Wednesday, December 8, 2010

சடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா? தொடர்---3

நமது 'முன்னோர்கள்' திருமண விஷயத்தில் நன்கு சிந்தித்து சாஸ்திர விதிமுறைகளை ஆராய்ந்து 23 பொருத்தங்களை வகுத்தார்களாம். 

நமது முன்னோர்கள்தான் தற்குறிகளாச்சே? அவர்கள் எப்படி நன்கு சிந்தித்து...ஆராய்ந்து வகுத்திருக்க முடியும்? அதுவும் சாஸ்திர விதிமுறைகளை ஆராய்ந்தார்களாம். கேட்கிறவன் கேனப்பயல்னா எருமைமாடுகூட ஏரோப்பிளேன் ஓட்டுமாம். அந்த கதையாயில்ல இருக்கு.

இங்கே முன்னோர்கள் என்பது பார்ப்பனர்களைத் தவிர வேறுயாருமில்லை என்பது சொல்லித்தான் தெரியவேண்டுமா?.

இந்த பொருத்தங்களில் ஆறு பொருந்தினாலே போதுமாம். திருமணத்திற்கு தடை ஏதுமில்லையாம். சரி. ஜாதகத்தை நம்புகிறவர்கள் இந்த பொருத்தங்களை மட்டும்தான் பார்க்கிறார்களா?. வேறு பொருத்தங்களைப் பார்ப்பதில்லையா?

நடைமுறையில் மக்கள் பார்க்கும் பொருத்தங்களே முதன்னையானதாகவும் இறுதியானதாகவும் அமைகின்றன. திருமணம் நடைபெறுவதற்கும், நடைபெறாமல் போவதற்கும் நடைமுறையில் பார்க்கப்படும் பொருத்தங்களே பிரதானமாக அமைகின்றன.

 நடைமுறையில் பார்க்கப்படும் பொருத்தங்கள்:

 • பையன் கருப்பா-சிவப்பா? ஆளு நெட்டையா-குட்டையா? ஊத்தப்பல்லா- நல்லப்பல்லா?   கூர் மூக்கா-சப்ப மூக்கா? கண் நல்ல கண்ணா-மாறு கண்ணா?  நடை, பாவனை, குரல்.....ஆணா இருந்தா ஹாண்ட்ஸம்ப்; பெண்ணா இருந்தா குடும்ப லட்சணம்-குடும்பப் பாங்கான-இப்படி ஜோடி பொருத்தத்திற்கே ஆயிரம் இருக்கிறது. 
 • வசதி-வாய்ப்பு எப்படி? பையன் என்ன வேலை செய்கிறான்? கை நிறைய சம்பளம்-குறிப்பா 'கவர்மெண்ட்' மாப்பிள்ளையா,  உட்கார வச்சி சோறு  போடுவானா?அதாவது பெண் கஷ்டப்படாம வாழ வேண்டும். சம்பளத்தோடு மேற்படி வருமானம்-கிம்பளம்- எவ்வளவு? அதாவது மாப்பிள்ளை ஊரை ஏமாற்றத் தெரிந்தவனா? வீடு நில புலம் சொத்து,  அப்பாவோட சேமிப்பு, வங்கி இருப்பு, ஏழையாக இருந்தால் ஆடு மாடு என  வசதிகளைப் பார்க்க வேண்டும். சொத்தைப் பங்கு போட உடன் பிறந்தவர்கள் அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை இருக்கிறார்களா? மொத்தத்தில் ஒரே பையனா? சாதி சணம், சொந்த பந்தம், பலம் எவ்வளவு?. நாளைக்கு ஏதாவது தகராறுன்னா தேவைப்படுமே என்பதை உறுதி செய்து கொள்வது. இவைகள் பெண் வீட்டார் பார்க்கும் பொருத்தம். இவற்றை உறுதி செய்து கொணட பிறகே அடுத்த பொருத்தத்திற்குச் செல்கின்றனர்.
 • பெண் நல்ல சிவப்பா 'கலரா' இருக்க வேண்டும்.  ஐஸ்வர்யா ராய் போல-இப்போதைய கனவுக்கன்னி யாரோ? இது பையனின் எதிர்ப்பார்ப்பு. இதற்குமேல், பையனை பெற்றவர்கள், உற்றார் உறவினர்கள் எதிர்பார்ப்புகள் தனி. கருத்தவன் செவத்தவளைக் கட்டலாம் ஆனால் செவத்தவன் கருத்தவளைக் கட்டமாட்டான். 
 • உருவப் பொருத்தங்கள் மேற்சொன்ன வகையில் அமைந்து விட்டால் அடுத்து பார்ப்பது பெண்ணுக்கு உடன் பிறந்தவர்கள், குறிப்பாக ஆண் பிள்ளைகள் இருக்கக் கூடாது.எதிர்காலத்தில் மாமனாரின் சொத்து முழுக்க இவனுக்கு வரவேண்டும். சொத்து பத்து ஏராளம் என்றால் உருவம்-வடிவம் விசயத்தில் 'அட்ஜஸ்ட்'  செய்து கொள்பவர்களும் உண்டு. முன்பெல்லாம் பெண்ணோடு பிறந்த ஆண்கள் நிறைய பேர் இருக்க வேண்டும் என்று கருதினர். மாமன் மச்சான்கள் அதிகமாக இருப்பதை எதிர்ப்பார்ப்பார்கள். காரணம் ஆபத்துக்கு உதவுமே என்று.
 • மாப்பிள்ளை வீட்டார் பார்க்கிற அடுத்த பொருத்தம் பெண்ணுக்கு சமைக்கத் தெரியுமா? வீட்டு வேலை தெரியுமா? என்பது. சாதாரண வீட்டுப் பெண்களாக இருந்தால், புகுந்த வீட்டில் வந்து எல்லோருக்கும் அடிமையாக வேலை செய்ய வேண்டும். அதாவது, தொழில் சார்ந்த வேலைகள் மற்றும் துணி துவைப்பது, பாத்திரம் விளக்குவது, ருசியாய் சமைப்பது....மொத்தத்தில் உழைத்துக் கொட்டத் தயாராக இருக்க வேண்டும்.
 • வேலைக்குப் போகும் பெண்ணாக இருந்தால், சம்பளத்தை கவரோடு மாமியாரிடம் அல்லது கணவனிடம் கொடுப்பாளா? தன்னைப் பெற்று, வளர்த்து, படிக்க வைத்து, ஆளாக்கி வேலை வாங்கிக் கொடுத்த பெற்றோர் மற்றும் உற்றார் உறவினருக்கு ஆபத்து கட்டத்தில் கூட அந்தப் பெண் உதவக் கூடாது. வெளி ஊரில் வேலை என்றாலும் வேலையை விடக்கூடாது,  மாற்றிக்கொண்டு வரவேண்டும். இது எதுவும் பொருந்தாத பட்சத்தில் விருப்பம் இல்லை என்றாலும் வேலையை விட்டுவிடவும் தயாராக இருக்க வேண்டும்.
 • அடுத்து வரதட்சணை. நகை பவுன் கணக்கிலா, கிலோ கணக்கிலா? கார் பங்களா சீர் எவ்வளவு தேறும்? டூ வீலரில் தொடங்கி கோட்டு சூட்டு என நீண்டு செருப்பைக் கூட விடாமல் வாங்க வேண்டும். தனக்கு தேவைப் படுகிறதோ இல்லையோ வாசிங் மிசின், ஏசி, ஃபிர்ட்ஜ், கட்டில் மெத்தை எனத் தொடங்கி ஊறுகாய்ச் சட்டிவரை எதையும் விடுவதில்லை. இவையெல்லாம் திருமணத்தன்று மண்டபத்தில் பொருட்காட்சி வைக்க வேண்டும். சில வசதி படைத்த திருமணங்களில் இந்த பொருட்காட்சிக்கு தனி ஹாலே தேவைப்படுகிறது.
ஒற்றரை வைத்து உளவு பார்ப்பது: 
 • சாதி-குலம் கோத்திரத்தை உறுதி செய்வது. 
 • சொல்லப்பட்ட சொத்து பத்து உண்மைதானா? 
 • பையனுக்கு பீடி சிகரெட்டு, தண்ணி- கிண்ணி, சீட்டு, பொம்பள-கிம்பள இத்தியாதி-இத்தியாதி என ஏதாவது பழக்கம் உண்டா?  இது பெண் வீட்டார் பார்க்கும் உளவு வேலை. 
 • பெண் நல்லவளா? 'கற்பு' விசயத்தில் பெண் 'கெட்டுப்' போயிருந்தால் அவள் வாழ்வு அதோ கதிதான்.  ஆனால் ஆண் இந்த விசயத்தில் கெட்டவனாயிருந்தாலும் அது ஒரு பெரிய விசயமல்ல. ஒரு பெண் ஆண்களுடன் இயல்பாகப் பழகினால் அது குற்றம், பெண்ணோட அப்பன் எப்படி என்பதைவிட பெண்ணோட தாயார் எப்படி?  இது குடும்ப கைளரவத்திற்கு அவசியமாம். இது பையன் வீட்டார் பார்க்கும் உளவு வேலை.
CIA, RAW, ISI, KGB இவர்களெல்லாம் நம்ம ஒற்றர்களிடம் பயிற்சி எடுத்தால் டெரரிஸ்டுகளைப் பின்னிப் பெடலெடுக்கலாம்.

ஆக மேற்கண்ட பொருத்தங்களே நடைமுறையில் திருமணங்களைத் தீர்மானிக்கின்றன. பிறகெதற்கு ஜாதகப் பொருத்தம்? பார்ப்பனர்கள் பொருக்கித் தின்னத்தான்.

தொடரும்......

ஊரான்.

No comments:

Post a Comment