Tuesday, October 11, 2011

ஜனனி ஐயரும் ஆண்டாள் முதலியாரும்!

”என்ன மொதலியார, பாத்து ரொம்ப நாளாச்சு!”,

”என்ன கவுண்டரே, எப்ப வந்த?”,

”என்ன நாயுடு, எங்க கிளம்பிட்ட?”

அலுவலகங்களிலும் மற்ற பல இடங்களிலும் மிகவும் நெருக்கமானவர்கள், தங்களுக்குள் ஒருவருக்கொருவர் சாதிப் பெயரைச் சொல்லி அழைத்துக் கொள்வதைப் பார்க்க முடியும்.  தனது சொந்தப் பெயரைச் சொல்லி அழைப்பதைவிட தனது சாதிப் பெயரைச் சொல்லி அழைக்கும் போது ‘தான் சாதியில் உயர்ந்தவனாக்கும்’ என தனக்குள் பெருமைப்பட்டுக் கொள்கிறான்; மனதுக்குள் மகிழ்ச்சியடைகிறான். சொல்லப்போனால் ஒருவித கிளர்ச்சிக்குள்ளாகிறான். தாழ்த்தப்பட்ட சாதியினரைத் தவிர சாதி பாராட்டுகிற பிற சாதியினர் அனைவரும் இத்தகைய மனநிலையில்தான் உள்ளனர்.

சாதியப் படி நிலையில் மேல் நிலையில் இருக்கும் ஐயர், ஐயங்கார் உள்ளிட்ட பார்ப்பனர்களை பொதுவாக ஐயர் என்றே பிற சாதியினர் அழைப்பதுண்டு. மிகவும் நெருக்கம் இருந்தால் மட்டுமே ‘என்ன ஐயரே, சௌக்கியமா?’ எனக் கேட்க முடியும். மற்றபடி தங்களை “சாமி” என்று அழைப்பதையே பார்ப்பனர்கள் விரும்புறார்கள்.

ரகு ‘சாமி’ இருக்காரா?

‘ரகு இருக்காரா என அவரது துணைவியாரிடம் ஒருவர் கேட்க, என்ன “ரகு இருக்காரா” என மொட்டையா கேக்கிறீங்க! “ரகுசாமி இருக்காரானு கேளுங்க” எனக் கடிந்து கொண்டார். கேட்டவருக்கு வயது ஐம்பது; ஐயருக்கோ வயது முப்பதுக்குள். தனது வீட்டு விசேசத்திற்கு மங்திரம் ஓத ஐயரை அழைக்க வந்தவருக்குத்தான் இந்தப் பாடம்.

சாதி பாராட்டுகின்றவர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை சேர்த்துக் கொண்டு பெருமைப் பட்டுக் கொள்வதோடு நிறுத்திக் கொள்வதில்லை. தாங்கள் செய்கிற தொழிலுக்கும் இச்சாதியை இழுத்துப் போட்டுக் கொண்டு அதிலும் தாங்கள் உயர்ந்தவர்கள் என பறைசாற்றிக் கொள்கிறார்கள்.
பிராமணாள் ஓட்டல்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. முதலியார் திருமண மண்டபங்களும், நாடார் கல்வி நிறுவனங்களும் என தங்களது சாதியின் பெயரால் அடையாளப் படுத்திக் கொள்வதையே பலர் பெரிதும் விரும்புகின்றனர்.

செத்தபிறகும் இவர்கள் சாதியை விடுவதில்லை. “முருகேச முதலியார் காலமானார்” என்றுதான் சுவரொட்டி அடிக்கிறார்கள். சுடுகாடுவரைக்கும் இவர்கள் சாதியை விடுவதில்லை.

ஜனனி ஐயர்!

”பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் நடித்த ஜனனி ஐயரும், நடிக்க வருவதற்கு முன்பு வாரம் தவறாமல் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்குச் செல்வது வழக்கமாம். ………..”

இதென்ன ஜனனி ஐயர்? பெண்கள் தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரைச் சேர்த்துக் கொள்ளலாமா? இது சரிதானா? இதற்கு முன் பெண்கள் இப்படி சாதிப்பெயரை சேர்த்துக் கொண்டதுண்டா? எனக்குத் தெரிந்து ஐயர் பெண்கள் மட்டுமே இவ்வாறு சாதிப் பெயரை தங்களது பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொண்டதுண்டு.

பிரபல ஆங்கில செய்தி வாசிப்பாளர் கீதாஞ்சலி ஐயரைக் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்படித் தங்களை ஐயராக அடையாளப் படுத்திக் கொள்ளும் பலநூறு பார்ப்பனப் பெண்கள் இருக்கவே செய்கின்றனர். 

ஜனனி ஐயரைப் பார்க்க முடிந்த நமக்கு ஆண்டாள் முதலியாரைப் பார்க்க முடியவில்லையே? திரை உலகில் கொடிகட்டிப் பறந்தபோதும் மீனா நாயுடுவைப் பார்க்க முடியவில்லையே! ஆக, சாதி விசயத்தில் பார்ப்பனர்கள் பெண்களுக்கு சம உரிமை கொடுத்துள்ளார்கள் என எடுத்துக்கொள்ளலாமா?

ஜனனி ஐயரோ - முருகேச முதலியாரோ - நடேச ஐயரோ இப்படி தனது பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரை சேர்த்துக் கொள்வதும் அல்லது தனது சாதிப்பட்டத்தைச் சொல்லி தன்னை அழைப்பதை விம்புவதும் தான் உயர்ந்த சாதியைச் சார்ந்தவன் என்பதை விரும்புகிறான் என்பதுதான் இதன் பொருள். ஒருவன் உயர்ந்த சாதிக்காரன் என்கிற எண்ணம் தோன்றிவிட்ட பிறகு இவனுக்குக் கீழே உள்ள சாதிக்காரன் கீழ்சாதிக்காரன் ஆகிவிடுகிறான். ஏற்க மறுத்தாலும் இதுதான் உண்மை; சாதிப்பட்டத்தை விரும்புகிறவனின் மனநிலை-உளவியல் இதுதான்.

ஒருவனின் பண்பியல், பொருளியல், கல்விக் கூறுகளைக் கொண்டு அவன் அடையாளப் படுத்திக் கொள்ளும் சாதியின் மதிப்பு தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக சாதியின் மதிப்பு பிறப்பிலேயே தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. உயர்வு தாழ்வை மட்டுமே கற்பிப்பதுதான் சாதியம். வேறு எந்தப் பண்பும் சாதிக்குக் கிடையாது.

சாதியைச் சேர்த்துக் கொள்வது வெறும் அடையாளத்துக்கானது மட்டுமே என யாரும் வாதிட முடியாது. ஏன் என்றால் கந்தசாமி என பெயர் வைத்துக்கொண்டாலும் தாழ்த்தப்பட்டவன் கந்தசாமிப் பறையன் என்றோ கந்தசாமிப் பள்ளன் என்றோ அடையாளப்படுத்திக் கொள்ள முடிவதில்லையே.பெயருக்குப் பின்னால் வரும் சாதி அடையாளத்திற்கானதல்ல; மாறாக அது சாதி ஆதிக்கத்தின் வெளிப்பாடு; தீண்டாமையின் மற்றொரு வடிவம்.

ஜனனி தன்னை ஐயராக அடையாளப்படுத்திக் கொள்வதன் பொருள் இதுதான்.

தொடர்புடைய பதிவுகள்:

சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர்களிடமா?


சாதி வெறி தலைவிரித்தாடுவது பாமரர்களிடமா? படித்தவர்களிடமா?....தொடர்ச்சி18 comments:

 1. //ஜனனி தன்னை ஐயராக அடையாளப்படுத்திக் கொள்வதன் பொருள் இதுதான்.//

  பாக்குறாவா எல்லோரும் 'என்ன மாமி சவுக்கியமா ?' ன்னு கேட்கனும் என்று விரும்புகிறாரோ

  :)

  ReplyDelete
 2. சரியாகச் சொன்னீர்கள்!

  மாமி - ஐயர் - சாமி என்றும் கவுண்டர், முதலியார், நாயுடு, பிள்ளை, ரெட்டியார் ... என சாதியைக் குறிக்கும் அடைமொழிகளில் ஒருவரை அழைக்க மறுப்பதும் அவசியமாகிறது. இது சாதி ஆதிக்கத்துக்கு எதிரான ஒரு சிறு எதிர்ப்பாகக்கூட அமையலாம்.

  ReplyDelete
 3. வட இந்தியாவில் அனைத்து ஜாதி பெண்களும் தன்பெயருக்கு பின்னால் ஜாதி பெயரை போடுகின்றார்கள்,தமிழக ஐயர்கள் எவ்வளவோ மேல் கேரளாவில் கோவில் ஐயனுக சந்தானம்,பிரசாதத்தை நம் கை மேல் படாதபடி தூக்கி வீசுவாணுக அதையும் வாங்கறாங்க மானம் கேட்ட மக்கள்

  ReplyDelete
 4. மோகன்தாஸ், ஜவஹர், வல்லபாய் போன்றவர்களே சாதிப் பேரைப் பிடித்துத் தொங்கிறப்ப ஜனனி எம்மாத்திரம்?

  ReplyDelete
 5. veedu அவர்கள் சற்று கூடுதல் விவரங்கள் கொடுத்தால் மேலும் பயனளிக்கும்.

  Anonymous அவர்களே! பெரிய தலைவர்கள்தான் சாதியப் பெருமையை பறைசாற்றுவதில் முன்னணியில் இருக்கிறார்கள்.

  ReplyDelete
 6. உயர் சாதியை சேர்ந்தவர்கள் தன் சாதியை கூறிக் கொள்வது ஒரு பாதுகாப்பாகவும் உணர்கிறார்கள்.. ஒரு சாதிக் காரனுக்கு ஏதாவது ஒன்று என்றால் அங்கு அனைத்து சுயநலங்களும் மறைந்து சாதி சுயநலம் தலை தூக்கி விடுகிறது.. கீழ் சாதிக்காரன் பெயருக்கு பின்னால் சாதி சொல்லி அழைக்காவிட்டாலும் அவன் இன்ன சாதி தான் என்று அந்த சாதியில் உள்ளவர்களுக்கு தெரியும் அளவுக்கு அவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள்... அவர்கள் ஒதுக்கி வைக்கப் பட்டுள்ளதால், அவர்கள் குடியிருப்பே அவர்கள் இன்ன சாதி தான் என்று சொல்லாமல் சொல்லி விடுகிறது...
  என்று மனிதன் தான் மனிதன் என்று உணர்ந்து சக மனிதனுக்கு எதோ ஒன்று நடக்கிறதே என்று பதருகிரானோ அன்று சாதி கண்டிப்பாய் இருக்காது...
  அரசு என்று சாதி வாரியாக ஒதுக்கீடு அளிக்காமல் பொருளாதார ரீதியாக ஒதுக்கீடு அளிக்கறதோ அன்று சாதி இறந்து விட்டிருக்கும்...
  அது வரை நாம் புலம்பி கொண்டிருப்போம்...

  ReplyDelete
 7. வணக்கம்!தங்கள் மனதில் பட்டதை தெரிவித்து விட்டீர்கள்.

  ReplyDelete
 8. //தாழ்த்தப்பட்டவன் கந்தசாமிப் பறையன் என்றோ கந்தசாமிப் பள்ளன் என்றோ அடையாளப்படுத்திக் கொள்ள முடிவதில்லையே//.
  அவர்கள் "கந்தன்" ஆகவல்லவா அடையாளப்படுத்தப் படுகிறார்கள்.

  ReplyDelete
 9. ஆமாம் வட இந்தியாவில் பள்ளியில் சேர்க்கும்போதே ஜாதிப்பெயரோடுதான் சேக்கிறாங்க.கடைசி வரை தன் பெயரோடும் சாதியோடும்தான் கையெழுத்து இருக்கும்.

  மிஸஸ்.சர்மா,மிஸஸ்.ராய்,மிஸஸ் பட்டேல்...இப்படியாக திருமதிகளின் பெயர்கள் அழைக்கப்படும்.

  ஆனாலும் இது துணிச்சலான பதிவு.

  ReplyDelete
 10. தமிழ் திரைத்துறையில் சமீப காலமாகவே இந்த போக்கு வந்துள்ளது, குறிப்பாய் நவ்யா நாயர், கெளதம் மேனன், இராஜிவ் மேனன் போன்ற பெயர்களுக்கு பின்னாலேயே ஜனனி ஐயரும், அனுஜா ஐயரும் வந்ததாக ஞாபகம். வட இந்தியாவில் ஜாதிப் பெயரை சேர்த்து கொள்வது சாதரணமாய் உள்ளது, யாதவ்,சட்டர்ஜி,ரெட்டி,கெளடா, பானர்ஜி,முகர்ஜி என பெயர் கொண்ட அரசியல்வாதிகளை எளிதாய் நினைவு கூறலாம். இம்மாதிரியான அரசியல்வாதிகளை பற்றியும் கட்டுரையில் சொல்லியிருக்கலாம். இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் பரவாயில்லை. கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பதை போல சாதி என்பது அடையாளத்துக்கானது அல்ல, தன்னைத்தானே பெருமை படுத்தி கொள்ளவும் அந்த பெருமையின் வாயிலாய் மற்றவரை சிறுமை படுத்துவதும் இந்த சாதிப்பெயர்களின் நோக்கமாய் உள்ளது.

  ஆண்டாள் என்பவர் யார்? திரைப்பட நடிகையா?

  ReplyDelete
 11. suryajeeva அவர்களின் கருத்துக்கள் ஒன்றைத் தவிர மற்றவை அனைத்தும் சரியே.

  ”அரசு என்று சாதி வாரியாக ஒதுக்கீடு அளிக்காமல் பொருளாதார ரீதியாக ஒதுக்கீடு அளிக்கறதோ அன்று சாதி இறந்து விட்டிருக்கும்...
  அது வரை நாம் புலம்பி கொண்டிருப்போம்...”

  பொருளாதார ரீதியான ஒதுக்கீடு அளித்துவிட்டால் சாதி எப்படி ஒழிந்துவிடும்? படிக்காதவர்களிடமும், இடஓதுக்கீடு என்றால் என்னவென்றே தெரியாதவர்களிடமும் இருக்கும் சாதி எப்படி ஒழியும்? இந்து மதத்தின் அதாவது சனாதன மதத்தின் சாரமாக சாதி இருக்கிறது. இந்து மதம் இருக்கும்வரை சாதியும் இருக்கும். இது மிகவும் விரிவான அலசலுக்குரியது. இதற்கென ஒரு தனிப்பதிவை எழுவேண்டும்.

  ReplyDelete
 12. "என் ராஜபாட்டை"- ராஜா, தி.தமிழ் இளங்கோ, சேக்காளி ஆகியோரின் கருத்துப் பகிர்வுகளை ஏற்கிறேன்.

  ReplyDelete
 13. தமிழகச் சூழலை மட்டுமே மனதில் வைத்து எழுதி உள்ளேன். thirumathi bs sridhar, சீனிவாசன்,veedu ஆகியோர் சுட்டிக்காட்டியதைப் போல வடஇந்தியாவில் பெண்கள் தங்களது பெயருக்குப் பின்னால் சாதியைச் சேர்த்துக் கொள்கிறார்ள். டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகிய நமக்குத் தெரிந்த பிரபலங்களின் பெயர்களுக்குப்பின்னால் சாதி வருகிறது.

  சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!.

  ஆண்டாள் திரைப்பட நடிகை அல்ல. மிகச்சாதாரண குடும்பத்தலைவி அவ்வளவே!

  ReplyDelete
 14. சோ ஐயர் கேள்விப்பட்டதுண்டா? நான் நமது 'துக்ளக்' சோவைச் சொல்லவில்லை!!

  ReplyDelete