Sunday, November 5, 2023

மழைக்காலம்: வடிகால்களை சரி செய்யுமா விடியல் அரசு?

போதிய மழை பெய்து ஓடைகளில், ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஏரிகள், குளங்கள், அணைகள் நிரம்பினாலும் வயல்களுக்குச் சென்று சேரும் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்தாலும், தூர்வாரப்படாமல் இருப்பதாலும் கடைமடைப் பகுதிகளுக்கு நீர் சென்று சேராததால் பயிர்கள் கருகி நாசமாகின்றன; 

அதேபோல வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்தாலும் தூர்வாரப்படாமல் இருப்பதாலும் பெருமழை காலங்களில் பெய்யும் மழைநீர், வடிய வழி இல்லாததால் மேலுள்ள வயல்களில் வளரும் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி நாசமாகின்றன.

கோப்புப் படம்

ஆதிக்கச் சக்தியினர் மட்டுமன்றி சாதாரண விவசாயிகள் உள்ளிட்ட அனைவருமே தங்களின் தன்னலத்திற்காக இத்தகைய ஆக்கிரமிப்புகளை செய்துள்ளனர். பல கிராமங்களில் பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களே இல்லை என்ற நிலைதான் உள்ளது.

உள்ளாட்சி நிர்வாகங்கள் முடங்கிப் போனதனால்தான், 30 ஆண்டுகளுக்கு முன்பு இல்லாத இந்த நிலைமை தற்போது நிலவுகிறது. தங்களுக்குள் உள்ள போட்டி, பொறாமையின் காரணமாக இத்தகைய நிலைமைகளை விவசாயிகளே கண்டும் காணாமல் கடந்து செல்கின்றனர். இறுதியில் அவர்களே நட்டத்துக்கும் ஆளாகின்றனர்.

நிலைமைகளைப் புரிந்து கொண்டு, தன்னலத்தைக் கைவிட்டு, முடங்கிக் கிடக்கும் உள்ளாட்சி நிர்வாகத்தைத் தட்டி எழுப்பி, நீர் வரத்து மற்றும் வடிகால் வழிகளை சரி செய்யவில்லை என்றால் இனிவரும் காலங்களில் வேளாண்மையை கைவிட்டு திருவோடு ஏந்தும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள். 

நகர்ப்புறங்களில் சிறு மழைக்கே வீதிகளில் நீர் தேங்கி வடியாமல், வீடுகளுக்குள் புகுவதற்கான காரணம், வடிகால் வசதிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாலும் தூர்வாரப்படாமல் இருப்பதாலும்தான். 

எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் சீர்குலையத் தொடங்கிய உள்ளூராட்சி நிர்வாகம், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தீவிரமாகி, எடப்பாடி ஆட்சிக் காலத்தில் உச்சத்தைத் தொட்டது. இடையிடையே வந்த திமுக ஆட்சியிலும் இது தொடரவே செய்தது. இன்றும் தொடர்கிறது. 

நாம் விழித்துக் கொண்டு போராடவில்லை என்றால் அழிவு நமக்குத்தான்; அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அல்ல.

தற்போது பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையில், வடிகால் வசதி இல்லாததால் வயலில் தேங்கிய மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் அழுகியதை ஒரு விவசாயி விவரித்த அவலக் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்த பிறகு, வேதனையோடு இந்தப் பதிவை எழுதுகிறேன். 

ஊரான்

 

 

No comments:

Post a Comment