Monday, September 27, 2021

ஐயகோ! என் செய்வேன்? கரோனா உன்னைக் கவ்விக் கொண்டதே!

ஐயகோ! என் செய்வேன்?
கரோனா உன்னைக் கவ்விக் கொண்டதே!

அன்று
‘பாலிடெக்னிக்’கில் படிக்கும் போது
‘சிபிடி’-யில் கூட்டம்
அதிகம் என்பதால்-நாம்
வேறு வேறு வகுப்புகளில்
பழக்கமில்லை அவ்வளவாக…
 
இறுதி ஆண்டு
தேர்வுகள் முடிந்து தேர்ச்சியானோம்
திருச்சி ‘பெல்’லுக்கு – ‘என்எம்ஆராய்’!
நீயும் நானும் லிங்கராஜூம்
கீழரண் சாலை ‘லிபர்ட்டி லாட்ஜி’ல்!
அடைக்கலமானோம்! நெருக்கமானோம்!
 
விடுமுறை நாட்களில்
நீராடச் செல்வோம்
கொடி நடையாக காவிரிக்கு!
நினைவிருக்கிறதா - 1979 ல் ஒரு நாள்
பொங்கி வந்த புதுப் புனலில் - நீ
சிக்கித் தடுமாறினாய் நீச்சல் தெரியாததால்-
உனை மீட்க நான் நெருங்கியபோது
உடும்புப்பிடியாய் பிடித்துக் கொண்டாய்-
நீந்த வழியின்றி
நானும் உன்னோடு.தத்தளித்த போது
நம் குடுமியைப் பிடித்து
இழுத்துப் போட்டான் ஒரு இளைஞன்
இல்லையேல்
அன்றே காவிரியில் நாம் கலந்திருப்போம்!
அன்று ஈருடல் ஓர் உயிரானோம்
அதனால்தானோ என்னவோ
என்னுள் நீ அமர்ந்து கொண்டாய்!
 
ஐயகோ! என் செய்வேன்?
கரோனா உன்னைக் கவ்விக் கொண்டதே!
என்னுள் வெறுமை.
ஏனோ உனைப் பார்க்க மனம் ஏங்குகிறது!
 
பொன்.சேகர்
13.06.2021

face book 

No comments:

Post a Comment