Saturday, August 16, 2014

'தண்டச்சோறுகள்'!

15 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டோரில் 20 சதவீதம் பேர் வேலையில்லா இளைஞர்கள். குறிப்பாக சத்திஸ்கர், மத்தியப் பிரதேசம் மேற்க வங்கம், இராஜஸ்தான், ஹிமாசலப்பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களில் வேலையில்லா இளைஞர்கள் 25 சதவீதத்திற்கும் மேல் உள்ளனர். மோடியால் ‘வளர்ச்சி’ கண்ட குஜராத்திலும், தொழில் 'வளர்ச்சி' கண்ட மகாராஷ்டிராவிலும்கூட 12 சதவீத இளைஞர்களுக்கு வேலை இல்லை. இளம் வயது வட இந்தியர்களுக்கு அங்கே வாழ வழி இல்லாததால்தான் பெருமளவில் தமிழகத்தில் தஞ்சம் அடைகின்றனரோ!

பையன் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் வீட்டிலேயே இருந்தால் அவனை 'தண்டச்சோறு' என வசை பாடுகிறோம். நமது வீட்டில் மட்டுமல்ல, நாடெங்கிலும் 'தண்டச்சோறுகள்' பெருகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நமது வீட்டுப் பையன்கள் ஏன் 'தண்டச்சோறு'களானார்கள் என நாம் என்றைக்காவது சிந்தித்ததுண்டா? 

தரமான கல்வி கிடைக்காதது, வேலைவாய்ப்புகள் குறைவாக இருப்பதே வேலையின்மைக்கான முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன.

இந்தியாவில் 5 முதல் 14 வயது வரை உள்ள சுமார் 25 கோடி சிறுவர்கள் படிப்பதற்காக 14 இலட்சம் பள்ளிக்கூடங்களும், உயர் நிலை பள்ளி கல்விக்கு 71,000 மேனிலைப் பள்ளிகளும், 25,938 கல்லூரிகளும், 436 பல்கலைக் கழகங்களும் இருந்தும் தரமான கல்வி கிடைக்காததற்கு இதுவரை ஆண்ட மத்திய மாநில அரசுகள் காரணம் இல்லையா?

மோடியின் வாய்ச்சவடாலை உணர்ச்சிமிக்க பேச்சு என்றும் இந்தியாவை அவர் நிச்சயம் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வார் எனவும் உச்சி குளிரும் ஊடகவியலாளர்கள், அவர் ஆண்ட குஜராத்தில் 12 சதவீத இளைஞர்கள் வேலையின்றி திரிவதற்கு அதாவது 'தண்டச்சோறு'களானதற்கு மோடி காரணமில்லையா என ஏன் கேள்வி எழுப்புவதில்லை?

நாட்டின் வளர்ச்சிக்கு மோடி என்கிற தனிநபரை முன்னிலைப் படுத்துவதன் மூலம் பா.ஜ.க என்கிற கட்சி இருந்தாலும், மோடி இல்லாத கட்சியின் மூலம் வளர்ச்சி சாத்தியமில்லை என்றுதானே பொருள் கொள்ள முடிகிறது. மோடி இல்லாத பா.ஜ.கவை காலி பெருங்காய டப்பா என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தானோ என்னவோ, வட மாநிலங்களில் பா.ஜ.க பல ஆண்டு காலம் ஆட்சி நடத்தியும் தரமான கல்வியைக்கூட தரமுடியவில்லை! வேலை இன்மையைப் போக்க முடியவில்லை! 

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பை மையமாக வைத்து ஆட்சி நடத்துவதற்குப் பதிலாக மோடி என்கிற ஒற்றை நபரை முன்னிலைப்படுத்துவதன் மூலம் ஹிட்லர் - முசோலினி வழியில் இந்தியாவைக் கொண்டு செல்கிறார்களோ என்கிற அச்சம் எழத்தானே செய்கிறது. 

இங்கே சீமானும் வைகோவும் சீறுவதைப் போலத்தான் அங்கே மோடி சீறிக் கொண்டிருக்கிறார். வறுமையை விரட்ட “ஹரிபி ஹடாவோ” என இந்திராகாந்தி சீறியதை நாம் பார்க்கவில்லையா? வறுமை விரட்டப்பட்டதோ இல்லையோ காங்கிரசை மக்கள் விரட்டியதுதான் மிச்சம். 

இந்தியா சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் என்ன, ஆராயிரம் ஆண்டுகள் ஆனாலும் சீறுவோர் சீறிக் கொண்டுதான் இருப்பார்கள். மக்கள் என்னவோ சீந்துவாறின்றிதான் கிடப்பார்கள். இதுதான் இந்திய ஜனநாயகத்தின் மகத்துவம்.

(குறிப்பு: புள்ளி விவர ஆதாரம்: (THE HINDU, 15.08.2014, Chennai)

1 comment:

  1. மோடி என்கிற ஒற்றை நபரை முன்னிலைப்படுத்துவதன் மூலம் ஹிட்லர் - முசோலினி வழியில் இந்தியாவைக் கொண்டு செல்கிறார்களோ என்கிற அச்சம் எழத்தானே செய்கிறது. ---உண்மையும் அதாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete