08.01.2023 ஞாயிறு அன்று முற்பகலில் நந்தனம் ஒய் எம் சி ஏ வில் நடைபெற்று வரும் சென்னை புத்தகக் கண்காட்சி மற்றும் மாலையில் தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்ற மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் மாத இதழான சிந்தனையாளன் பொங்கல் மலர் வெளியீட்டு விழா என இரு வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன்.
காலை 11 மணிக்கு உள்ளே நுழைந்து வெறும் கழுகுப் பார்வையோடு பிற்பகல் 2 மணிக்கு வெளியே வந்த எனக்கு இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி ஒருபுறம் நேர்மறை எண்ணங்களையும் மற்றொருபுறம் எதிர்மறை எண்ணங்களையும் என்னுள் ஏற்படுத்தியது.
கட்டுக் கட்டாய் பொன்னியின் செல்வன்கள் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருந்தாலும், "இவர் தமிழர் இல்லையென்றால் வேறு யார்தான் தமிழர்?" என்ற வினாவோடு கைத்தடியில் வீரு நடை போடும் பெரியாரே இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியின் நாயகன்.
யாரெல்லாம் கருத்துக்களை விதைத்துச் சென்றார்களோ அவர்களே வரலாறு நெடுக தொடர்ந்து கடத்தப்படுவார்கள் என்பதை அரங்குகளில் முறுவலித்த அண்ணாவையும், ஆனந்தச் சிரிப்போடு கலைஞரையும் பார்த்தபோது எனக்குத் தோன்றியது. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும், அடிமைகளும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தாலும் அவர்கள் வரலாற்றில் அசை போடுவதற்கு அருகதையற்றவர்கள் என்பதை சொல்லாமலேயே உணர்த்தியது புத்தகக் கண்காட்சி.
மார்க்சியக் கோட்பாடும், அம்பேத்கர் மற்றும் பெரியாரின் சிந்தனைகளுமே இனி தேவை என்பதை ஆங்காங்கே விரவிக் கிடக்கும் முற்போக்கு நூல்கள் நமக்கு உணர்த்துகிறது.
வண்ணத் திரை நட்சத்திரங்களையும் மிஞ்சும் வகையில் பெரியார் மற்றும் அம்பேத்கரின் சிலைகள் பலரை வசீகரித்துக் கொண்டிருந்தன.
அல்லவற்றைப் புரிந்து கொண்டால்தான் நல்லவற்றை நாட முடியும் என்பது போல பிற்போக்கு நூல்களையும் படித்தால்தான் முற்போக்கு நூல்களின் தேவையை உணர முடியும். ஏதோ ஒரு வகையில் எல்லாமும் நமக்கு தேவைப்படுபவைதான்.
பொன்னியின் செல்வனைப் புரட்டிப் பார்க்க, வேள்பாரியை விரித்துப் படிக்க, சங்க இலக்கியங்களை ஊடுருவிப் பார்க்க, வேதங்களின் வேர்களைத் தேட, மூலதனத்தை முத்தமிட ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது, ஆயிரம் ஆயிரமாய் நோட்டுக் கட்டுகள் இருந்தால்தான் முடியும் போல.
வர்க்க உணர்வு உள்ளவனோ வறியவனாய் இருக்க, வாங்கிப் படிக்க வசதி உள்ளவனை மட்டும் நம்பினால் மாற்றம் வந்து விடுமா என்ற வினாதான் எஞ்சி நிற்கிறது.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என சமத்துவத்தை ஓரடியில் அடித்துச் சொன்னான் ஐயன் அன்று. பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்"?, ஒரு சில பக்கங்களில் மாமிகளைக்கூட மடைமாற்றுகிறது.
ஆனால் இன்று, பலர் பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளுகிறார்கள், அவர்களுக்குள்ளேயே அது முடங்கிப் போகிறது. வாழ்க்கைப் பாடுகளை, ஓரிரு பக்கங்களில், மக்கள் மொழியில் எளியோரிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அதுதான் இன்றைய தேவையும் கூட.
ஆயிரம் பக்கங்களைக் கொண்ட பகவத் கீதையை வெறும் 260 ரூபாய்க்கு நாக்பூரில் இருந்து கடத்தி வருகிறான் தமிழ்நாட்டுக்கு. 50 பதிப்புகளில் 5 லட்சம் பிரதிகளைக் கடந்து எதிரி ஊடுருவிக் கொண்டிருக்கிறான். ஆனால் நாமோ, நான்கு பதிப்புகளில் நாற்பதாயிரம் பிரதியைக் கடந்ததற்கே ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறோம். படைப்புலகம் இதை பரிசீலிக்கவில்லை என்றால் வரலாறு உங்களை மன்னிக்காது.
காரிருள் சூழ்ந்தால் வயல்கள் துளிர்க்கும், காவி இருள் சூழ்ந்தால் களைகள் முளைக்கும். காவி இருள் ஏற்கனவே தமிழகத்தை சூழ்ந்து விட்டது. ஆங்காங்கே களைகள் முளைத்து விட்டன. களைகளைப் பிடுங்கி எறியவில்லை என்றால், வயல்களில் ஒரு குண்டு மணிகூட மிஞ்சாது என்பதை உணர்த்தும் வகையில் அமைந்தது மார்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் "சிந்தனையாளன்" பொங்கல் மலர் வெளியீட்டு விழாவும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சனாதன எதிர்ப்புக் கருத்தரங்கமும்.
பேராசிரியர் சுப வீரபாண்டியன், பேராசிரியர் கருணானந்தம், தோழர் தியாகு, தோழர் வாலாசா வல்லவன் உள்ளிட்ட ஆளுமைகள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி ஒரு சில பாடங்களை உணர்த்தியது.
சனாதனம் என்ற பெயரில் பார்ப்பனியத்தை உயர்த்திப் பிடிக்கும் பாரதிய ஜனதாக் கட்சி உள்ளிட்ட சங்பரிவாரக் கும்பலை வீழ்த்த வேண்டுமானால், முற்போக்கு பேசுபவர்கள் வெகுமக்கள் இருக்கிற மேடைகளைப் பயன்படுத்த வேண்டும். திமுக மீது ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அங்குதான் பெருவாரியான வெகுமக்கள் இருக்கிறார்கள். இன்றைய அரசியல் சூழலில் திமுகவை ஒதுக்கி வைத்துவிட்டு சனாதனத்தை வீழ்த்துவது என்பது சாத்தியமா என்பதையும் யோசிக்க வேண்டும்.
குடிநீரில் மலம் கலக்கும் சிந்தனை கொண்ட மக்களை வைத்துக் கொண்டா காவிகளை வீழ்த்த முடியும்? சனாதன சிந்தனையிருந்தும், சனாதன வாழ்க்கை முறைகளிலிருந்தும் வெகுமக்களை மீட்டெடுக்காமல் சங்பரிவாரக் கூட்டத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது. முற்போக்கு பேசுபவர்கள் வெகு மக்களை நோக்கிச் செல்வதைத் தவிர இதற்கு வேறு வழி ஏதுமில்லை.
ஊரான்
தொடர்புடைய பதிவுகள்
No comments:
Post a Comment