Saturday, April 22, 2023

வாலாஜாப்பேட்டையில் தொடரும் வன்கொடுமை!

வண்டியில் பெட்ரோல் தீர்ந்து விட்டது. வழக்கமாக வி.சி மோட்டூர் செல்வேன். ஆனால் இம்முறை தென்கடப்பந்தாங்கல் முசிறி சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்குச் சென்று பெட்ரோல் போட்டுக் கொண்டு அன்றாடம் குடையப்படும் அருகில் உள்ள மலையைப் பார்க்கச் சென்றேன்.

பெருமலையோ குன்றோ அவை எதுவானாலும் பாறைகளாலும் கற்களாலும் உயர்ந்து நிற்பவைதானே! பாறைகளின் இடுக்குகளுக்கு இடையில் நீர் சேகரித்து வைக்கப்படுவதனால்தான் சிறு குன்றுகளிலும் பெரு மலைகளிலும் செழிப்பான மரங்களை நாம் பார்க்க முடிகிறது. 

மழைக்காலங்களில் இத்தகைய குன்றுப் பகுதிகளில் பெய்யும் மழைநீரானது வழிந்தோடி அருகில் உள்ள சிறு ஏரிகளிலும் குளங்கள் குட்டைகளிலும் நிரம்புகிறது. அதனால் அப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரம் பெருகுகிறது. அத்தகைய ஒரு மலைதான் வாலாஜாப்பேட்டை அருகில் உள்ள தென்கடப்பந்தாங்கல்-முசிறி சாலையில் அமைந்துள்ள சில சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு குன்றுப் பகுதி. 

இந்தப் பகுதியை இன்று நேரில் பார்த்தபோது அந்தப் பகுதியே களேபரமாக காட்சி அளித்தது. எங்கு திரும்பினாலும் பாறைகள் உடைக்கப்பட்டு நொறுக்கப்பட்டு அரைக்கப்பட்டு லாரிகளில் எடுத்துச் செல்லப்படுவதைப் பார்த்த போது கேட்க நாதியற்றுக் கிடக்கிறோமே என்ற குற்ற உணர்வுதான் எஞ்சியது.

இயற்கை அன்னையை காமுகர்கள் அன்றாடம் கடித்துக் குதறுகிறார்கள். திமுக-அதிமுக ஆட்சிகள் எதுவாயினும் காமுகர்கள்தான் மாறுகிறார்களே ஒழிய இயற்கை அன்னை மீதான வன்கொடுமை மட்டும் நின்றபாடில்லை. 

இது ஒரு வகை மாதிரிதான். இப்படித் தமிழகம் எங்கும் பல நூறு இடங்களில் இயற்கை அன்னையை குதறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். குதறும் கயவர்கள் கோடிகளில் புரளுகிறார்கள். தட்டிக் கேட்க ஆள் இல்லையா? இல்லை என்பதுதான் எதார்த்தம். இருப்பதாகச் சொல்லிக் கொள்வோர் சோரம் போவதுதான் வாடிக்கையாக நடக்கிறது.

மலை குடையப்படுவதனால் எதிர்காலத்தில் நிகழப்போகும் அவலங்களைப் புரிந்து கொண்டு உள்ளூர் மக்கள் விலை போகாமல் என்றைக்குப்  போராடுகிறார்களோ அன்றைக்குத்தான் இத்தகைய இயற்கை வளங்களைப் பாதுகாக்க முடியும். அதுவரை இயற்கை அன்னை குதரப்படுவதை யாராலும் தடுக்க முடியாது.

ஊரான்








No comments:

Post a Comment