Friday, August 8, 2014

வருண பகவானை மீட்க விரைந்துள்ள வானரப்படைகள்!

எங்கே வீடு?

“இந்தியாவின் நகர்ப்புறங்களில் 1.88 கோடி கும்பங்களுக்கு வீடுகள் இல்லை. அதாவது நகர்ப்புறங்களில் சுமார் 9.4 கோடி மக்கள் விடு இல்லாமல் தவிக்கின்றனர். 

தமிழ் நாட்டின் நகர்ப்புறங்களில் 12 லட்சம் குடும்பத்தினர் வீடின்றி தவிப்பு; அதாவது தமிழ் நாட்டின் நகர்ப்புறங்களில் சுமார் 60 லட்சம் பேர் 'பிளாட்பார' வாசிகள். 

அதே போல குஜராத்தின் நகர்ப்புறங்களில் 9 லட்சம் குடும்பத்தினர் வீடின்றி தவிப்பு; அதாவது குஜராத்தின் நகர்ப்புறங்களில் 45 லட்சம் பேர் 'பிளாட்பாரவாசிகள்'”.

சில குச்சிகளை மட்டும் நட்டு அதன் மேலே ஓலை / கீற்றுகளைப் போட்டு கீழே ஒண்டி வாழும் கோடிக்கணக்கான கிராமப்புற / பழங்குடி மக்கள் எல்லாம் சொந்த வீட்டில் வாழும் ‘லேண்ட்லார்டுகள்’ என்பதால் அவர்கள் இந்தப்புள்ளி விவரக் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை போலும். 




எனினும் பரந்து விரிந்த கானகங்களில் பரண்களும், பண்டாரக்குடில்களும் விரைவில் அமைக்கப்பட உள்ளதால், இனி வீடற்றவர்கள் அங்கே குடியேறி பஜகோவிந்தம் பாடி ஆனந்தமாய் வாழ வழி பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்கே தண்ணீர்?

“நாட்டில் நகர்ப்புறங்களில் வசிக்கும் 71 சதவீத வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு உள்ளது. அதாவது 39 சதவீத வீடுகளில் வசிப்போர் மதிவண்டிகளில் குடங்களைக் கட்டிக் கொண்டு தண்ணீருக்காக தெருத்தெருவாய் அலைந்து கொண்டுள்ளனர்”.

கோடைகாலங்களில் தண்ணீரைத்தேடி யானைகளும், மான்களும் காடுகளை விட்டு வெளியேறி, ஏரி குளங்களை நோக்கி படையெடுப்பதைப் போல, தாகம் தீர்க்க தண்ணீரைத்தேடி தங்கள் ஊரைவிட்டு வெளியேறி காலிக்குடங்களுடன் அலைந்து திரியும் கோடிக்கணக்கான கிராமப்புற /  பழங்குடி ஏழை எளிய மக்கள் இந்தக் கணக்கில் வரமாட்டார்களோ!



எனினும் எல்நினோ அரக்கனை வதம் செய்து வருண பகவானை மீட்பதற்காக வானரப்படைகள் இந்தியப் பெருங்கடல் நோக்கி விரைந்துள்ளதால் இனி குழாய் இணைப்பின்றியே குடிநீர்ப் பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்கே வெளிச்சம்?

“இந்தியாவில் எட்டு கோடி வீடுகளுக்கு மின் வசதி இல்லை. அதாவது சுமார் 40 கோடி பேர் இருளில் வாழ்கின்றனர்”.




வருகிற  ஐந்து ஆண்டு காலத்திற்கு நடுவானில் நங்கூரமடிக்கக்கோரி சூரியபகவானை கேட்டுக்கொள்வதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் இதன் மூலம் இந்தியாவின் இருள் விரைவில் நீங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment