஓலை / கீற்றுகளைப் போட்டு கீழே ஒண்டி வாழும் கோடிக்கணக்கான கிராமப்புற / பழங்குடி மக்கள் எல்லாம் சொந்த வீட்டில் வாழும் ‘லேண்ட்லார்டுகள்’ என்பதால் அவர்கள் இந்தப்புள்ளி விவரக் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை போலும். 
எனினும் பரந்து விரிந்த கானகங்களில் பரண்களும், பண்டாரக்குடில்களும் விரைவில் அமைக்கப்பட உள்ளதால், இனி வீடற்றவர்கள் அங்கே குடியேறி பஜகோவிந்தம் பாடி ஆனந்தமாய் வாழ வழி பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்கே தண்ணீர்?

“நாட்டில் நகர்ப்புறங்களில் வசிக்கும் 71 சதவீத வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு உள்ளது. அதாவது 39 சதவீத வீடுகளில் வசிப்போர் மதிவண்டிகளில் குடங்களைக் கட்டிக் கொண்டு தண்ணீருக்காக தெருத்தெருவாய் அலைந்து கொண்டுள்ளனர்”.

கோடைகாலங்களில் தண்ணீரைத்தேடி யானைகளும், மான்களும் காடுகளை விட்டு வெளியேறி, ஏரி குளங்களை நோக்கி படையெடுப்பதைப் போல, தாகம் தீர்க்க தண்ணீரைத்தேடி தங்கள் ஊரைவிட்டு வெளியேறி காலிக்குடங்களுடன் அலைந்து திரியும் கோடிக்கணக்கான கிராமப்புற /  பழங்குடி ஏழை எளிய மக்கள் இந்தக் கணக்கில் வரமாட்டார்களோ!எனினும் எல்நினோ அரக்கனை வதம் செய்து வருண பகவானை மீட்பதற்காக வானரப்படைகள் இந்தியப் பெருங்கடல் நோக்கி விரைந்துள்ளதால் இனி குழாய் இணைப்பின்றியே குடிநீர்ப் பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்கே வெளிச்சம்?

“இந்தியாவில் எட்டு கோடி வீடுகளுக்கு மின் வசதி இல்லை. அதாவது சுமார் 40 கோடி பேர் இருளில் வாழ்கின்றனர்”.
வருகிற  ஐந்து ஆண்டு காலத்திற்கு நடுவானில் நங்கூரமடிக்கக்கோரி சூரியபகவானை கேட்டுக்கொள்வதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் இதன் மூலம் இந்தியாவின் இருள் விரைவில் நீங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Friday, August 1, 2014

சேர்ந்தே இருப்பது மாமுலும் கொள்ளையும்!

“வழிப்பறி கொள்ளையனை விரட்டிப் பிடித்த போலீசார்!” – இது வேலூர் மாவட்டச் செய்தி.

“காவல் நிலையத்திலேயே நகை திருடிய காவலர் கைது!” – இது கோவை மாவட்டச் செய்தி.

இவை முரண்பட்ட செய்திகளானாலும் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.

வழிப்பறி கொள்ளையனின் செல்பேசிப் பயன்பாட்டை வைத்து  விரட்டிப் பிடித்திருப்பதைப் பார்த்தால் இவனது தொழிலே வழிப்பறி தொழிலாகத்தான் இருக்க வேண்டும். வழிப்பறியையே தொழிலாகக் கொண்டவன் முறையாக மாமுல் செலுத்தியிருந்தால் இவனுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

மாமுல் முறையாக கிடைத்து வந்தால் காவல் நிலையத்திலேயே காவலரே திருடும் நிலையும் ஏற்பட்டிருக்காது?

எங்கெல்லாம் முறையான மாமுல் செலுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் தாதுமணல் கொள்ளையும், கிரானைட் கொள்ளையும், ஆற்று மணல் கொள்ளையும், செம்மரக்கடத்தலும் கனஜோராய் நடந்தேறி வருகின்றன. 

ஒரு தொழில் சட்டத்திற்கு விரோதமானதா இல்லையா என்பதை மாமுலே தீர்மானிக்கிறது. எங்கெல்லாம் எதிர்பார்த்த மாமுல் செலுத்தப்படவில்லையோ அல்லது மாமுலே கொடுக்காமல் கொள்ளையும்,  திருட்டும் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் கனஜோராய் சட்டம் தனது கடமையைச் செய்கிறது. 

மாமுல் எதிர்பார்க்கும் அனைவரையும் சமாளித்துவிட்டால் கொள்ளையர்களும் திருடர்களும் தங்கள் தொழிலை தொடர்வதற்கு தடையேதும் ஏற்படுவதில்லை. இதில் மாமுல் எதிர்பார்க்கும் யாராவது ஒருவரை கவனிக்காமல் விட்டுவிட்டால்கூட அது வில்லங்கமே. 

வில்லங்கம் ஏற்படும் போது மட்டுமே ஒரு சில கொள்ளைகளும் திருட்டும் அம்பலத்துக்கு வருகின்றன. வில்லங்கத்தில் மாட்டிக் கொள்ளாமல் கொள்ளையடிப்பவன் பிழைக்கத் தெரிந்தவன். வில்லங்கத்தில் மாட்டிக் கொள்பவன் ஏமாளி. 

ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர சமூகத்தின் எதார்த்தம் இதுவே!