Wednesday, October 17, 2012

கொசுக்களோடு ஒரு யுத்தம்: எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை ஒழிக்க முடியாது!


டெங்கு முன்னுக்கு வந்து மின்தடை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இன்றைய தேவை கருதி மீள்பதிவு.

************************************

சில ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பு தேடி சென்னை சென்ற இளைஞர் தற்போது திருமணமாகி கையில் ஒரு குழந்தையுடன் தனது மனைவியோடு சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டார். அடுத்தக் குழந்தைக்கும் தயாராகியிருந்தார் அவரது மனைவி. சென்னையில் வாழ்க்கையை ஓட்ட முடியாததால் வந்துவிட்டதாகச் சொன்னார்கள். 

ஆலைகள் நிறைந்த தொழிற்பேட்டைக்கு அருகில் உள்ள சிற்றூரில்தான் அவரது வீடு. ஏதோ ஒரு ஆலையில் குறைந்த ஊதியத்திற்கு வேலைக்குச் சென்றாலும் வயித்தக் கழுவலாம் என முடிவெடுத்து அவர் வந்திருக்கலாம். வீடோ ஓட்டு வீடு. சற்று பலமான மழை என்றால் உள்ளே ஒண்ட முடியாது. ஏற்கனவே அவரது தந்தையும், தங்கையின் குடும்பமும் என ஆறு பேர் வசிக்கும் வீடு. இவர்களோடு மொத்தம் ஒன்பது பேர். மூச்சுக் காற்றுகூட வெளியேற முடியாது. அவ்வளவு சிறிய வீடு. அவர்கள் அத்தனை பேரும் எப்படி அதில் வாழ முடியும்?

ஆனால் இதுவல்ல அவரது துணைவியாருக்குப் பிரச்சனை. பக்கத்திலிலேயே சாக்கடை. தேங்கிக் கிடக்கும் சாக்கடை நீரில் இருந்து வரும் கொசுக்களின் தொல்லை. தாங்கமுடியவில்லை.  வந்து ஒருவாரமே ஆகிறது. வாடகைக்கு வேறு வீடு பார் எனக் கூறிவிட்டார். இன்னும் ஒரு வேலையைக்கூட தேடவில்லை. அதற்குள் வாடகை வீடு என்றால் சமாளிக்கமுடியுமா? வாழ வழியில்லை என ஊர் மாறி வந்தால் இங்கே கொசுவுக்காக சொந்த வீட்டை விட்டு ஓட வேண்டிய அவலம். வேறு வீட்டிற்குச் சென்றால் மட்டும் தீர்ந்தவிடுமா கொசுப்பிரச்சனை?

தேசியப் பிரச்சனை:

இது ஏதோ அவரது பிரச்சனை மட்டுமல்ல. இந்தியக் குடிமக்கள் அனைவரும் சந்திக்கும் ஒரு தேசியப் பிரச்சனை. கொசுக்களால் பிரச்சனைக்கு ஆளாகாத குடும்பங்களே இருக்க முடியாது. குடிசையோ, கோபுரமோ..அதெல்லாம் கொசுக்களுக்குத் தெரியாது. கொசுக்களுக்குத் தேவை மனித இரத்தம். எங்கே இடைவெளி இருக்கிறதோ அங்கே நுழைந்து தேவையான அளவு குடித்துவிட்டு அங்கேயே ஒளிந்து ஓய்வெடுத்துக் கொண்டு மறுநாளும் வேலையைத் தொடரும் கொசுக்களும் உண்டு. அல்லது குடித்துவிட்டு தனது விசிப்பிடத்திற்கே திரும்பும் கொசுக்களும் உண்டு.

மழைக் காலமோ, கோடை காலமோ எல்லாக் காலங்களிலும் நம்மை விடாது துரத்தும் கருப்பு கொசுதான். என்ன.... கோடையில் சற்று வேகம் குறைவே ஒழிய துரத்தவது ஒன்றும் நிறுத்தப்படுவதில்லை. ஆனால் கோடையை சமாளித்து வாழும் கொசுக்களின் வல்லமை சற்றே அதிகம்தான். அதனால்தான் கோடை கொசுக்கள் 'சிக்குன்குனியா' மூலம் நம்மை முடக்குகின்றன.

தட்டினால் பொட்டெனெப் போகும் கொசுக்களைக் கண்டு அஞ்சாதவர்கள் உண்டோ? ஒன்றா, இரண்டா தட்டிவிட்டுத் தூங்குவதற்கு. பெரும் படையாய் அல்லவா அணிவகுத்து வருகின்றன. எப்படி அஞ்சாமல் இருக்க முடியும்? இருந்தாலும் வறியவர்கள் தட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்;

தப்பிக்க வழியே இல்லையா?:

ஒரே வழி தற்காப்புதான். தற்காப்புக்கு என சந்தையில் ஏராளமான கேடயங்கள். வசதியைப் பொருத்து வலுவான கேடயம் எனில் நமக்கு சேதாரம் குறைவு. மார்ட்டின் கொசுவத்திச் சுருள், 'ஆல் அவுட் லிக்குயிட்', 'ஹிட் ஸ்ப்பிரே'-இவைகள் உள்ளே நுழைந்த எதிரிகளை விரட்ட ஏவப்படும் அம்புகள். எத்தனை முறைதான் ஒரே 'பிராண்ட்' அம்புகளை ஏவ முடியும்? முனை மழுங்கிப் போகாதா? 

எதிரிகளை உள்ளே விட்டால்தானே. தடுப்பரண்களைப் போட்டு தடுத்துவிட்டால் எதிரிகள் முட்டிப் பார்த்துவிட்டு எட்டி ஓடிவிடுவார்கள். இதற்காகவே 'காட்டன்-நைலான்' கொசு வலைகளும், 'நெட்லான்களும்', 'ஒயர் மெஷ்களும்' ஏராளமாய் சந்தையில் குவிந்துள்ளன. என்ன.... தடுப்பரண் போட ஒரே நேரத்தில் சற்று கூடுதலாக முதலீடு செய்ய வேண்டும். எதிரிகள் இலேசுப்பட்டவர்களா என்ன? எத்தனை யுத்தங்களைப் பார்த்திருப்பார்கள்? உங்கள் தடுப்பரண்கள் என்ன முக்காலத்துக்கும் தாங்கக்கூடியவையா? விரிசலுக்கிடையில் சர்.....சர்ரென நுழைந்து திடீர் தாக்குதல் நடத்துவதை தடுத்திடவா முடியும்?

இப்படிப்பட்ட திடீர்த் தாக்குதல்களை எதிர்கொள்ள சீனாக்காரன் ஏராளமான அதிரடி மட்டைகளை நமக்கு அளித்து வருகிறான். இரவில் எப்பொழுதும் இந்த அதிரடி மட்டை அருகில் இருக்க வேண்டும். இதுவே இப்போதைக்கு சிறந்த ஆயுதமாகத் திகழ்கிறது. இந்த மட்டைகள்கூட எதிரிகளின் தாக்குதலால் செயலிழந்து போகின்றன. பயனற்றுப் போன மட்டைகளுக்காக நான் ஒரு ஆயுதக் கிடங்கையே வைத்திருக்கிறேன். காசு கொடுத்து வாங்கியாச்சே. தூக்கியெறிய மனமில்லை.
கொசுக்களை விரட்ட பெரும்பாலானோருக்கு தற்போது அதிகமாகப் பயன்படுவது மின் விசிறிதான். கடுங் குளிரில்கூட காற்றாடி ஓட வேண்டும். குளிரைவிடக் கொடுமையானதல்லவா கொசுக்கடி. நள்ளிரவில் திடீரென மின்வெட்டு என்றால் நிலைகுலைந்து போகிறோம். ஆனால் எத்தனை நாளைக்கு? சுழன்றடிக்கும் சூறாவளியைக்கூட எதிர் கொள்ளும் ஆற்றலை வளர்த்துக் கொள்வது விலங்கினங்களின் பரிணாமமாயிற்றே.

எதிரிகளின் படையெடுப்பை தனி மனிதர்களால் எதிர் கொள்ள முடியவில்லை என்பதால் நகராட்சிகள் அவ்வப் பொழுது ஏவுகனைத் தாக்குதல்களை நடத்துவதுண்டு. கவச வாகனங்கள் பெரும்புகையை எழுப்பிக் கொண்டு வீதிகளில் வரும் போது அச்சம் எதிரிகளுக்கு மட்டுமல்ல நமக்கும்தான். புகையில் சிக்கிக் கொண்டால் நாம்தான் விழ வேண்டி வரும். எதிரிகள் ஓடி ஒளிந்து கொள்வார்கள். அதிகாரிகள் தங்கள் பையை நிரப்பிக் கொள்ளத்தான் இந்த 'ஆபரேஷன் மேலா'வேயொழிய எதிரிகளைக் கொல்வதற்கு அல்ல. கார்க்கில் யுத்தத்திலேயே கை வைத்தவர்கள் அல்லவா நம் 'கர்னல்கள்'.

யுத்த பாதிப்புகள்:

யுத்தத்தில் நாம் பயன்படுத்தும் ஆயுதங்களால் ஏற்படும் நச்சுப் புகையால் கண் எரிச்சல், தோல் நோய் உள்ளிட்டு பல்வேறு உபாதைகளையும் நாம் எதிர் கொள்ள வேண்டும். யுத்தம் என்றால் சும்மாவா?

நமக்குத் தெரிந்த போர்த் தந்திரங்கள் அனைத்தையும் கையாண்டு பார்த்தோம். அறுபத்து ஆறு ஆண்டு கால யுத்தத்தில் பொது மக்களின் சொந்தப் பணம் உள்ளிட்டு பல இலட்சம் கோடி விரயமானதோடு சரி.  டார்வினின் இயற்கைத் தேர்வு மூலம் (natural selection) எதிரிகள் பலமாகிவிட்டார்கள். 

இனி என்ன செய்வது? யாருடைய உதவியையாவது நாடலாமா? 'கேன்சரையும்', மூட்டு வலியையும் விரட்டும் பால் தினகரன்களை அழைப்பதா? மச்சவதாரம், பிச்சவதாரம் என பல அவதாரங்களைக் கண்ட மகா விஷ்ணுக்களை அழைப்பதா? அல்லது சைத்தான்களைத் துரத்தியடிக்கும் முல்லாக்களை நாடுவதா? ஒரே குழப்பமாக இருக்கிறது. இந்திய மக்களைக் காக்க ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்களேன். ஒரு வேளை ஒபாமா உதவுவாரோ? எதற்கும் கேட்டுப் பார்க்கலாம். அதற்கு முன்பு அமெரிக்க வாழ் நண்பர்கள் அங்குள்ள நிலமையைச் சொன்னால் ஒபாமாவை நாடுவது குறித்து முடிவெடுக்கலாம்.

சமீபத்தில் தொலை காட்சி ஒன்றில் புராணக் கதை ஒன்று கேட்டேன். ஐந்து சிறுவர்கள் ஒரு குளத்தில் உள்ள மீன்களைப் பிடித்து மீனின் ஒரு கண் வழியாக முள்ளாள் குத்தி அது அடுத்த கண் வழியாக வருவதைக் கண்டு இரசித்தார்களாம். இதைக் கண்ட இறைவன் "இது என்ன கொடுமை?" என்று அந்த ஐவரையும் "மீனாய்ப் பிறக்கக் கடவ" என்று சாபமிட்டானாம். அது போல இந்தக் கொசு அரக்கனுக்குச் சாபமிட சாமிகள் ஏதும் வாராதோ என விழி வைத்துக் காத்திருக்கிறேன். 

ஒரு வேளை ஏதேனும் புதிய யுக்தியைக் கையாண்டு கொசுக்களைக் கொல்லும் போது அதைப் பார்த்து "கொசுவாய்ப் பிறக்கக் கடவ" என ஆண்டவன் நமக்குச் சாபமிட்டுவிட்டால்... அந்தப் பயமும் இருக்கத்தானே செய்கிறது. அது மட்டுமல்ல 'புளூகிராஸ்காரர்கள்' வழக்குப் போட்டால் அதையும் எதிர்கொள்ள வேண்டுமே. ஒரே பயமாக இருக்கிறதே. 'பிலீஸ் ஹெல்ப்'.

தாக்குதலில் எதிரிகள் ஏற்படுத்தும் சேதாரம் கொஞ்சமா? நஞ்சமா? 'சிக்குன் குனியா' வந்தால் நடமாட்டமே முடங்கிப் போகிறது. 'மலேரியா' வந்தால் மரணம் தவிர்க்க முடியாதது. யாணைக்காலை எத்தனை ஆண்டுகள் சுமப்பது? அதுவும் திருமணத்திற்கு முன்பு என்றால் வாழ்க்கை முழுக்க பிரம்மச்சரியம்தான். காஞ்சிபுரம், வாலாஜா, வேலூர், ஆம்பூர், திருப்பத்தூர் ஆகிய பிரதேசங்களில் யுத்தத்தின் விளைவு அதிக அளவில் யானைக்கால்தானாம். மருத்துவர்களும், செவிலியர்களும் யுத்த களத்தில் காயமடைந்த நமக்குத் தொடர் சிகிச்சையளித்து வருகின்றனர்.

எதிரிகளின் தாக்குதல்களை சமாளிக்க மருத்துவர்களும் பல்வேறு ஆலோசனைகளை அளித்தவண்ணம் உள்ளனர். உடைந்த சட்டி, பானை, ஓடு, கொட்டாங்குச்சிகளை கவிழ்த்து வையுங்கள். திறந்து வைத்தால் அவைகளே எதிரிகளின் புகலிடமாக அமைந்து விடும் என்பதால். நாமும் மெனக்கெட்டு இதையெல்லாம் செய்துதான் பார்க்கிறோம்.

இரான்-ஈராக் யுத்தத்தில் ஆயுதத் தளவாடங்களைத் தள்ளிவிட்டதன் மூலம் கோடிகளைச் சுருட்டிய அமெரிக்கா போல இங்கே 'குட்நைட்', 'ஆல் அவுட்', 'மார்ட்டின்', 'ஹிட்' என ஆயுத விற்பனை மூலம் முதலாளிகள் கோடிகளைச் சுருட்டுகிறார்கள். யுத்தம் தொடர்கிறது. புதிய புதிய 'பிராண்டுகளில்' சந்தையில் ஆயுதத் தளவாடங்களை முதலாளிகள் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். 

எதிரிகளை ஒழிக்கமுடியுமா?:

இடையில்....எனக்கு ஒரே ஒரு கவலை மட்டும் உண்டு. எதிரிகள் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டால்... ஆயுதத் தொழிற்சாலைகள் பல மூடப்படும். மருந்து மற்றும் மருத்துவக் கருவிகள் உற்பத்தி குறையும். இதனால் இலட்சக் கணக்காணோர் வேலையிழந்து வீதியில் வீசப்படுவர். கொசுக்களை ஒழிக்கக்கூடாது என அவர்கள் போராடத் தொடங்கிவிட்டால் நாடே களேபரம் ஆகும். சொசுக்களைக்கூட ஒழிக்க இயலாத நமது அரசு மக்களின் இந்தப் போராட்டத்தை எப்படி சமாளிக்கும்? 

எதிரிகள் 'ஐ.எஸ்.ஐ ஏஜெண்டுகளும்' அல்ல. 'அல்உமா' தீவிரவாதிகளும் அல்ல. எல்லாம் நம்ம ஊர் குளம்,  குட்டை, சாக்கடைகளின் கழிவு நீரில் பிறப்பவர்கள்தான். நம்ம தண்ணியக் குடிச்சவங்கதான். எதிரிகளுக்கு மட்டும் தண்ணிப் பஞ்சம் எப்போதும் வராது. எதிரிகள் பாதுகாப்பாக இருக்க சாக்கடையில் தண்ணி வடியாம பாத்துக்கிற வேலயத்தான் நம்ம ஊர் நாட்டாமைங்க... அதாங்க.... ஊராட்சி -  நகராட்சி கவுன்சிலரு, சேர்மேனுங்க கண கச்சிதமா செய்யராங்களே. எதிரிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை நம்மால் ஒழிக்கவா முடியும்?.

1 comment: