இந்திய
அரசியல் அமைப்புச் சட்டம் என்னவோ இந்தியக் குடிமகனுக்கு கருத்துச் சுதந்திரம் இருப்பதாகச்
சொல்கிறது. ஆனால் நடைமுறையில் ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் சுற்றுச் சூழல் பற்றி பேசினால்
கைது-சிறை. சென்னை – சேலம் எட்டு வழி பசுமைச் சாலையால் விவசாயிகள் வாழ்வாதாரம் பறிபோவது
பற்றி பேசினால் கைது-சிறை. நடுவண் மற்றும் மாநில அரசுகளின் மக்கள் விரோத திட்டங்கள்-செயல்பாடுகள்
குறித்து பேசினால் கைது-சிறை. இந்தியக் குடிமகனின் குரல் வலையை ஒரு பக்கம் நெறித்துக்
கொண்டே மற்றொரு பக்கம் உலகிலேயே இரண்டாவது பெரிய ஜனநாயக நாடு இந்தியாதான் என பெருமை
பேசுகின்றனர் ஒரு சாரார். உண்மையிலேயே நாம் ஒரு திறந்த வெளிச் சிறையில்தான் வாழ்ந்து
வருகிறோம் என்றால் அது மிகையல்ல.
அரசு
ஊழியராகவோ அல்லது ஒரு பொதுத் துறை ஊழியராகவோ ஒரு இந்தியக் குடிமகன் இருந்துவிட்டால்
போதும் அவன் தனது வேலையைத் தவிர வேறு எதையும் பற்றி பேசக்கூடாது. அவன் பணிபுரியும்
நிறுவனத்தின் செயல்பாடுகள் ஊழியர்களுக்கு எதிரானதாக இருந்தால்கூட அவன் வாய் திறக்கக்
கூடாது.
நடுவண்
மற்றும் மாநில அரசுகளின் செயல்பாடுகள், தான் பணிபுரியும் நிறுவனத்தின் எதிர்காலத்தை
பாதிக்கும் என்றாலும்கூட, இந்த பாதிப்பு தனது வாழ்வாதாரத்தையே கேள்விக்குள்ளாக்கும்
என்றாலும்கூட அவன் வாய் திறக்கக் கூடாது. மீறினால் அவனது வேலை-வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு
வீதியில் வீசப்படுகிறான். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஆங்கிலேயர் காலத்து
நடத்தை விதிகளே இன்றைய சுதந்திர இந்தியாவிலும் அப்படியே நீடிக்கிறது. ஜனநாயக உணர்வு
கொண்ட ஒருவர் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணியில் சேருவது என்பது கிளைச்
சிறையில் அடைக்கப்படுவதற்கு ஒப்பாகும்.
1981
ல் நடுவண் அரசின் பொதுத்துறை ஒன்றில் பணிக்குச் சேர்ந்த நான் அந்த நிறுவனத்தில் நடைபெற்ற
ஒரு சிலரின் ஊழல் முறைகேடுகளை தட்டிக் கேட்டத்தற்காக பணி நீக்கம் செய்யப்பட்டு வீதியல்
வீசப்பட்டேன். தொடர் போராட்டத்தின் மூலம் அதே நிறுவனத்தில் வேறு ஒரு கிளையில் நான்
மீண்டும் புதிதாக பணியில் சேர்ந்தேன்.
கிளைச்சிறையில்தான்
எனது வாசம் என்றாகிவிட்ட பிறகு வெளிப்படையாக எனது எண்ணங்களை வெளிப்படுத்தவியலாத சூழலில்தான்
இணையத்தின் வலைப் பக்கம் என்னை ஈர்த்தது. கிளைச் சிறைவாசி என்பதனால் மெய்யுலகில் நேரடியாக
கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்றாலும் மெய்நிகர் உலகிலாவது எனது எண்ணங்களை
வெளிப்படுத்தாலாம் என்கிற வகையில்தான் நான் ஊரான் வலைக் பக்கத்தை 2010 ல் தொடங்கினேன்.
நான்
60-வது அகவையை நிறைவு செய்ததால் 23.06.2018 அன்று நடுவண் அரசின் பொதுத்துறை நிறுவனமான
ஒரு கிளைச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டேன். கிளைச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும்
திறந்த வெளிச் சிறைக்குதான் தள்ளப்பட்டுள்ளேனே தவிர தற்போதும் நான் சுதந்திரமானவன்
அல்ல.
இந்தச்
சூழலில்தான் வாசிப்பை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இராணிப்பேட்டை பெரியார்-அம்பேத்கர்
வாசகர் வட்டம் சார்பில் எனது பணி ஓய்வு மற்றும் ஊரான் வலைப் பக்கம் அறிமுக விழா
28.06.2018 அன்று நடைபெற்றது.
இவ்விழாவில்
அலுவலக ஊழியர்கள், நண்பர்கள், பெரியார்-அம்பேத்கர் வாசகர் வட்டம் அங்கத்தினர்கள் என
பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஊரான் வலைப்பக்கதில் உள்ள படைப்புகள் குறித்து
விமர்சன நோக்கில் பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். சால்வை மற்றும் மாலைகள்
கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது என்பதை முன்கூட்டிடே அறிவித்து விட்டதால் புத்தகங்கள்
மட்டுமே விழாவில் பரிசாக பெறப்பட்டது. மாலை 06.30 மணி முதல் 08.30 மணி வரை சுமார்
2 மணி நேரம் நடைபெற்ற விழாவில் ஒருவரும் கலைந்து செல்லாமல் இறுதிவரை இருந்து சிறப்பித்தனர்.
இது ஒரு விழா என்பதைவிட ஒரு கருத்தரங்கமாக அமைந்ததே இதன் சிறப்பு. விழாவை சிறப்பித்த
அனைவருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
பொன்.சேகர்
தொடர்புடைய பதிவு:
No comments:
Post a Comment