Tuesday, March 29, 2011

கொள்ளையடிப்பதில் கெட்டிக்காரன் யார்? வடக்கத்தியானா? தெக்கத்தியானா?

"வை ராஜா வை!"

 "பத்து வச்சா நூறு! நூறு வச்சா ஆயிரம்!"

"இன்னக்கி விட்டா என்னைக்கும் வராது!"

"வை ராஜா வை!"

இப்படி கிராமங்களில், கோயில் திருவிழாவின் போது லங்கர் கட்டை உருட்டி , மூனு சீட்டைப் புரட்டி, அப்பாவி மக்களுக்கு ஆசை காட்டி, மோசடி மூலம்  காசை அள்ளும் பித்தலாட்டக் காரர்களை பார்க்காதவர்கள் இருக்க முடியாது. ஏமாறாதவர்களும் இருக்க முடியாது. ஆசை யாரைத்தான் விட்டது? புத்தனே வந்தாலும் இவர்களிடமிருந்து தப்புவது கடினம்தான்.

இப்போது தேர்தல் திருவிழா. கிராமம் முதல் நகரம் வரை மூனு சீட்டுக் காரர்கள் கடை விரித்து விட்டார்கள். கோயில் திருவிழாவின் போதும் கூட்டணி அமைத்துதான் கடை விரிப்பார்கள். தேர்தல் திருவிழாவிலும் அதே பாணிதான். 

மாரியாத்தா திருவிழா போல உள்ளுராட்சித் தேர்தல் திருவிழா; பொங்கல் திருவிழா போல சட்டமன்றத் தேர்தல் திருவிழா; தீபாவளி திருவிழா போல நாடாளுமன்றத் திருவிழா என திருவிழாக்கள் எதுவானாலும் கடை விரிப்பதோ அதே கபட வேடதாரிகள்தான்.

கோயில் திருவிழாவோ, தேர்தல் திருவிழாவோ எதுவானாலும் ஏமாளி என்னவோ அதே அப்பாவிகள்தான். ஏமாளியில் சிறந்த ஏமாளி யார் என்கிற போட்டிக்கு இங்கே அவசியமில்லாமல் போய்விட்டது.

ஆனால் மூனு சீட்டு மோசடியில் அதிகம் கொள்ளையடித்தவன் யார்? ஊரைப் பொருத்து, தொகுதியைப் பொருத்து, மாநிலத்தைப் பொருத்து இதில் ஏற்ற இறக்கங்கள் உண்டு. இருந்தாலும் கொள்ளையடிப்பதில் திறமைசாலி யார் என்ற கேள்விக்கு அவ்வளவு எளிதில் பதில் சொல்லிவிட முடியாதுதான். 

தமிழ்நாட்டு அரசியல்வாதி மந்திரியாக இருந்த போது புதுமனைப் புகுவிழா நடத்தினானாம்.அதற்கு நாடெங்கிலும் இருந்து அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் வந்திருந்தார்களாம்.  செட்டி நாட்டு அரண்மனைக் கணக்காய் கட்டியிருந்த வீட்டைப் பார்த்து மூக்கின் மேல் விரலை வைத்து அசந்து போனார்களாம் வந்திருந்த வடநாட்டு அரசியல் வாதிகள்.

'பரம்பரை பரம்பரையாய் அரசியலில் இருக்கும் நம்மால் இது போன்ற ஒரு பங்களாவைக் கட்டமுடியவில்லை. நேற்று அரசியலுக்கு வந்தவன் இப்படிக் கட்டியிருக்கிறானே' என வாய் பிளந்து நின்றார்களாம் வட நாட்டு அரசியல் வாதிகள்.  "ஜீ ... இது எப்படி சாத்தியமானது?" என காதருகில் சென்று குசு குசு குரலில் கேட்டானாம் வட நாட்டுக்கார நண்பன். "பிறகு சொல்கிறேன். முதலில் விருந்தை முடி" என்றானாம் தமிழ்நாட்டு்காரன்.

விருந்து முடிந்தது. இரகசியத்தைக் கேட்டவன் நெருங்கிய நண்பன் என்பதால் அவனை மட்டும் ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றானாம்.

"இதோ இந்தப் பாலத்தை நான்தான் கட்டினேன். பாலம் கட்டும் போது சிந்திய சிமெண்ட்டில்தான் எனது வீட்டையும் முடித்தேன்" என்றானாம்.

பாலம் எவ்வளவு பலம் வாய்ந்தது என்பதைப் புரிந்து கொண்ட வட நாட்டு நண்பன் விடை பெற்றுச் சென்றானாம்.

பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து, தனது வடநாட்டு நண்பனிடமிருந்து புதுமனை புகுவிழாவிற்கு அழைப்பு வர, தமிழ் நாட்டு அரசில் வாதி வடக்கே சென்றானாம். அவனது வீட்டைப்பார்த்து இவன் அசந்து போனானாம். நம்மை விஞ்சிவிட்டானே என்று உள்ளூர பொறாமை. வெளிக்காட்டிக் கொள்ளாமல் ரகசியத்தைத் தெரிந்து கொள்ள காதருகே சென்று "இது எப்படி?" என குசு குசு குரலில் கேட்டானாம். 

"விருந்தை முடி பிறகு சொல்கிறேன்" எனக் கூறிவிட்டு நகர்ந்தானாம். வந்தவர்களை வரவேற்று உபசரித்து வழியனுப்ப அன்றைய நாள் கழிந்தது. "காலையில் பார்க்கலாம் தூங்கு" எனக் கூறிவிட்டு அவனும் தூங்கச் சென்றுவிட்டானாம். பிரமிப்பூட்டும் இம்மாளிகை உருவான இரகசியம் தெரியாமல் அன்றைய தூக்கம் போனது தமிழ்நாட்டுக்காரனுக்கு.

மறு நாள் பொழுது விடிந்தது. தமிழ் நாட்டுக்காரனை ஒரு ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றானாம்.

"இதோ பார் பாலம்" எனக் காட்டினானாம் வட நாட்டுக்காரன். அவன் காட்டிய இடத்தில் எதுவும் இல்லை.

"எங்கே பாலம்?" என்று மீண்டும் கேட்டானாம் தமிழ் நாட்டுக்காரன்.

"இந்தப் பாலம்தான் அங்கே எனது பங்களா" என்றானாம். 

ஒரு நிமிடம் அசைவற்று நின்ற நண்பனை அனைத்து அழைத்துச் சென்றானாம் வட நாட்டுக் காரன்.

Sunday, March 27, 2011

முற்போக்கு ஜோதிடர் புனிதப்பாண்டியனின் புரட்சி ஆரூடம்!


பதிவர் சரவணன் அவர்களின் படைப்பு ஒன்று வலைப்பூ வாசகர்களுக்காக இங்கே மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழகத்தில் தலித் முரசு என்று ஒரு பத்திரிகை, அதற்கு புனிதப்பாண்டியன் என்று ஒரு ஆசிரியர், அவர்களுக்கென்று ஒரு அரசியல், வேலைத்திட்டம் அனைத்தும் தேவனால் வழங்கப்பட்டிருக்கின்றன ! குறிப்பாக மார்க்சியத்தை சாதி என்கிற பாதுகாப்பு வளையத்திற்குள் நின்று கொண்டு தாக்கி தலித் மக்கள் மத்தியில் மதிப்பிழக்கச்செய்வதும், மார்க்சியத்தின் மீது அவநம்பிக்கை கொள்ளச்செய்வதும் தான் இவர்களுக்கு இடப்பட்ட திருப்பணி. தலித் முரசின் கட்டுரைகளையும், புனிதப்பாண்டியனின் கருத்துக்களையும் இந்த நோக்கிலிருந்து தான் பார்க்க வேண்டும். தலித் முரசின் செயல்பாட்டை தொடர்ச்சியாக கவனித்தால் அவர்கள் கம்யூனிச எதிர்ப்பையும் வெறுப்பையும் விதைத்துக்கொண்டிருப்பதை அறியலாம்.

சமீபத்தில் சென்னை அரசியல் பள்ளி என்கிற அமைப்பு 'தேர்தல்களும் மக்களாட்சியும்: சில கண்ணோட்டங்கள்' என்கிற தலைப்பில் நடத்திய கருத்தரங்கில் 'மக்களாட்சி எனும் மாயை' என்கிற தலைப்பில் பேச வேண்டிய புனிதப்பாண்டியன் “மக்களாட்சியில் ஏதும் மாயை இல்லை. இப்போதிருப்பது மக்களாட்சியா இல்லையா என்பதில் வேண்டுமானால் கருத்து வேறுபாடு இருக்கலாமே தவிர‌ நாம் அடைய வேண்டிய இறுதி லட்சியம் ஜனநாயகம் தான்” என்று பேசினார். தொடர்ந்து மக்களாட்சியை பற்றி சிற்சில தத்துவ முத்துக்களையும் உதிர்த்துவிட்டு அந்த தலைப்பை அத்துடன் முடித்துக்கொண்டு ”இந்தியாவில் புரட்சி நடக்குமா நடக்காதா” என்கிற தனக்கு கொடுக்கப்படாத தலைப்பில் பேசத்துவங்கி விட்டார்.

ஜனநாயகம் என்கிற ’மக்களாட்சி’ அது தோன்றிய நாடுகளிலேயே ’மக்களால்’ கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகத்தின் சர்வாதிகாரத்தன்மையை உணர்ந்து கொண்ட அமெரிக்க, ஐரோப்பிய மக்கள் அதை தூக்கியெறிந்துவிட்டு அடுத்த சமூக அமைப்பை நிறுவப்போராடி வருகிறார்கள். ஆனால், நமது பு.பா வோ இப்போது தான் தனது லட்சிய சமூகமான மக்களாட்சிக்கான பிரச்சாரப் பயணத்தையே துவங்கியிருக்கிறார்!

லெனின் கூறுவார், ”ஒருவன் ஜனநாயகம் வேண்டும் என்று கேட்டால் யாருக்கு என்று அடுத்த கேள்வியை கேட்பவன் தான் மார்க்சியவாதி.” ஏனெனில் ஜனநாயகம் என்பது வர்க்கச்சார்பானது. ஒரு சமூக அமைப்பிலிருக்கும் இரண்டு வர்க்கங்களுக்கும் சமமான (ஆளும் வர்க்கம்-ஆளப்படும் வர்க்கம்) ஜனநாயகம் என்பது இருக்கவே முடியாது. சிறுபாண்மை முதலாளிகளுக்கு ஜனநாயகம் என்றால் பெரும்பாண்மை உழைக்கும் மக்களுக்கு அது சர்வாதிகாரமாகத் தான் இருக்க முடியும். மற்றொரு புறம் பெரும்பாண்மை மக்களுக்கு ஜனநாயகம் வழங்கப்படும் சமூக அமைப்பில் சிறுபாண்மை ஆளும் வர்க்கத்துக்கு சர்வாதிகாரமே வழங்கப்படும்.

இதில் புனிதப்பாண்டியன் அடையப்போகும் லட்சிய ஜனநாயகம் எந்த வகையைச் சேர்ந்தது ? அது எப்படி இருக்கும் ? அதில் முழுக்க ஜனநாயகம் மட்டுமே இருக்குமா அல்லது சர்வாதிகாரமும் இருக்குமா ? எனில் யாருக்கு ஜனநாயகம் யாருக்கு சர்வாதிகாரம் ?

உரையில் ஆங்காங்கே சில நரித்தனங்களையும் செய்திருக்கிறார் திருவாளர் பு.பா.

முதல் விசயம், தனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பில் நின்று பேசாமல் பேச்சினூடாகவே வேறு தலைப்பிற்கு மாறிக்கொண்டது. பேசு பொருளை விட்டுவிட்டு கம்யூனிஸ்டுகளை பற்றியும், புரட்சியை பற்றியும் பேச வேண்டிய அவசியம் என்ன ? புரட்சி வருமா வாராதா என்பதை பற்றி அண்ணன் கருத்து சொல்லியே ஆக வேண்டும் என்று அரங்கத்தில் யாராவது ஒற்றைக்காலில் நின்றார்களா ? இல்லையே, எனில் அது குறித்து பேச வேண்டிய அவசியம் என்ன, அதுவும் எதிர்மறையில் ? அங்கே தான் இருக்கிறது தலித் முரசிற்கு தேவனால் பணிக்கப்பட்ட வேலைத்திட்டம் !

இரண்டாவதாக விசயம், கம்யூனிஸ்டுகளை ஆன்மீகவாதிகளுடன் ஒப்பிட்டு பேசியிருக்கிறார்.

தோழர் ஜூலிஸ் பூசிக் சொன்னதைப்போல தனி வார்ப்புகளான கம்யூனிஸ்டு புரட்சியாளர்களை மூடத்தனத்தை பரப்பும் ஆன்மீகவாதிகளோடு ஒருவனுக்கு ஒப்பிடத்தோன்றுகிறதென்றால் அந்த விசுவாசிக்கு கம்யூனிஸ்டுகள் மீது எவ்வளவு வன்மம் இருக்க வேண்டும்? தீவிர கம்யூனிச விரோதியைத் தவிர வேறு யாரால் இப்படியெல்லாம் ஒப்பிட முடியும் ? மேலும் கம்யூனிஸ்டுகள் சாமி கும்பிடுகிறார்கள் என்றும் பொய் பேசியிருக்கிறார்.

கீழ்கண்டவை கம்யூனிஸ்டுகள் குறித்து பு.பா பேசியவை.  
 
”ஆன்மீகவாதிகள் எப்படி அவனின்றி அணுவும் அசையாது என்கிறார்களோ அதே போலத்தான் இவர்களும் அரசியலின்றி எதுவுமே நடக்காது என்கிறார்கள். இதுவும் ஒரு வகை கடவுள் நம்பிக்கை போலத்தான், மேலும்  கடவுளை ஏற்றுக்கொள்கிற கம்யூனிஸ்டுகளும் இருக்கிறார்கள்” என்று பேசியுள்ளார்.

விசுவாசத்திற்கு என்ன ஒரு மூர்க்கத்தனம் ? கடவுளை வழிபடுபவன் ஒரு கம்யூனிஸ்ட்டாக இருக்க முடியும் என்று சொல்லுபவன் எப்படிப்பட்ட ஒரு முட்டாளாக இருக்க முடியும்!!. அப்படி கடவுளை வழிபடுபவனை ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக வைத்துக் கொண்டிருக்குமா ? இந்த சாதாரண உண்மை கம்யூனிசம் பற்றிய அடிப்படை அறிவுள்ளவர்களுக்கு கூடத் தெரியும், ஆனால் இந்த நாட்டில் புரட்சி வருமா வராதா என்கிற அளவுக்கு ஆரூடம் கூறப் புறப்பட்டிருக்கிற திருவாளர் பு.பா வுக்கு தெரியவில்லை என்பது அவரது முட்டாள்தனத்தைக் காட்டுகிறதா அல்லது அயோக்கியத்தனத்தைக் காட்டுகிறதா?. இல்லை, இல்லை நான் சி.பி.எம் காரர்களைத் தான் சொன்னேன் என்றால் அதைத் தெளிவாகச் சொல்லவேண்டும். மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் எல்லாம் இப்படி, இப்படி இருக்கிறார்கள் என்று குறிப்பாகச் சொல். அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களுடைய கட்சியும் அப்படித்தான் இருக்கிறது. அவர்கள் கம்யூனிஸ்டுகள் இல்லை, இல்லை என்று நாங்களும் கடந்த முப்பது ஆண்டுகளாக சொல்லிக்கொண்டிருக்கிறோமே அது இந்த பு.பா காதில் மட்டும் விழவில்லையா ? போலிக் கம்யூனிஸ்டுகளிடம் போய் உண்மையான கம்யூனிச பண்புகளை எதிர் பார்ப்பதும், அதையே சாதகமாக்கிக்கொண்டு கம்யூனிஸ்டுகளே கூட சாமி கும்பிடுகிறார்கள் என்று பொதுமைப்படுத்தி பேசுவது புத்திசாலித்தனமா - அயோக்கியத்தனமா ?. 

இவ்வாறு பேசுவதெல்லாம் வாய் தவறித் தெரியாமல் பேசுவதல்ல, அல்லது கடவுள் மறுப்புக்கொள்கையில் தனக்கிருக்கும் பற்றினால் பேசுவதல்ல மாறாக திட்டமிட்டு செய்வதாகும். இவ்வாறு போலிக் கம்யூனிஸ்டுகளின் தவறுகளை சாதகமாக்கிக்கொண்டு உண்மையான கம்யூனிஸ்டுகளையும் இழிவுபடுத்த என்ன காரணம் ? காரணம் மேற்சொன்னது தான். இந்த லட்சணத்தில் இடதுசாரிகள் விவாதத்திற்கு முன் வர வேண்டுமாம். கடவுளை நம்புகிறவன் கம்யூனிஸ்ட் என்று கூறும் ஒரு முட்டாளுடன் விவாதம் நடத்த யாராவது முன் வருவார்களா ?

தலித் முரசின் பொய்யையும், புளுகையும், அதன் கம்யூனிச விரோதப் போக்கையும் புதிய ஜனநாயகம் பத்திரிகை அவ்வப்பொழுது அம்பலப்படுத்தி வந்திருக்கிறது. சாம்பிளுக்கு தலித் முரசின் வர்க்காஸ்ரமம் என்கிற கட்டுரைக்கான சுட்டி இதோ. கம்யூனிஸ்டுகளை இழிவுபடுத்துவது, அதனூடாக மார்க்சிய தத்துவத்தையும் இழிவுபடுத்தி, புறந்தள்ளுவது, மக்களிடம் புரட்சி பற்றிய அவநம்பிக்கையை விதைப்பது இது தான் இவர்களின் நோக்கம். இவர்களுக்கு விதிக்கப்பட்ட பணி.

அதை உறுதி செய்யும் விதமாகத் தான் உரையின் அடுத்தடுத்தப் பகுதிகள் உள்ளன. கம்யூனிஸ்ட் அறிக்கையில் சாதி பற்றி எதுவுமே சொல்லப்படவில்லையாம் ! இந்தியாவில் வர்க்கம் ஒரு பிரச்சினையே இல்லையாம் சாதி தான் முதன்மையான பிரச்சினையாம், எனவே இங்கே புரட்சியே நடக்கப்போவதில்லையாம் ! புரட்சி நடக்கப்போவதில்லை என்பதை விட நடக்கக்கூடாது என்பது தான் இவர்களின் விருப்பம், அதற்காகத் தான் தலித் முரசும் புனிதப்பாண்டியனும் வேலை செய்கிறார்கள் என்பது தான் உண்மை.
கம்யூனிஸ்ட் அறிக்கை குறித்து இவர் கூறுவதையும் அது உண்மையா என்பதையும் மேற்கொண்டு பார்ப்போம்.

அறிக்கையின் இரண்டாவது பக்கத்திலுள்ள முதல் தலைப்பின் இரண்டாவது பத்தி இவ்வாறு துவங்குகிறது. “வரலாற்றின் முந்தைய சகாப்தங்களில் அனேகமாய் எங்குமே பல்வேறு  வகுப்புகளாலாகிய சிக்கலான சமுகப் பாகுபாடு, சமூக அந்தஸ்தின் பன்மடிப் படிநிலை அமைவு இருக்கக்காண்கிறோம். இந்த வகுப்புகளில் அனேகமாய் ஒவ்வொன்றிலும் படிநிலை உட்பிரிவுகளும் இருக்கக்காண்கிறோம்”

இந்தியாவின் சிறப்புத்தன்மையாக சாதி இருப்பதைப் போன்று உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் வெவ்வேறு சிறப்புத்தன்மைகள் இருக்கின்றன. அவை அனைத்தையும் அறிக்கை பட்டியலிடவில்லை, அது சாத்தியமும் அல்ல தேவையும் அல்ல. மாறாக உலகம் முழுவதுமுள்ள வர்க்கம் தவிர்த்த பிற சிறப்புத்தன்மைகள் அனைத்தையும் அறிக்கை சாரமாக குறிப்பிடுகிறது. அதன் ’படிநிலை உட்பிரிவுகள்’ வரை குறிப்பிடுகிறது. சமுகப் பாகுபாடு, சமூக அந்தஸ்தின் பன்மடிப் படிநிலை அமைவு, படிநிலை உட்பிரிவுகள் என்று குறிப்பிடப்படுபவை எல்லாம் நமது நாட்டின் சிறப்பு நிலைமையான சாதிக்கு பொருந்தும்.

கம்யூனிஸ்ட் அறிக்கையில் சாதியை பற்றி குறிப்பிடவில்லை என்று சொல்லி அது இந்திய நிலைமைக்கு பொருந்தாது என்று கூறுவோமானால் அமெரிக்காவில் கருப்பர்களை பற்றி குறிப்பிடவில்லை எனவே அது அமெரிக்க நிலைமைக்கு பொருந்தாது என்றும், பெண்களை பற்றி குறிப்பிடப்படவில்லை எனவே அது உலகத்துக்கே பொருந்தாது என்றும் கூறலாம். அப்படி கூறப்பட வேண்டும் என்பது தான் புனிதப்பாண்டியனின் விருப்பம். ஆனால் உலகத்தில் தற்போது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும் மூலதனமும் தான் அதிகமாக விற்பனையாகிறதாம், என்ன செய்ய பு,பா விரும்பும் மக்களாட்சியை மண்ணுக்குள் தள்ளி மூடப்போகும் மண்வெட்டிகளாக இவையே இருப்பது துரதிர்ஷ்ட்டம் தான் !

அம்பேத்கரை ‘புரட்சியாளர்’ என்று கூறும் பு.பா புரட்சியெல்லாம் இங்கே நடக்காது என்றும் பேசியிருக்கிறார். புரட்சியே நடக்காது என்று சொல்கிற அளவிற்கு பேசுகிறார் என்றால் இவருக்கு எவ்வளவு கம்யூனிச வெறுப்பு இருக்க வேண்டும் ? மேலும் நடக்கும் நடக்காது என்று சொல்ல இது என்ன ஜோதிடமா, இவர் என்ன ஜோதிடரா ? அம்பேத்கர் புரட்சியாளரா இல்லை சீர்திருத்தவாதியா என்றால் அவர் சீர்திருத்தவாதி தான். சொகுசு அறையில் உட்கார்ந்துகொண்டு பிராஜெக்ட்டுக்காக பத்திரிகை நடத்தும் பு.பா புரட்சியாளர்களை ஆன்மீகவாதிகளோடு ஒப்பிடுவார் ஆனால் அம்பேத்கரை புரட்சியாளர் என்பார். புனிதப்பாண்டியனுக்கு புரட்சிகர அரசு தேவை இல்லை என்றால் அது அமையும் முன்பே மக்களாட்சி நடக்கும் அமெரிக்காவுக்கு ஓடிப் போகட்டும்.

இறுதியாக, தலித் மக்களுக்காக பேசுவதாக சொல்லிக்கொண்டு திரியும் புனிதப்பாண்டியனும், தலித் முரசும் எந்த வர்க்கத்தின் பிரதிநிதிகள் ? சந்தேகமின்றி மேட்டுக்குடி வர்க்கத்தின் பிரதிநிதிகள் தான் இவர்கள். அதனால் தான் இவர்களுக்கு வர்க்கம் என்று பேசினாலே பிடிப்பதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைக்கு பதிலாக முதலாளி வர்க்கத்தின், (அதுவும் இருபதாம் நூற்றாண்டு முதலாளி வர்க்கத்தின்) கோரிக்கையை முன் வைக்கிறார்கள்.

தலித் மக்களின் அடிமை விலங்கை கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களால் மட்டும் தான் உடைத்தெறிய முடியும். இந்த நாட்டில் ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலம் மட்டும் தான் அதை சாதிக்க முடியும். சாதியை மட்டுமல்ல தேசிய இன ஒடுக்குமுறை, ஆணாதிக்கம் உள்ளிட்ட அனைத்து ஒடுக்குமுறைகளையும் ஒரு பாட்டாளி வர்க்க புரட்சியால் மட்டும் தான் ஒழித்துக்கட்ட முடியும்.
புரட்சி பத்தாண்டுகளில், அல்லது இருபது ஆண்டுகளில் கூட நடந்து விடலாம், ஆனால் சாதியை எப்போது ஒழித்துக்கட்டுவது ? அதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும் ? கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதியை ஒழிக்க யாருமே முயற்சிக்கவே இல்லையா ? பல தலைவர்களும் சாதியை ஒழிக்க பாடுபட்டிருக்கிறார்கள். பல கருத்துக்களும் சாதி ஒழிப்பிற்காக போராடியிருக்கின்றன. சாதி தான் ஒழியவில்லை. ஆனால் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் இந்த புவிப்பரப்பில் எத்தனையோ புரட்சிகள் நடந்துவிட்டன ? பல சமூக அமைப்புகளும் மாறிவிட்டன. இந்த எதார்த்தத்தை ஏற்கும் பட்சத்தில் எது முதலில் சாத்தியம் ? புரட்சியா சாதி ஒழிப்பா என்றால் புரட்சி தான் சாத்தியம்.

எனவே, புரட்சிக்கெதிராக சாதியை நிறுத்தும் மேற்கண்ட இந்த வாதத்தை அனைத்திற்கும் பொருத்தலாம். ஆணாதிக்கத்தை ஒழித்தால் தான் புரட்சி சாத்தியம் என்று பெண்கள் பேசலாம். இன ஒடுக்குமுறையை ஒழித்தால் தான் புரட்சி சாத்தியம் என்று தேசிய இனச்சிறுபாண்மையினர் பேசலாம். எனவே, சாதியை ஒழித்தால் தான் புரட்சியை நடத்த முடியும் என்று பேசுவது முட்டாள்தனம். புனிதப்பாண்டியன் வகையறாக்கள் முதலில் சாதியை ஒழிக்காமல் புரட்சியை நடத்த முடியாது என்று பேசுவதும், பிறகு புரட்சியே நடத்த முடியாது என்று பல்டியடிப்பதும் சாதி ஒழிப்பிற்கான அவர்களின் ஒரு வழிமுறையோ கொள்கையோ அல்ல, மாறாக, புரட்சிக்கு மக்களை அணி திரள விடாமல் தடுக்கும் உத்தியாகும். அது தான் அவர்களின் உண்மையான கொள்கையுமாகும்.

உலகத்திலுள்ள அனைத்து வகை ஒடுக்குமுறைகளையும் மார்க்சியத்தால் மட்டும் தான் ஒழித்துக்கட்ட முடியும். அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமைச்சங்கிலிகளையும் மார்க்சியத்தால் மட்டும் தான் அறுத்தெறிய முடியும். ஏனெனில் மார்க்சியம் மட்டும் தான் சரியான தத்துவம், ஏனெனில் உலகத்திலேயே மார்க்சியம், மட்டும் தான் அறிவியல் பூர்வமான தத்துவம். புனிதப்பாண்டியன் இதை ஏற்கிறாரா இல்லை மறுக்கிறாரா ? மார்க்சியம் அறிவியல் இல்லை என்று மறுக்கத்துணிவிருந்தால் இதே தளத்தில் மறுக்கட்டும். இல்லை மார்க்சியம் அறிவியல் பூர்வமான தத்துவம் தான் என்பதை ஏற்றுக்கொண்டால் அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் பொருந்தும் அந்த அறிவியல் இந்தியாவுக்கு மட்டும் ஏன் பொருந்தாது என்பதை விளக்க வேண்டும். அது அறிவியல் என்றால் அதனால் சாதியை மட்டுமல்ல அதை விட சிக்கலான உறவுகளையும் நிர்மூலமாக முடியும். 

புரட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை மட்டுமல்ல அவர்களுடைய விடுதலைக்கு எதிராக செயல்படும் தலித் முரசு கும்பல் போன்ற ஏகாதிபத்திய கைக்கூலிகளையும் ஒழித்துக்கட்டும். அத்தகையதொரு புதிய ஜனநாயகப்புரட்சிக்காக களத்தில் இறங்கி மக்களைத் திரட்டுவோம். அனைத்துவகை ஒடுக்குமுறைகளுக்கும் முடிவு கட்டுவோம்.
புரட்சி ஓங்குக !!
  
ஊழலை ஒழிக்க விரும்புவோர் அவசியம் படிக்கவும்:
ஊழல் ஊழல் என்று ஏதோ சொல்கிறாரே என்ன தான் சொல்கிறார் என்று பார்த்தால் புனித பாண்டியன் புதியதொரு கண்டுபிடிப்பையே நிகழ்த்தியிருக்கிறார். பரலோகத்திலிருக்கும் எங்கள் பரமபிதாவே இது உண்மை தானா ? உண்மைதான். விசயம் என்னவென்று கேட்கிறீர்களா ? காதை இப்படி கொஞ்சம் பக்கத்தில் கொண்டு வாங்க இது சாதாரண விசயம் இல்லை மாபெரும் கண்டுபிடிப்பு. ஊழல் இருக்குல்ல ஊழல் அந்த ஊழலின் ஊற்றுக்கண்ணே சாதி தானாம். அதனால சாதியை ஒழிக்காமல் ஊழலை எப்படி ஒழிக்க முடியும் ? ஒழிக்க முடியாது என்று அர்த்தபுஷ்ட்டியுடன் உதட்டை பிதுக்குகிறார் பு.பா. என்னே ஒரு அறிவு, என்னே ஒரு அறிவு! சார் நீங்க எங்கேயோ போய்ட்டீங்க சார் ! அப்படின்னா, அடிக்கடி ஏறிக்கிட்டு இருக்கே இந்த பெட்ரோல் விலை அதுக்குங் கூட இந்த சாதி தான் காரணமுங்களா ? அடுத்த மாசம் பத்திரிகையில் எழுதுங்க படிச்சி தெரிஞ்சிக்கிறோம்.
------- சரவணன்

Saturday, March 26, 2011

எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை ஒழிக்க முடியாது!

சில ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பு தேடி சென்னை சென்ற இளைஞர் தற்போது திருமணமாகி கையில் ஒரு குழந்தையுடன் தனது மனைவியோடு சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டார். அடுத்தக் குழந்தைக்கும் தயாராகியிருந்தார் அவரது மனைவி. சென்னையில் வாழ்க்கையை ஓட்ட முடியாததால் வந்துவிட்டதாகச் சொன்னார்கள். 

ஆலைகள் நிறைந்த தொழிற்பேட்டைக்கு அருகில் உள்ள சிற்றூரில்தான் அவரது வீடு. ஏதோ ஒரு ஆலையில் குறைந்த ஊதியத்திற்கு வேலைக்குச் சென்றாலும் வயித்தக் கழுவலாம் என முடிவெடுத்து அவர் வந்திருக்கலாம். வீடோ ஓட்டு வீடு. சற்று பலமான மழை என்றால் உள்ளே ஒண்ட முடியாது. ஏற்கனவே அவரது தந்தையும், தங்கையின் குடும்பமும் என ஆறு பேர் வசிக்கும் வீடு. இவர்களோடு மொத்தம் ஒன்பது பேர். மூச்சுக் காற்றுகூட வெளியேற முடியாது. அவ்வளவு சிறிய வீடு. அவர்கள் அத்தனை பேரும் எப்படி அதில் வாழ முடியும்?

ஆனால் இதுவல்ல அவரது துணைவியாருக்குப் பிரச்சனை. பக்கத்திலிலேயே சாக்கடை. தேங்கிக் கிடக்கும் சாக்கடை நீரில் இருந்து வரும் கொசுக்களின் தொல்லை. தாங்கமுடியவில்லை.  வந்து ஒருவாரமே ஆகிறது. வாடகைக்கு வேறு வீடு பார் எனக் கூறிவிட்டார். இன்னும் ஒரு வேலையைக்கூட தேடவில்லை. அதற்குள் வாடகை வீடு என்றால் சமாளிக்கமுடியுமா? வாழ வழியில்லை என ஊர் மாறி வந்தால் இங்கே கொசுவுக்காக சொந்த வீட்டை விட்டு ஓட வேண்டிய அவலம். வேறு வீட்டிற்குச் சென்றால் மட்டும் தீர்ந்தவிடுமா கொசுப்பிரச்சனை?

தேசியப் பிரச்சனை:

இது ஏதோ அவரது பிரச்சனை மட்டுமல்ல. இந்தியக் குடிமக்கள் அனைவரும் சந்திக்கும் ஒரு தேசியப் பிரச்சனை. கொசுக்களால் பிரச்சனைக்கு ஆளாகாத குடும்பங்களே இருக்க முடியாது. குடிசையோ, கோபுரமோ..அதெல்லாம் கொசுக்களுக்குத் தெரியாது. கொசுக்களுக்குத் தேவை மனித இரத்தம். எங்கே இடைவெளி இருக்கிறதோ அங்கே நுழைந்து தேவையான அளவு குடித்துவிட்டு அங்கேயே ஒளிந்து ஓய்வெடுத்துக் கொண்டு மறுநாளும் வேலையைத் தொடரும் கொசுக்களும் உண்டு. அல்லது குடித்துவிட்டு தனது விசிப்பிடத்திற்கே திரும்பும் கொசுக்களும் உண்டு.

மழைக் காலமோ, கோடை காலமோ எல்லாக் காலங்களிலும் நம்மை விடாது துரத்தும் கருப்பு கொசுதான். என்ன.... கோடையில் சற்று வேகம் குறைவே ஒழிய துரத்தவது ஒன்றும் நிறுத்தப்படுவதில்லை. ஆனால் கோடையை சமாளித்து வாழும் கொசுக்களின் வல்லமை சற்றே அதிகம்தான். அதனால்தான் கோடை கொசுக்கள் 'சிக்குன்குனியா' மூலம் நம்மை முடக்குகின்றன.

தட்டினால் பொட்டெனெப் போகும் கொசுக்களைக் கண்டு அஞ்சாதவர்கள் உண்டோ? ஒன்றா, இரண்டா தட்டிவிட்டுத் தூங்குவதற்கு. பெரும் படையாய் அல்லவா அணிவகுத்து வருகின்றன. எப்படி அஞ்சாமல் இருக்க முடியும்? இருந்தாலும் வறியவர்கள் தட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்;

தப்பிக்க வழியே இல்லையா?:

ஒரே வழி தற்காப்புதான். தற்காப்புக்கு என சந்தையில் ஏராளமான கேடயங்கள். வசதியைப் பொருத்து வலுவான கேடயம் எனில் நமக்கு சேதாரம் குறைவு. மார்ட்டின் கொசுவத்திச் சுருள், 'ஆல் அவுட் லிக்குயிட்', 'ஹிட் ஸ்ப்பிரே'-இவைகள் உள்ளே நுழைந்த எதிரிகளை விரட்ட ஏவப்படும் அம்புகள். எத்தனை முறைதான் ஒரே 'பிராண்ட்' அம்புகளை ஏவ முடியும்? முனை மழுங்கிப் போகாதா? 

எதிரிகளை உள்ளே விட்டால்தானே. தடுப்பரண்களைப் போட்டு தடுத்துவிட்டால் எதிரிகள் முட்டிப் பார்த்துவிட்டு எட்டி ஓடிவிடுவார்கள். இதற்காகவே 'காட்டன்-நைலான்' கொசு வலைகளும், 'நெட்லான்களும்', 'ஒயர் மெஷ்களும்' ஏராளமாய் சந்தையில் குவிந்துள்ளன. என்ன.... தடுப்பரண் போட ஒரே நேரத்தில் சற்று கூடுதலாக முதலீடு செய்ய வேண்டும். எதிரிகள் இலேசுப்பட்டவர்களா என்ன? எத்தனை யுத்தங்களைப் பார்த்திருப்பார்கள்? உங்கள் தடுப்பரண்கள் என்ன முக்காலத்துக்கும் தாங்கக்கூடியவையா? விரிசலுக்கிடையில் சர்.....சர்ரென நுழைந்து திடீர் தாக்குதல் நடத்துவதை தடுத்திடவா முடியும்?

இப்படிப்பட்ட திடீர்த் தாக்குதல்களை எதிர்கொள்ள சீனாக்காரன் ஏராளமான அதிரடி மட்டைகளை நமக்கு அளித்து வருகிறான். இரவில் எப்பொழுதும் இந்த அதிரடி மட்டை அருகில் இருக்க வேண்டும். இதுவே இப்போதைக்கு சிறந்த ஆயுதமாகத் திகழ்கிறது. இந்த மட்டைகள்கூட எதிரிகளின் தாக்குதலால் செயலிழந்து போகின்றன. பயனற்றுப் போன மட்டைகளுக்காக நான் ஒரு ஆயுதக் கிடங்கையே வைத்திருக்கிறேன். காசு கொடுத்து வாங்கியாச்சே. தூக்கியெறிய மனமில்லை.

கொசுக்களை விரட்ட பெரும்பாலானோருக்கு தற்போது அதிகமாகப் பயன்படுவது மின் விசிறிதான். கடுங் குளிரில்கூட காற்றாடி ஓட வேண்டும். குளிரைவிடக் கொடுமையானதல்லவா கொசுக்கடி. நள்ளிரவில் திடீரென மின்வெட்டு என்றால் நிலைகுலைந்து போகிறோம். ஆனால் எத்தனை நாளைக்கு? சுழன்றடிக்கும் சூறாவளியைக்கூட எதிர் கொள்ளும் ஆற்றலை வளர்த்துக் கொள்வது விலங்கினங்களின் பரிணாமமாயிற்றே.

எதிரிகளின் படையெடுப்பை தனி மனிதர்களால் எதிர் கொள்ள முடியவில்லை என்பதால் நகராட்சிகள் அவ்வப் பொழுது ஏவுகனைத் தாக்குதல்களை நடத்துவதுண்டு. கவச வாகனங்கள் பெரும்புகையை எழுப்பிக் கொண்டு வீதிகளில் வரும் போது அச்சம் எதிரிகளுக்கு மட்டுமல்ல நமக்கும்தான். புகையில் சிக்கிக் கொண்டால் நாம்தான் விழ வேண்டி வரும். எதிரிகள் ஓடி ஒளிந்து கொள்வார்கள். அதிகாரிகள் தங்கள் பையை நிரப்பிக் கொள்ளத்தான் இந்த 'ஆபரேஷன் மேலா'வேயொழிய எதிரிகளைக் கொல்வதற்கு அல்ல. கார்க்கில் யுத்தத்திலேயே கை வைத்தவர்கள் அல்லவா நம் 'கர்னல்கள்'.

யுத்த பாதிப்புகள்:

யுத்தத்தில் நாம் பயன்படுத்தும் ஆயுதங்களால் ஏற்படும் நச்சுப் புகையால் கண் எரிச்சல், தோல் நோய் உள்ளிட்டு பல்வேறு உபாதைகளையும் நாம் எதிர் கொள்ள வேண்டும். யுத்தம் என்றால் சும்மாவா?

நமக்குத் தெரிந்த போர்த் தந்திரங்கள் அனைத்தையும் கையாண்டு பார்த்தோம். அறுபத்து ஆறு ஆண்டு கால யுத்தத்தில் பொது மக்களின் சொந்தப் பணம் உள்ளிட்டு பல இலட்சம் கோடி விரயமானதோடு சரி.  டார்வினின் இயற்கைத் தேர்வு மூலம் (natural selection) எதிரிகள் பலமாகிவிட்டார்கள். 

இனி என்ன செய்வது? யாருடைய உதவியையாவது நாடலாமா? 'கேன்சரையும்', மூட்டு வலியையும் விரட்டும் பால் தினகரன்களை அழைப்பதா? மச்சவதாரம், பிச்சவதாரம் என பல அவதாரங்களைக் கண்ட மகா விஷ்ணுக்களை அழைப்பதா? அல்லது சைத்தான்களைத் துரத்தியடிக்கும் முல்லாக்களை நாடுவதா? ஒரே குழப்பமாக இருக்கிறது. இந்திய மக்களைக் காக்க ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்களேன். ஒரு வேளை ஒபாமா உதவுவாரோ? எதற்கும் கேட்டுப் பார்க்கலாம். அதற்கு முன்பு அமெரிக்க வாழ் நண்பர்கள் அங்குள்ள நிலமையைச் சொன்னால் ஒபாமாவை நாடுவது குறித்து முடிவெடுக்கலாம்.

சமீபத்தில் தொலை காட்சி ஒன்றில் புராணக் கதை ஒன்று கேட்டேன். ஐந்து சிறுவர்கள் ஒரு குளத்தில் உள்ள மீன்களைப் பிடித்து மீனின் ஒரு கண் வழியாக முள்ளாள் குத்தி அது அடுத்த கண் வழியாக வருவதைக் கண்டு இரசித்தார்களாம். இதைக் கண்ட இறைவன் "இது என்ன கொடுமை?" என்று அந்த ஐவரையும் "மீனாய்ப் பிறக்கக் கடவ" என்று சாபமிட்டானாம். அது போல இந்தக் கொசு அரக்கனுக்குச் சாபமிட சாமிகள் ஏதும் வாராதோ என விழி வைத்துக் காத்திருக்கிறேன். 

ஒரு வேளை ஏதேனும் புதிய யுக்தியைக் கையாண்டு கொசுக்களைக் கொல்லும் போது அதைப் பார்த்து "கொசுவாய்ப் பிறக்கக் கடவ" என ஆண்டவன் நமக்குச் சாபமிட்டுவிட்டால்... அந்தப் பயமும் இருக்கத்தானே செய்கிறது. அது மட்டுமல்ல 'புளூகிராஸ்காரர்கள்' வழக்குப் போட்டால் அதையும் எதிர்கொள்ள வேண்டுமே. ஒரே பயமாக இருக்கிறதே. 'பிலீஸ் ஹெல்ப்'.

தாக்குதலில் எதிரிகள் ஏற்படுத்தும் சேதாரம் கொஞ்சமா? நஞ்சமா? 'சிக்குன் குனியா' வந்தால் நடமாட்டமே முடங்கிப் போகிறது. 'மலேரியா' வந்தால் மரணம் தவிர்க்க முடியாதது. யாணைக்காலை எத்தனை ஆண்டுகள் சுமப்பது? அதுவும் திருமணத்திற்கு முன்பு என்றால் வாழ்க்கை முழுக்க பிரம்மச்சரியம்தான். காஞ்சிபுரம், வாலாஜா, வேலூர், ஆம்பூர், திருப்பத்தூர் ஆகிய பிரதேசங்களில் யுத்தத்தின் விளைவு அதிக அளவில் யானைக்கால்தானாம். மருத்துவர்களும், செவிலியர்களும் யுத்த களத்தில் காயமடைந்த நமக்குத் தொடர் சிகிச்சையளித்து வருகின்றனர்.

எதிரிகளின் தாக்குதல்களை சமாளிக்க மருத்துவர்களும் பல்வேறு ஆலோசனைகளை அளித்தவண்ணம் உள்ளனர். உடைந்த சட்டி, பானை, ஓடு, கொட்டாங்குச்சிகளை கவிழ்த்து வையுங்கள். திறந்து வைத்தால் அவைகளே எதிரிகளின் புகலிடமாக அமைந்து விடும் என்பதால். நாமும் மெனக்கெட்டு இதையெல்லாம் செய்துதான் பார்க்கிறோம்.

இரான்-ஈராக் யுத்தத்தில் ஆயுதத் தளவாடங்களைத் தள்ளிவிட்டதன் மூலம் கோடிகளைச் சுருட்டிய அமெரிக்கா போல இங்கே 'குட்நைட்', 'ஆல் அவுட்', 'மார்ட்டின்', 'ஹிட்' என ஆயுத விற்பனை மூலம் முதலாளிகள் கோடிகளைச் சுருட்டுகிறார்கள். யுத்தம் தொடர்கிறது. புதிய புதிய 'பிராண்டுகளில்' சந்தையில் ஆயுதத் தளவாடங்களை முதலாளிகள் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். 

எதிரிகளை ஒழிக்கமுடியுமா?:

இடையில்....எனக்கு ஒரே ஒரு கவலை மட்டும் உண்டு. எதிரிகள் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டால்... ஆயுதத் தொழிற்சாலைகள் பல மூடப்படும். மருந்து மற்றும் மருத்துவக் கருவிகள் உற்பத்தி குறையும். இதனால் இலட்சக் கணக்காணோர் வேலையிழந்து வீதியில் வீசப்படுவர். கொசுக்களை ஒழிக்கக்கூடாது என அவர்கள் போராடத் தொடங்கிவிட்டால் நாடே களேபரம் ஆகும். சொசுக்களைக்கூட ஒழிக்க இயலாத நமது அரசு மக்களின் இந்தப் போராட்டத்தை எப்படி சமாளிக்கும்? 

எதிரிகள் 'ஐ.எஸ்.ஐ ஏஜெண்டுகளும்' அல்ல. 'அல்உமா' தீவிரவாதிகளும் அல்ல. எல்லாம் நம்ம ஊர் குளம்,  குட்டை, சாக்கடைகளின் கழிவு நீரில் பிறப்பவர்கள்தான். நம்ம தண்ணியக் குடிச்சவங்கதான். எதிரிகளுக்கு மட்டும் தண்ணிப் பஞ்சம் எப்போதும் வராது. எதிரிகள் பாதுகாப்பாக இருக்க சாக்கடையில் தண்ணி வடியாம பாத்துக்கிற வேலயத்தான் நம்ம ஊர் நாட்டாமைங்க... அதாங்க.... ஊராட்சி -  நகராட்சி கவுன்சிலரு, சேர்மேனுங்க கண கச்சிதமா செய்யராங்களே. எதிரிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை நம்மால் ஒழிக்கவா முடியும்?.

Thursday, March 24, 2011

யாருக்கும் வெட்கமில்லை!

சென்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடந்த நிகழ்ச்சி இது. "காலனி ஓட்டு எல்லாம் நமக்குத்தான்" என நைச்சியமாகப் பேசி அ.தி.மு.க வேட்பாளரிடம் ரூபாய் ஐம்பதாயித்தை பெறுகிறார் ஒரு "அல்லக்கை" (கைமேல் பலனை எதிர்பார்த்து களப்பணியாற்றும் 'செயல் வீரர்'). வேட்பாளர் உயர்சாதிக்காரர். காலனியோ சிறுத்தைகளின் முகாம்.

சிறுத்தைகள் தி.மு.க கூட்டணியில் இருப்பது தெரிந்தும் பக்கத்துத் தெரு முகாமிற்குள் அ.தி.மு.க "அல்லக்கை" நுழைகிறார். கண்ணில் தெரிந்த ஒருசில சிறுத்தைகளிடம் தலா 200 ரூபாயைக் கொடுத்துவிட்டு கம்பி நீட்ட முற்படும் போது சிறுத்தைகள் அவரை சிறை வைக்கிறார்கள். "அல்லக்கை" எவ்வளவு வாங்கியிருக்கும் என்பது சிறுத்தைகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும். தெரியாமலா சிறைவைக்கிறார்கள்? உண்மையை ஒப்புக்கொண்டு மொத்தத் தொகையையும் கொடுக்க "அல்லக்கைக்கு" மனமில்லை. அதற்குள் "அல்லக்கையின்" தெருவிற்கு செய்தி பரவுகிறது. அ.தி.மு.க கூட்டணியில் அன்று அங்கம் வகித்த பா.ம.க வைச் சேர்ந்த மற்றொரு "அல்லக்கைக்கு" செய்தி போக, கட்டைப் பஞ்சாயத்து நடக்கிறது. பா.ம.க. "அல்லக்கையும்" தாழ்த்தப்பட்டவர்தான். இறுதியில் ஒரு தொகை முகாமிற்கு கைமாற அ.தி.மு.க "அல்லக்கை" முகாமிலிருந்து விடுதலையாகிறார். 

சிறுத்தைகள் அ.தி.மு.க வுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று தெரிந்தும் ஒரு கணிசமான தொகையை அமுக்க அ.தி.மு.க "அல்லக்கை" கணக்குப் போட்டது. "எதிர்க்கட்சி வேட்பாளராய் இருந்தால் என்ன? வந்த காசை வாங்குவதில் தவறேதுமில்லை" என கணக்கு போட்டார்கள் சிறுத்தைகள்.

இது ஏதோ சிறுத்தைகள் கணக்கு மட்டமல்ல. சாதி, மதங்களைக் கடந்து ஆகப் பெரும்பான்மையான வாக்காளர்களிடம் வளர்ந்துள்ள பிழைப்பு வாதக் கணக்கு. 

கடந்த உள்ளுராட்சித் தேர்தலின் போது நகராட்சிப் பகுதியில் வசிக்கும் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். வெட்கமில்லாமல் சொன்னார்கள். "இந்தக் குடை ம.தி்.மு.க கொடுத்தது. இட்லி குண்டான் அ.தி.மு.க கொடுத்தது. குடம் காங்கிரஸ் கொடுத்தது". 

இதெல்லாம் 'வார்டு கவுன்சில்'வேட்பாளர்கள் கொடுத்தது.'சேர்மன்' வேட்பாளர்கள் கொடுப்பது தனி. 

வருகின்ற சட்டமன்றத் தேர்தல் பற்றி கருத்துக் கேட்டு தினமணி (20.03.2011) செய்தி வெளியிட்டுள்ளது. 

பெரியண்ணன் (80): சென்ற தேர்தலில் 200 ரூபாய் வாங்கிக் கொண்டு வாக்களித்தாராம். உதவி கேட்டு சென்ற போது "காசு வாங்கிக் கொண்டுதானே வாக்களித்தாய்" என்று வெற்றி பெற்றவர் திருப்பிக் கேட்டாராம். அதனால் இந்த முறை காசு கொடுப்பவனுக்கு வாக்களிக்க மாட்டாராம்.

இவருக்கு உதவி கிடைத்திருந்தால் இந்தத் தேர்தலிலும் காசு வாங்கத் தயங்கி இருக்க மாட்டார். காசு வாங்குவது தவறென்று இவர் நினைக்க வில்லையே. 

தனக்கு உதவி கிடைக்கவில்லை என்கிற சுயநலம்,அதாவது பிழைப்புவாதம்தான் இவரிடம் இருக்கிறது.

கோவிந்தம்மாள் (55): முதியோர் உதவித்தொகை கேட்டுச் சென்றால் 2000 ரூபாய் கேட்கிறார்களாம். அதனால் யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வேன் என்கிறார். ஆனால் நல்ல வேட்பாளர் யார் என்று பார்த்துதான் வாக்களிப்பாராம்.

ஒரு பேச்சுக்கு, போலிக் கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் நல்லவர்கள் என்று எடுத்துக் கொண்டாலும் தமிழ் நாட்டில் 22பேர்தான் தேருவார்கள். கோவிந்தம்மாள் இருக்கிற தொகுதியில் போலி கம்யூனிஸ்டுகளும் போட்டியிடவில்லை. பிறகு யாருக்கு இவர் வாக்களிப்பார்?

இது பிழைப்புவாதத்தின் மற்றொரு வகை.

சாந்தி (32): "யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வேன். ஊரெல்லாம் பணம் கொடுக்கும் போது நான் மட்டும் எதற்கு பணம் வேண்டாம் என்று கூற வேண்டும்.மூக்குத்தி,'மிக்சி','கிரைண்டர்' எல்லாம் கொடுப்பதாகக் கூறுகிறார்கள் எது கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு நல்ல வேட்பாளர்களுக்கே வாக்களிப்பேன்".

இவர் தமிழக வாக்காளர்களின் பிழைப்பு வாத மன நிலையை ஒட்டு மொத்தமாகப் பிரதிபலித்துவிட்டார்.

பட்டிக்காட்டு ஜனங்கள், படிக்காதவர்கள், வசதியற்றவர்கள்தான் இப்படி "நாங்களெல்லாம் யோசித்து நல்லவனுக்குத்தான் வாக்களிப்போம்" என மெத்தப் படித்த மேதாவிகள் சொல்லலாம்.படிக்காதவர்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்பது வெள்ளந்திரியாய் தெரிந்துவிடும். வாங்குவதையும் வெளிப்படையாக ஒப்புக் கொள்வார்கள். படித்த மேட்டுக் குடியினர், இலட்சக் கணக்கில் சம்பாதித்தாலும் பத்து ரூபாய் தட்டு என்றாலும் விட்டு விடுவதில்லை. விதிவிலக்காக இருப்பவர்கள் வம்புக்கு வரவேண்டாம்.

நல்ல வேட்பாளர்களுக்கு வாக்களிப்பேன் என்று இவர்கள் சொல்வது கேட்பவனை கேனயனாக்குவதே தவிர வேறொன்றுமில்லை.

இந்த லட்சணத்தில் வாக்கு என்பது நமக்கு இந்த ஜனநாயகம் கொடுத்துள்ள மிகப் பெரிய ஆயுதமாம். ஒவ்வொரும் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டுமாம். அதனால்தான் என்னவோ பல்லுப்போன கிழவிகள் கட்டிலேறி வருகிறார்கள்; செத்தவர்கள் உயிர் பெற்றுவிடுகிறார்கள். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்தது நமது பணநாயகம். சி... ஜனநாயகம்.

அரசியல்வாதிகளும், "அல்லக்கைகளும்" மக்களை பிழைப்புவாத்திற்கு அழைத்துச் சென்று ஆண்டுகள் பல ஆகிவிட்டன. 'வார்டு' தேர்தல் முதல் 'எம்.பி' தேர்தல் வரை எந்த வேட்பாளர் எவ்வளவு கொடுப்பான் என்று எதிர்பார்க்கும் நிலைக்கு மக்களை மாற்றியிருக்கிறார்கள் அரசியல்வாதிகள். இதுதான் வேட்பாளர்களின் மிகப் பெரிய பலம்.

ஏற்கனவே பதவியில் இருந்தவன் என்றால் "கொள்ளையடித்த பணத்தில்தானே கொடுக்கிறான்" எனவும் புதிய வேட்பாளர் எனில் "சும்மாவா முதல் போடுகிறான்" எனவும் மக்களை கணக்குப் போட வைத்துவிட்டார்கள். யார் யார் எவ்வளவு கொடுப்பார்கள் என எதிர்பார்த்துதான் பலரும் காத்திருக்கிறார்கள். இதுவே இன்றைய மக்களின் மனநிலை. சுருக்கமாகச் சொன்னால் இத்தகைய தேர்தல்கள் மக்களை ஊழல்படுத்தியதுதான் மிச்சம். இது மக்களின் குறையல்ல. நமது ஜனநாயகத்தின் பலவீனம்.

காசு கொடுத்தால் வாங்கமாட்டேன் என்று சொல்வதற்கு இன்று ஒருவரும் இல்லை என்ற நிலைதான் நிலவுகிறது. நடு நிலையாளர்களாக நடந்து கொள்ளவே பலரும் விரும்புகின்றனர். ஒரு குறிப்பிட்ட கட்சிக்காரன் என்ற முத்திரை விழுந்துவிட்டால் மற்ற கட்சிக்காரனிடமிருந்து வரும் தொகையை இழக்க வேண்டி வருமே. "பிழைப்புவாதியே சாமார்த்தியசாலி" என்பதே இன்றைய புதுமொழி.இதை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. காசு கொடுப்பதை தடுக்க முற்பட்டால் 'வரவேண்டிய காசை தடுத்திட்டானே' பாவி என எதிராகத்தான திரும்புவார்கள். 

மாற்று அரசியலுக்கான போராட்டத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் மட்டுமே இத்தகைய பிழைப்புவாதத்திலிருந்து மக்களை மீட்க முடியும். பிழைப்புவாத சிந்தனையிலிருந்து மக்களை மீட்டெடுக்காமால் அரசியல் பிழைப்புவாதிகளை ஒழிக்க முடியாது.

Monday, March 21, 2011

"முள்ளுக்காட்டில் மல்லுக்கட்டு!" த்ரில்லர் பட கருத்துக் கணிப்பு:


“வேலிகாத்தான் முட்புதர்களில், நரகலை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் பன்றிகள் படையெடுக்கும் காட்சிகளின் ‘ட்ரெயிலர்’ ஜேஜே கூட்டரங்கில் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தக் காட்சி களேபரமானது. பெரிய பன்றி மற்ற பன்றிகளை – அவை கூட்டமாக வந்தாலும் சீறிப்பாய்ந்து மொத்த மலத்தையும் கப்பெனக் கவ்வும் காட்சி இருக்கிறதே… அடடா … அதுதான் நேற்று நடந்தது. ஆனாலும் சிறிய பன்றிகள் அதற்காக ஓடிவிடவில்லை. பம்மி…பம்மி சற்றே மெல்ல அருகில் சென்று பெரிய பன்றி கவ்விய போது சிதறிய எச்சங்களை நக்கி எடுத்து நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டே திரும்பும் காட்சி இருக்கிறதே…..அடடா…. அதுதான் இன்று நடந்தது.”
இப்படி எனது பதிவில் இரண்டு நாட்களுக்கு முன்பு எழுதியிருந்தேன்.
“மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு”!

இப்போது ட்ரெயிலர் இல்லை. படம் ரிலீசாகி முதல் காட்சி ஓடி முடிந்து விட்டது. அடுத்து தியேட்டர் வாசலில் படத்தைப் பற்றிய கருத்துக் கணிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

“படம் சூப்பர். இப்படி ஒரு படம் இதுவரை வந்ததே இல்லை.”
“செம காமெடி சார். வடிவேலெல்லாம் சும்மா… ஜுஜிபி”
“பர்ஸ்ட் ஹாஃப் செம ஸ்பீடு. நேரம் போனதே தெரியல. செகண்ட் ஹாஃப் ரொம்ப டிராஜெடி. ஐஞ்சு வருசமா முள்ளுக்காட்டுக்கெல்லாம் கூடவே வந்த கலிங்கப்பட்டி குட்டி எதுவும் கிடைக்காம பட்டினியா போகும் காட்சி என்னை ரொம்பவும் கலக்கிடிச்சு. தோல் துண்டு தொப்பட்டையானது.”
“காலைக் காட்சிக்கு வந்தேன். படம் விருவிருப்பா போச்சு. இடைவேளை விட்டாங்க. அவசரமா ஒன்னுக்கு அடிச்சிட்டு வந்து உட்கார்ந்தா, மறுநாள் காலையிலதான் செகண்ட் ஹாஃப். இடைவேளை நேரம் அதிகம்னாலும் படத்தோட விருவிருப்புக்கு பஞ்சமில்ல”.
“இடைவேளைக்குப் பிறகு வந்த கருப்புக் குட்டி கொத்தா கவ்விட்டுப் போக, படம் முழுக்க வந்த கலிங்கக்குட்டி பட்டினியா போனது ரொம்ப சோகம்”.
“படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. கருப்புக் குட்டி ரொம்ப சாமார்த்தியசாலி. பாவம் கலிங்கக் குட்டி.”
“வழக்கமான ஆக்ரோஷம் கருப்புக் குட்டிகிட்ட இல்லாம போனது ஒரு ஏமாற்றம்தான்”.
“கருப்புக் குட்டிய விட சிவப்புக் குட்டிங்க செம கில்லாடிங்க. கெடச்சத கவ்விட்டு போனது படத்துல சொன்ன செம மெசேஜ்”.
“குணசித்ர வேடத்துல செவப்புக் குட்டிங்க நடிப்பு சூப்பர்”.
“படத்துல அடிதடி இல்ல. ரத்தம் சிந்தல. காமெடி, சென்ட்டிமெண்ட் கலந்த படம். குடும்பத்தோட பாக்கலாம்”.
“எப்பவும் போலவே அம்மா குட்டி அசத்திடிச்சில்ல. அதுதான் படத்துல ஹைலைட்”.

Saturday, March 19, 2011

மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு!


கழிவறை, மலக்கூடம், மலசலக்கூடம், கழிப்பறை இதைத்தான் 'கக்கூஸ்', சில வேளைகளில் 'கக்கூசு' என விளிக்கிறோம். டச்சுக்காரன் சென்றுவிட்டாலும் அவனது டச்சு மொழியை மட்டும் நம்மிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாது போல. காலனியாதிக்கத்தின் பதிவுகள் சில சமயங்களில் நமது உயிரோடு கலந்து விட்டது என்றால் அது மிகையல்ல.

உயிர் என்றால் என்ன? பலருக்குப் புரியாத புதிராக இன்று வரை சவால் விட்டுக் கொண்டிருக்கிறது. மாபெரும் மகான்கள் எல்லாம் மயிர் பிளக்கும் பல விவாதங்களை நடத்தி பல்வேறு வியாக்கியானங்களைக் கொடுத்துளார்கள். ஆனாலும் உயிர் என்றால் என்னவென்று இன்னமும் பலருக்கு விளங்கில்லை. 

மலத்தில் ஒளிந்திருக்கும் உயிர் :

'கக்கூசில்தான்', அதாவது மலத்தில்தான் நமது உயிர் ஒளிந்திருக்கிறது என்றால் நம்புவீர்களா? உட்கிரகித்தலும் கழிவுகள் வெளியேற்றமும் நடக்கும் செயல்பாட்டுக்குப் (PROCESS) பெயர்தான் உயிர். உணவு உட்கொள்ள முடியவில்லை, தண்ணீர் குடிக்க முடியவில்லை என்கிற உட்கிரகித்தில் நின்று போனாலோ அல்லது சிறுநீர் போகவில்லை, மலம் கழிக்கவில்லை என்கிற கழிவுகள் வெளியேற்றம் நின்று போனாலோ  அப்பொழுது உடலின் செயல்பாடு முடிவுக்கு வருகிறது. அதாவது உடல் உயிரற்றதாகி விடுகிறது; செயலற்றதாகிவிடுகிறது. 

அதனால்தான் நாம் மருத்துவரைப் பார்க்கும் பொழுது நோய் எதுவாக இருந்தாலும் 'ஒன்னுக்கு நல்லா போவுதா?', 'வெளிக்கு நல்லா போவுதா?', என்று மறக்காமல் கேட்கிறார்கள். 

மலம் வெளியேறுவது ஒரு இயற்கையான நிகழ்வுதான். ஆனால் உயிரின் ஆதாரமாகவும் திகழ்கிறதே. அத்தகைய மலத்தை வெளியேற்றுவதற்கு தடங்கல்கள் ஏற்படுமேயானால் அது உயிர் வாழும் உரிமையை பறிப்பதாகும். உயிர் வாழும் உரிமையை பறிப்பதாகக்கூறி மனித உரிமைகள் சட்டத்தின்கீழ் வழக்கு தொடுப்பதற்கும் வலுவான காரணிகளைக் கொண்டது.

ஒரே ஒரு வேளை மலத்தை அடக்கிப் பாருங்கள், பிறகு தெரியும் மலம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பது. பெரும்பாலும் எல்லோருக்கும் இதில் அனுபவம் இருக்கும் என்றே கருதுகிறேன்.

மலம் கழிப்பதில் இத்தனை சிக்கல்களா?:

அன்றாடம் மலம் கழிப்பதில்தான் எத்தனை எத்தனை சிக்கல்கள். வீடற்றவர்களுக்கும்,வீடிருந்தும் கக்கூஸ் வசதியியற்றவர்களுக்கும், வீதியோரங்களும்-வாய்க்கா வரப்புகளும் - ஓடைகளும் - ஏரிக்கரைகளும் -  முட்புதர்களும் - ஆள் நடமாட்டமில்லாத சந்து, பொந்துகளும்தான் 'கக்கூசுகள்'. வேறென்ன செய்வார்கள்?

'கக்கூஸ்' போவது பெரிதல்ல. கழுவுவதுதான் பெரும் பிரச்சனை. நீரில்லை என்றால் கல்லைக் கொண்டும், கல் கிடைக்கவில்லை என்றால் மண்ணாங்கட்டியைக் கொண்டும், வயல் வரப்பு என்றால் புல்லாலேயே தேய்த்தும், எதுவும் கிடைக்கவில்லை என்றால் காற்றிலே தவழ்ந்து வரும் இத்துப்போன பழைய பேப்பரைக் கொண்டும் துடைத்துக் கொள்ளலாம். ஏதோ தண்ணீர் வசதி இருக்குமானால் ஒரு சொம்பு தண்ணீர் கிடைத்தாலே போதும்.

ஆனால் கழித்த மலம்? ஓடை என்றால் காலாலேயே மண்ணைத் தள்ளி மூடிவிடலாம். நீரோடும் ஓடை, வாய்கால் என்றால் ஓடும் நீரோடு இரண்டறக் கலந்துவிடும். பல் துலக்கி வாய் கொப்பளிப்பவனுக்கும், முங்கி முங்கி குளிப்பவனுக்கும், சமையல் - சாப்பாட்டுப் பாத்திரங்களைத் தேய்ப்பவருக்கும் இதெல்லாம் சாதாரணமாகிவிட்டன.

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு நண்பரின் திருமணத்திற்குச் சென்ற போது இந்தக் காட்சிகளைக் கண்ட நானும் என்னுடன் வந்த மற்றொரு நண்பரும் பல்லும் துலக்கவில்லை, குளிக்கவும் இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

உறவை அறுக்கும் 'கக்கூஸ்': 

உறவினர்களின் திருமண நிகழ்ச்சிகளுக்குச் சென்று கல்லங் கபடமற்ற மக்களைப் பார்ப்பது மட்டுமல்ல, நெஞ்சையள்ளும் இயற்கை அழகை இரசித்து வரலாம் என புறப்பட்டு கிராமங்களுக்குச் சென்றால்... அடடா.... பேருந்திலிருந்து இறங்கி கிராமத்தை இணைக்கும் சாலையில் நடந்து செல்லும் போது... சாலையின் இரு பக்கங்களிலும் மலக்குவியல்கள் உங்களை 'நறுமணத்தோடு' வரவேற்கும். அதுவே காலை நேரமானால் சிறுவர்கள் நெளிவதைப் பார்க்க வேண்டுமே... என்ன செய்வார்கள் பாவம்?. அந்தச்சூழலில் நெளிவதைத் தவிர வேறு வழியில்லை. பெரியவர்கள் என்றால் சற்றே அடக்கிக் கொண்டு அதக்கி அதக்கியாவது வாய்கா வரப்பைத் தேடிச் சென்றுவிடலாம். சிறுவர்களால் முடியாதே. லேசான மழை பெய்திருந்தால் போதும். காய்ந்து போல மலம் ஈரம்பட்டதால் வரும் வாடை இருக்கிறதே... ஜென்மத்திற்கும் உங்கள் 'மெமரியிலிந்து டெலிட்' செய்ய முடியாது. வேலை முடிந்து ஊரின் மற்றொரு முனையின் வழியாகச் சாலையைக் கடந்து சென்றாலும், உங்களை வழியனுப்பவதற்கும் இதே மரியாதைதான். இரு சக்கர வாகனத்தில் வேகமாய்ச் சென்றாலும் வாடையின் வேகத்தை வண்டியின் வேகத்தால் தடுத்துவிடவா முடியும்?

கிராமங்களை விட்டு நகரங்களில் குடியேறிய பிறகு,மனைவி குழந்தைகளோடு மிக நெருங்கிய உறவினர்களின் திருமண நிகழ்ச்சிகளுக்கு மனைவியையும் பிள்ளைகளையும் அழைத்துச்சென்று வருவதற்கே படாதபாடு பட வேண்டும். கிராமத்து விசேசங்களுக்கு அழைத்தால் வர மறுக்கிறார்கள். ”வந்தா எங்கே வெளிக்கு போரது?”, ”வயல் வரப்புக்கும் முள்ளுக் காட்டுக்குமா?” ”நம்மால முடியாதுப்பா. நீ மட்டும் போயிட்டு வா”. இதுதானே மனைவி மக்களின் கேள்வியாக இருக்கிறது. தனியாக ஊருக்குச் சென்றால் "எங்கே, பசங்கள கூட்டிட்டு வரலயா?" "கல்யாணம் ஆனதுக்கப்பறம் உன் வீட்டுக்காரிய பாக்கலயப்பா, கூட்டிட்டு வரக்கூடாதா". இது கிராமத்து பெரிசுகளின் ஆசை. எப்படிச் சொல்வது 'கக்கூசுக்காகத்தான்' அவர்கள் வரவில்லை என்று. எப்படியோ சமாளிக்க வேண்டியிருக்கிறது. சில ஆண்டுகளில் இந்த 'கக்கூஸ்' பிரச்சனையால் உறவிழந்து நிற்க வேண்டியிருக்கிறது. 

இரயில் பாதைகளின் ஓரங்களில்:

சென்னை போன்ற நகரங்களில் இரயில் பாதைகளின் ஓரங்களில் பெண்கள் படும் 'அவஸ்தை'... எழுதவே எனக்குக் கூசுகிறது. அடுத்த ரயில் எப்பொழுது வரும் என்று தெரியாது. அதற்குள் எல்லாம் வெளியே வந்து விட்டால் ஏகப் பெருமூச்சு. இல்லை என்றால் ...இரயில் வரும் வேகத்தைவிட இரு மடங்கு வேகத்தில் எழுந்து கொள்ள வேண்டும். இந்தப் பீதியில் மலம் கழித்தால் அடுத்த ரயில் வருவதற்குள் மீதியும் வருமா? மலம் வெளியேறுவது குடலின் 'பெரிஸ்டாலிக் ஆக்சன்' (PERISTOLIC ACTION) என்று கொல்லக்கூடிய ஒருவித நெகிழ்வுத் தன்மையால்தான்.வந்த மலத்தை ரெயில் வருகிறதே என அடிக்கடி உள்ளிழுத்துக் கொண்டால் குடலின் நெகிழ்வுத் தன்மை எதிர்த் திசையில் செயல்பட்டு நிரந்தர மலச்சிக்கலுக்கும்,மூலநோய்க்கும் அல்லவா வழி வகுக்கும்.

வேலிகாத்தான் முட்புதர்களில்:

திருச்சி போன்ற பெரு நகரமாக இருந்தாலும், சாயல்குடி போன்ற சற்றே பெரிய கிராமமாக இருந்தாலும் ஆங்காங்கே இருக்கும் வேலிகாத்தான் முட்புதர்களே மக்களின் 'கக்கூசுகள்'. அதிலே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே ஏல்லைக்கோடு வேறு. மிக எச்சரிக்கையாகச் செல்ல வேண்டும். இல்லை என்றால் மானம் கப்பலேறி விடும். அதே நேரத்தில் கையில் ஒரு வாளெடுத்துச் செல்ல வேண்டும். அதாங்க நீளமா ஒரு குச்சி. வாளைச் சுழற்றிக் கொண்டேதான் நீங்கள் மலம் கழிக்க வேண்டும். இல்லை என்றால் மலத்தைக் கவ்வ வரும் பன்றிகளின் கூட்டம் குண்டியைக் குதறிவிடும். நினைத்தாலே குலை நடுங்குகிறது. மலத்தைக் கழிப்பதா அல்லது பன்றிகளை துரத்துவதா? குச்சி எடுக்க மறந்துவிட்டால் பன்றிகளைத் துரத்த கல்லைத் தேடினால் ஒரு கல்லையும் தொடமுடியாது. எல்லாம் குண்டி துடைத்து காயந்து கிடக்கும். எப்படித் தொடுவது?. மலம் கழிக்கத்தான் எத்தனை எத்தனை அவஸ்தைகள். மலம் கழிக்கும் போது ஒரே இடத்தில் இருக்கமுடியாதல்லவா? சற்று நகர்ந்தாலே போதும். பன்றிகளுக்கிடையில் நடக்கும் போட்டா போட்டியை பார்க்க வேண்டுமே. 'நேஷனல் ஜியாகரபிக் சேனல்காரனுக்கு' இதெல்லாம் தெரிந்தால் ஒரு பெரிய 'எபிசோடே' கிடைக்கும். பன்றிகள் இல்லை என்றால் நகரங்கள் நாறிவிடும்.
வேலிகாத்தான் முட்புதர்களில், நரகலை நோக்கி நாலுகால் பாய்ச்சலில் பன்றிகள் படையெடுக்கும் காட்சிகளின் 'ட்ரெயிலர்' ஜேஜே கூட்டரங்கில்  தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தக் காட்சி களேபரமானது. பெரிய பன்றி மற்ற பன்றிகளை – அவை கூட்டமாக வந்தாலும் சீறிப்பாய்ந்து மொத்த மலத்தையும் கப்பெனக் கவ்வும் காட்சி இருக்கிறதே… அடடா … அதுதான் நேற்று நடந்தது. ஆனாலும் சிறிய பன்றிகள் அதற்காக ஓடிவிடவில்லை. பம்மி…பம்மி சற்றே மெல்ல அருகில் சென்று பெரிய பன்றி கவ்விய போது சிதறிய எச்சங்களை நக்கி எடுத்து நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டே திரும்பும் காட்சி இருக்கிறதே…..அடடா…. அதுதான் இன்று நடந்தது.
நரகலில் நகரங்கள்:
நகர வாசிகள் காலை எழுந்தவுடன் வாசல்கூட்ட வெளியே வந்தால் மலம் குவியல் குவியலாய் மலர்ச்சியோடு வரவேற்கும். நீங்கள் எழுவதற்கு முன்பாகவே சிறுவர்கள்....யார் என்று தெரியாது...உங்கள் வீட்டு வாசலின் ஓரம் சாக்கடையில் மலம் கழித்துவிட்டுச் சென்றிருப்பார்கள். பாவம் சிறுவர்களுக்கு சாக்கடையின் நடுவே மலத்தைக்கழிக்கும் பயிற்சி போதாது என்பதால் பாதி கரைகளிலேயே குவிந்த விடும். பன்றிகள் இல்லாத தெரு என்றால் நீங்கள் வாசலோடு சேர்த்து மலத்தையும்தான் கழுவவேணடும். காத்தாட வாசலில் உட்கார முடியாது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
மழைக்காலம் என்றால், அதுவும் சற்றே பலமான மழை என்றால், மழை நீர் முழுவதையும் சாக்கடை கொள்ளாத போது, சாக்கடையில் புரளும் மலத்தை அள்ளிக் கொண்டும், உருட்டிக் கொண்டும், தாழ்வான வீட்டு வாசல்களில் மலத்தை ஒதுக்கிவிட்டு மழை நீர் சீறிப்பாயும் காட்சியைப் பார்க்க வேண்டுமே. நீர் வடிந்த பிறகு தெருவெங்கும் கட்டிக் கட்டியாக ஒதுங்கியிருக்கும் மலத்தின் மீதுதான் உங்கள் வாகனங்கள் பயணிக்க வேண்டும். பாதங்கள் பதிய வேண்டும்.

எங்கிருந்து திடீரென மலக்குவியல்கள் வந்தன என ஐயம் இருக்கா?. குறைந்த வருவாயில் வாழும் பலரால் 'செப்டிக் டேங்க்' வசதியுடன் வீடு கட்ட முடியாது. வீட்டின் ஓரத்தில் திறந்த வெளிக் 'கக்கூசைக்' கட்டி, அதை கழிவு நீர்க் கால்வாயோடு இணைத்து விடுவார்கள். இருக்கிற தண்ணீா வசதிக்கு எங்கே செல்லும் மலக் கழிவுகள். சாக்கடையும் திறந்த வெளிதானே. அரைகுறைவாக கழுவப்பட்ட நிலையில் மல மிச்சத்தில் ரீங்காரமிட்ட ஈக்கள் பிற்பாடு உங்களது உணவுப் பண்டங்களை மொய்க்கும் போது ... என்ன குமட்டுகிறதோ.. அதுதானப்பா நம் மக்களின் அன்றாட வாழ்க்கை. இவ்வளவு சகிப்புத் தன்மைகளோடு வாழப் பழகிக் கொண்ட நம் மக்களை போராட வைப்பது அவ்வளவு எளிதானதா என்ன?
நகராட்சி கழிப்பிடங்கள் இல்லையா எனக் கேட்பது எனக்குப் புரிகிறது
நகராட்சி கழிப்பிடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. உள்ளே செல்வதற்கே நீங்கள் நடை பயில வேண்டும் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் மலத்தில் கால் வைக்காமல், வழிந்தோடும் மலம் -மூத்திரத்தால் வழுக்கி விழாமல் செல்வது அவ்வளவு எளிதானதா என்ன? சில நேரங்களில் செல்லும் பாதையில் கால்வைக்கக்கூட முடியாது. மூடியிருக்கும் 'செப்டிக் டேங்க்' மீது போடப்பட்டுள்ள 'சிமெண்ட் சிலாப்' வழியாகச் செல்ல முயன்றால் அரைகுறையாக உடைந்து ஆ....வென வாயைப் பிளந்து நிற்கும் அடுத்த 'சிலாப்பின்' ஓட்டையினூடே பூகம்ப பேரழிவின் சகதி போல குவிந்து கிடக்கும் மலக் கழிவை பாக்காமல் செல்ல முயன்றால் உடைந்திருக்கும் அடுத்த 'சிலாப்' ஓட்டைக்குள் கால் மாட்டிக் கொண்டு மல 'அபிஷேகம் ஜோராய்' நடக்கும். இதையெல்லாம் மீறி 'கக்கூசுக்குள்' நுழைந்து விட்டாலும் உங்களது மானத்தைக் கப்பலேற்ற வேண்டியதுதான். கதவு இருக்காதே.. வேறென்ன செய்ய முடியும்? கதவு இல்லை என்று திரும்பவா முடியும்? கால் வைக்கவே இடமில்லை. கையில் உள்ள சொம்பை எங்கே வைப்பது? அதை ஒரு கையில் பிடித்துக் கொண்டே இருக்கவேண்டும். வெளிக்குப் போகத்தான் எத்தனை சூரத்தனங்கள்.

இந்தக் கன்றாவிகளைக் கண்டு மனுமேல் மனுக் கொடுத்தும் செவி மடுக்காத நகராட்சியை உலுக்கியது நகராட்சி வாசலில் மலம் கழிக்கும் போராட்டம். இது திருச்சி தில்லை நகர், காந்திபுரம் 'கக்கூசுக்காக' சில ஆண்டுகளுக்கு முன்பு ம.க.இ.க வினர் நடத்திய போராட்டம். மலம் கழிக்க அணிதிரள்வதற்கு முன்பாகவே ஒரு பெரும் படை நகராட்சி அலுவலகத்திலிருந்து பறந்து வந்தது. வந்த வேகத்தில் அலசி அள்ளிச் சென்றது மலக்குவியல்களை. அதிரடிப் போராட்டங்களை அன்றாடமா நடத்த முடியும்?

ஊர்ப் பயணம் மேற்கோள்ளும் போது, இந்தக் கடனைக் கழிக்க நாம் படும் பாடு இருக்கிறதே. எழுதி மாளாது. உலக வங்கிக் கடனைக்கூட அடைத்து விடலாம். ஆனால் இந்தக் கடனை மட்டும் கழிக்க முடியாது. அவ்வளவு 'கலிஜாக' இருக்கும் நமது பேருந்து நிலைய - ரயில் நிலைய கழிப்பிடங்கள். இருக்கிற கடன் பத்தாது என்று இந்தக் கடனைக் கழிக்க காசு வேறு கொடுக் வேண்டும்.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னை செல்ல அருகில் உள்ள நகரப் பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். திடீர் என வயித்தக் கலக்கிவிட்டது. 'கக்கூசைத்' தேடினேன். எதுவும் இல்லை. பக்கத்தில் முள் காடு தெரிந்தது. கடனை முடித்தேன் தண்ணீர் இல்லை. என்ன செய்வது. அருகில் இருந்த கல்தான் உதவியது. 

மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு:

ஆக இதுதான் இந்திய மக்களின் ஆகப் பெரும்பாலோரின் 'கக்கூஸ்' பிரச்சனை. இதைத் தீர்ப்பதற்குத்தான் எத்தனை எத்தனைத் திட்டங்கள். கிராப்புறங்கள் உள்ளிட்டு பொது சுகாதாரக் கழிப்பிடங்கள், வீட்டுக்கு வீடு அரசின் செலவில் 'கக்கூஸ்'வசதிகள் என நமது அரசுகள் மக்களை திக்கு முக்காட வைத்துவிட்டன. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு உடல் உபாதை தொடர்பாக நாட்டு வைத்தியரைப் பார்க்க புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டைக்கு அருகில் உள்ள ஒரு குக்கிராமத்திற்குத் தோழர் ஒருவருடன் சென்றிருந்தேன். வீடுகளே அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் தெரிந்தன. அரசின் பொதுக் கழிப்பிடக் கட்டடம் எங்களைப் பார்த்து சிரித்தது. மூடித்தான் கிடந்தது. யார் அதைப் போய்த் திறப்பார்கள் அந்தக் கிராமத்தில்?. 

சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுக்கு வீடு அனைவருக்கும் இலவச 'கக்கூஸ் 'அமைத்துக் கொடுத்திருந்தது அரசு. அப்பொழுது ஒரு முறை எனது தங்கை வீட்டிற்குச் சென்றிருந்தேன். எனக்கோ மூட்டு வலி. ஏரிக்கரைக்கும், வயல் வரப்புக்கும் போக முடியாது. சரி. அரசுதான் 'கக்கூஸ்'கட்டிக் கொடுத்திருக்கிறதே. நமக்கென்ன கவலை என வீட்டின் பின்புறம் சென்றேன். கால் வைத்து உட்காரும் 'பேஸ்' மட்டும்தான் தெரிந்தது. மீதி மண்ணால் மூடப்பட்டிருந்தது. என்னவென்று கேட்டேன். ”அத மட்டும்தான் வைச்சாங்க. அதல போய் யார் போக முடியும். கரும்புத் தோட்டத்துக்குள்ள போய் வா” என்றார் எனது தங்கை. இதுதான் அனைவருக்கும் இலவசமாக அரசே செய்த 'கக்கூஸ்' வசதி. இப்படி திட்டங்களோ ஏராளம். இத்திட்டங்களால் நமது வயிற்றைக் காலி செய்ய, அரசியல்வாதிகளும் - அதிகாரிகளும் அவர்கள் வயிற்றை நிரப்பிக் கொண்டார்கள்.   

நடுத்தர மற்றும் மேட்டுக்குடி மக்களுக்கு அறைக்கு ஒரு 'கக்கூஸ்' சொந்தக் காரர்கள் வந்தால் அவர்களுக்கென தனி 'கக்கூஸ்' அதிலே 'பாம்பே மாடல்' 'வெஸ்ட்டர்ன் மாடல்கள்'.தண்ணீா் இல்லை என்றாலும் பரவாயில்லை துடைத்துக் கொள்ள 'பேப்பர்' உருளை .... என்ன கிராமத்தான் கல்லில் துடைத்துக் கொள்கிறான்.  நகரத்தான் 'பேப்பரில்' துடைத்துக் கொள்கிறான்.. நாகரிக வளர்ச்சி...வேறொன்றுமில்லை. 'ஷவர் பாத்' போல 'ஸ்ப்பிரேயர் ' கொண்டு  அலச தனி 'பிளக்சிபிள் ஹோஸ்'. இப்ப அதுகூடத் தேவையில்லை. 'வெஸ்டர்ன் மாடலில்' உட்கார்ந்தால் போதும் அடியிலிந்து தண்ணீர் பீச்சியடித்து அதுவே கழுவி விடும். கைக்கு வேலையில்லை. இப்படி வசதிகளும் இருக்கத்தான் செய்கின்றன.எத்தைனை பேருக்கு? வசதியற்றவர்களுக்கு இதற்கெல்லாம் வாய்ப்பில்லையே.

ஊராட்சிகள் பேரூராட்சிகளாகவும், பேரூராட்சிகள் தேர்வு நிலைப் பேரூராட்சிகளாகவும், தேர்வுநிலைப் பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், நகராட்சிகள் மாநகராட்சிகளாவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனால் ஒதுங்க ஒரு இடம் இல்லையே! 

இதோ தேர்தல் வந்து விட்டது. மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுத்துவிட்டன. எதற்கும் எச்சரிக்கை! கவ்வப் போவது மலத்தை மட்டமல்ல,  நமது வாழ்வையும் சேர்த்துதான்.