Monday, November 12, 2012

தித்திக்கும் தீபாவளி! யாருக்கு?


பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடிந்து மீண்டும் நாடு திரும்பி, ஆட்சிப்பொறுப்பு ஏற்க வந்த இராமனுக்கு அயோத்தி நகர மக்கள் கொடுத்த வரவேற்பே பின்னாளில் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது என்பது வட இந்தியர்களின் நம்பிக்கையாம்.

நரகாசுரனை, கிருஷ்ணன் வதம் செய்த நாளை தென்னக மக்கள் தீபாவளியாகக் கொண்டாடுகிறார்களாம்.

இதோடு நிறுத்திக்கொண்டால் பரவாயில்லை. இந்தியாவையும் தாண்டி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறதாம் தீபாவளி.

சாதி, மத, இன, மொழி பேதமின்றி நல்லிணக்கத் திருவிழாவாக தீபாவளி நாட்டில் பல நூற்றாண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறதாம். இந்துவைத் தவிர வேறு எந்த மதத்துக்காரன் தீபாவளியைக் கொண்டாடுகிறான் என்று தெரியவில்லை – அதுவும் பல நூற்றாண்டுகளாக. இந்த சில - பல என்பதற்கு அளவுகோல் என்னவோ ? அது அவர்களுக்கே வெளிச்சம்! எந்தத் தீபாவளி நாயக்கன் கொட்டாய்களில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?

கதைகள் எதுவாக இருப்பினும் அதை நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் வியாபாரிகளும் நாளேடுகளும் தொலைக்காட்சிகளும் உங்களை விடப் போவதில்லை.

தொடரும் மின்வெட்டால் நாம் இருளிலேயே மூழ்கிக் கிடந்தாலும் – எப்போது மின்சாரம் வரும் என ஏங்கி ஏங்கி ஏமாற்றம் அடைந்தாலும், மின் கட்டணம், பெட்ரோல்-டீசல் விலை, பேருந்து கட்டண உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம், சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு என அரசின் புதிய புதிய கொள்கைகளால் இருக்கிற பொழப்பும் நிலைக்குமா – எதிர்காலம் என்னவாகும் என்கிற அச்சத்தோடு ஒவ்வொரு நாளையும் நாம் எதிர் கொண்டிருக்கும் வேளையில் நாக்கூசாமல் இருள் அகன்று, ஒளி கிடைக்கும் தீபாவளி என ஊதிப் பெருக்குகின்றன ஊடகங்கள். ஆனால் எப்படி ஒளி கிடைக்கும் என அவனும் சொல்லப் போவதில்லை, நாமும் சிந்திக்கப் போவதில்லை.

இது தித்திக்கும் தீபாவளியாம். வண்ண வண்ணமாக எழுதுகின்றன பத்திரிகைகள். வர்ண்ஜாலம் காட்டுகின்றன தொலைக்காட்சி ஊடகங்கள். பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் வண்ண வண்ண விளம்பரங்களால் வாரிச்சுருட்டுகின்றனர். இது அவர்களுக்கு தித்திக்கும் தீபாவளிதான்.

விளப்பரங்களுக்கு கொட்டிக் கொடுத்தக் காசையும் சேர்த்து - பேரீட்சம் பழத்துக்குகக்கூட லாயக்கற்ற ஓட்டை உடைசல் வீட்டு உபயோகப் பொருட்களையும், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என ஆசை காட்டியும், கரித்துணிக்குக்கூட தேறுமா என்கிற நிலையில் ஆண்டுக் கணக்கில் தேங்கிப்போன ஜவுளித் துணிகளை வண்ண வண்ண விளம்பரங்களைக் காட்டி மயக்கியும் நம் தலையில் கட்டும் பெரும் வியாபாரிகளுக்கு இது தித்திக்கும் தீபாவளிதான்.

சிவகாசியில் தொழிலாளர்கள் கருகினால் என்ன, எனக்கு பை நிறைந்தால் போதும் என ஒரு நாள் கூத்துக்காக தயாரிக்கப்படும் பட்டாசுகள் மூலம் ஓராண்டு லாபத்தைச் சுருட்டும் பட்டாசு ஆலை முதலாளிகளுக்கு இது தித்திக்கும் தீபாவளிதான்.

இந்திய உணவுக்கிடங்குளில் மக்கிப்போகும் கோதுமையாக இருந்தாலும் அதிலேயும் அல்வா கிண்டி நம் வாயை அடைத்து பாக்கெட்டில் உள்ளதை லவட்டிக் கொள்ளும் பெரும் ஸ்வீட் ஸ்டால் ஓனர்களுக்கு இது தித்திக்கும் தீபாவளிதான்.

வாழ்க்கை மின்னுகிறதோ இல்லையோ தங்கத்தால் பெண்களை ஜொலிக்க வைக்கும் ஜீவல்லர்ஸ்காரனுக்கு இது தித்திக்கும் தீபாவளிதான்.
எது எப்படியோ ஊருக்குச் சென்று உறவுகளையாவது பார்க்கலாம் என பேருந்து நிலையம் சென்றால் –

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு அரசுப் பேருந்தில் செல்ல ஓராண்டுக்கு முன்பு கட்டணம் ரூ.300 இருந்ததை ரூ.600 ஆக உயர்த்தியதையே தாங்க முடியவில்லை. இந்த தீபாவளி சீசனில் தனியார் ஆம்னி பேருந்துகளில் ரூ.1500 என்றால் தாங்கவா முடியும்? ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது மற்றவர்களுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ! ஆம்னி பேருந்துக்காரன் தீபாவளிக்குப் பிறகு இன்னொரு பேருந்தை வாங்கிவிடுவான். இது அவனுக்கு தித்திக்கும் தீபாவளிதான்.

தீபாவளிக்குப் பிறகு -

முதலாளி கணக்குப் பார்ப்பான் – லாபம் எவ்வளவு என்று!
உழைப்பாளியும் கணக்குப் பார்ப்பான் – இழந்தது எவ்வளவு என்று!

4 comments:

 1. தீபாவளிக்குப் பிறகு -

  முதலாளி கணக்குப் பார்ப்பான் – லாபம் எவ்வளவு என்று!
  உழைப்பாளியும் கணக்குப் பார்ப்பான் – இழந்தது எவ்வளவு என்று!

  ReplyDelete
 2. சாதி, மத, இன, மொழி பேதமின்றி நல்லிணக்கத் திருவிழாவாக தீபாவளி நாட்டில் பல நூற்றாண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறதாம்.

  வழக்கமான வாழ்த்துக்கள் பெரிது படுத்தாதீர்கள்

  ReplyDelete
 3. இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete

There was an error in this gadget