Sunday, April 1, 2012

“புள்ளத்தாச்சியப் பாத்து புள்ள இல்லாதவ தன் வயித்த உலக்கையால் இடித்துக் கொள்வாளாம்”


கலி முத்திவிட்டது; அதனால்தான் கேடுகளும் அதிகரித்துவிட்டன என்று பேசுவதை இன்றும் நாம் கேட்க முடிகிறது. பழங்காலத்தில் அதாவது கலி முத்தாத காலத்தில் குற்றங்கள் குறைவாக நடந்தன; இன்று அவைகள் அதிகரித்துவிட்டன என்பதுதான் அதன் பொருள். பழங்கால புராணங்களையும், நீதி போதனைகளையும், மதக் கோட்பாடுகளையும் புரட்டினால்தான் எது உண்மை என்பது விளங்கும்.

மகாபாரதத்தில் பொறாமை

பொறாமை குணம் பல்வேறு தீய செயல்களுக்கும் பல்வேறு குற்றங்களுக்கும் அடிப்படையான காரணமாக இருக்கிறது. “புள்ளத்தாச்சியப் பாத்து புள்ள இல்லாதவ தன் வயித்த உலக்கையால் இடித்துக் கொள்வாளாம்” இது இன்றும் கிராமப்புறங்களில் நிலவும் பிரபலமான வழக்கு மொழி. பொறாமையின் ஒருவகை வெளிப்பாடு இது. இவளுக்குப் பிள்ளை இல்லை என்பதற்காக அடுத்தவள் பிள்ளை பெறுவதைப் பார்த்து ஏன் உலக்கையால் தன் வயிற்றை இடித்துக் கொள்ள வேண்டும்? இந்த எண்ணம் எதனால் வருகிறது? யார் இப்படி எல்லாம் செய்யச் சொல்லி தூண்டினார்கள்? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.

பாண்டு மன்னன் தன் மனைவி குந்தியுடன் வேட்டையாட வனத்திற்குச் செல்கிறார். சில காலம் அவர்கள் காட்டிலேயே வேட்டையாடி வருகின்றனர். அஸ்தினாபுரத்தில் ஆட்சி செய்து வரும் திருதராட்டிரனின் மனைவி கருவுற்றிருந்தாலும் இரண்டு ஆண்டுகளாக குழந்தை பிறக்கவில்லை. அதே வேளையில் வனத்தில் இருந்த குந்திக்கு குழந்தை பிறக்கிறது. இதைக் கெள்விப்பட்டு பொறாமை கொண்ட காந்தாரி தன் வயிற்றை ஓங்கி குத்துகிறாள். அப்பொழுது தன் வயிற்றிலிருந்து மாமிசப் பிண்டம் ஒன்றை பெற்றெடுக்கிறாள். இந்தப் பிண்டத்திலிருந்துதான் துரியோதனன், துச்சாதனன் என அண்ணன் தம்பிகள் நூறு பேர் வந்தார்கள் என்பது தனிக்கதை.

இளவரசனாக வேண்டும் என்பது துரியோதனனின் ஆசை. ஆனால் வயதில் மூத்தவன் தருமன். அவனே அப்பதவிக்கு உரியவன். அதனால் தான் இளவரசனாக முடியாது என்பதாலும் பீமன் முரடனாக இருப்பதாலும் இவர்கள் மீது துரியோதனன் வெறுப்பையும் பொறாமையையும் வளர்த்து வந்தான்.

ஒரு குறிப்பிட்ட நாளில் தருமனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்கிறான் திருதராட்டிரன். பாழடைந்து கிடக்கும் காண்டவப் பிரஸ்தம் அவனுக்கு ஒதுக்கப்படுகிறது. பிறகு காண்டவப் பிரஸ்தம் புதுக்பிக்கப்பட்டு இந்திரப் பிரஸ்தம் எனும் புதிய பெயர் பெற்று மிளிர்வதைக் கண்ட கௌரவர்களுக்கு பாண்டவர்கள் மீது வெறுப்பும் பொறாமையும் உருவெடுக்கலாயின.

வில்வித்தை கற்பதற்கு கீழ்சாதிக்காரனுக்குத் தகுதி கிடையாது என துரோணாச்சாரியால் ஏகலைவன் விரட்டப்படுகிறான். ஆனால் எப்படியாவது வில்வித்தை கற்க வேண்டும் என்கிற ஆவலால் துரோணாச்சாரி பாண்டு மற்றும் திருததாட்டிரனின் புதல்வர்களுக்கு கற்றுக் கொடுப்பதை மறைவிலிருந்து பார்த்தே கற்றுக் கொண்ட ஏகலைவனின் வில்வித்தை திறமை கண்டு பொறாமை கொண்ட துரோணாச்சாரி ஏகலைவனின் கட்டை விரலை குருதட்சணையாகப் பெற்றுக் கொண்டு அவனை முடமாக்குகிறான்.

பாண்டவர்களை ஓர் ஆண்டு வனத்திற்கு அனுப்ப துரியோதனன் செய்த சதித்திட்டத்திற்கு திருதராட்டிரன் அனுமதி வழங்கியதே பாண்டு புதல்வர்கள் மீது திருதராட்டிரன் வைத்திருந்த பொறாமையே காரணம்.

இராமாயணத்தில் பொறாமை

கோசல நாட்டு ‘சக்ரவர்த்தி’ தசரதனுக்கு 350 மனைவிகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். அவர்களில் கௌசல்யாவுக்கு இராமனும் கைகேயிக்கு பரதனும் சுமித்ராவுக்கு இலட்சுமணன்-சத்ருக்கன என்கிற இரட்டையர்களும் பிள்ளைகள். இராமனுக்கு முடிசூட்டப்படக்கூடாது என்று பொறாமை கொண்ட கைகேயி தசரதனிடம் வரங்களைப் பெற்று இராமனை வனவாசத்திற்கு அனுப்பியதால் தனது மகன் பரதனுக்கு முடிசூட்டப்படுகிறது.

பொறாமை படைத்துள்ள தம்பி ஒருவன் நெருக்கடியான நேரத்தில் ஆக்கம் படைத்துள்ள தன்னுடைய அண்ணாவை அடியோடு கவிழ்த்து விடுகிறான்.  இப்பொழுது உன்னைச் சிதைத்துவிட எனக்கு இயலும். ஆயினும் உடன் பிறந்தவன் என்னும் ஒரே காரணத்தை முன்னிட்டு உன்னை நான் விட்டுவிடுகிறேன். என் காட்சியினின்று இக்கணமே மறைந்துபட்டுப்போ” இது இராவணன் விபீடணனைப் பார்த்துக் கூறியது.

இந்துக்களின் இதிகாசங்களாப் போற்றப் படும் இராமயணமும் மகாபாரதமும். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு இறுதி வடிவம் பெற்றதாகத் தெரிகிறது. இராமயணமும் மகாபாரதமும் நடந்த கதைகளா அல்லது கற்பனைகள் கலந்து புனையப்பட்ட கதைகளா என்கிற வாதங்கள் ஒரு புறம் இருந்தாலும் இவற்றில் சொல்லப்பட்டுள்ள பொறாமை உள்ளிட்ட பல கருத்துகள் அன்றைய சமூத்தில் நிலவியவை என்பதை நாம் கருத்தில் கொள்வதே இங்கு முக்கியம்.

தொடரும்…..

தொடர்புடைய பதிவுகள்:


4 comments:

 1. நலமா நண்பரே
  மொகறே கட்ட முஞ்சிகட்ட வெறே தலைப்பு கிடைக்கவில்லையா எழுதுவதே எப்போதவது அதிலும் இப்புடியா? உருப்புடியாக எதாவது எழுத முயற்சி செய்யுங்கள் பக்கி

  ReplyDelete
  Replies
  1. நலம்தான் 'நண்பரே'!

   தலைப்பு குறித்து தங்களுக்கு ஏன் இத்தனை கோபம்? இது ஒரு தொடர் கட்டுரை. இது உருப்படியானதா இல்லையா என்பதை கட்டுரை முடிக்கப்பட்ட பிறகு சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

   சரி! அது என்ன பக்கி? பொருள் தெரிந்தால் அனைவருக்கும் 'உருப்படியாக இருக்குமே!

   உங்கள் வலைப்பூ எழுத்துகள் நாகரிகமாக இருப்பதாகத்தான் கருதுகிறேன். பிறகேன் "மொகறே கட்ட முஞ்சிகட்ட" இத்தனை வெறுப்பு?

   Delete
  2. ///சரி! அது என்ன பக்கி? பொருள் தெரிந்தால் அனைவருக்கும் 'உருப்படியாக இருக்குமே!////

   பக்கி என்றால் எங்க இராமநாதபுர பாஷையில் பசங்க அல்லது பிள்ளைகள் பாசமாக கூப்பிடுவது ராசா

   ///உங்கள் வலைப்பூ எழுத்துகள் நாகரிகமாக இருப்பதாகத்தான் கருதுகிறேன். பிறகேன் "மொகறே கட்ட முஞ்சிகட்ட" இத்தனை வெறுப்பு?///

   இதுவும் பாசம் தான்

   Delete