Wednesday, September 18, 2019

பொதுவுடைமையை நேசித்த பெரியார்!


பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளராகப் பார்த்த சமூகம் இன்று அவரை ஒரு மக்கள் தலைவராக பார்ப்பது மட்டுமல்ல அவரது தொண்டு இனியும் தேவை என 69 சதவிகித மக்கள் விரும்புவதாக ஒரு தொலைக்காட்சி கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது. எதனால் பெரியாரை பெரும்பாலான மக்கள் இன்று விரும்புகின்றனர்? மக்களிடையே பக்தி முத்தி விட்டது என்பதற்காகவா? மூடநம்பிக்கை அதிகரித்து விட்டது. அதிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என்பதற்காகவா? கடவுள் பக்தி கொண்ட மக்களும் ஏன் பெரியாரை நேசிக்கிறார்கள்?

பிறப்பின் அடிப்படையில் மக்களை இழிவு படுத்தும் பார்ப்பனியம் பெரியாருக்குப் பிடிக்காது. பார்ப்பனியத்தை கேள்விக்குள்ளாக்கி மக்களுக்கு சுயமரியாதை உணர்வை ஊட்டியதால் பெரியாரைப் பார்ப்பனர்களுக்குப் பிடிக்காது. தங்களின் சுயமரியாதைக்குக் குரல் கொடுத்ததால் மக்களுக்குப் பெரியாரைப் பிடிக்கிறது. காரணம் மிக எளிமையானதுதானே! பார்ப்பனர்கள் உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பனியமும், ஆர்.எஸ்..எஸின் கொள்கைகளும், பாரதிய ஜனதாக் கட்சியில் நடைமுறையும் வேறு வேறு அல்ல என்பதை மக்களுக்குப் புரிய வைத்தவர் மோடி. இன்று பெரியாரை மக்கள் நேசிக்க முக்கியக் காரணம் மோடி. இதற்காக மோடிக்கு நாம் நன்றி சொல்லியாக வேண்டும்.

பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர் சாதியினருக்கு, அதுவும் லட்ச லட்சமாய் சம்பாதிக்கும் மேட்டுக்குடி பார்ப்பனர்களுக்கு வேலை வாய்ப்பில் 10 சதவிகித இடஒதுக்கீடு திட்டம், வேலை தேடும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழை எளிய மக்களிடம் கோபத்தைக் கொண்டு வந்துள்ளது. பெரியார் இருந்திருந்தால் இதை அனுமதித்ருப்பாரா என்று மக்களை எண்ண வைத்துள்ளது.

படிப்பு வாசனையே இல்லாத கிராமத்து விவசாயி மகன் பள்ளிக்கூடத்தில் நுழைந்து ‘அ’ ‘ஆ’ வில் தட்டுத் தடுமாறி,  A, B, C, D  யில் விழுந்து எழுந்து, உயர் நிலை - மேல்நிலையை உற்சாகத்தோடு தாண்டி, அதன் பின் பட்டணம் சென்று பட்டயத்தையும் பட்டத்தையும் பெறும் போது நெஞ்சு நிமிர்த்திய காலம் இனி ஐந்திலும் எட்டிலும் வடிகட்டவிருப்பதால் நிகழ் காலம் கடந்த காலமாகிவிடுமோ என அஞ்சுகிறான். எட்டப்பர்களை எட்டி உதைக்க இன்று பெரியார் இல்லையே என ஏங்குகிறான் இளைஞன்.

விற்பனை வரியே கூடாது என அன்று குரல் கொடுத்த பெரியார் இன்று இருந்திருந்தால் ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பால் வாழ்விழந்த தொழிலாளி மோடியின் விலா எலும்பை தன் கைத்தடியால் பதம் பார்த்திருப்பாரே என எண்ணுகிறான்.

டெல்லி எருமைப்பாலை குடித்தவனெல்லாம் இங்கே பானி பூரியில் வயிற்றைக் கழுவும் போது, தாய்ப்பால் குடித்து தலைநிமிர்ந்த தமிழனை நாசமாக்க எத்தணிக்கும் நாக்பூர் நாதாரிகளை நார் நாராய் கிழித்துத் தொங்கவிட அந்தக் கிழவனைத் தேடுகின்றான் தமிழன்.

ஹைட்ரோ கார்பன், மீதேன், ஷெல் கேஸ், எட்டு வழிச்சாலை, கூடங்குளம், ஸ்டெர்லைட் என அடுக்கடுக்காக தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் மோடி கும்பலைப் பொடிப் பொடியாக்க ஒரு பெரியார் தேவை எனத் தேடுகின்றான் எதிர்காலத்தை எதிர்நோக்கும் ஓர் எளிய தமிழக மகன்.

கல்வி வேலை வாய்ப்பில் பெண்களை இன்றளவும் இழிவுபடுத்தி அவர்களை போகப் பொருளாக சித்தரிக்கும் சாமியார் கூட்டத்தை இடித்துரைக்க அந்தக் கிழக்காளையைத் தேடுகிறாள் இக்கால இளம் பெண்.

வழிபாட்டு உரிமையில் பக்தனையே இழிவுபடுத்திய பார்ப்பனியத்துக்கு எதிராகக் குரல் கொடுத்ததால்தான் வழிபாட்டிடங்களில் இன்றும் பார்ப்பனர்களால் தான் இழிவுபடுத்தப்படும் போது அவன் தன் சுயமரியாதை காக்க பெரியாரைத் தேடுகிறான். அதனால்தான் பக்தனுக்கும் பெரியார் தலைவனாய் உயர்ந்து நிற்கிறார்.

சுடு காட்டுக்கு வழியில்லை, ஆணவப் படுகொலை என தொடரும் தீண்டாமைக்கு எதிராகக் களமாட, சாதி ஒழிய மீண்டும் பெரியார் வேண்டும் என விழையும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சு பெரியார்.

பொதுவுடைமை முறையைத் தவிர வேறு எந்த முறையாலும் மக்களின் துயரங்களைப் போக்க முடியாது என அறுதியிட்டு உறுதியாச் சொன்னதனால் உழைப்பாளர்களுக்கும் பெரியார் தலைவராய் உயர்ந்து நிற்கிறார்.  

ஆம். இன்று சனாதனிகளைத் தவிர, நம் அனைவருக்கும் பெரியார் தேவை. சாணியில் கேக் வெட்டி பெரியாரை இழிவுபடுத்துவதாகக் கருதி அவரது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது பார்ப்பனியத்துக்குr; சோரம் போன ஒரு கூட்டம். ஆனால் தமிழகமோ அணிதிரண்டு பெரியாரின் 141 ஆவது பிறந்த நாளை குதூகலத்தோடு கொண்டாடுகிறது.

இராணிப்பேட்டை ‘பெல்’ வளாகத்தில் செயல்படும் அம்பேத்கர்-பெரியார் வாசர் வட்டம், தனது 23 ஆவது சந்திப்பில் கரத்தரங்க நிகழ்வாக பெரியாரின் 141 ஆவது பிறந்த நாள் விழாவை 17.09.2019 அன்று மாலை இராணிப்பேட்டையில் மிகச் சிறப்பாகக் கொண்டாடியது.

தோழர் வே.இந்திரன் தலைமை ஏற்று கூட்டத்தை நெறிப்படுத்தினார். தோழர் ஜெயக்கொடி வரவேற்புரை நிகழ்த்தினார். பெண் விடுதலையும் பெரியாரும் என்ற தலைப்பில் உரையாற்றிய தோழர் கிருபா, பெண் விடுதலைக்கு பெரியார் முன்வைத்த கருத்துக்களையும் அவர் முன்னெடுத்த போராட்டங்களையும் தொகுத்துரைத்தார். பெரியார் சொன்னபடி ஒரு பெண்ணாக தன்னால் அவர் சொன்னதை கடைபிடிக்க முடியாத சமூகச் சூழலே இன்றும் நிலவுகிறது என்பதை சுட்டிக்காட்டி இதை மாற்றியமைக்க பெரியார் பாதையில் அனைவரும் பயணிக்க வேண்டும் என்பதை வலியுத்தினார்.

சாதி ஒழிப்பில் பெரியாரின் பங்கு என்ற தலைப்பில் பேசிய தோழர் கு.விஜயகுமார், பெரியார் மேற்கொண்ட பல்வேறு போராட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். குறிப்பாக சாதித் தீண்டாமைக்கு எதிராக பெரியாரின் போராட்டங்களை பட்டியலிட்டுப் பேசினார். பொதுவுடைமையை நேசித்த பெரியார் என்ற தலைப்பில் பேசிய தோழர் பொன்.சேகர் தனது உரையில் பொதுவுடைமையின் தேவை குறித்து பெரியார் பேசிய எழுத்துகள் மற்றும் உரைகளிலிருந்து பெரியார் பொதுவுடையை பெரிதும் நேசித்தவர் என்பதை நிறுவினார். இறுதியில் தோழர் ப.நீலகண்டன் நன்றி கூற கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது. பெல் ஊழியர்கள் குடும்பத்தோடு திரளாகக் கந்து கொண்டு சிறப்பித்தனர். 


















முன்னதாக 17.09.2019 அன்று காலை இராணிப்பேட்டை 'பெல்' நிறுவன வாயிலில் பெரியார் 141 ஆவது பிறந்த நாள் முக்கியத்துவம் குறித்த பிரசும் 'பெல்' ஊழியர்களிடம் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் சார்பில் விநியோகம் செய்யப்பட்டது.

'பெல்' இதர பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்கம் (OBC) சார்பில் 'பெல்' வாயிலில் பெரியாருக்கு மரியாதை செலுத்தினர்.







 
தொடர்புடைய பதிவுகள்

ஆளுமையை வளர்க்கும் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம்.

கம்யூனிஸ்ட் அறிக்கையின் பொருத்தப்பாடு குறித்து பெரியார்







 

No comments:

Post a Comment