காலை நேரமானால்
ஆண்கள் தேநீர் கடைகளை மொய்க்கின்றனர். பூக்கடைகளை பெண்கள் மொய்க்கின்றனர்.
குளிருக்கு இதமாய் குடிக்க வேண்டிய சுடுநீரில், தற்செயலாய் ஏதோ ஒரு இலை விழ, அது சீனாக்காரனால் தேநீராய் உருவெடுக்க, பசிக்காகவும், ருசிக்காகவும் குடிப்பது பழகிப்போனதால் அதுவே இன்று நமக்கும் வழக்கமாகிப் போனது.
மரங்களும் செடிகளும் கொடிகளும் பூப்பது இயற்கை. இயற்கையாய் பூத்துக் குலுங்கும் மலர்களின் வண்ணமும் வாடையும் சுண்டி இழுக்க, அவற்றைக் கொய்து, நுகர்ந்து இன்பமுருகிறான் மனிதன். பூக்களை நாடுவது ஒரு இன்ப நாட்டமே!
பூக்களின் மீதான இன்ப நாட்டத்தால், சங்க காலத்திலேயே பூக்களின் மீது வீழ்ந்தவன், இன்று வரை அதிலேயே புரண்டு கிடக்கிறான்.
மலரோடு மகளிரை ஒப்பிட்டு அன்று பாடத் தொடங்கியவன் இன்றும், ரோஜா மலரே, முல்லை மலர் மேலே, தங்கத் தாமரை
மலரே, கூடையில் என்ன பூ என பாடிக் கொண்டிருக்கிறான்.
மலர்கள் மீதான இன்ப
நாட்டத்தை மகளிர் மீதும் சாட்டினான். கூந்தலில் பூச்சூடவில்லை என்றால் அமங்களம் என்றான். அச்சம் கொண்ட மகளிர் பூக்களில் வீழ்ந்தனர். பூச்சூடுவதை வழக்கமாக்கிக் கொண்டனர். இதனால்தான் பூக்கடைகளைப் பெண்கள் மொய்க்கின்றனர்.
கடவுளின் பெயரால், புலன்களற்ற சிலைகளுக்கும், படங்களுக்கும், மாலையாகச் சூடியதோடு அன்றாடம் அர்ச்சனை செய்வதில் இன்ப நாட்டம் கொண்டான்.
இதில்
பகுத்தறிவாளர்களும் விதிவிலக்கல்ல. மறைந்த தலைவர்களின் சிலைகளுக்கும், படங்களுக்கும் மலர் தூவி, மலர் வளையம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செய்வதும் ஒருவகையில் இன்ப நாட்டமே.
விளையாட்டுப் போட்டிகளில், தேர்தல்களில், வெற்றி பெற்றோரை வரவேற்க, மலர் தூவி மாலை அணிவித்துப் பாராட்டுவதிலும் ஒளிந்திருப்பது
இன்ப நாட்டமே.
தங்களின் அபிமானத் தலைவர்களை வரவேற்க, அவர்கள் குற்ற வழக்குகளில் சிறை சென்று வந்தவர்களானாலும் சரி, வழிநெடுக வண்டிக்கணக்கில் மலர் தூவி வரவேற்கின்றனர்.
உயிரோடு உள்ளவனுக்கு மரியாதை செலுத்துவதற்கு மாலை அணிவிப்பது போல, இறந்தவனுக்கு மரியாதை செலுத்துவதாகக் கருதி பிணத்திற்கும் மலர்மாலை சாத்துகின்றனர்.
பிள்ளையார் சூழி போட்டால்தான் படிப்பு வரும் என்று பழக்கப்படுத்துவதைப்
போலத்தான் பூக்கள் பயன்படுத்துவதையும் பழக்கப்படுத்திவிட்டனர். மற்றபடி, மேலே
குறிப்பிட்ட வகைகளில் பூக்களைப் பயன்படுத்தவில்லை என்றால் எதுவும் கெட்டுவிடப்
போவதில்லை.
காரண காரியம் தெரிந்தோ தெரியாமலோ, நாம் கடைபிடிக்கிற அன்றாடப் பழக்க வழக்கங்களே பண்பாடாகிறது. அத்தகையப் பண்பாடே பாரம்பரியமாகிறது. இதில் ஏதாவது ஒன்றை கைவிட்டாலோ அல்லது புதிய பழக்க வழக்கங்களைக் கடைபிடித்தாலோ
‘ஐயோ! நமது
பாரம்பரியம் என்னாவது?’ என்று புலம்பத்
தொடங்குகின்றனர் பழம் பெருமை பேசுவோர்.
காலத்திற்கேற்ப பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் நிலவுகின்ற உற்பத்தி முறை - உற்பத்தி உறவுகளுக்கேற்ப மாறவேண்டுமே ஒழிய, பாரம்பரியம் என்ற பெயரால் கடைபிடிப்பது முரட்டுப் பிடிவாதமே. பிடிவாதம், அதிலும் முரட்டுப் பிடிவாதம் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைதானே?
உணவுக்கும் மருந்துக்குமான பயன்பாட்டைத் தவிர, தலையில் சூடுவது, சிலைகளுக்கும், படங்களுக்கும், பிணங்களுக்கும், மாலையாக, மலர்வளையமாகப் பயன்படுத்துவது உள்ளிட்ட நடைமுறைகள் அனைத்தும் பொருளற்றவை. மக்சீம் கார்க்கி சொல்வது போல அர்த்தமற்ற உழைப்பிலிருந்து மக்கள் விடுவிக்கப்படவில்லை என்றால் ஒரு சமூகம் வளர்ச்சி காண முடியாது. அர்த்தமற்ற உழைப்பிற்கு பூக்களின் உற்பத்தி ஒரு எடுப்பான சான்று.
பூக்களின் வண்ணங்கள் நம் கண்களில் மிளிரட்டும். அவற்றின் வாசம் நம் நாசிகளை வருடட்டும். விட்டு விடுங்கள் தாவரங்கள் பூக்கட்டும்.
ஊரான்