தொலைக் காட்சி விவாதங்களில்
கோலாகல சீனிவாசன், இராமசுப்பிரமணியன், ஷேசாத்திரி போன்றோர் பொருளாதார நிபுணர், வலதசாரி,
கல்வியாளர், பத்திரிக்கையாளர் என்கிற போர்வையில் பங்கேற்பதைப் பார்த்திருப்பீர்கள்.
இவர்கள் எல்லாம் பிறப்பால் பார்ப்பனர்களாக இருந்தாலும் அவர்களே பெருமைப்பட்டுக் கொள்ளும்
‘பிராமணர்’ என்ற பெயரில் பங்கேற்பதில்லை.
திராவிடர் கழக அருள்மொழி,
விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னியரசு, சுப.வீரபாண்டியன் போன்றவர்கள் விவாதத்தின் ஊடாக
பிராமணர்கள் குறித்து சொல்ல வரும் போது பார்ப்பனர் என்கிற சொல்லை பயன்படுத்துகிறார்கள்.
அப்பொழுது பார்ப்பன தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்பு வருகிறது.
“நீங்கள் எப்படி ஒரு குறிப்பிட்ட
சாதியை இழிவு படுத்திப் பேசலாம்?” எனக் குமுறுவார்கள். பார்ப்பனன் என்ற சொல்லை பயன்படுத்தினாலே
”ஜாதி துவேஷம்” என்பார்கள். இந்த ஜாதி துவேஷத்தை பெரியார் தொடங்கி வைத்து, அதைக்
கலைஞர் கருணாநிதி தூபம் போட்டு வளர்த்தார் என அவர்களை கரித்துக் கொட்டுகிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியில் உள்ள முக்கியத் தலைவர்கள் மறந்தும் பிராமணர்களை பார்ப்பனர் என்று விளிக்கமாட்டார்கள்.
அதனால்தானோ என்னவோ மார்க்சிஸ்டுகள் மீது பார்ப்பனர்களுக்கு ஒரு ‘தோழமைப்’ பார்வை உள்ளது
போலும்.
“அன்னாய்
வாழிவேண் டன்னை நம்மூர்ப்
பார்ப்பனக் குறுமகப்
போலத் தாமும்
குடுமித் தலைய மன்ற
நெடுமலை நாடன் ஊர்ந்த
மாவே” – (ஐங்குறுநூறு – 212),
‘பார்ப்பார் ஓதுக’
(ஐங்குறுநூறு – 4),
‘பார்ப்பனப் பாங்கன் கனவு மணம்’
(குறுந்தொகை – 156),
“மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடக்” -(சிலப்பதிகாரம்)
‘பிராமணரைக்’ குறிக்க பார்ப்பனர்
என்றே சங்க இலக்கிய நூல்களிலே பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஏன் பார்ப்பனர்கள் போற்றிப்
புகழும் ஆண்டாள் புகழ் “நாச்சியார் திருமொழி”யில்கூட
“நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி…. ” திருமொழி
(56)
என்றுதானே ஆண்டாளும் பாடியிருக்கிறாள்.
"தண்டச் சோறுண்ணும் பார்ப்பான்" என பாரதியே பாடியிருக்கும்
போது தற்காலத் தமிழர்கள் அச்சொல்லை பயன்படுத்தும் போது மட்டும் பார்ப்பனர்களுக்கு ஏன்
இத்தனை கடுங்கோபம்?
நிற்க! பார்ப்பனர் என்பது
சாதி அல்ல. பிழைப்புக்காக மந்திரம் ஓதுதலையும், யாகம் வளர்த்தலையும் தொழிலாகக் கொண்ட,
நான்கு வருணங்களில் மேல் வருணமாகச் சொல்லப்படும் பிராமணர் என்ற வருணத்தைக் குறிக்கும்
ஒரு தமிழ்ச் சொல்.
பார்ப்பனர்களில் பல்வேறு
உட்பிரிவுகளும், ஒவ்வொரு உட்பிரிவுக்குள்ளும் நூற்றுக்கணக்கான சாதிகள் உள்ளன.
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி 10 இல் 1215 பார்ப்பன சாதிகளின்
பட்டியலை பதிவு செய்துள்ளார்.
பாகவதர், திரிவேதி, பண்டிட்,
பட், ஜோஷி, பதக், தத்தா, ஜெட்லி, ஷோரி, மிஸ்ரா, சுக்லா, திவாரி, துபே, பதக், பாண்டே,
தீட்சிதர், வாஜ்பேயி இவை 1215 சாதிகளில் உள்ள ஒரு சில. இந்தப் பெயரில் முடியும்
காங்கிரஸ், பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர்களை நமக்குத் தெரியும்தானே. இந்தப் பட்டியலில்
ஐயர், ஐயங்கார் பற்றி எதுவும் காணவில்லை. தமிழகத்தில் உள்ள பார்ப்பனர்கள ரிக் வேதிகள்,
சாமவேதிகள், யஜூர் வேதிகள், அதர்வர்கள் என்றே வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அப்படியானால்
ஐயர், ஐயங்கார் எல்லாம் யார்?
ஊரான்
தொடர்புடைய பதிவுகள்
*பார்ப்பனர்களுக்கு பெரியார் மீது ஏன் கடுங்கோபம்? தீண்டாமையை புகுத்தியவன் மனு! அதை பரப்பியவன் பார்ப்பனன்! ..... தொடர்: 8
No comments:
Post a Comment