Saturday, May 2, 2015

அருந்ததிராயும் அம்பேத்கர் சுடரும்!

“மிக ஆழமாகவும் வலுவாகவும் மக்களிடையே ஊடுருவியுள்ள சாதி அமைப்புக்கு எதிராக ஈவிரக்கமின்றிப் போராட வேண்டிய தருணம் இது. மக்கள் அரசியல் ரீதியாக ஒன்றுபட்டுவிடக்கூடாது என்பதற்காக சாதியப் பாகுபாடுகள் திட்டமிட்டே உருவாக்கப்பட்டுள்ளன.

பார்ப்பனியம் - முதலாளித்துவம் - ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பினை வெளிக்கொணராமல் சாதியத்துக்கு எதிரான போராட்டம் ஒருபோதும் வெற்றி பெறமுடியாது.”

அருந்ததிராய் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் “அம்பேத்கர் சுடர்” விருது வழங்கும் விழாவில் அருந்ததிராய் அவர்கள் ஆற்றிய உரையின் மையக் கருத்து இது.

அருந்ததிராய் அவர்களின் பேச்சை நாம் எப்படி புரிந்து கொள்வது?

சூத்திரர்களையும் பஞ்சமர்களையும் ஏதுமற்றவர்களாகவும், சேவை செய்பவர்களாகவும் உருவாக்கியதில் பார்ப்பனியத்துக்கும் ஏழ்மைக்கும் தொடர்பிருக்கிறது.

சாதிப் படிநிலையில் ஒரு சில சாதிகளை தீண்டத்தகாதவர்களாக்கியதால் பார்ப்பனியத்துக்கும் தீண்டாமைக்கும் தொடர்பிருக்கிறது.

மக்களின் உழைப்பைச் சுரண்டுவதால் முதலாளித்துவத்துக்கும் ஏழ்மைக்கும் தொடர்பிருக்கிறது.

நாட்டு வளங்களையும் மக்களின் உழைப்பையும் சுரண்டுவதால் ஏகாதிபத்தியத்திற்க்கும் ஏழ்மைக்கும் தொடர்பிருக்கிறது.

மக்களை சாதி ரீதியாக கூறுபோட்டு அவர்களுக்கிடையே ஏற்றத் தாழ்வை உருவாக்கி அவர்கள்  ஒன்று சேரவிடாமல் தடுப்பதற்கு பார்ப்பனியம் பெரிதும் உதவுவதால் முதலாளிகளுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் பார்ப்பனியம் தேவைப்படுகிறது.

எனவே முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கும் பார்ப்பனியத்துக்கும் தொடர்பிருக்கிறது.

அதனால்தான் ”பார்ப்பனியம் - முதலாளித்துவம் - ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பினை வெளிக்கொணராமல் சாதியத்துக்கு எதிரான போராட்டம் ஒருபோதும் வெற்றி பெறமுடியாது.” என அருந்ததிராய் கூறுகிறார்.

அம்பேத்கர் பார்வையில் சமத்துவமின்மை

படிப்படியான முறையில் அமைந்துள்ள சமத்துவமின்மையை நிலைநாட்டும் கொள்கை மனுஸ்மிருமிதி முழுவதிலும் ஊருறுவி நிற்கிறது.

மனுவின் சமத்துவமின்மை கொள்கை இன்றைய சமூக வாழ்க்கையில் மிகவும் ஆழமாகப் பதிந்துள்ளது.

பார்ப்பனன் மேலானவன்; சூத்திரன் கீழானவன் என்கிற வர்ண பேதமும் அதைத் தொடர்ந்து நிறுவப்பட்டுள்ள இன்றைய சாதிய ஏற்றத்தாழ்வுகளும் சமத்துவமின்மை கொள்கைக்கு சான்றாக உள்ளன.

இதுதான் பார்ப்பனியம் என்கிறார் அம்பேத்கர். மக்களின் ஊனுக்குள்ளும் எலும்புக்குள்ளும் ஊருறுவி நிற்குமாறு புகுத்தி வைத்தப் படிப்படியான சமத்துவமற்ற முறை அநியாயத்தை தூக்கி எறிய முடியாமல் முடக்கி வைப்பதற்கே உதவியது; உதவுகிறது.

படிப்படியான சமத்துவமின்மை முறை அநியாயத்தை எதிர்த்துப் பொதுவான அதிருப்தி ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் பாதிக்கப்படுபவர்களிடையேயும் சமத்துவமின்மை இருப்பதால் அநியாயத்தை எதிர்த்து எல்லா வகுப்பினரும் பொதுவாக ஒன்று சேரும் வாய்ப்பு இல்லாமல் போகிறது.

பார்ப்பனியத்துக்கும் அதன் அநியாயங்களுக்கும் எதிராகப் புரட்சி எதுவும் நடக்காமல் போனதற்கான காரணங்களில் படிப்படியான சமத்துவமின்மை முறை ஒன்றாகும்.  (பார்க்க: பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி 7 பக்கங்கள்: 235-239)                                                                                                        
ஏழைகள் ஏன் ஒன்றுபட முடியவில்லை?

ஏழைகள் எங்கு அதிகமாக நிறைந்திருக்கிறார்கள்? கிராமங்களில் நிறைந்திருக்கிறார்கள். நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் நிறைந்திருக்கிறார்கள்.

இங்கெல்லாம் யார் ஏழைகளாக இருக்கிறார்கள்? படிநிலைச் சாதிகளில் கீழ் நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களே மிக அதிகமாக ஏழைகளாக உள்ளனர்.  அடுத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் கனிசமானவர்கள். அதற்கு அடுத்தபடியாக பிற்படுத்தப்பட்டவர்களில் ஒரு சிலர். உயர் சாதியினரில் மிகச் சொற்பமானோர் ஏழைகளாக உள்ளனர்.

ஏழைகள் அனைவருக்குமான பிரச்சனை பொதுவானதாக இருப்பினும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கூடுதலாக தீண்டாமைக் கொடுமையும் சேர்ந்துள்ளதால் அவர்களின் பிரச்சனை மிகவும் கொடூரமானது.

ஏழ்மைக்கும் தீண்டாமைக்கும் எதிரான போராட்டம் வெற்றி பெற வேண்டுமானால் இவர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கிடையில் சாதி அடிப்படையில் தனித்தனி அமைப்புகள், கட்சிகள். ஒரே சாதிக்குள்ளேயே பல்வேறு அமைப்புகள், கட்சிகள். மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் மத்தியிலும் இதே நிலைதான்.

பார்ப்பனர்களின் சொந்த நலனுக்காக – பிழைப்புக்காக பார்ப்பனியம் மக்களை சாதி ரீதியாக பிளவுபடுத்தி மக்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைத்தது; வைக்கிறது அதேபோல ஒரு சில பிழைப்புவாதிகள் தங்களின்  நலனுக்காக மக்களை தனித்தனி சாதி அமைப்புகளாக, சாதிக் கட்சிகளாக பிளவுபடுத்தி வைத்திருப்பதன் மூலம் பார்ப்பனியத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் சேவை செய்கின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

சமத்துவமின்மை கொள்கைதான் பார்ப்பனியம் என்பதையோ, அதை பார்ப்பனர்களே உருவாக்கினார்கள் என்பதையோ, அதைக் கட்டிக் காப்பதில் இன்றளவும் பார்ப்பனர்களே முன்னிலையில் உள்ளனர் என்பதையோ இந்தத் தலைவர்கள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அல்லது புரிந்து கொண்டிருந்தாலும் பார்ப்பனியத்துக்கு எதிரான போராட்டமாக அதை முன்னெடுப்பதில்லை.

எனவே ஏழ்மைக்கும் தீண்டாமைக்கும் எதிரான போராட்டம் என்பது ”பார்ப்பனியம் - முதலாளித்துவம் - ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பினை” மிகச் சரியாக புரிந்து கொண்டு போராடும் போதுதான் ஏழ்மையும் தீண்டாமையும் ஒழிக்கப்படும். அதற்குத் தேவை மார்க்சிய சித்தாந்தமும் அம்பேத்கர் மற்றும் பெரியாரின் கருத்துக்களும்தான்.

5 comments:

  1. எனக்கு ஒன்று தெளிவாகப் புரியவில்லை. நாளையே இந்தப் பார்ப்பனர்கள் மட்டும் ஜாதியத்தைக் கைவிடுவார்கள் என்று கொண்டால் கூட இன்ன பிற மேல் ஜாதியினர்கள் கைவிட மாட்டார்கள் அல்லவா? பார்ப்பனரல்லாத ஆதிக்க ஜாதிகள் தம்மை வர்ணாசிரமத்தின்படியோ பார்ப்பனியத்தின்படியோ உயர்ஜாதியாகக் கருதவில்லையே. தான்மேல் ஜாதி என்ற வெத்து நம்பிக்கையும், பொருளாதாரமும்தானே கருத வைக்கிறது.
    தற்போது ஆண்ட பரம்பரைக் கனவில் மிதக்கும் மேல் ஜாதிக்காரர்கள் தம்மை இனம் என்றே சொல்லிக் கொள்கின்றனர். திராவிட இயக்கம், தமிழ்த்தேசிய இயக்கம் ஆகியோரால் பயன்படுத்தப்பட்ட சொற்களையே இவர்களும் பயன்படுத்தி வருகின்றனர் "இனவெழுச்சிக்காக". தான் பார்ப்பனரின் கீழ் இருப்பதாக அவர்கள் நம்பவில்லை.
    எப்படி இன்னும் பார்ப்பனரையே வசைபாடுதல் தகும் ?

    ReplyDelete
    Replies
    1. இன்றைய சூழலில் பார்ப்பனர்களும் சாதியை கைவிடமாட்டார்கள். பிற உயர் சாதியினரும் சாதியை கைவிட மாட்டார்கள். ஏன் தாழ்த்தப்பட்டவர்களும்கூட சாதியை கைவிடப் போவதில்லை. மனுவின் வர்ணாசிரம - பார்ப்பனியப் கோட்பாட்டையோ அல்லது தான் பார்ப்பனரின் கீழ் இருப்பதாகவோ ஒருவன் உணரவில்லை என்றாலும்கூட தான் ஒரு உயர்சாதிக்காரன் என்கிற உணர்வு அவனிடையே ஒரு பண்பாடாக நிலை பெற்றுள்ளது. தனக்குக் கீழே ஒரு சாதி இருக்கிறது என்பதை அவன் தெரிந்தே - உணர்ந்தே இருக்கிறான். இந்த உணர்வு பெருமிதம் கலந்த உணர்வு. ஐயங்கார்-ஐயர் தொடங்கி அடுத்தடுத்தடுத்த ஒவ்வொரு சாதிக்காரனுக்கும் உள்ள உணர்வு இதுதான். அதனால்தான் உயர்சாதிக்காரன் ஒவ்வொருவனும் தன்னை சாதியோடு அடையாளப்படுத்திக் கொள்கிறான். தாழ்த்தப்பட்டவர்களைத் தவிர பிற அனைத்து சாதிகளுக்கும் இது பொருந்தும்.

      தாழ்த்தப்பட்டவன் தன்னை சாதியோடு அடையாளப்படுத்திக் கொள்வதை இழிவாகத்தான் கருதுகிறான். இட ஒதுக்கீடு கலுகை இருப்பதனாலேயே சாதி இழிவானது எனத் தெரிந்தும் தன்னை ஒரு சாதியோடு அடையாளப்படுத்திக் கொள்கிறான். இட ஒதுக்கீடு இல்லை என்றால் தாழ்த்தப்பட்டவன் தன்னை சாதியோடு அடையாளப்படுத்திக்கொள்ள விரும்ப மாட்டான். ஆனால் அவன் விரும்பவில்லை என்றாலும் பிற உயர் சாதியினர் ஒரு தாழ்த்தப்பட்டவனை ஒரு குறிப்பிட்ட சாதியாக அடையாளப்படுத்துவார்கள். இதைத்தான் பார்ப்பனியம் என்கிறோம்.

      ஒருவன் சாதியால் உயர்ந்தவன் அல்லது தாழ்ந்தவன் என்பதை பொருளாதாரம் தீர்மானிப்பதில்லை. தாழ்த்தப்பட்ட ஒருவன் பொருளாதாரத்திலோ அல்லது கல்வியிலோ உயர்ந்த நிலையில் இருந்தாலும்கூட அவன் தாழ்ந்த சாதிக்காரன்தான் என்கிற கருத்தாக்கம் பிற உயர்சாதிக்காரன் மனதிலிருந்து மறைந்துவிடுவதில்லை.

      நீங்கள் சொல்வது போல தற்போது சாதியை இனமாக அடையாளப்படுத்திக் கொள்வதும் நடக்கிறது. இனம் என்கிற சொல் சாதி என்கிற சொல்லுக்கு மாற்றாக கையாளப்படுவதன் நோக்கம் ‘நாங்கள் ஒரு தனி இனம்; நாங்கள் யாரையும் ஏற்றத்தாழ்வாகக் கருதவில்லை’ என்பதற்காக பயன்படுத்தப்படும் சொல்லாகவே நான் கருதுகிறேன். இனம் என்கிற சொல்லைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்களிடையே நிலவும் உயர்சாதி பெருமிதம் ஒன்றும் மறைந்துவிடப் போவதில்லை.

      பார்ப்பனியம் என்பது மேலிருந்த கீழ்வரை ஊடுருவியுள்ள உயர்சாதி ஆதிக்க மனப்பான்மை. பார்ப்பனியம் என்கிற கோட்பாட்டை – வாழ்க்கை முறையை கேள்வி எழுப்பினால் அது எப்படி பார்ப்பனரை வசைபாடுவதாக அமையும்?
      பார்ப்பனியம் வீழ்த்தப்பட வேண்டும். அதை யார் உயர்த்திப்பிடித்தாலும் அது ஐயர்-ஐயங்கார் உள்ளிட்ட பார்ப்பனர்களாயிருந்தாலும் சரி அல்லது பிற உயர்சாதியினராக இருந்தாலும் சரி அவர்களுக்கு எதிராகப் போராட வேண்டும். சாதி ஏற்றத்தாழ்வுக்கு எதிராக மட்டுமல்ல ஏழ்மையை ஒழிப்பதற்காககவும் நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும். அதற்குத் தேவை மார்ச்சியத் சித்தாந்தமும், பெரியார் – அம்பேத்கர் கருத்தியலும்தான் என்பதைத்தான் கட்டுரையில் வலியுறுத்தியுள்ளேன்.

      Delete
    2. பார்ப்பனர் எதிர்ப்புக்கும் பார்ப்பனிய எதிர்ப்புக்கும் உள்ள வேறுபாடு எனக்கு புரிகிறது. இப்போது பார்த்தீர்களானால், இரு பெரும் திராவிடக் கட்சிகளில் இருக்கும் பெருந்தலைகள் எல்லாம் அந்தந்த பகுதிகளில் இருக்கும் ஆதிக்க ஜாதிகளின் பிரதிநிதிகள். இவர்களுக்கு அரணாக இருப்பது திராவிடக் கட்சிகள். அதாவது அவர்களின் ஜாதி உணர்வைக் கண்டு கொள்வதில்லை. எனவே அரசியல் ரீதியாக இங்கே திராவிடமே ஜாதியத்தின் காவலனாக நிலைக்கிறது. திராவிடக் கட்சிகள் ஜாதிய ஒழிப்பைத் தனது கட்சிகளுக்குள்ளேயே நடத்திக் காட்டாமல் மெய்ட்டெய்ன் செய்கிறார்கள். அப்படி நடத்தினாலே அது பெரிய புரட்சியாகி விடுமல்லவா ? அப்படியிருக்க நாம் பார்ப்பன எதிர்ப்பு என்று கூறுவது இவர்களை எதிர்ப்பது போலாகாது அல்லவா ? என்பதுதான் எனது கேள்வி.

      Delete
    3. திராவிடக் கட்சிகள் மட்டுமல்ல பொதுவுடமை கட்சிகளைத் தவிர்த்து பிற அனைத்து வாக்கு சீட்டுக் கட்சிகளும் சாதியத்தின் காவலனாகத்தான் இருக்கிறார்கள். சாதிக் கட்சிகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. இவர்கள் யாரும் சாதி ஆதிக்கத்தைக்கூட எதிர்க்க ஒரு போதும் முன்வரமாட்டார்கள். அப்படி இருக்க இவர்கள் எப்படி சாதியை ஒழிக்க முன்வருவார்கள்? பார்ப்பன எதிர்ப்பு என்பது பார்ப்பனியத்தின் கூறுகளை யார் கடைபிடித்தாலும் அவர்களுக்கு எதிரான போராட்டமும் பார்ப்பன எதிர்ப்பில்தான் அடங்கும்.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete