Monday, September 27, 2021

ஐயகோ! என் செய்வேன்? கரோனா உன்னைக் கவ்விக் கொண்டதே!

ஐயகோ! என் செய்வேன்?
கரோனா உன்னைக் கவ்விக் கொண்டதே!

அன்று
‘பாலிடெக்னிக்’கில் படிக்கும் போது
‘சிபிடி’-யில் கூட்டம்
அதிகம் என்பதால்-நாம்
வேறு வேறு வகுப்புகளில்
பழக்கமில்லை அவ்வளவாக…
 
இறுதி ஆண்டு
தேர்வுகள் முடிந்து தேர்ச்சியானோம்
திருச்சி ‘பெல்’லுக்கு – ‘என்எம்ஆராய்’!
நீயும் நானும் லிங்கராஜூம்
கீழரண் சாலை ‘லிபர்ட்டி லாட்ஜி’ல்!
அடைக்கலமானோம்! நெருக்கமானோம்!
 
விடுமுறை நாட்களில்
நீராடச் செல்வோம்
கொடி நடையாக காவிரிக்கு!
நினைவிருக்கிறதா - 1979 ல் ஒரு நாள்
பொங்கி வந்த புதுப் புனலில் - நீ
சிக்கித் தடுமாறினாய் நீச்சல் தெரியாததால்-
உனை மீட்க நான் நெருங்கியபோது
உடும்புப்பிடியாய் பிடித்துக் கொண்டாய்-
நீந்த வழியின்றி
நானும் உன்னோடு.தத்தளித்த போது
நம் குடுமியைப் பிடித்து
இழுத்துப் போட்டான் ஒரு இளைஞன்
இல்லையேல்
அன்றே காவிரியில் நாம் கலந்திருப்போம்!
அன்று ஈருடல் ஓர் உயிரானோம்
அதனால்தானோ என்னவோ
என்னுள் நீ அமர்ந்து கொண்டாய்!
 
ஐயகோ! என் செய்வேன்?
கரோனா உன்னைக் கவ்விக் கொண்டதே!
என்னுள் வெறுமை.
ஏனோ உனைப் பார்க்க மனம் ஏங்குகிறது!
 
பொன்.சேகர்
13.06.2021

face book 

Monday, September 20, 2021

இராணிப்பேட்டை 'பெல்' நிறுவனத்தில் பெரியார் பிறந்த நாள் விழா!

பழையனக் கழிதலும் புதியனப் புகுதலும் தானாக நடந்து விடுவதில்லை. வரலாறு நெடுகிலும் மாறிவரும் சமூகச் சூழலில் எண்ணற்றத் தலைவர்களின் முன்முயற்சி மற்றும் உழைப்பினாலும்தான் சமூகத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பழமையால் பயன் பெற்று வந்த ஒரு கூட்டம் புதியவற்றைக் கொண்டுவரும் தலைவர்களை எள்ளி நகையாடுவது ஒன்றும் புதியதல்ல.  

பார்ப்பனிய எதிர்ப்பு, வேத மறுப்பு என்கிற திராவிடக் கருத்தியலை  உயர்த்திப் பிடித்து, சாதி மதத்தின் பெயரால் இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்ததனால்தான் பெரியாரை சமூகநீதிக் காவலராகத் தமிழகம் போற்றுகிறது; அவரது பிறந்தநாளை புதுப்பொலிவுடன் கொண்டாடுகிறது.

ஆரியத்துக்கு எதிரான திராவிடக் கருத்தியலை, தமிழனுக்கு எதிரான கருத்தியலாக மடை மாற்ற முயலும் சில அற்பர்களின் முகத்தில் கரியைப் பூசி உள்ளனர் தமிழக மக்கள். 

இந்த ஆண்டு செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாள் "சமூக நீதி நாள்" கொண்டாட்டத்தில் இராணிப்பேட்டை பெல் நிறுவனமே மூழ்கிக் திளைத்தது. மாறுபட்ட கருத்து உள்ளவர்களைக் கூட தனக்கு மலர் தூவ வைத்து விட்டாரே! அதனால்தானோ என்னவோ அவர் மேலும் மேலும் ஆழமாய்... நம் இதயங்களில்........!

இராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறுவனத்தின் (BHEL) வாயிலில் 17.09.2021 அன்று காலை 7.00 மணி அளவில் நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் விழாவில் இதர பிற்படுத்தப்பட்டோர் நலச் சங்க துணைப் பொதுச் செயலாளர் சுந்தர்ராஜன்  வரவேற்புரை நிகழ்த்த,  இதர பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத் தலைவர் தங்கமணி மற்றும் பட்டியலின பழங்குடி ஊழியர்கள் மேம்பாட்டு ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் தேவேந்திரன் ஆகிய இருவரும் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தனர்.

இதர பிற்படுத்தப்பட்டோர் நல சங்கப் பொதுச் செயலாளர் பிரகாசம் மற்றும் பட்டியலின பழங்குடி ஊழியர்கள் மேம்பாட்டு ஒன்றியத்தின் தலைவர் பாலாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதர பிற்படுத்தப்பட்டோர் நல சங்க துணைத் தலைவர் கார்த்திகேயன் சமூகநீதி நாள் உறுதிமொழி வாசிக்க விழாவில் பங்கேற்ற அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

BAPSU, BAPEU, Supervisors Union,  Executive Association, EGTU/INTUC, LPF, BMS, Welders Association, Crane Operators & Riggers Association, Physically Challenged Welfare Association உள்ளிட்ட சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பட்டியலின பழங்குடி ஊழியர்கள் மேம்பாட்டு ஒன்றியத்தின் அமைப்புச் செயலாளர் வாசுதேவன் விழாவினை நெறியாளுகை செய்ய, அதன் துணைத் தலைவர் ராஜா நன்றி உரையுடன் இனிதே நிறைவுற்றது. பெல், இராணிப்பேட்டை அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத் தோழர்களும் திரளாக விழாவில் பங்கேற்றனர். 

பணிக்குச் சென்ற பெல் ஊழியர்கள் பலரும் விழாவில் கலந்து கொண்டதோடு பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். விழா ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

விழாக் காட்சிகள்

























தொடர்புடைய பதிவுகள்

பொதுவுடைமையை நேசித்த பெரியார்!