Friday, March 22, 2013

தள்ளாடும் வயதில் தாயைத் தாங்கிப் பிடிக்க யார் இருக்கா?

“எங்கோ பிறந்தவனை இணையாய் ஏற்றதனால் கருவுற்று, ஒரு குழந்தைக்குத் தாயாகி அக்குழந்தையும் வளர்ந்து ஆளாகி தனிக்குடித்தனம் சென்ற பிறகு தாய் தள்ளாடும் வயதைத் தொடுகிறாள். தனக்கு வாய்த்த இணையே இப்போது இந்தத் தாய்க்கு மற்றொரு குழந்தையாகிறான். அன்று எட்டு மாதக் குழந்தையை பராமரித்தவள் இன்று எண்பது வயதுக் குழந்தையை பராமிரிக்க வேண்டியவளாகிறாள்”.
தள்ளாத வயதிலும் ஒரு பெண் தன் கணவனை எவ்வாறெல்லாம் பராமரிக்க வேண்டியுள்ளது என்பது பற்றி “கணவனே குழந்தையாய்...” என்கிற முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். அதே வேளையில் ஒரு கணவன் தனது மனைவியை அவ்வாறு பராமரிக்கிறானா என்கிற கேள்வியும் கூடவே எழுகிறது.
பொதுவாக மனைவியைவிட கணவனே வயதில் மூத்தவனாக இருப்பதால் முதலில் மூப்பெய்தி மரணத்தை நாடுகிறான். அதன்பிறகு அவனது மனைவி முடிந்தவரை தனியாக வாழ்ந்துவிட்டு அவளும் மரணத்தை நாடுகிறாள். ஒரு வேளை ஒப்பீட்டளவில் மனைவியைவிட கணவன் நலத்தோடு இருக்கும் போது தனது மனைவி நோய்வாய்ப்பட்டுவிட்டால் என்ன நடக்கிறது?
எங்கோ பிறந்தவளை தேடிப்பிடித்து, ஆயிரத்தெட்டு பொருந்தங்கள் பார்த்து, சொந்த பந்தங்களின் ஒப்புதலையும் பெற்று, இவளே தனக்கு ஏற்ற, உற்ற துணை என ஏற்றுக்கொள்கிறான். திருமணத்தை முடித்துக்கொண்டு பெற்றோரும் உற்றாரும் கண்கலங்கி கைவிலக இனி எல்லாமே புகுந்த வீடுதான் என கொண்டவனைப் பின்தொடர்கிறாள்.
திருமணத்திற்குப் பிறகும் தனது சொந்த பந்தங்களோடு எப்போதும் போல இயல்பாய் இருக்கிறான் ஆண். ஆனால் அவளுக்கோ கொண்டவனும் புதிது; குடிக்கும் தண்ணர், உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, அக்கம் பக்கம் வாழ்வோரின் மூச்சுக்காற்று என எல்லாமே புதிது என்பதால் அதற்கேற்ப அவள் தன்னைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும். அதுவரை புகுந்த வீட்டில் அவள் அனுபவிக்கும் மனவலியை, உடல் வலியை அவள் மட்டுமே அறிவாள்.
ஒரு நாள் வெளியூர் பயணத்தில் குடி நீர் மாறினாலே ஒவ்வாமை வந்துவிடுகிறது பலருக்கு. புகுந்த வீட்டிற்கு வந்தவளுக்கோ ஓராயிரம் ஒவ்வாமைகள். என்ன செய்வாள் பாவம்? உடல் நலிந்து போனால் “போய் ஒடம்ப சரிபண்ணிட்டு வா” என தாய்வீட்டிற்கே திருப்பி அனுப்புகிறான் கணவன். இப்படித்தான் தொடங்குகிறது மனைவிக்கான பராமரிப்பு.
தாய்வீடு சென்று சரியாகி வந்தாலும் வாரிசுச் சுமையை சுமந்தே ஆக வேண்டும். இது புகுந்த வீட்டின் சுமை என்றாலும்கூட அதை இறக்குவதற்கும் அவள் தாய்வீட்டிற்குத்தான் திரும்ப வேண்டும். பெற்றெடுத்த குழந்தையோடு அவள் புகுந்த வீட்டிற்குத் திரும்பினாலும் குழந்தைக்கு சீக்கு என்றால் அதற்கும் தாய்வீடுதான் கதி. இப்படி பாரத்தை சுமக்க ஓரிடம் – பாரத்தை இறக்க மற்றோர் இடம் என புகுந்த வீட்டிற்கும் தாய்வீட்டிற்குமாய் அலைந்து அலைந்து ஓய்ந்து களைத்து வாழ்க்கையை ஓட்டுகிறாள். தள்ளாடும் வயதில்கூட அவள் தாய்வீட்டின் அரவணைப்பைத்தான் நாடுகிறாள். தாய் வீட்டு உறவுகள் அற்றுப்போய் இருந்தாலும்கூட தாய் வீட்டின் நினைப்பிலேயே அவள் புதுத்தெம்மைத் தேடுகிறாள்.

கணவனுக்கு முடியாத போது மனைவியானவள் தனது கணவனை சொந்தக் குழந்தையைப் போல பராமரிக்கிறாள். பாசத்தினால் அவ்வாறு செய்கிறாளா அல்லது கணவனுக்குப் பணிவிடை செய்வது தனது கடமை என்று இச்சமூகம் ஆணாதிக்கத் திமிரோடு திணித்துள்ளதை ஏற்றதனால் அவ்வாறு செய்கிறாளா என்றெல்லாம் அவள் பார்ப்பதில்லை.

இந்தச் சேவைகளுக்கு அவள் பிரதிபலன் எதையும் எதிர்பார்ப்பதில்லை - கணவன் தன்னோடு இருந்தால் போதும் என்பதைத் தவிர! யார் ஒருவர் பிறருக்கு ஆக்கபூர்வமான சேவைகளைப் பிலதிபலன் ஏதும் எதிர் பார்க்காமல் செய்கிறார்களோ அவர்களே ஆரோக்கியமானவர்கள் என கிரேக்க நாட்டு ஹோமியோபதியர் ஜார்ஜ் வித்தல்காஸ் தனது “சைன்ஸ் ஆஃப் ஹோமியோபதி” என்கிற நூலில் ஆரோக்கியத்திற்கான அளவுகோலாக வரையறுக்கிறார். அதனால்தானோ என்னவோ இங்கே தாயானவள் தன்னுடைய தன்னமற்ற சேவையினால் ஆரோக்கியமானவளாகத் திகழ்கிறாளோ?

ஆணோ - பெண்ணோ, தங்களால் செய்து கொள்ள முடியும் என்கிற போது அவரவர் சுய பராமரிப்புகளை – தாங்கள் சாப்பிட்ட தட்டுகளைக் கழுவுவது முதல் தங்களின் துணிகளை தாங்களே துவைத்துக் கொள்வது வரை – அவரவர்களே செய்து கொள்வதுதான் நியாயமான நெறிமுறை. ஒருவர் தன்னைத்தானே சுயமாக பராமரித்துக் கொள்ள இயலாத சூழலில் அதாவது உடல் நலிவுற்றிருந்தாலோ அல்லது தவிர்க்க முடியாத வேறு சில சூழ்நிலைகளிளோ அவருக்கு மற்றவர்களின் உதவி தேவைப்படுகிறது.

ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ மற்றொரு பெண் பணிவிடை செய்வது சகஜமான இயல்பான ஒன்றாகப்படுகிறது. ஆனால் ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு அதுவும் அவள் நோயுற்று மருத்துவ மனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கிக் கிடக்கும் போது - அது தனது மனைவியாகவும் இருக்கலாம் அல்லது தனது தாயாகவும் இருக்கலாம் - அவளுக்கு பல் துலக்க, ஈரத்துணி கொண்டு உடல் கழுவ, மலம் எடுத்து குதம் துடைக்க, சிறுநீர் பிடிக்க, உணவு ஊட்ட, தேனீரோ தண்ணீரோ பருகக் கொடுக்க, மாத்திரை போட, புரை ஏறினால் தலையில் இதமாயத் தட்டிக் கொடுக்க, வாந்தி எடுத்தால் கைபிடிக்க - அப்போது அதற்குரிய கிண்ணத்தைத் தேடிக்கொண்டிருக்க முடியாது - நெஞ்சுச் சளியோ மூக்குச் சளியோ வரும் போது வழித்து துடைத்துவிட, குளிரானால் உடல் போர்த்த, வெக்கையானால் மின் விசிறியை இயக்கிவிட என இத்தனையையும் ஒரு ஆண் செய்யும் போது மூக்கின் நுனி மீது விரல் வைத்து பிரமித்து நிற்கின்றனர் மற்ற படுக்கைகளில் தங்களது உறவினர்களைப் பராமரிக்கும் பெண்கள்.

விதிவிலக்காக ஒருசில கணவன்மார்களைத் தவிர பெரும்பாலான கணவன்மார்கள் மனைவிக்குப் பணிவிடை செய்வதை மிகக் கேவலமானதாகத்தான் பார்க்கின்றனர். மனைவிக்குச் சேவை செய்வது அல்லது அவளுக்குப் பணிவிடைகள் செய்வது ஆணுக்கு இழுக்கு என சமூகம் அவனை எச்சரிக்கிறது. மீறி யாராவது ஒருசிலர் செய்தால் அவர்களை ஏளனமாகப் பார்க்கிறது. இத்தகைய ஆணாதிக்க மனப்போக்கு தனிநபர் சம்பந்தப்பட்டதல்ல. இது இந்த நாட்டில் இன்னமும் அழியாமல் நிலைநாட்டப்பட்டு வரும் நிலவுடமைச் சமூகத்தின் கேடு கெட்டப் பண்பாடு. நமது புராணங்களும், இதிகாசங்களும், கதைகளும், நாடகங்களும், திரைப்படங்களும், நெடுந்தொடர்களும், ஞானிகளின் உபதேசங்களும் இத்தகைய பண்பாட்டைத்தான் மிக உயர்ந்த இந்தியாவின் பெருமைக்குரிய பண்பாடாக சித்தரித்து வருகின்றன.

உற்ற துணையே இந்த வறட்டுக் கௌரவத்தை கைவிட மறுக்கும் போது அவள் என்ன செய்வாள் பாவம்? அதுதான் ஆணின் தன்மை என அமைதியாய் ஏற்பதைத்தவிர? ஒரு வேளை பெற்ற மகள் ஒருத்தி இருந்தால் குறைந்த பட்சம் உதவிக்கரமாவது நீட்டுவாள். அவ்வாறு யாரும் இல்லை என்றாலும் அவள் பாவப்பட்டு சோர்ந்து விடுவதில்லை. முடிந்தவரை தன்னைத்தானே பராமரித்துக் கொள்ளவே முயற்சிக்கிறாள்.

புறநிலை நிர்ப்பந்தம் காரணமாக மருமகள் சில பணிவிடைகளைச் செய்ய முன்வந்தாலும் அவள் 'மூஞ்சைக்காட்டாமல்' இருப்பதில்லை என்பதனால் அவமானத்துக்கு உள்ளாகி உதவிகளைப் பெருவதைவிட முடிந்தவரை தானே பார்த்துக் கொள்வது என்பதிலிருந்து வருவதுதான் இந்தச் சுயபராமரிப்பு. மனைவியை இழந்த மாமனாரின் சுயபராமரிப்பும் இத்தகையதே.

சொத்துடமைச் சமூகத்தின் அவலமாக இன்றுவரை நீடிக்கும் மாமியார் – மருமகள் முரண்பாட்டை தனிநபர் முரண்பாடாக்கி ஒருவரை ஒருவர் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் இன்றையச் சூழலில் கணவனும் காலமாகி, பெற்ற மகனும் கைவிடும் போது தன்னைத்தானே பராமரித்துக் கொள்ள இயலாத நிலையில் தான் யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது என்பதால் ஒரு கட்டத்தில் தனது மூச்சைத் தானே நிறுத்திக்கொள்கிறாள் தாய்.

தொடர்புடைய பதிவுகள்:

7 comments:

 1. பொதுவாக பதிவுலகில் சுய சிந்தனையில் வெளிப்படும் அனுபவ கட்டுரைகள் வருவது அபூர்வம். அதுவும் திறனுட்ன் ஆராய்ந்து எழுதுவது இல்லவே இல்லை. அந்த வகையில்இது பராட்டக்கூடிய வகையில் உள்ள முக்கியமான விசயத்தைப் பேசும் கட்டுரை. ஒவ்வொரு முறையும் வயதானவர்களை பார்க்கும் போது என் நிகழ்கால ஒழுக்கத்தை அதிகம் யோசித்து என்னை மேலும் மெருகேற்றிக் கொள்வதுண்டு.

  என் வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. உங்கள் பதிவு அருமை... கீழே எனது இயல் கவிதை.

  பூ வை ..பூவையே
  பூ வை
  தலையில் பூவையே

  மை வை
  நெற்றியில் தமிழே

  மீன் வை
  மின்னலாய் கண்ணையே

  நீ வை
  நினைவில் என்னையே

  பா வை
  தமிழில் கவியே

  கோ வை
  மனதில் எண்ணியே

  தீ வை
  தினமும் ஆசையில்

  என் கவிதைகளையும் அப்ப அப்ப வந்து படிங்க

  ReplyDelete
  Replies
  1. நன்று!

   உங்கள் கவிதையைப் படிக்க இணைப்பு கொடுங்களேன்.

   Delete
  2. மேலே உள்ள கவிதை நான் நேற்று என் தளத்தில் வெளிட்டது

   Delete
  3. புறநிலை நிர்ப்பந்தம் காரணமாக மருமகள் சில பணிவிடைகளைச் செய்ய முன்வந்தாலும் அவள் 'மூஞ்சைக்காட்டாமல்' இருப்பதில்லை/இதுதான் பிரச்சனையின் ஆணிவேர்.

   Delete
 3. பெண்களின் நிலையை வலியை நிராகரிப்பை ஈகத்தை வெளிப்படுத்திய இந்தப் பதிவுக்கு முன்பே கருத்திட வேண்டுமென்று நினைத்து மறந்தேன். படிக்கும்போது கண்ணீர் முட்டியது.

  ReplyDelete

There was an error in this gadget