Wednesday, February 22, 2012

சிவராத்திரி: நல்ல வேளை! இதுவரை நமீதாக்கள் அம்மனாக நடிக்கவில்லை!


”சென்ற ஆண்டு எழுதப்பட்ட இந்தக் கட்டுரை இந்த ஆண்டு சிவராத்திரியையொட்டி மீள் பதிவு செய்யப்படுகிறது!”

இரண்டு நாட்களுக்கு முன்பு மகா சிவராத்திரி. சிறப்பு வழிபாடு, நாட்டியாஞ்சலி என சிவன் கோயில்கள் கலைகட்டியிருந்தன. நாட்டியாஞ்சலியைக் கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தார்களாம். வெளிநாட்டினர்கூட மெய்சிலித்தார்களாம். இருக்காதா பின்ன? காஞ்சிச் சின்னவனின் தூக்கத்தைக் கலைத்த சுவர்ணமால்யா ஈசனை எழுப்ப ருத்ரதாண்டவம் ஆடினால் பார்ப்பவன் பரவசமடையமாட்டானா?

அம்மி அரைக்கும் மாமிகள்கூட அசைக்க முடியாத கால்களைத் தூக்கி தாண்டவமாடிய காட்சிகள் அரங்கேறின. இதெல்லாம் அவாளுக்கு வரும்படி 'சீசன்'. அமெரிக்காவிலிருந்து வந்து ஆடுகிறார்கள் என்றால் சும்மாவா வந்து ஆடுவார்கள்? 

ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் கேளிக்கை விருந்து நடனங்களைப் போல மகாசிவராத்திரி மேன்மக்களின் திருவிழா.

மகா சிவராத்திரியை அடுத்து மயானக் கொள்ளை. அம்மனைக் கட்டி இழுத்து ஆற்றுக்குச் செல்கிறார்கள். கூட்டம் அலைமோதுகிறது. மக்களின் முகங்களில் மலர்ச்சி. நீண்ட நாட்கள் கழித்து பாட்டிமார்களைப் பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியைப் போல அம்மனைக் கண்டு மகிழ்கிறார்கள். இந்த மகிழ்ச்சியில் திளைப்பவர்கள் கீழ்தட்டு மக்கள். 

எதற்காக மயானக் கொள்ளைத் திருவிழா?

மகா சிவராத்திரியையொட்டி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்களில் நடத்தப்படுவது மயானக் கொள்ளைத் திருவிழா.  இதற்கு ஒரு புராணக் கதை உண்டாம்.

சிவ பெருமானுக்கு ஐந்து தலைகள் இருந்தனவாம். தனக்கும் ஐந்து தலைகள் வேண்டும் என சிவனிடமே முறையிட்டு தவம் செய்து ஐந்து தலைகளைப் பெற்றானாம் பிரம்மா. கர்வத்துடன் கயிலாயம் சென்ற பிரம்மாவை சிவன்தான் வந்துவிட்டான் என்று பார்வதி வணங்கினாளாம். பிறகு உண்மையை அறிந்த பார்வதி சிவனிடம் முறையிட்டாளாம். சிவனும் பிரம்மாவின் ஐந்து தலைகளையும் துண்டித்தானாம்.

இருப்பினும் வெட்டப்பட்ட தகைள் மீண்டும் மீண்டும் வந்தனவாம். 999 தலைகள் வந்ததும் அவைகளை மாலையாக அணிந்து கொண்டானாம் சிவன். ஆயிரமாவது தலையை சிவன் எடுத்த போது பிரம்ம கபாலம் சிவனது கையுடன் ஒட்டிக் கொண்டதாம்.

இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதாம். ஆண்டவனுக்கே தோஷமா எனக் கேட்காதீர்கள். தோஷம் பிடித்து காடு மேடுகளில் அலைந்த சிவனைக் கண்ட மகாவிஷ்ணு, பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்க அங்காளம்மனுக்கு ஆலோசனை தெரிவித்தானாம். அதர்மத்தை அழிக்க பல அவதாரங்கள் எடுத்த மாவிஷ்ணு அந்த வேலையை ஏன் அங்காளம்மனுக்கு ஒப்படைத்தான் என கேள்வி கேட்கக் கூடாது. 'ஒர்க் லோடு' அதிகமாய் இருந்திருக்கும். 

உலகில் உள்ள பயிர்களை ஒன்று சேர்த்து, உணவாக படைத்து, அதை மூன்று கவளமாக்கி, அவற்றில் இரு கவளங்களை கபாளத்தில் போடு. மூன்றாவது கவளத்தை தரையில் வீசு. அதை எடுக்க கபாலம் கீழே இறங்கும் போது அதை அழித்து விடு என அங்காள பரமேஸ்வரிக்கு 'பிராசஸை' விளக்கினானாம் மகாவிஷ்ணு.

அதன்படி அங்காளம்மன் பிரம்ம கபாளத்தை தனது காலடியில் மிதிக்க, சிவனைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் விலகியதாம். இதுவே மயான கொள்ளைத் திருவிழாவாக நடத்தப் படுகிறதாம்.

அது அவாளின் கட்டுக் கதை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. என்னதான் புராணங்களை எழுதி வைத்தாலும் உண்மையை ஒருக்காலும் மறைக்க முடியாது. அதனால்தான் மயானத்தில் அதாவது இடுகாட்டில் புதைக்கப்பட்ட மூதாதையருக்கு படையல் இடும் விழாவாக இத்திருவிழா இப்பொழுது மாறி உள்ளதாக தினமணி எழுதுகிறது.

இப்பொழுது மாறவில்லை. எப்பொழுதும் அதுதான் உண்மை. புராணப்படி மும்மூர்த்திகளும் சம்பந்தப்பட்ட இந்த விழாவில் பார்ப்பனர்கள் ஏன் கலந்து கொள்வதில்லை? உயர் சாதியினர் ஒருவர்கூட எடுத்து நடத்துவதில்லையே? இது ஒன்று போதாதா இது புராணக் கதை அல்ல, புருடாக் கதை என்பதற்கு.

பாட்டிகளே படைத்தலைவிகளாய்...

இது தாய்வழிச் சமுதாயத்தின் எச்சமாய் தொடரும் ஒரு விழா. இங்கே ஈசனுக்கு வேலை இல்லை. ஏழைகளைக் கொடுமைப்படுத்திய கயவர்களை நம் மூதாதைய மகளிர் குத்திக் கொன்று வீர மரணம் அடைந்ததைக் கொண்டாடும் நாள். கயவர்கள் யாராய் இருந்திருக்க முடியும்? ஆண்டைகளைத் தவிர.

இரத்தக் கறையோடு தொங்கும் நீண்ட நாக்கும், மடித்துக் கடித்து தடித்த நாக்கும்,  இரண்டுக்குப் பதிலாய் நான்கு கைகளும், அக்கைககளில் வீச்சரிவாளும் கோடரியும், உருட்டி மிரட்டும் கண்களும், அட்டைக் கரியாய் மேனியும் என சூர்ப்பநகை போல யார் இருந்திருக்க முடியும்? ஏழைகளைத் தவிர.

ஆட்டைக் கடித்து இரத்தம் குடிப்பதும், பச்சைக் கறியை கொத்துக் கொத்தாய் தின்பதும் இன்றும் இவ்விழாக்களில் நடக்கின்றனவே. இவை ஆக்ரோஷத்தின் வெளிப்பாடல்லவா? 

அம்மன்கள் இப்படி ஆக்ரோஷமாய் யாருக்கெதிராய் வெகுண்டெழுந்திருப்பார்கள்? வெள்ளையனுக்கு எதிராய் வேலுநாச்சியார் வெகுண்டெழுந்ததைப் போல அன்று ஆண்டைகளுக்கெதிராய் சில தாய்மார்கள் ஆர்த்தெழுந்திருக்க வேண்டும். அவர்களே இன்று அம்மனாய்த் தெரிகிறார்கள் நம் மக்களுக்கு. அங்காளத்தாள் தலைமையேற்றிருக்க வேண்டும். பிறகு பார்ப்பனர்கள் அவளை பரமேஸ்வரியாக்கி நிறுவனப் படுத்தியிருக்க வேண்டும்.

யார் இந்த விழாவைக் கொண்டாடுகிறார்கள்?

மேல் மலையனூர் போன்ற சில ஊர்களில் செம்படவர்களும் (மீனவர்கள்), ஆற்காடு போன்ற சில ஊர்களில் வன்னியர்களும் வேலூர் விருதம்பட்டு தோட்டப்பாளையம் போன்ற சில ஊர்களில் தாழ்த்தப்பட்ட மக்களும் மட்டுமே இதை தங்கள் வீட்டுத் திருவிழாவாக நடத்துகிறார்கள். விழாவில் பங்கேற்போரும் இப்பிரிவு மக்களே. அதிலும் குறிப்பாக கீழ் வருவாய் பிரிவினர் (lower income group) மற்றும் அன்றாடங்காய்ச்சிகளே. மருந்துக்குக்கூட ஒரு உயர் சாதிக்காரனை பார்க்க முடியாது. தெரு வழியாக அம்மன் வரும் போது கும்பிடாமல் விட்டால் மரியாதை போய்விடும் என்பதாலும், சாமி குத்தம் வந்து விடுமோ என்ற அச்சத்தாலுமேயொழிய உயர் சாதியினர் யாரும் அம்மனை விரும்பி வழி படுவதில்லை.  

அங்காளம்மனைப் போல கொடுமைக்கெதிராய் கொதித்தெழவா இன்று இதுபோன்ற விழாக்கள் நடத்தப் படுகின்றன? விழாவை நடத்தும் பொறுப்பு ஊர்ப் பெரியவர்களுக்கு இருந்தாலும் நடைமுறை வேலைகளை இளைஞர்கள்தான் முன்னெடுக்கிறார்கள்.

நல்ல வேளை! இதுவரை நமீதாக்கள் அம்மனாக நடிக்கவில்லை!

அண்ணன்களுக்கும், அய்யாக்களுக்கும், தளபதிகளுக்கும், கேப்டன்களுக்கும் அல்லக்கைகள் வைக்கும் கட் அவுட்களைப் போல இங்கே அம்மன்களுக்கும் கட் அவுட்டுகள். இதில் ஆக்ரோஷமாய் காட்சியளிக்கும் அம்மன்கள் அதிகம் என்றாலும் பத்மினி, கே.ஆர்.விஜயாக்களும் அம்மனாய் அவதரித்துள்ளதும் இருக்கத்தான் செய்கின்றன. குத்தாட்டம் போட்ட ரம்யாக்கள்கூட அம்மனாய் அவதாரம் எடுத்துள்ளார்கள். நல்ல வேளை நமீதாக்கள் இதுவரை அம்மன் வேடம் போட்டதில்லை.   பாவம் ஓவியர்கள்தான் என்ன செய்வார்கள்? 'ஒரிஜினல்' அம்மனை யார்தான் பார்த்தார்கள்? மனப் பதிவுகள்தானே படைப்பாய் வரும்.

இந்த ஆண்டு மயானக் கொள்ளையை என்னால் மறக்கவே முடியாது. உடல் நலக் குறைவால் அவதிப்படும் 80 வயதான எனது தந்தையை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று மூத்திரப் பையை மாற்றிக் கொண்டு திரும்பி வர மாலை மூன்று மணியாகிவிட்டது. பேருந்து நிலையத்தில் ஐந்து மணிவரை காத்திருந்த பிறகே ஒரு பேருந்து வந்தது. ஏறிப் பயணித்தோம். முப்பது கிலோ மீட்டர் தூரப் பயணம்தான். ஆனால் மூன்று நகரங்களைக் கடக்க வேண்டும். 

வழி நெடுக மயானக் கொள்ளை. கூட்டம் அலைமோதியது. பேருந்துகள் ஊர்ந்துகூட செல்ல முடியவில்லை. சில இடங்களில் போக்கு வரத்து நிலைகுலைந்து போனது. காவல் துறையினர்தான் என்ன செய்வார்கள்? கட்டுப் படுத்தமுடியவில்லை.

மூன்று மணி நேரப் பயணம். பேருந்து நிலையத்தில் காத்திருந்த இரண்டு மணி நேரம். ஆக மொத்தம் ஐந்து மணி நேரம். ஒரு மணி நேரத்திற்குப் பதிலாக ஐந்து மணி நேரமானால் எரிச்சல் வராமலா இருக்கும்? பேருந்திலிருந்து இறங்கி வீட்டிற்கு ஆட்டோவில் சென்றபோது மயங்கிச் சுருண்டுவிட்டார் எனது தந்தை. வாந்தியும் வேறு. எப்படி இருந்திருக்கும் எனக்கு? எவன் கண்டு பிடித்தான் 'பஸ் டேவை' என்று சில பதிவர்கள் கேட்பது போல எவன் கண்டுபிடித்தான் மயானக் கொள்ளையை என்று கேட்கவா முடியும்.

விழாக்கள் தேவைதானா?

துன்ப துயரங்களால் அவதிப்படும் மக்கள் தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்தவும்,  மயானத்தில புதைக்கப்பட்ட மூதாதையருக்கு படையல் இடும் விழாவாகவும் இது போன்ற விழாக்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் பொது மக்களுக்கு இடையூறுகள் ஏற்படத்தான் செய்கின்றன. அவர்களும் பொது மக்கள்தானே. வேறு ஒரு தரப்பினர் ஒரு விழா கொண்டாடும் போது அவர்களும் இது போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகத்தானே செய்கிறார்கள். யாரை யார் நொந்து கொள்வது?

விழாக்கள் தேவைதானா என்பது பரிசீலனைக்குரியவைதான். தேவையற்ற விழாக்களை தவிர்க்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்தான். அதுவும் இன்றைய விழாக்கள் எதுவாக இருந்தாலும் தண்ணியில் மிதக்காமல் நடப்பதில்லையே. குறிப்பாக குடிக்காத இளைஞர்களே இன்று இல்லை என்ற நிலைதான் எங்கும் நிலவுகிறது. இதற்காகவே விழாக்களை ஒழித்துக் கட்டினால் தவறொன்றும் இல்லைதான்.

ஆனால், மக்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாகிவிட்ட விழாக்களை ஒரேயடியாக ஒழித்துவிட்டு எந்தத் தொந்தரவும் இல்லாமல் யாராலும் இப்போதைக்கு வாழமுடியாது. விழாக்களில் கிடைக்கும் மகிழ்ச்சி அன்றாட வாழ்க்கையில் மக்களுக்கு கிடைக்கும் போது தேவையற்ற விழாக்கள் கண்டிப்பாய் காணாமல் போகும்.

No comments:

Post a Comment