இராஜராஜ சோழன் இந்துவா? சைவர்கள் இந்துக்களா? தமிழர்கள் இந்துக்களா? முருகன் இந்துக் கடவுளா? என்பன போன்ற கேள்விகளும், அதன் மீதான விவாதங்களும் இன்று சூடு பிடித்துள்ளன.
சிவன், கிருஷ்ணன், இராமன், பெருமாள், விநாயகர் உள்ளிட்ட கடவுளர்களை வணங்குவதனாலும், ஆயுத பூஜை, தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்றப் பண்டிகைகளைக் கொண்டாடுவதனாலும் ஒருவன் தன்னை இந்து என கருதிக் கொள்கிறான்.
மேற்கண்ட கடவுளர்கள் மற்றும் பண்டிகைகளுக்குப் பின்னால் உள்ள வரலாற்றுச் செய்திகளை பொது வெளியில் ஒருவர் முன்வைக்கும் போது, அது இந்து மதத்திற்கு எதிரானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்து மதம் குறித்த வரலாற்றுச் செய்திகளை அறியாத, இந்து மதக் கோட்பாடுகளைப் புரிந்து கொள்ளாத, ஒரு அப்பாவி அல்லது ஒரு சாதாரண இந்துக் குடிமகனுக்கு, இந்து மதம் குறித்த விமர்சனங்கள் எரிச்சலைத் தருகிறது. இந்து மதம் குறித்த விமர்சனங்களை, தன் மீதான தாக்குதலாகக் கருதிக் கொண்டு அவர் ஆவேசப்படுகிறார். இந்த ஆவேசத்தால், அவர் தன்னையும் அறியாமல், தன்னையே இழிவுபடுத்தும் பார்ப்பன சனாதான வாதிகளுக்கு வாலாக மட்டுமல்ல, தூணாகவும் மாறிவிடுகிறார்.
எனவே, இந்து மதம் குறித்த வரலாற்றுச் செய்திகளை, ஒரு ஆசிரியர், ஏதுமறியாத மாணவனுக்கு எடுத்துச் சொல்வதைப் போல பொறுமையாகவும், அதே நேரத்தில் நிதானமாகவும் புரிய வைக்க முயற்சிக்க வேண்டும். ஆதாரம் ஏதுமின்றி, 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்கிற பாணியில், வெறும் சொற்பிரயோகங்களால் மட்டும், இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்ட, மிகச் சாதாரண இந்துக்களுக்கு, பார்ப்பன சனாதனம் குறித்துப் புரிய வைக்க முடியாது.
அதற்கு இந்து மத வரலாற்றைக் கவனம் கொடுத்து தனியாகப் பயில வேண்டும்.
"நமக்குத் தெரிந்த கிறிஸ்தவ மதம், சீக்கிய மதம், இஸ்லாம் மதம், புத்த மதம், ஜைன மதம் ஆகிய இதர மதங்களைப் போன்ற ஒன்றல்ல இந்து மதம். ஏனென்றால்,
- இந்து மதத்தில் எல்லோருக்கும் பொதுவான கடவுள் இல்லை.
- ஏனைய மதங்களைப் போல் இந்துக்களுக்கு பொதுவான ஒரு குருவோ, நிறுவனரோ, உயர் அதிகாரிகயோ கிடையாது.
- எனவே, பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு மத நூலும் கிடையாது.
- பிற மதத்தினரைப் போல் ஒரே சமுதாயமாக ஒருங்கிணைந்து நிற்க அவர்களுக்கு ஒரு அமைப்பு கிடையாது.
- இந்துக்களின் மத்தியில் மத நம்பிக்கையைப் பாதுகாக்கவோ பயிற்றுவிக்கவோ பொதுவான ஒரு அமைப்பு கிடையாது.
- இந்துக்களனைவருக்கும் பொதுவான வழிபாட்டுத் தலங்களோ, வழிபாட்டு முறைகளோ கிடையாது.
- அவர்களின் மத்தியில், மதத்தைத் தலைமுறை தலைமுறைகளாகப் பயிற்றுவித்து வளர்ப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட குருமார்கள் (போதகர்கள்) கிடையாது.
- அவர்களுக்குப் பொதுவான சமுதாய அமைப்பு முறைகள் கிடையாது.
- இந்து மதத்திற்கு உண்மையில் ஒரு பெயரை கிடையாது என்பதுதான் வரலாற்று உண்மை. முஸ்லிம்களும், கிரேக்கர்களும் இந்தியாவுக்கு வந்த போது மக்களனைவரையும் இந்துக்கள் என்று அழைத்து, அவர்களுடைய மதம் எதுவாயினும் இந்து மதம் என்றனர். இந்தப் பெயர், அதற்கு முந்திய எந்த மத நூல்களிலும் கிடையாது.
பிறகு எப்படி இந்து மதத்தை பற்றி பயில முடியும்? அது எத்தககையது என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது?
- அதற்கு ஒரே வழி தான் இருக்கிறது. புராதன காலத்தில் இருந்து அதாவது ஏறத்தாழ 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துவங்கும் இந்த நாட்டு மக்களின் 'மதம்-பண்பாடு'களின் இன்று வரையிலான வரலாற்றை ஆராய்ந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
- அதற்காகத்தான் " History of Hindu imperialism" என்ற நூல் எழுதப்பட்டிருக்கிறது. இதைப்போல வேறு நூல் இருப்பதாகத் தெரியவில்லை."
"நான் நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் கருத்துகளே இந்த நூலில் கூறப்பட்டுள்ளன. நான் எழுதி வரும் நூலில் குறிப்பிட்டிருக்கும் பல கருத்துக்களை இந்த நூலிலும் காண்கிறேன். இந்த நூலை நான் மிகவும் விரும்பி வரவேற்கிறேன்"
என இந்நூல் குறித்து டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்கள் இந்து மதம் குறித்த ஏராளமான வரலாற்றுச் செய்திகளை தனது நூல்களில் தொகுத்துக் கொடுத்துள்ளார். பார்ப்பன சனாதனிகளை எதிர்கொள்வதற்கு மிக வலுவான ஆயுதங்களாக அம்பேத்கருடைய எழுத்துக்கள் பயன்படுகிறது என்பதை பலரும் அறிவர்.
எனவே, இந்து மதம் குறித்து அறிந்து கொள்ள தவத்திரு தர்மதீர்த்த அடிகளாரின் "இந்து மதக் கொடுங்கோன்மையின் வரலாறு" பெரிதும் பயன்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
மேலும், அம்பேத்கரும், தர்மதீர்த்த அடிகளாரும் மனிதனுக்கு மதமே வேண்டாம் என்று சொல்பவர்கள் அல்ல. இவர்கள் மட்டுமல்ல, புத்தர்-சித்தர்கள் தொடங்கி ஜோதிராவ் மகாத்மா புலே, வள்ளலார், நாராயண குரு, அய்யா வைகுண்டர் என எண்ணற்ற பெரியோர்கள், இந்து மதத்தின் அடி நாதமாக விளங்கும் பார்ப்பன சனாதன சாதியக் கொடுங்கோன்மைக்கு எதிராக பேசியும், போராடியும் வந்துள்ளனர். அவர்களுடைய கருத்துக்களை மக்களிடையே கொண்டு செல்வதன் மூலமாகத்தான், சனாதனத்தை வீழ்த்துவதற்கான போரில் வெகு மக்களை நம் பக்கம் ஈர்த்து நம்மால் வெல்ல முடியும்.
ஊரான்
No comments:
Post a Comment