Showing posts with label வன்னியர். Show all posts
Showing posts with label வன்னியர். Show all posts

Saturday, August 17, 2024

தீண்டாமைக்கு தூபம் போடும் "காளியாத்தா" மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாயுமா?

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டம், ஜெம்மன் குப்பம் கிராமத்தில் உள்ள  வன்னியர்கள், யாதவர்கள், நாயுடுக்கள், செட்டியார்கள் உள்ளிட்ட சாதி இந்துக்கள் ஒன்று சேர்ந்து காளியாத்தா கோவிலை இடித்துத் தள்ளியிருக்கிறார்கள். புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டிருந்த அந்தக் கோவிலில் உள்ள ஆத்தாளை, கிராமத்தில் சரிபாதியாக உள்ள பட்டியல் சாதி மக்களும் இதுவரை வழிபட்டு வந்திருக்கிறார்கள்.

ஆனால், மெல்ல மெல்ல சாதி இந்துக்களால் பட்டியல்  சாதி மக்கள் புறக்கணிக்கப்பட்டு வந்ததோடு, இந்த ஆண்டு ஆடி மாத திருவிழாக்களில் பட்டியல் சாதி மக்களை முற்றிலுமாக ஒதுக்கி வைக்க வேண்டும் என ஒரு பூசாரியின் கனவிலே வந்து ஆத்தா சொன்னாளாம். அதையே சாதி இந்துக்களும் அப்படியே ஏற்றுக் கொண்டார்களாம். அதனால், இந்த ஆண்டு ஆடி திருவிழாக்களில் பட்டியல் சாதி மக்களை அனுமதிப்பதில்லை என முடிவெடுத்திருக்கிறார்கள். கோவிலை இடிக்கச் சொல்லி எந்த ஆத்தா யாருடைய கனவில் வந்து சொன்னாள் என்று தெரியவில்லை.

இதற்கு எதிராக பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒரு இளைஞன் காவல்துறையில் புகார் கொடுக்க, அந்தப் பூசாரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சாதி இந்துக்கள் கோவிலையே இடித்துத் தள்ளி இருக்கிறார்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள நாலு சாதிக்காரர்களும் ஒருவருக்கொருவர் சமமானவர்கள் அல்ல. அவர்களுக்கு இடையேயும் சாதியப் படிநிலையில் ஏற்றத்தாழ்வுகள் உண்டு. ஆனாலும் அவர்களுக்கிடையே தீண்டாமை கிடையாது. 

பட்டியல் சாதி மக்களும் இந்துக்கள்தான். அவர்களும் இந்து கடவுள்களைத்தான் வணங்குகிறார்கள் என்றாலும் கூட அவர்களை சாதி இந்துக்கள் உடன் சேர்த்துக் கொள்வதில்லை. காரணம் ஒன்றே ஒன்றுதான், தீண்டாமை. 

தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது என்று அரசியல் சட்டம் எழுதி 78 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.  அன்று, தொட்டால் தீட்டு என்றார்கள். இன்றோ உடன் வந்தாலே தீட்டு என்கிறார்கள். இப்படி தீண்டாமை என்பது நவீன வடிவில் அரங்கேறி வருகிறது.

கடவுள் நம்பிக்கையும் மத நம்பிக்கையும் தனிமனித விவகாரமாக இருக்க வேண்டும். தெய்வ வழிபாடு வீட்டுக்குள் முடக்கப்பட வேண்டும். பொது வெளியில் வரக்கூடாது.

கோவில்கள் தீண்டாமையின் மையமாக விளங்குவதாலும், புறம்போக்கு நிலங்களையும் காடுகளையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாலும் கோவில்கள் அனைத்தையும் இடித்துத் தரை மட்டமாக்க வேண்டும். எங்கெல்லாம் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கோவில்கள் கட்டப்பட்டுள்ளதோ அதற்குக் காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது வெளியில் கோவில்கள் கட்டப்படுவதால் குறிப்பாக காடுகளையும் ஆறுகளையும் ஆக்கிரமித்துக் கட்டப்படுவதால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. 

பொது இடங்களை தனிநபர்கள் ஆக்கிரப்பு செய்தால் சட்டவிரோதம்; அதையே கடவுளின் பெயரால் செய்தால் அங்கீகாரமா? சட்டத்தின் முன்னால் கடவுளும் ஒரு நபர்தானே? அந்தக் கடவுளர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் அஞ்சுகிறது அரசும் நீதிமன்றங்களும்?

ஊரான்

Thursday, October 19, 2023

பங்காரு அடிகளார் மரணம்: உணர்த்தும் பாடம் என்ன?

"1980 களில் மேல் மருவத்தூர் 'அம்மா' பிரபலமானபோது, இவரைத் தூக்கி நிறுத்தியவர்கள் வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் அவரது சாதியைச் சேர்ந்த வன்னிய சமூகத்தினர்."

2011 ஆண்டு, பிப்ரவரி மாதம் சாமியார்கள் குறித்த எனது கட்டுரையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டேன்.

தற்போது பங்காரு அடிகளார் மறைந்து விட்ட நிலையில், அரசு மரியாதையோடு அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளதால் அவரது மறைவு குறித்து பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
பங்காரு அடிகளார்

ஒரு நபர் சமூகத்தில் பிரபலமடைந்துவிட்டால், அவரது கடந்த காலத்தையும் மறந்து, அவரது தொழில் இரகசியத்தையும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல மக்கள் பழகிக் கொண்டு விட்டார்கள். தொடக்க காலத்தில் கொலைக் குற்றசாட்டுக்கு ஆளான பங்காருவும் இதில் அடக்கம். 

பெண்கள் சூத்திரர்களுக்கு ஒப்பானவர்கள், மாதவிடாய் பெண்கள் தீட்டுக்குரியவர்கள் என்று எந்த சனாதன இந்து மதம் பெண்களை இழிவுபடுத்தி ஓரங்கட்டியதோ, அதே இந்துப் பெண்களை நேரடியாக பூஜை செய்வதற்கு அனுமதித்ததன் மூலம் பங்காரு அடிகளார் இந்து மதத்தில் ஒரு 'புரட்சியை' ஏற்படுத்தினார் என்பதனால் அவரை ஏன் ஆதரிக்கத் கூடாது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. பங்காரு அடிகளாருக்கு முன்பிருந்தே எண்ணற்ற குல தெய்வங்களுக்கு பெண்கள் பூஜை செய்வது நடந்து கொண்டுதான் இருந்தது; தொடர்ந்து நடக்கவும் செய்கிறது.

மக்களின் உளவியலைப் புரிந்து கொண்டவர்கள்தான் சாமியார்களாக வளர முடிகிறது. அந்த வகையில் வட மாவட்டங்களில் குறிப்பாக வன்னியர் சாதிப் பெண்களின் உளவியலை நன்றாகப் புரிந்து கொண்ட பங்காரு அடிகளார் அதை அறுவடை செய்து கொண்டார். 

பூஜை செய்கிற பெண்கள், தாங்கள் சனாதனத்திற்கு எதிராகச் செயல்படுகிறோம் என்பதும் அவர்களுக்குத் தெரியாது; பங்காருவும் அத்தகைய எண்ணத்தோடு பெண்களை பூஜையில் ஈடுபடுத்தவில்லை. அப்படி ஒரு எண்ணம் அவருக்கு இருந்திருக்குமேயானால் சங் பரிவார கும்பலுக்கு எதிராக தன்னுடைய பக்தர்களை வளர்த்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படி எதுவும் செய்ததாகச் சான்றுகள் இல்லை. மாறாக,  வன்னிய சாதி மக்கள் சங் பரிவாரக் கும்பல் பக்கம் சாய்ந்து வருவதுதான் மிச்சம். இதில் அன்புமணியின் பங்கும் உண்டு என்பதையும் மறந்து விடக்கூடாது.

ஏராளமான கல்வி நிறுவனங்களைத் தொடங்கி, அதன் மூலம் எண்ணற்ற ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கல்வி-மருத்துவச் சேவையை செய்துள்ளார் என்றும் பங்காருவைப் புகழ்கின்றனர். இது உண்மை என்றாலும்கூட அவரால் இதை எப்படிச் செய்ய முடிந்தது என்பதை பரிசீலிக்க வேண்டும். ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் கல்வி-மருத்துவம் வழங்க வேண்டியது அரசினுடைய கடமை. அதை ஒரு சாமியார் செய்கிறான் என்பதற்காக நான் வெட்கப்பட வேண்டுமே ஒழிய பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை.

ஏழை எளிய மக்கள் அன்றாடம் பல்வேறு துன்ப துயரங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். அதிலிருந்து விடுபட வேண்டுமானால், ஏதாவது பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே மூடநம்பிக்கைகள் அவர்களிடைய ஆழமாக ஊன்றப்பட்டுள்ளது. தங்களது துன்ப துயரங்களுக்கு நிரந்தரமானத் தீர்வு கிடைக்காதா என்ற ஏக்கப் பெருமூச்சோடு காணிக்கைகளை அள்ளிக்கொண்டு சாமியார்களை நோக்கி ஓடுகிறார்கள் அப்பாவி மக்கள். அங்கே, சாமியார்களின் உண்டியலும் தொந்தியும் பெருகுகிறது. மனதை மட்டும் நிறைத்து கொண்டு பக்தர்கள் வீடு திரும்புகிறார்கள்; வந்த பிறகு மீண்டும் அதே வாழ்க்கை. 

ஒவ்வொரு முறையும் தனக்குத் துன்ப துயரம் நேரும் பொழுது, மீண்டும் மீண்டும் சாமியார்களையும் கோவில்களையும் நோக்கி ஓடுகிறார்கள். ஆனால், அவர்களின் துன்ப துயரங்கள் முடிவுக்கு வந்தபாடில்லை. மாறாக, ஆழமான மூடநம்பிக்கைகள் மேலும் மேலும் அவர்களை ஆட்கொண்டு விடுகிறது. மக்களின் மூடநம்பிக்கைகள்தான் சாமியார்களின் மூலதனம். மூடநம்பிக்கைகள் பெருகப் பெருக மூலதனமும் பெருகத்தானே செய்யும். அப்படித்தான் கோடிக்கணக்கிலே பங்காருவிடம் சொத்துக்கள் குவிந்தன.

மக்களின் சிந்தனை மட்டத்தை எவன் உயர்த்துகிறானோ அவனது மரணத்தைத்தான் பேரிழப்பாகக் கருத முடியும். பரோபகாரியாக இருப்பதனால் மட்டும் ஒருவன் போற்றுதலுக்கு உரியவனாகிவிட மாட்டான். 

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Wednesday, September 13, 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-5

இடைநிலைச் சாதிகளின் தோற்றம்

கீழ்நிலைச் சாதிகளின் தோற்றம்  குறித்து ஏற்கனவே பார்த்தோம். அப்படியானால் இதர பிற்படுத்தப்பட்ட (OBC) மற்றும் உயர் சாதியினர் எப்படித் தோன்றினர் என்ற கேள்வி எழுவது இயல்புதான். 

பிராமணர்கள்

ஐயங்கார், ஐயர், ஆச்சார்யா, தீட்சித், திவாரி, திரிவேதி, திக்கே, தாக்கூர், துபே, ஜெட்லி, ஜோஷி, ஷோரி, பாகவதர், பண்டிட், பாண்டே, பட், பதக், சுக்லா, மிஸ்ரா, ராய், வைத்தியா, வாஜ்பேயி, உபாத்யாயா என ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகளாக பார்ப்பனர்கள் இருந்தாலும், அவர்கள் இன்றுவரை பிரம்மா எப்படிப் படைத்தானோ அப்படியே, பிராமண வருணமாகத் தங்களைக் கருதிக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர். (அம்பேத்கர் தொகுப்பு: தொகுதி 10) 

வடக்கே இமய மலை, தெற்கே விந்திய மலை, கிழக்கிலும் மேற்கிலும் கடலை எல்லைகளாகக் கொண்டு அமைந்திருந்த ஆரியவர்த்த தேசத்தில், பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த மக்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த சனாதன தருமம் (மனு 2: 21, 22).

சத்திரியர்கள் சூத்திரர்களாக ஆன கதை

பார்ப்பன மேலாதிக்கம் நாலாதிசைகளிலும் விரிவடைய முயன்ற போது, பிராமணர்களை வணங்காததாலும், பூணூல் அணிவதைப் புறந்தள்ளியதாலும் சுற்றியிருந்த பௌண்டரம், ஔண்டரம், திரவிடம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்கீகம், சீனம், கிராதம், தரதம், கசம் ஆகிய பண்ணிரெண்டு நாடுகளைச் சேர்ந்த சத்திரியர்கள் வரவர சூத்திரத் தன்மையை அடைந்தார்கள் (மனு 10: 43, 44). 

எனவே, விந்திய மலைக்குத் தெற்கே ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட திராவிடப் பகுதிகளில் ஆட்சி செலுத்திய அனைத்து சத்திரிய மன்னர்களும் சூத்திரர்களாக்கப்பட்டனர். அது மட்டுமன்றி, சனாதனத்தை ஏற்க மறுத்த வேனன், நகுஷன், சுதாசன், யவனன், சுமுகன், நிமி இவர்கள் உள்ளிட்ட அரசர்கள் ஆட்சியை இழந்து அழிந்து போனார்கள் (மனு 7: 41)

மேலும், நான்கு யுகங்களில், முதல் மூன்று யுகங்களான திருத, திரேதா, துவாபரா யுகங்களில் நான்கு வருணங்களும் இருந்தன. கி.மு 3102 இல் தொடங்கியதாக பார்ப்பனர்களால்  நம்பப்படும் கலியுகத்தில், கேடுகள் நிறைந்து விட்டதால், பிராமணர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகிய இரண்டு வருணங்கள் மட்டுமே உண்டு என பார்ப்பனர்கள் உறுதியாக இன்றுவரை நம்புகின்னர். எனவே, எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் தமிழ்நாடு உள்ளிட்ட எங்கும், இன்று பிராமணர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகிய இரண்டு வருணங்கள் மட்டுமே உண்டு என்பது உறுதியாகத் தெரிகிறது. (அம்பேத்கர் தொகுப்பு: தொகுதி-8, பக்கம் - 441). 

இடைநிலைச் சாதிகள்

தமிழ்நாட்டில் ஆசீவகம் காலம் தொடங்கி சங்ககாலம் வரையிலும் நான்கு வருணங்கள் கிடையாது. மாறாக இனக்குழுக்களை வழிநடத்திய தலைவர்கள் குறுநில மன்னர்களாகவும், பல்வேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து வழிநடத்தியத் தலைவர்கள் பேரரசர்களாகவும் செயல்பட்டிருக்கக்கூடும். சனாதனத்தை ஏற்க மறுத்த இவர்கள் அனைவரும் சூத்திரர்களாக தரம் இறக்கப்பட்டு, இவர்களின் இனக்குழுக்களைச் சேர்ந்த மக்களும் சூத்திரர்களாக்கப்பட்டனர் என்றுதான் கருத வேண்டி உள்ளது. 

இத்தகைய இனக்குழுக்களின் பிரிவினர்தான் இன்று வேளாளர்களாகவும் (பிள்ளை), முதலியார்களாகவும், கொங்கு வெள்ளாளக் கவுண்டர்களாகவும், நாயுடு-ரெட்டிகளாகவும், வன்னியர்களாகவும், முத்தரையர்களாகவும், கள்ளர் - மறவர் - அகமுடையர் உள்ளிட்ட‌ முக்குலத்து தேவர்களாகவும் அறியப்படுகின்றனர். இதில் நாடார் சாதி அடங்குமா என்ற கேள்வி ஒருசிலருக்கு எழக்கூடும். இது குறித்து தீண்டாமை என்ற தலைப்பில் பார்ப்போம்.

பிற்காலச் சோழர்களின் ஆட்சியிலும், அதற்கு அடுத்த காலத்திலும், மேற்கண்ட சாதிகளைச் சேர்ந்த ஒரு சிலர் சிற்றரசர்களாகவும், பாளையக்காரர்களாகவும், ஜமீன்தார்களாகவும் இருந்ததால் "நாங்கள் ஆண்ட பரம்பரை" என்று உரிமை கோரி, தங்களைச் சத்திரியர்களாகக் காட்டிக் கொள்ள இன்று இவர்கள் முயல்கின்றனர். அதற்காக, கற்பனையான தளபுராணங்களை ஏற்கனவே ஒரு சிலர் உருவாக்கிக் கொண்டதோடு, இன்று வரலாற்றையும் புதிதாக திருத்தி எழுத முயல்கின்றனர். இவர்களது மூதாதையர்கள் சிற்றரசர்களாக இருந்திருந்தாலும், சனாதன தருமப்படி அவர்களும் சூத்திரர்களே; எனவே, அவர்களின் வழித்தோன்றல்கள் என்று பெருமை பேசும் இடைநிலைச் சாதியினரின் சந்ததியினரும் சூத்திரர்களே. 

சாதியப் படிநிலையில் பார்ப்பனர்களுக்கு அடுத்த உயர்நிலையில் உள்ள சைவப்பிள்ளைமார்களே, இன்றைய பார்ப்பனர்களின் சனாதன தருமப்படி சூத்திரவாளாகக் கருதப்படும் போது, படிநிலையில் அதற்கும் கீழே உள்ள வன்னியர்கள் உள்ளிட்ட பிற சாதியினர் எம்மாத்திரம்? இவர்கள் எல்லாம் வெறும் ஜூஜூபி!

அடுத்து தீண்டாமை குறித்துப் பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-1

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-2

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-3

Sunday, August 27, 2023

வன்னியர் சாதி உழைக்கும் மக்களுக்கு ஓர் வேண்டுகோள்!

வன்னியர் சாதி உழைக்கும் மக்களே!

ஒரு சில வன்னியச் சாதித் தலைவர்களால்
ஏற்கனவே நீங்கள் நஞ்சூட்டப்பட்டு, பொதுச் சமூகத்திலிருந்து விலகி, திசைமாறி அழைத்துச் செல்லப்படுகிறீர்கள். இதனால்  கல்வியில் பின்தங்கி இருப்பதோடு, உரிய விகிதாச்சார அடிப்படையில் அரசு வேலைகளையும் பெறமுடிவதில்லை.

கல்வியில் நீங்கள் பின்தங்கி இருப்பதால், தனியார் நிறுவனங்களில்கூட உங்களால் ஒரு உத்தரவாதமான நல்ல வேலையைப் பெறமுடிவதில்லை. வேளாண்மையிலும் போதிய வருவாய் இல்லாததால், கல்வியில் பள்ளிப் படிப்பைக்கூடத் தாண்டமுடியாத சூழலில், உங்களில் பலர் கட்டட வேலை உள்ளிட்ட பல்வேறு உதிரி வேலைகளில் எடுபிடிகளாக மட்டும்தான் செயல்பட முடிகிறது. உங்களில் பலர் தினக்கூலிகளாக இருப்பதால், எளிதில் சாராய போதைக்கு அடிமையாகி சீரழிந்து, நீங்கள் மட்டையாவதோடு உங்கள் குடும்பத்தையும் நடுத்தெருவில் நிறுத்துகிறீர்கள்.

உங்களில் பலர் படித்திருந்தாலும், இதர பிற்பட்டோருக்கான (MBC) இட ஒதுக்கீடு இருந்தும், பிறசாதியினரோடு போட்டி போட்டு மாநில அரசின் வேலை வாய்ப்பினை பெறுகின்ற ஆற்றல் அற்றவர்களாக இருக்கின்றீர்கள். மாநில அரசு இட ஒதுக்கீட்டிலேயே உங்களால் ஒரு வேலையைப் பெறமுடியாத போது, மத்திய அரசின் இதர பிற்படடோரின் (OBC) இட ஒதுக்கீட்டின்கீழ், மத்திய அரசு நிறுவனங்களில் நீங்கள் ஒரு வேலையைப் பெறுவது குதிரைக் கொம்பாகத்தானே இருக்க முடியும்.

மத்திய, மாநில அரசு வேலைகளைப் பெறுவதற்கேற்ப, உங்கள் திறமைகளை வளர்ப்பதற்கு பிற சாதியினர் செய்வதைப் போல, அறிவுத் திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகள், ஏற்பாடுகள், கட்டமைப்புகள் எதையும் நீங்கள் ஏற்றிச் போற்றுகின்ற உங்களின் சாதித் தலைவர்கள் செய்வதில்லை. மாறாக, ஆண்ட பரம்பரை, சத்ரிய குலம் என பெருமை பேச வைத்து உங்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருப்பதை என்றைக்கு நீங்கள் உணர்கிறீர்களோ, அன்றைக்குத்தான் உங்களுக்கான விடிவு காலம் தொடங்கும்.

சாதித் தலைவர்களால் ஏற்கனவே நீங்கள் நஞ்சூட்டப்பட்டது போதாது என்று தற்போது, "அகில பாரதிய சத்ரிய மகா சபா யுவா" என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரக் கும்பல், வன்னியர் சாதி மக்களிடையே ஊடுருவி, பட்டியல் சாதி மக்களுக்கு எதிரான வன்மப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. 

சாதி வெறியை ஊட்டி பிறசாதி மக்களுக்கு எதிராக உங்களைக் கொம்பு சீவி விடும் உன்மத்தர்களை அடையாளம் கண்டு, அவர்களை பீச்சாங்கையால் புறந்தள்ளி முற்போக்கு, ஜனநாயக இயக்கங்களை நோக்கி வாருங்கள். புதியவைகளை நீங்கள் கற்றுணரும்போதுதான், உங்களின் பின்தங்கிய நிலையை உங்களால் உணர முடியும். இன்றைய காலகட்டத்தில் இது ஒன்றுதான் உங்களுக்கான மாற்று வழி! 

ஊரான்

Monday, November 18, 2019

பீயா? பீதாம்பரமா?


ஆபாச பொம்மைகள் இருந்தால் அது இந்துக் கோயில்தான் என திருமா பேசியதற்கு பார்ப்பனர்கள் மட்டுமல்ல வன்னியர் உள்ளிட்ட சில சூத்திரச்சாதி வெறியர்களும் இந்துமதக் காவலர்களாக பிதற்றித் திரிகின்றனர். திருமா பேசியது நூற்றுக்கு நூறு உண்மை.. இது குறித்து முகநூலில் எனது எதிர் வினையாக நான் எழுதியதைத் தொகுத்து உங்களுக்காக.

"வார் கொண்ட வனமுலையாள்"
கச்சணிந்த வனநகில்களையுடைய- திருவாரூர்.

"அளைப்பிரி யாஅரவு அல்கு லாளொடு"-
வலையினின்றும் நீங்காத பாம்பின் படம் போன்ற அல்குலைப் பெற்ற-திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) –

சிவனின் மனைவி உமையாளைத்தான் தேவாரத்தில் இப்படி வர்ணிக்கிறான் சுந்தரன். இப்படி நிறைய உண்டு. அல்குல்=பெண் குறி. கண் என்றும் இடை என்றும் கதைப்போரும் உண்டு. இவை இரண்டும் பாம்பின் படம் போன்று இல்லை என்பது பாமரனுக்கும் விளங்கும்.

அடி அம்மாடி என்ன ஒடம்பு! அங்கங்கே பச்ச நரம்பு!- வைரமுத்துவின் இந்த வரிகளே நமக்கு அருவருப்பைத் தருகிறது. "பஞ்சுண்டஅல் குல்பனை மென்முலையா ளொடு" (திருப்பரங்குன்றம்) - பாம்பின் படம் போலும் அல்குலையும், பருத்த மென்மையான தனங்கைளையும் உடைய - சிவனின் மனைவி உமையாளைத்தான் தேவாரத்தில் இப்படி வர்ணிக்கிறான் சுந்தரன்.

தேவாரம் பாடிய சுந்தரனுக்கு இரண்டு பொண்டாட்டி. திருவாரூரில் பரவையார் என்கிற முதல் பொண்டாட்டி. திருவொற்றியூர் சென்ற போது சங்கிலியார் என்கிற இரண்டாவது பொண்டாட்டி. இரண்டாவது பொண்டாட்டிக்குத் தூது பார்த்தவன் சிவன். இன்பங்களை ஆரத் துய்த்து சங்கிலியாரை அங்கேயே விட்டுவிட்டு பல ஊர் சுற்றி பிறகு திருவாரூர் வருகிறான். விவரம் அறிந்த பரவையார் சுந்தரனை சேர்க்க மறுக்கிறாள். காமத் தீ மூண்டெழுந்ததால் சிவன் இரண்டு முறை தூது சென்று சேர்த்து வைக்கிறான். (திருவாரூர், திருவொற்றியூர், திருப்புன்கூர் பாடல்களில் விவரம் காண்க).

"அருக்கு மங்கையர் மலர் அடி வருடியெ கருத்து அறிந்து பின்அரைதனில் உடை தனை அவிழ்த்தும்"... அருமை வாய்ந்தவிலைமாதர்களின் மலர் போன்ற அடிகளைப் பிடித்தும்,(அவர்களுடைய) எண்ணத்தை அறிந்த பின்பு இடுப்பில் கட்டியஆடையை அவிழ்த்தும்,

"அங்கு உள அரசிலை தடவியும் இரு தோள் உற்றுஅணைத்தும் அங்கையின் அடிதொறும் நகம் எழ உதட்டைமென்று பல் இடு குறிகளும் இட" ... அங்குள்ள அரசிலை போன்றஉறுப்பைத் தடவியும், அவர்களுடைய இரண்டு தோள்களிலும் பொருந்திஅணைத்தும், அங்கையின் அடிப்பாகம் தோறும் நகக் குறிகள் இட்டும்,இதழ்களை மென்று பற்களால் பல குறிகள் பதித்தும்,

"அடிக் களம் தனில் மயில் குயில் புறவு என மிக வாய் விட்டுஉருக்கும் அங்கியின் மெழுகு என உருகிய சிரத்தை மிஞ்சிடும்அநுபவம் உறு பலம் உற" ... அடி நெஞ்சில் மயில் குயில் புறா ஆகியஇப் பறவைகள் போன்று பெரிய ஒலி எழச் செய்தும், உருக்க வல்லநெருப்பிலிட்ட மெழுகு போல உருகிய ஊக்கம் மிக்க அனுபவத்தால்
வருகின்ற பயன்களைப் பெற,

"கையின் கனி நிகர் என இலகிய முலை மேல் வீழ்ந்து உருக்கலங்கி மெய் உருகிட அமுது உகு பெருத்த உந்தியின் முழுகிமெய் உணர்வு அற உழைத்திடும் கன கலவியை மகிழ்வதுதவிர்வேனோ" ... கையில் உள்ள பழம் போல் விளங்கிய தனங்களின் மீதுவிழுந்து உருவம் கலங்கி உடல் உருகி, அமுதம் பெருகும் பெருத்த உந்தித்தடத்தில் முழுகி, மெய் உணர்வு அற்றுப் போகும் வண்ணம் உழைக்கின்றபெருத்த கலவி இன்பத்தில் மகிழ்ச்சி கொள்ளுவதை விட்டு ஒழியேனோ? திருப்புகழ் பாடல் -7. வாய் மணக்குதா?

"நறைத்த பஞ்சு அணை மிசையினில் மனம் உற அணைத்தஅகம் தனில் இணை முலை எதிர் பொர நகத்து அழுந்திடஅமுது இதழ் பருகியும்" - திருப்புகழ் பாடல் - 10 ... மணம் தோய்ந்த பஞ்சணையின் மேல்மனம் பொருந்த அணைத்த மார்பில் அவர்களது இரு மார்பகங்களைஎதிர்பொர, நகக் குறி அழுந்த, இதழ் அமுதைப் பருகியும்,.... திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும்!

பீயை, பீ என்றுதானே சொல்ல வேண்டும். பீதாம்பரம் என்கின்றனர் சிலர். என்ன செய்ய?

Saturday, February 21, 2015

அருந்ததியர் முதல் பார்ப்பனர் வரை: வளரும் காதல்

பறையர்+செட்டியார்
பறையர்+முதலியார்
பார்ப்பனர்+பறையர்
பறையர்+நாடார்
முத்தரையர்+முதலியார்
நாயுடு+அருந்ததியர்
நாயுடு+பறையர்
முதலியார்+மீனவர்(பர்வதராஜகுலம்)
பறையர்+செட்டியார்
வன்னியர்+நாயுடு
வெள்ளாளக்கவுண்டர்+யாதவர்
முதலியார்+பார்ப்பனர்
பிள்ளை+கள்ளர்
நாயுடு+பறையர்
வெள்ளாளக்கவுண்டர்+வன்னியர்
வன்னியர்+பார்ப்பனர்
இஸ்லாமியர்+பறையர்

(ர்-விகுதி:காதல் மறியாதைக்காக; சாதி மறியாதைக்காக அல்ல)

இப்படி நீள்கின்றன கடந்த சில ஆண்டுகளில் எனக்குத் தெரிந்து காதல் திருமணம் செய்து கொண்ட இணைகளின் பட்டியல். பெரும்பாலும் இவர்களின் திருமண விழாக்களில் நான் கலந்து கொண்டுள்ளேன்.

மேற்கண்ட இணைப்பட்டியலில் முதலில் குறிப்பிடப்பட்டுள்ள சாதிகள் பெண்களைக் குறிக்கும். எ.கா: நாயுடு(பெண்)+பறையர்(ஆண்)

இந்த இணைகள் எல்லாம் நடுத்தர வர்க்க இணைகள். பெரும்பாலும் இவர்கள் பட்டம் மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள்.

முதலில் இருதரப்பிலும் காதல் இணைகளை பிரிக்க பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் காதலர்கள் உறுதி குலையாமல் இருந்ததால் முறைப்படி பெற்றோர்களால் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஒரு சில இணைகள் தற்போது ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோர்களாகவும் ஆகிவிட்டனர். இதுவரை எந்த இணையும் பிரிந்ததில்லை. பெற்றோர்கள், உறவினர்களிடமிருந்து இழிசொற்கள்-பழிசொற்கள் வந்தாலும் அவற்றை எல்லாம் துச்சமென தூக்கி எறிவதோடு இழிப்போரையும்–பழிப்போரையும் இடித்துரைத்து வெற்றி காண்கின்றனர்.

சாதி வெறியர்கள் தொடர்ந்து காதலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினாலும், இந்து மதவெறியர்கள் சாதித்தூய்மையைப் பாதுகாத்திட கழுதையாய்க் கத்தினாலும் காதல் மணம் புரிவோர் எண்ணிக்கை அதிகரித்துதான் வருகின்றன. இன்றுகூட பறையர்+முதலியார் இணை மணவிழா அழைப்பிதழ் ஒன்று எனக்கு வந்தது.

சமூகத்தின் எதார்த்தமாக காதல் வளர்ந்து வருகின்ற இன்றைய சூழலில் காதலே இல்லாத சமூகம் சாத்தியமா? சாத்தியமென்றால் அச்சமூகம் எப்படிப்பட்டதாக இருக்கும்? அடுத்த பதிவில் பார்ப்போம்.


தொடர்புடைய பதிவுகள்:

Thursday, July 18, 2013

பட்டுப் போன 'மரத்தில்' இனி பசுமைக்கு இடமேது?

தருமபுரி மாவட்டம்பொம்மிடி அருகே உள்ள வேப்பமரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வன்னியரான  திரு.சுரேஷ் (வயது:30) என்பவர் தாழ்த்தப்பட்டவரான s.சுதா (வயது:23) என்பரை காதல் திருமணம் செய்து கொண்டது பற்றி மனு இன்னும் மடியவில்லை! என்கிற தலைப்பில் ஜீலை 4, 2013 அன்று பதிவு ஒன்றை வெளியிட்டேன். 


இவர்களின் திருமணம் ஏப்ரல் 21, 2010 ல்  பெற்றோர்கள் சம்மதத்துடன்தான் நடந்துள்ளது. அதன் பிறகு குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் இக்குடும்பத்திற்குள் புகுந்து குடி கெடுக்கும் வேலையை தொடங்கியுள்ளனர் பசுமை வேடம் போடும் குச்சிகொளுத்தி வன்னிய சாதி வெறியினர். 


படம்: THE HINDU

சுரேஷ் -சுதா இருவரும் மைனர்கள் அல்ல. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது நாடகக் காதலும் அல்ல. மைனர்களின் திருமணமும் அல்ல. "நாடகக் காதல் மற்றும் மைனர்களின் திருமணங்களைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்; மற்றபடி நாங்கள் காதலுக்கு எதிரிகள் அல்ல!" என பம்மும் குச்சி கொளுத்திகள் சுரேஷ் - சுதா இருவரின் காதலை ஏற்க மறுப்பதேன்? அவர்களின் குடிமைக் கெடுக்க எக்காளமிடுவது ஏன்?

காரணம் ஒன்றுதான். பறையர் சாதியிலிருந்து எவரும் மருமகளாகவோ - மருமகனாகவோ வந்துவிடக்கூடாது என்கிற தீண்டாமை சாதி வெறியைத் தவிர வேறு நோக்கம் எதுவும் குச்சி கொளுத்திகளுக்கு இல்லை என்பதை இச்சம்பவம் மீண்டும் ஒரு முறை தெளிவாக நிரூபித்துள்ளது. 

இது குறித்து பசுமை பக்கத்திற்கு இரண்டு முறை பின்னூட்டச் செய்தி அனுப்பியும் அதை வெளியிடாமல் நீக்கியதன் மூலம் பசுமைவாதியின் வலைப்பூ இருள் பிளாக் ஆனதில் வியப்பேதும் இல்லை. பட்டுப் போன 'மரத்தில்' இனி பசுமைக்கு இடமேது? 

Thursday, November 22, 2012

நாளேடுகளில்.....! சொன்னதும் சொல்லாததும்!


சொன்னது
“நீ ராசி இல்லாதவள் என்று கூறியதால் ராணுவ வீரரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை! திருமணமான ஐந்து மாதத்தில் பரிதாபம்!”

சொல்லாதது
ராணுவ ‘வீரனை’ இதற்காக உள்ளே தள்ளலாம். ராசி பலன்கனை நம்ப வைக்கும் சோதிடக்காரர்களையும் அவைகளைப் பரப்பும் ஊடகங்களையும் எங்கே தள்ளுவது?

சொன்னது
“விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் குண்டர் சட்டத்தில் கைது! வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 லட்சத்து நாற்பதாயிரம் ஏமாற்றி விட்டதாகவும், பணத்தை திருப்பிக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார்!”

சொல்லாதது
ஆட்சி அதிகாரம் ஏதும் இல்லை என்றாலும் அல்லக்கைகள் ‘வெள்ளையும் சொள்ளையுமாக‘ ஸ்கார்பியோவில் திரிவதன் ரகசியம் இதுதானோ!

சொன்னது
“தருமபுரி கலவரத்துக்கு பா.ம.க காரணம் அல்ல! தாக்குதல் நடத்தியவர்களில் நாயுடு, செட்டியார், குறும்பர் என அனைத்து சுமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் அடங்குவர். பா.ம.க.மட்டுமல்ல எல்லா கட்சியினரும் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்!” டாக்டர் ராமதாஸ் பேட்டி!

சொல்லாதது
இப்படி நீங்களே குற்றத்தை ஒப்புக் கொண்ட பின் எதற்காக “மைனர் கல்லாணம்” என்கிற தகிடு தத்தங்கள்?

சொன்னது
“சுசி ஈமு பண்ணை நிர்வாக இயக்குநர் குரு குண்டர் சட்டத்தில் கைது!
இவர் மீது மோசடி வழக்கு உள்ளிட்ட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன!”

சொல்லாதது
பால்தாக்கரே மரணத்தையொட்டி வெளியான மிகச்சாதாரண ஒரு செய்திக்கு ‘லைக்’ கொடுத்ததற்கே கைது செய்கிறீர்களே! கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் ஈமு கோழி பண்ணைகளை மக்கள் ‘லைக்’ பண்ணக் காரணமான ஊடகங்களை என்ன செய்வது?