Sunday, February 26, 2012

தனுஷின் கொலவெறியும் தம்ராஸின் கவலையும்!

தமிழக பார்ப்பனர்களின் சங்கமான 'தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின்' (thambraas) அதிகார்வ பூர்வ ஏடான "தம்ராஸ்" பிப்ரவரி 2012 மாத இதழை தற்செயலாக பார்க்க நேர்ந்தது.


ஹும்... இந்தக் காலத்து பசங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் ...
ஒன்னு 'தல விரி'...
இன்னொன்னு 'கொலவெறி..அதான்!'

அந்த இதழில் முதல் பக்கத்தில் வெளியாகியுள்ள ஸ்ரீ-யின் ஒரு கார்ட்டூன் வசனம் இது.

'தல விரி'...

ஜிம்னாஸ்டிக் தொழிலுக்கு ஏற்ற இறுக்கமான முழுக்காலுரை,அதற்கு 'மேட்சான' மேற்சட்டையுடன் தலை மயிர்களை ஒன்றுசேர்த்து கட்டிப்போடாமல் ஒவ்வொரு முடிக்கும் முழுவிடுதலை கொடுத்து இரு கன்னங்களையும் தொட்டுக் கொண்டு அணிவகுத்து விரிந்து தொங்கும் முடி அலங்காரத்துடன் நிற்கும் இரு இளம் பெண்களைப் பார்த்து சடை பின்னிய மடிசார் மாமிகள் இரண்டு பேர் இப்படிப் பேசிக் கொள்கிறார்கள்.

இங்கே இவர்கள் குறிப்பிடும் 'தலவிரி'பசங்க,மாமி வீட்டு குலக் கொழுந்துகளைத்தான்.பார்ப்பனர்கள் பிறரைப்பற்றி எப்போது கவலைப்பட்டிருக்கிறார்கள் இப்பொழுது மட்டும் கவலைப்படுவதற்கு?

ஒரு பக்கம் இத்தகைய பண்பாடுகளை தொலைக்காட்சி ஊடகங்களில் அறிமுகப்படுத்தி அதையே பிறருக்கும் பரவச் செய்யும் பணிகளையும் இவர்களே செய்வார்களாம். அதே நேரத்தில் இவாளுடைய பத்திரிக்கையில் கண்டிக்கவும் செய்வார்களாம். இது யாரை ஏமாற்ற?

உடை மற்றும் முடி அலங்காரம் என்பது தாங்கள் செய்கிற தொழிலுக்கு ஏற்ப இருந்தால் அதில் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

 'கொலவெறி..

இங்கே இவர்கள் கவலைப்படுவது தலவிரிக்காக அல்ல, தனுஷின் காதல் கொல வெறிக்காகத்தான். இந்தக் கொலவெறியைத் தூண்டும் தனுஷ் அவாளின் வட்டத்துக்குள்தானே இருக்கிறார்? ஏன் இப்படிக் கொல வெறியைத் தூண்டுகிறாய் என கண்டிக்கக் கூடாதோ! அப்படிக் கண்டித்தால் அவாளுக்காக அவ்வப்பொழுது குரல் கொடுக்கும் தனுஷின் மாமாவுக்கு சங்கடம் ஏற்படுமோல்ல?

கல்லாக் கட்ட மட்டும்தான் இந்தக் கொல வெறியத் தூண்டலாம். ஆனால் வாழ்க்கையில் கூடாது. காதல்-கீதல்-கொல வெறி என கலப்புத் திருமணம் ஏதும் பிராமணர்கள் செய்து விடக்கூடாதாம். அதற்காக பிராமணாகள் சத்தியம் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். இது பற்றி அவர்களின் இணைய தளத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

அந்தணர் என்போர் அறவோராம். நீதி-நேர்மை-நியாயம்-தர்மம் மற்றும் நாட்டின் சட்டங்களுக்கு கட்டுப் பட்டவர்களாம். அதனால் புராணங்களிலும் இலக்கியங்களிலும் இவர்களுக்கு மிக உயரிய அந்தஸ்து அளிக்கப்பட்டதாம். தமிழகத்தில் ஒருதலைபட்சமான பிராமண துவேஷ பிரச்சாரத்தால் இவர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டார்களாம்.அதனால் கலாச்சார சீரழிவு தொடங்கிவிட்டதாம்.

பிராமணர் என்பது சாதியா?

 எப்படி முதலியார் என்பது சாதி அல்லவோ,  எப்படி கவுண்டர் என்பது சாதி அல்லவோ,  எப்படி பிள்ளை என்பது சாதி அல்லவோ,  எப்படி செட்டியார் என்பது சாதி அல்லவோ அது போல பிராமணர் என்பதும் சாதி அல்ல.

எப்படி முதலியார் என்பது செங்குந்தர், அகமுடையர், துளுவ வேளாளர் போன்ற சாதிகளை அடையாளப்படுத்தும் ஒரு குறியீடோ அது போல பிராமணர் என்பது ஐயர், ஐயங்கார் போன்ற சாதிகளை அடையாளப்படுத்தும் ஒரு குறியீடு. கவுண்டர், பிள்ளை, செட்டியார் போன்ற குறியீடுகளிலும் பல்வேறு சாதிகள் உண்டு. இவர்கள் ஒரே குறியீட்டின் கீழ் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டாலும் அந்தந்த சாதிகளுக்குள்தான் திருமண உறவுகளை வைத்துக் கொள்கிறார்கள். ஐயங்கார் ஐயருக்குப் பெண்தரமாட்டார். துளுவ வேளாளர் அகமுடையர் வீட்டில் பெண் எடுக்க மாட்டார்.

குடும்ப உறவுகளில் தங்களுக்குள் ஒட்டும் உறவும் வைத்துக் கொள்ளாதவர்கள் பிறகு ஏன் தங்களை பிராமணர்கள் என்றும் முதலியார்கள் என்றும் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்? காரணம் வர்ணாசிரம அடிப்படையில் இவர்கள் பிராமணர்கள் என்றும் சத்திரியர்கள் என்றும் வைசியர்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அப்படி சொல்லிக் கொள்வதில் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று பெருமிதம் கொள்கிறார்கள். அதனால்தான் ஐயர் தன்னை பிராமணன் என்று சொல்லிக் கொள்கிறான். செட்டியார் தன்னை வைசியன் என்று சொல்லிக் கொள்கிறான். கவுண்டர் தன்னை சத்திரியன் என்று சொல்லிக் கொள்கிறான்.

சாதியப்படிநிலையில் தாங்கள் பெருமைக்குரியவர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ள முடியாததால்தான் பள்ளர், பறையர் அருந்ததியர் உள்ளிட்ட சாதியினர் தங்களை சூத்திரர்கள் என்று அடையாளப் படுத்திக் கொள்ளாமல் தாழ்த்தப்பட்டவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள்கூட தங்களுக்குள் திருமண உறவுகளை வைத்துக் கொள்வதில்லை. அகமணமுறையை ஒழிப்பது சாதியை ஒழிப்பதற்கான ஒரு வழிமுறை என்பதை டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தியும் அவரது வழிகாட்டுதலை ஒதுக்கிவிட்டு சனாதன தர்மத்தை கடைபிடிப்பது ஒரு அவலமாக இன்னமும் நீடிக்கத்தான் செய்கிறது.  வர்ணாசிரம தர்மத்தின் வெற்றி இதில்தான் அடங்கி இருக்கிறது.

உலக மயமும் கொலவெறியும்

மேலும் பிராமணர்கள் சொல்கிறார்கள்,

"சமீபத்திய உலகமயமாக்கல் மற்றும் கணினிமயமாக்குதல் (IT Revolution) காரணமாக மாபெரும் கலாச்சார சீரழிவு அனைத்து சமூகங்களையும் பாதித்தாலும் நமது பிராமண சமூகத்தை மிகப்பெரும் அளவில் பாதித்துள்ளது. இதன் விளைவாக பல பிராமண சமூகப் பெண்களும், சில பிராமண சமூக ஆண்களும் கலப்புத் திருமணம் செய்து கொள்வது பெருகி வருகின்றது. கலப்புத் திருமணம் நமது பிராமண பாரம்பரியத்தை வேரறுக்கச் செய்திடும்.

உலக மயமாக்களால் தனியார் மயம் - தாராள மயக் கொள்கைகள் அமுலுக்கு வந்ததால் தொழிலாளர்கள் வேலையிழந்தார்கள். விவசாயம் நொடிந்து போய் லட்சக் கணக்கான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படார்கள். சிறு தொழில், சிறு வணிகம் உள்ளிட்ட உள்நாட்டுத் தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது.பன்னாட்டுக் கம்பெனிகள் இந்நாட்டைக் கொள்ளையடிக்க கதவுகள் திறக்கப்பட்டதால் உள்நாட்டுத் தொழில் நலிவடைந்தது.உலகமயமாக்கலின் விளைவால் இன்று கோடிக் கணக்கானோரின் வாழ்வு கேள்விக்குரியதாகிவிட்டது. இதெல்லாம் நமக்குக் கவலை அளிக்கிறது.

ஆனால் அவாளுக்கு கலப்புத் திருமணங்கள் பெருகிவிட்டதே என்கிற கவலை.
பிராமண பாரம்பரியத்தை காதல் திருமணங்கள் வேரறுக்கச் செய்து விடுமாம். அதனால் பிராமணர்கள் கலப்புத் திருமணம் செய்து கொள்ளக் கூடாதாம். உலக மயத்தால் சமூகம் சீரழிகிறது, காதல் திருமணங்கள் அதிகரிக்கிறது, பிராமணியம் அழிகிறது என்றால் உலக மயத்தையல்லவா பிராமணர்கள் எதிர்க்க வேண்டும். அவன் பேண்டதைத் இவன் தின்பானாம். ஆனால் 'நோய்' மட்டும் வரக்கூடாதாம் என்பது போல இருக்கிறது இவாளின் கவலை.

பிறவியிலே மிகச் சிறந்த பிறவியான மனிதப் பிறவியில் அதிலும் புண்ணிய பாரத தேசத்தில், மேலும் குறிப்பாக ரிஷிவர்க்கமாக பிராமணத் தாயார், தகப்பனாருக்குப் பெண்ணாக / பிள்ளையாக பிறந்த நான் எனது வாழ்நாள் முழுவதும் பிராமண பாரம்பரியத்தை கடைப்பிடிப்பேன்.”
“எதிர்காலத்தில் என்னுடைய கணவர் / மனைவி பிராமண சமூகத்தினராகவே இருந்திடுவார். அதாவது வேறு ஜாதியினரை, வேறு மதத்தினரை கலப்புத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். எனது குடும்பப் பெரியவர்கள் மத்தியில் / ஸ்வாமி சந்நிதியில் / தாம்ப்ராஸ் நடத்துகின்ற சத்யப்ரமாண நிகழ்ச்சியில் நான் இந்த சத்யப் பிரமாணத்தை எடுத்துக் கொள்கின்றேன்.”

என்று பிராமணப் பெண்களும் பையன்களும் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ள வேண்டுமாம்.

"நடந்தவகைள் நடந்தவைகளாக இருக்கட்டும்!
இனி நடக்க இருப்பவை நம்மவைகளாக மட்டுமே இருக்கட்டும்!!"

என நம்பிக்கை வைத்து அந்த அறிவிப்பை முடித்துள்ளார்கள்.

இனி நடப்பவை அவாளுடையதாக இருக்கக் கூடாது. உலக மயம் சமீபத்தியது. வீழ்த்திவிடலாம். நம்பிக்கை இருக்கிறது. ஆனால் பார்ப்பனியம் பல ஆயிரம் ஆண்டு பழைமையானது: உறுதிப் படுத்தப்பட்டது. வீழ்த்துவது கடினம். பார்ப்பனியத்தை வீழ்த்த உலக மயம் உதவும் என்றால் சிறிது காலம் உலக மயத்தை வீழ்த்துவதை தள்ளிப் போடலாமோ என்று கூடத் தோன்றுகிறது!

17 comments:

  1. அய்யா Anonymous,

    நான் எழுதியுள்ளவற்றில் என்ன குறை கண்டீர்கள்? கருத்தில் குறையோ தவறோ இருந்தால் உங்களின் கருத்துக்களை முன்வையுங்கள். அதை விடுத்து poda lossu என்று எழுவதன் மூலம் நீங்கள் யார் என்பதை மேலும் அம்பலப்படுத்திக் கொள்கிறீர்கள். கருத்துக்களை விமர்சியுங்கள். தனிநபர்களை விமர்சித்து உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

    ReplyDelete
  2. இதை விட மோசமா பெண்ணுகனா பர்தாவால் மூடிகிட்டேதான் போவணும் என்கிற மதவெறி கூட்டம் இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. உடையை தீர்மானிப்பதில் சாதி-மத-இன மற்றும் பாரம்பரியம்-பண்பாடு என பல்வேறு ரீதியான கண்ணோட்டங்கள் மக்களிடையே நிலவுகின்றன. உடை பற்றிய விரிவான பரிசீலனை தேவை. விரைவில் செய்வோம்.

      Delete
  3. நல்ல பதிவு.
    நாட்டிலுள்ள ஜாதி சங்கங்களையும், ஜாதி பத்திரிகைகளையும் நடத்துபவர்கள் மீது தேச துரோக குற்றம் சாட்டி, நாட்டை விட்டே நாடு கடத்த வேண்டும்.

    ReplyDelete
  4. நல்ல பதிவு. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் ‘அவாள்’ இல்லாமல் எதையும் சாதிக்க இயலாது என்று நினைக்கிறேன். ஆட்சி அதிகார மட்டத்தில் பரவி கிடப்பதே இதற்கு காரணம். இந்நிலை மாறா நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்.

    ReplyDelete
  5. தமிழ்மண பட்டையை சரி செய்யுங்கள்.

    ReplyDelete
  6. தமிழ்மணம் பட்டை சரி செய்யப்பட்டுவிட்டது.

    ReplyDelete
  7. ennaal vaakkalikka mudiyavillaye!innum sariyaakalai enru ninaikkiren.

    ReplyDelete
  8. பிராமணர் என்பது தான் ஜாதி (என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்). ஐயரிலும் ஐந்து வகை உண்டு... அதனால் ஐயரின் வகைகள் ஜாதியா?
    சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள்.

    ஒன்றை மறந்து போயிருக்கிறோம். அல்லது வேண்டுமென்றே நினைக்காதிருக்கிறோம். ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் அன்னியப் படையெடுப்புகள் - அரச, மத, இனத் திணிப்புகள் நடந்தவண்ணமே இருந்தன. கிட்டத்தட்ட பதினேழாம் நூற்றாண்டு வரை எனலாம். இந்தக் காலக்கட்டத்தில் கூட்டம் கூட்டமாக மதம் மாறினார்கள், ஜாதி மாறினார்கள். அரசனுக்கு என்ன பிடித்ததோ அதைச் செய்தார்கள். அதற்கு மேல் போர், சீரழிவில் "கலந்தவர்கள்" ஏராளம். இந்த நிலையில் ஒரு ஜாதியில் பிறந்தவர் என்று எவரையுமே சொல்ல முடியாது என்று நினைக்கிறேன். இன்று பெரும் நகரங்களைச் சுற்றியிருப்பவர்களின் பரம்பரை வெங்காயத்தை உரித்தால் எதுவுமே இருக்காது - அல்லது எல்லாமே இருக்கும் என்று நம்புகிறேன். நம் ஒவ்வொருவரின் இரத்தத்தில் ஏழெட்டு ஜாதி மதங்களின் ரத்த அணுக்களாவது உண்டென்று நினைக்கிறேன். இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பிடித்துக் கொண்டிருப்பது, பாதுகாவலர் போல் பேசுவது, அறிவற்றது கேலிக்குரியது. இன்னும் இருபது முப்பது வருடங்களாகும் இன்றிலிருந்து மூன்றாம் நான்காம் தலைமுறையினர் மிகுந்த புரிதலோடு அறிவோடு நடப்பார்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வர்ணாசிரம அடிப்படையில் முதல் பிரிவைச் சேர்ந்தவர்களே பிராமணர்கள். இது பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. இதில் ஐயர், ஐயங்கார் போன்ற சாதிகள் தனித்தனியே உண்டு. அதே போலத்தான் சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்களில் சாதிகள் தனித்தனியே உண்டு.

      சாதி-மத-இன அடிப்படையிலான ஒன்று கலப்பு என்றோ நடந்தேறிவிட்டது, இன்றும் நடந்து வருகிறது. "பரம்பரை வெங்காயத்தை உரித்தால் எதுவுமே இருக்காது" முற்றிலும் உண்மை.

      Delete
  9. வர்ணாசிரமம் ஜாதியாக மாறியது தான் கொடுமை. தீண்டாமை போன்ற கேவலங்களுக்கு வேரிட்டது இன்னும் கொடுமை. வர்ணாசிரமம் ஜாதியாக மாறியது இந்தியாவில் மட்டுந்தானோ என்று தோன்றுகிறது. இன்றைக்கும் மேற்கிலே வர்ணாசிரமம் பழக்கத்தில் இருக்கிறது. தொழில் அடிப்படையில் உருவான பகுப்பு, பரம்பரை பரம்பரையாக தொழில் கல்வி வளரப் பயன்பட்டது. இன்றைய பொதுக்கல்விச் சூழலில் வர்ணாசிரம முறைகள் பிற்போக்கானவை என்றாலும் அழியவில்லை. ஆனால் அவை ஜாதியாக மாறவில்லை - கிறுஸ்தவராகவே இருக்கிறார்கள். யூதர்களாவே இருக்கிறார்கள். இஸ்லாத்திலும் வர்ணம் உண்டு.

    ReplyDelete
  10. தம்ராஸ் எங்கே கிடைக்கிறது?

    ReplyDelete
    Replies
    1. விவரங்களுக்கு http://www.thambraas.com ஐப் பார்க்கவும்.

      Delete
  11. நல்லதொரு பதிவு ! சாதிகள் எல்லாம் தெரிந்தோ தெரியாமலோ, கள்ளத்தனமாகவோ, அப்பட்டமாகவோ கலந்துக் கொண்டு தான் இருக்கின்றன. ஜெனிட்டிக் ஆய்வுகள் இதனை உறுதி செய்கின்றன. தூய சாதியம் பேண நினைப்போர் தாம் தூயவர்களா என்பதை சற்றே யோசிக்க வேண்டும் .. அந்தமானின் செண்டனல் தீவில் இருக்கும் ஒரு சிலரும், அமேசான் காடுகளில் இருக்கும் ஒரு சிலர் தவிர்த்து ஏனையோர் எல்லாம் கலப்பினமே. அறிவியல் படி !

    அதே போல மதம் மாறுவது போல, முற்காலங்களில் பிரமாண சாதியில் மாறியவர்களும் உண்டு ... !!! கலப்பு மணத்தை ஊக்குவிப்போம், இளைஞர்கள் கலப்பு மணத்தை அச்சமில்லாமல் செய்துக் கொள்ள முன்வர வேண்டும். எந்த சாதி, மத பெண்ணையும் காதலித்து கைப் பிடிக்க வேண்டும் ... !

    ReplyDelete