Tuesday, April 28, 2015

டொக்குச் சாலைகளும் குவார்ட்டர் கடைகளும்!

பேருந்துகள், லாரிகள், வாடகைக் கார்கள், வேன்கள், ஆட்டோக்கள், சிறு லோடு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள், ஸ்பேர் பார்ட்ஸ் கடை உரிமையாளர்கள், மெக்கானிக் ஷாப் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இருசக்கர வாகன உரிமையாளர்கள் என வாகனம் தொடர்புடையவர்கள் அனைவரும் ஏப்ரல் 30 அன்று மோடி அரசுக்கு எதிராக அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
வாகனப் பதிவு, வாகனங்களுக்கான தகுதிச் சான்று (எப்.சி), வாகனங்களுக்கான சாலை வரி வசூல், ஓட்டுநர் உரிமம், பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட வாகனம் தொடர்பான செயல்பாடுகள் இதுவரை அந்தந்த மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
மாநில அரசுகளிடமிருக்கும் இந்த அதிகாரங்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டு தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதோடு தனியார் முதலாளிகள் இத்துறையில் நுழைவதற்கு வழிவகை செய்கிற நோக்கத்தோடு “சாலை பாதுகாப்பு மசோதா 2014” என்கிற சட்ட மசோதா ஒன்றை கொண்டு வருகிறது மோடி தலைமையிலான மத்திய அரசு. இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் என்ன நடக்கும்?
ஓட்டுநர் உரிமம் பெற எழுத்துத் தேர்வு. தேறினால் மட்டுமே ஓராண்டு கழித்து உரிமம் வழங்கப்படும்.
வாகனத் தயாரிப்பாளர்களே - அதாவது கார்பரேட் முதலாளிகளே - இனி வாகனப் பதிவை மேற்கொள்வார்கள்.

இருபது கோடி ரூபாயும் 15 ஏக்கர் நிலமும் வைத்திருப்பவர்கள் மட்டுமே இனி ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளை நடத்த முடியும். இவ்வளவு முதலீடு போடுபவன் பயிற்சிக் கட்டணம் எவ்வளவு வாங்குவான்? வண்டி ஓட்டியாவது பிழைக்கலாம் என எண்ணுவோருக்கு இனி ஆப்புதான்.

ஆட்டோ ஓட்டுநர் உரிமம் பெற தற்போது ஆகும் செலவு சுமார் ரூ.4000/= இனி அது 25000/= ரூபாயாக உயரும்.
ஒரு ஆட்டோவை பழுது பார்த்து தகுதிச் சான்று பெற தற்போது ஆகும் செலவு சுமார் ரூ.10000/= இனி அது 30000/= ரூபாயாக உயரும்.
வாகனங்களை இனி சாலை ஓர மெக்கானிக் கடைகளில் பழுது பார்த்தால் அது செல்லாது. அங்கீகரிக்கப்பட்ட வாகன உற்பத்தியாளர்களின் மெக்கானிக் ஷாப்புகளில் பழுது பார்த்தால் மட்டுமே வாகனங்களுக்கு சான்றளிக்கப்படும். வெளிப்படையாகச் சொன்னால் கார்பரேட் கம்பெனிகள் சான்றளித்தால் மட்டுமே உங்கள் வண்டி ஓடும். இல்லை என்றால் பேரீச்சம் பழம்தான்.
சிறு சிறு வாகன விதி மீறலுக்கான தண்டத் தொகை இனி பல மடங்கு உயரும்
ஒவ்வொறு விதி மீறலும் புள்ளி அடைப்படையில் கணக்கிடப்பட்டு 12 புள்ளிகள் பெறுபவர் ஓராண்டு சிறைக்குச் செல்ல வேண்டும். மீண்டும் 12 புள்ளிகள் பெற்றால் 5 ஆண்டு சிறை மட்டுமல்ல அவரது ஓட்டுநர் உரிமமும் காலியாகிவிடும். அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து வெளியே வந்தால் கார்பரேட் கம்பெனிகளில் வண்டி தொடைக்கலாம்.
ஆட்டோக்கள் மட்டுமல்ல இனி எந்த வாகனமும் இதிலிருந்து தப்ப முடியாது.
இரு சக்கர வாகனங்களுக்கும் இனி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தகுதிச் சான்று (எப்.சி).
இப்படி இன்னும் பலப்பல அம்சங்கள் “சாலை பாதுகாப்பு மசோதா 2014” ல். எல்லாமே கார்பரேட்டுகள் கொழுக்கவே!
மசோதாவின் அம்சங்கள் எல்லாம் நல்லாத்தானே இருக்கு. இது நடைமுறைக்கு வந்தால் விபத்துக்கள் நடக்காது என நீங்கள் நினைக்கலாம். டொக்குச் சாலைகளும் குவார்ட்டர் கடைகளும் இருக்கும் வரை உங்கள் உயிருக்கு மட்டுமல்ல ஓட்டுநர் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை. 
கார்பரேட்டுகள் இதை எல்லாம் சேவை நோக்கிலா செய்வான்? அவனுக்குத் தேவை பணம். அவன் பிடுங்கும் ஒவ்வொரு ரூபாயின் சுமையும் இறுதியில் பொது மக்களின் முதுகில்தான் ஏற்றப்படும்.

தொடர்புடைய பதிவு:

சாலை பயங்கரவாதம்! (Road Terrorism)

2 comments:

  1. I am unable to express in Tamil but would like to add a few lines. Indian Roads are horrible,no doubt about it but western roads and equvelont middle east roads minus booze do not stop the accidents.It is driving sense that will reduce the accidents with improved road infrastructure which is a dream to Indians.

    ReplyDelete
    Replies
    1. வட இந்தியாவை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் உள்ள சாலைகள் குறிப்பாக மாநில நெடுஞ்சாலைகள் ஓரளவுக்கு பரவாயில்லை என்றே சொல்லலாம். ஆனால் மற்ற சாலைகளைப் பொருத்தவரையில் இந்தியாவெங்கும் நிலைமை நீங்கள் சொன்னது போல பயங்கரமானவைகள்தான்.

      Delete