Sunday, January 13, 2013

புத்தகக் கண்காட்சி: எதற்காக?


இந்த ஆண்டு 750 அரங்குகள் - 10 இலட்சம் தலைப்புகள் 1 கோடி புத்தகங்கள் - சென்ற ஆண்டு ரூ12 கோடிக்கு விற்பனை என சென்னையில் நடைபெற்று வரும் 36 வது புத்தகக் கண்காட்சி பற்றி தொலைக்காட்சி ஊடகங்கள் ஏற்படுத்தும் பரபரப்பைப் பார்க்கும் போது எழுத்துலகில் ஒரு மொபெரும் புரட்சி நடப்பதைப் போன்ற ஒரு பிரமிப்புதான் பார்ப்பவர்களுக்குத் தோன்றும்.

கடந்த முப்பது ஆண்டுகளாக பல்வேறு நூல்களைத் தேடிப்பிடித்து வாங்கிப் படித்து வந்த நான் கடந்த மூன்று ஆண்டுகளாகத்தான் சென்னை புத்தகக் கண்காட்சியை எட்டிப் பார்க்கிறேன். சென்ற ஆண்டு நான் சில ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி வந்த நூல்களில் கால் பங்கு நூல்களைக்கூட இன்னும் படித்து முடிக்கவில்லை. எனவே வாங்கியதைப் படித்துவிட்டு பிறகு மேற்கொண்டு வாங்கலாம் என நினைத்திருந்தேன். எனவே இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு செல்வதில்லை என முடிவெடுத்திருந்தேன்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் எழுத்தாளர்கள் பாமரன், கமலாலயன், கவிஞர் சல்மா, பதிப்பாளர் காந்தி கண்ணதாசன் ஆகியோர் பங்கு கொண்ட புத்தகக் கண்காட்சி பற்றிய கலந்துரையாடலைப் பார்த்த பிறகு இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதென முடிவெடுத்தேன்.

புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்திலிருந்து

8 கோடி பேர் வாழுகின்ற தமிழகத்தில், ஒரு நூலின் 1200 படிகளை விற்பனை செய்ய ஒரு நூலாசிரியரருக்கு 15 ஆண்டுகளானதாகவும், மக்கள் புத்தகங்களுக்காக செலவிடுவதில்லை, வீடுகளில் படிப்பதற்கு தனி அறை கிடையாது, நூல்களைப் படிப்பதற்கு பெற்றோர்கள் பிள்ளைகளை ஊக்குவிப்பதில்லை, இலக்கியம் பற்றிய புரிதல் மக்களிடையே இல்லை, எழுதியது விற்பனையாகாத போது எழுத்தாளன் சோர்ந்து விடுகிறான் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் சல்மா.

“பதிப்பாளனும் ஒரு வியாபாரிதான். புத்தககங்கள் விற்பனையாகாமல் முடங்கிப் போனால் போட்ட முதலை எடுக்க முடியவதில்லை. தீவிர இலக்கியங்கள் விற்பதற்கு புத்தகக் கண்காட்சி பெரிதும் உதவுகின்றன” என்கிற கண்காட்சியின் வியாபார நோக்கத்தை தெளிவு படுத்தினார் காந்தி கண்ணதாசன்.

“கோடிகளில் நூல்கள் விற்பனையாகி என்ன பயன்? எத்தகைய நூல்கள் விற்பனையாகின்றன என்பதே முக்கியம். ஆன்மீக - நியூமராலஜி போன்ற நூல்கள் அதிகம் விற்பனையாகி என்ன பயன்? நூல்களின் உள்ளடக்கமே இங்கு முக்கியம். சரியான நூல்கள் கோடிகளில் விற்பனையாகி இருந்தால் இந்நேரம் புரட்சியே நடந்திருக்கும். ஒரு எழுத்தாளன் மக்களோடு இருக்கும் போது விற்பனை ஒரு பிரச்சனையே இல்லை.  நான் எழுதிய 12 நூல்களும் தேங்கியதே இல்லை” என்பதைச் சொன்னதோடு “சிங்கிள் டீ, லைட் டீ தெரியும், ஆனால் ராயல்டி பற்றி தெரியாது” என பதிப்பகத்தாரின் மோசடிகளையும் போட்டுடைத்தார் பாமரன்.

கேரளத்தைப் போல, சில மேலை நாடுகளைப் போல தமிழகத்தில் நூல்களுக்கு - குறிப்பாக இலக்கியங்களுக்கு அதிக வரவேற்பில்லை என்பதே இந்த விவாதத்தில் மையமாக உணர்த்தப்பட்டது.

இந்த விவாதத்தைப் பார்த்த பிறகு ஒருவன் எதற்காக இவர்கள் எழுதும் நூல்களை வாங்க வேண்டும், எதற்காப் படிக்க வேண்டும் என்கிற கேள்விதான் என்னுள் எழுந்தது. இதற்கான விடையைத் தேடினேன். 2011 ஆண்டு புத்தகக் கண்காட்சியையொட்டி கீழைக்காற்று நூல்வெளியீட்டு விழாவில் தோழர் மருதையன் ஆற்றிய உரை நினைவுக்கு வர உரையின் நூல் வடிவத்தை எடுத்துப் படித்தேன்.

எதற்காக?

அதன் பிறகு மேலும் சில ஐயங்கள் என்னுள் எழுந்தன. எதற்காக எழுத்தாளன் எழுத வேண்டும் ஓவியன் எதற்காக வரைய வேண்டும்? கவிஞன் எதற்காகப் பாடல் எழுத வேண்டும்? பாடகன் எதற்காகப் பாட வேண்டும்? பேச்சாளன் எதற்காக சொற்பொழிவாற்ற வேண்டும்? நடிகன் எதற்காக நடிக்க வேண்டும்? இப்படி கேள்விகள் நீண்டு கொண்டே சென்றன.

வாசகனோ, எழுத்தாளனோ, ஓவியனோ, பாடகனோ, பேச்சாளனோ, நடிகனோ இவர்கள் தங்களின் இன்பத்திற்காகவோ, இரசனைக்காகவோ, பொழுது போக்கிற்காகவோ, மகிழ்ச்சிக்காகவோ, பொருள் ஈட்டுவதற்காகவோ, புகழ் பெறுவதற்காகவோ,  இன – மத – மொழி - பண்பாட்டு பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காகவோ என சிலவற்றிற்காகத்தான் வாசிக்கவும், எழுதவும், வரையவும், பாடவும், பேசவும், நடிக்கவும் செய்கின்றனர் என்பதை புரிந்து கொண்டேன்.

ஒரு விவாதத்திற்காக ஒரு நுலைப் படிப்பதற்குப் பதிலாக தான் இந்தியா டுடே படித்துக்கொண்டிருந்ததை இன்பத்துக்காகப் படிக்கிறேன் என்பதை ஒரு தோழர் உணர்த்தியதாக மருதையன் தனது உரையிலே சுட்டிக்காட்டுகிறார். நான்கூட நோக்கமின்றி நிறைய படிக்கிறேன். அப்படிப் படிப்பதில் ஒருவித இன்பம் இருக்கிறது. இத்தகைய இன்பத்திற்காகப் படிப்பதில் எவ்விதப் பயனும் இல்லை என்பதே உண்மை.

இன்பத்திற்காக, இரசனைக்காக, பொழுது போக்கிற்காக, மகிழ்ச்சிக்காக, பொருள் ஈட்டுவதற்காக, புகழ் பெறுவதற்காக, இன – மத – மொழி - பண்பாட்டு பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக ஒருவன் செய்கிற செயல் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில்லை.

கடமை

படிப்பது, எழுதுவது, பாடுவது, வரைவது, நடிப்பது, பேசுவது இவைகளை ஒரு கலைஞன் தனது கடமையாகக் கொள்ள வேண்டும். இந்தக் கடமைக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். இந்த நோக்கம் நடைமுறைக்கானதாக இருக்க வேண்டும். அந்த நடைமுறை சமூகத்தில் நிலவுகிற ஏற்றத்தாழ்வுகளையும், ஏழ்மையையும், சுரண்டலையும், அடிமைத்தனத்தையும் பாதுகாத்து வருகிற அல்லது அவற்றிற்கு காரணமாக இருக்கிற இச்சமூக கட்டமைப்பை மாற்றுவதற்கான புரட்சிகர நடைமுறையாக இருக்க வேண்டும்.

புத்தகக் கண்காட்சியின் பிரமிப்பைக் காணவே நான் இந்த ஆண்டு கண்காட்சிக்குச் சென்று வந்தேன். இலட்சக்கணக்கில் விற்பனையாகும் பகவத் கீதைகளோ, விவேகானந்தரின் போதனைகளோ, காந்தியின் சத்திய சோதனைகளோ, கல்கியின் பொன்னியின் செல்வன்களோ, யோக - தியானக் கலைகளோ, உடல் நல - ஆரோக்கிய நூல்களோ, சுயமுன்னேற்ற நூல்களோ, நியூமராலஜி - பக்தி இலக்கியங்களோ அல்லது உயிர்மை - காலச்சுவடுகளின் 'தீவிர' இலக்கியங்களோ சமூகத்திற்குத் தேவையான பாரதூரமான மாற்றங்கள் எதையும் ஏற்படுத்துவதில்லை. மற்றொருபுறம் சமூகத்தில் கேடுகள் அதிகரித்த வண்ணமே உள்ளன.

முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிராகப் போராடுகின்ற உத்வேகத்தை ஏற்படுத்தும் மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல்களும், சாதி ஏற்றத்தாழ்வுகளையும் - பெண்ணடிமைத்தனத்தையும் அடித்து வீழ்த்துகிற ஆற்றலைத் தரும் பெரியாரின் பேச்சும் - அம்பேத்கரின் எழுத்துக்களும், அதிகரித்து வரும் ஆதிக்கச் சாதிவெறி கொட்டத்தை முட்டி மோதி வீழ்த்த “ஆயிரம் காலம் அடிமை என்றாயே அரிசனன்ணு பேரு வைக்க யாரடா நாயே” போன்ற கோவனின் எழுச்சியூட்டும் பாடல்களும், பன்னாட்டுச் சுரண்டலுக்கு வழிவகுத்து வல்லரசு நாடுகளுக்கு அடிமையாகி வரும் இந்திய நாட்டை மீட்டெடுக்க பகத்சிங்கின் பேச்சும் - எழுத்துக்களுமே இன்றைய தேவை.

இந்த உண்மையை உணர்ந்த காரணத்தால்தான் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட என்ன செய்யலாம் என்பதை கண்டறியவும் அவற்றை மக்களிடையே எடுத்துச் செல்லவும் துணைபுரிகின்ற நூல்களாகத் தேடிப்பிடித்து வாங்கி வந்துள்ளேன்.

ஒருவன் தன் இரசனையை, பொழுது போக்கை, பொருள் ஈட்டுவதை, புகழ்பெறுவதைத் தாண்டி தனக்கான பிரதி பலன் எதையும் எதிர்பாராத சமூகத்தில் மாற்றம் நிகழுவதற்காக உழைப்பதில்தான் இன்பத்தைக் காணவேண்டும். அதுதான் நிறைவான இன்பமாக இருக்க முடியும்.

9 comments:

 1. படிக்கும் நேரத்தை பொழுது போக்கு ஊடகங்கள் திருடிவிட்டது அல்லது தொலைத்து விட்டோம்

  ReplyDelete
 2. சமூகத்தில் மாற்றம் நிகழுவதற்காக உழைப்பதில்தான் பலரும் இன்பத்தைக் காண முடியும். உண்மை தோழரே.....

  ReplyDelete
  Replies
  1. இதில்தான் தனக்கான பிரதிபலன் எதிர்பார்க்காத உழைப்பு செலுத்தப்படுகிறது.

   Delete
 3. //ஒருவன் தன் இரசனையை, பொழுது போக்கை, பொருள் ஈட்டுவதை, புகழ்பெறுவதைத் தாண்டி தனக்கான பிரதி பலன் எதையும் எதிர்பாராத சமூகத்தில் மாற்றம் நிகழுவதற்காக உழைப்பதில்தான் இன்பத்தைக் காணவேண்டும். அதுதான் நிறைவான இன்பமாக இருக்க முடியும்.//
  //படிப்பது, எழுதுவது, பாடுவது, வரைவது, நடிப்பது, பேசுவது இவைகளை ஒரு கலைஞன் தனது கடமையாகக் கொள்ள வேண்டும். இந்தக் கடமைக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். இந்த நோக்கம் நடைமுறைக்கானதாக இருக்க வேண்டும். அந்த நடைமுறை சமூகத்தில் நிலவுகிற ஏற்றத்தாழ்வுகளையும், ஏழ்மையையும், சுரண்டலையும், அடிமைத்தனத்தையும் பாதுகாத்து வருகிற அல்லது அவற்றிற்கு காரணமாக இருக்கிற இச்சமூக கட்டமைப்பை மாற்றுவதற்கான புரட்சிகர நடைமுறையாக இருக்க வேண்டும்//

  ஆழமான அர்த்தங்களை அழகாக சொல்லும் வரிகள்...
  பொருள் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொள்ள சொல்லும் இன்றைய சமூக கட்டுமானத்தை தகர்த்தெரியும் திசையில் நம்மை அழைக்கும் வார்த்தைகள்.

  பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. இன்றைய சமூக கட்டுமானத்தை தகர்த்தெரியும் திசைநோக்கி பயணிப்போம்!

   Delete
 4. ஒரு செய்தியை பற்றி எழுதவில்லையே தோழரே! விலை? இப்போதெல்லாம் தமிழ் புத்தகங்கள் வாங்க முடியவில்லையே ! 1200 நூல்களை விற்க முடியாததைப் பற்றி சல்மா குறிப்பிட்டதை எழுதியிருந்தீர்கள்! அஞ்ஞாடி ரூ. 925/-; காவல்கோட்டம் ரூ. 650/-; தோல் ரூ.400/-. இந்தப் புத்தகங்களை நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன் வாங்க தான் முடியுமா? இதே போல் வீராப்பாய் விலை வைக்கும் காலச்சுவடுப் பக்கம் திரும்பிக்கூட பார்க்க முடியவில்லையே! அது ஏன்?

  முன்பு வாங்கும் விலையில் நூல்களை வெளியிட்ட கிழக்குப் பதிப்பகம் இப்போது மாறி விட்டதே ஏன்? . 2005 இல் ரூ.300 /- விற்ற “நிலமெல்லாம் ரத்தம்” மறுபதிப்பில் ரூ.475/- க்கு போனது ஏன்? . தரமில்லாத சாணிப் பேப்பரில் 90 பக்கங்கள் போட்டு ரூ.80 /- க்கும் , கொஞ்சம் நல்ல பேப்பரில் ரூ.1200/- க்கு பொன்னியின் செல்வனை விற்கும் ஆனந்த விகடன் பதிப்பகத்தை யார் கேட்பது?.

  இப்போது எழுதித் தள்ளும் எஸ்.ராமகிருஷ்ணன் நூல்களும் விண்ணை எட்ட முயலுகின்றன. இதையெல்லாம் யோசிக்காமல் வீட்டில் நூலகம் வை என்றால் எப்படி தோழரே! நல்ல நூல்களை வாங்குவதற்கு விலையை பார்க்கக் கூடாது தான் . ஆனால் கை பின்னுக்கு இழுத்துக் கொள்கிறதே! இந்த வேளையில் ஐயா " சக்தி கோவிந்தன்" அவர்களை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை! தமிழ் பதிப்பகங்கள் அவரின் சேவையை தயவு செய்து சிந்திக்க பார்க்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. நியாயமான கேள்விகள். இது குறித்தும் ஒரு குறிப்பிட்ட வகை நூல்கள் மட்டுமே அதிகம் விற்பனையாவதன் காரணங்கள் குறித்தும் தனிப்பதிவொன்றை எழுதலாம் எனக் கருதுகிறேன். முயற்சிக்கிறேன்.

   Delete
 5. நல்லதொரு பதிவு சகோ. ஆனால் புத்தகங்களை எளிதாகப் பெற்றுக் கொள்வதில் கூட சிரமம் உள்ளது. பள்ளி, கல்லூரிகள் போன்றவை முன்வந்து பல புத்தகங்களை வாங்கி தமது நூலகத்தில் இடுவதும் மிக அவசியம்.

  அதே போல தொழில்நுட்ப மாற்றத்துக்கு ஏற்றார் போல மின்னூல்களை ஒரே சமயத்தில் அறிமுகம் செய்யப்படல் வேண்டும், குறிப்பாக KINDLE போன்ற மின்-படிப்பானில் இந்த நூல்களை படிக்கும் வசதி இருந்தால், இன்னம் பல புத்தகங்கள் விற்பனையாகும் .. !!!

  ReplyDelete

There was an error in this gadget