Thursday, October 31, 2024

லேவ் தல்ஸ்தோய்: சிறுகதைகளும் குறு நாவல்களும். தொடர்-1

ருசிய எழுத்தாளர் லேவ் தல்ஸ்தோய் (Leo Tolstoyஅவர்களின், “சிறுகதைகளும் குறுநாவல்களும்:

1984 ஆம் ஆண்டு ருஷ்யாவில் பதிப்பிக்கப்பட்ட இந்த நூலை, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி இருப்பேன். ஆனால் இதுவரை நான் படிக்கவில்லை. புத்தக அலமாரியை அவ்வப்பொழுது சரி செய்யும் பொழுது பலமுறை இந்த நூல் என் கைகளில் பட்டிருக்கிறது. ஆனால், நான்தான் விரித்துப் படித்ததில்லை. 

மார்க்சியம் மற்றும் அறிவியல் சார்ந்த நூல்களைப் படிப்பதில் இருந்த தேவை அல்லது ஆர்வம் நாவல்கள் மீது எனக்கு ஏற்பட்டதில்லை. நாளேடுகள், வார-மாத இதழ்களில்கூட நான் பெரும்பாலும் அரசியல் சார்ந்த கட்டுரைகளையே அதிக கவனம் கொடுத்து வாசிப்பதுண்டு. எனது இளமைப் பருவக் காலத்தில்
பெரும்பாலும் நொறுக்கு தீனி போலத்தான், ருசிக்காக தமிழ் நாவல்களைப் பலரும் நாடினர்.

நாவல்களை வாசிப்பதில் எனக்கு ஈர்ப்பு இல்லாமல் போனதற்கு இது கூடக் காரணமாக இருக்கலாம். 

இரசனைக்காகப் படைக்கப்படும்  கவிதைகள், நாவல்கள் கால ஓட்டத்தில் காணாமல் போய்விடுகின்றன. ஆனால், மக்களுக்காகப் படைக்கப்படும் கவிதைகள், நாவல்கள் உள்ளிட்ட இலக்கியப் படைப்புகள் மக்களின் மனங்களில் ஊடுருவி நிலைபெற்று விடுகின்றன. அத்தகைய இலக்கியங்களைப் படைக்கும் படைப்பாளிகளும் என்றென்றும் நினைவு கூறப்படுகின்றனர்.

"உலகம் தோன்றிய காலத்திலிருந்து பார்க்கும் பொழுது, மிகச் சிறந்த ஒரு டஜன் படைப்புக் கலைஞர்களின் பட்டியலில் இடம் பெறும் ருஷ்ய படைப்பாளி லேவ் தல்ஸ்தோயை" இதுவரை படிக்காமல் விட்டதை ஒரு குற்ற உணர்வாகவே நான் பார்க்கிறேன்.

எனவே, அலமாரியில் உறங்கிக் கிடந்த லேவ் தல்ஸ்தோய் (Leo Tolstoy) அவர்களின் "சிறுகதைகளும் குறுநாவல்களும்" நூலை‌ வாசிக்கத் தொடங்கினேன்.

லேவ் தல்ஸ்தோய் (1828-1910)  ரஷ்யாவின் ஒரு மாபெரும் படைப்பாளி. "இவரைப்போல வேறு யாரும், விரிவான ஆராய்ச்சி பரப்பைக் கொண்டிருக்கவில்லை,  மனிதனின் மனத்தை ஆழமாக ஊடுருவவில்லை" என்கிறார் திமீத்ரி பீசரேவ்.

தல்ஸ்தோய் பற்றிய முன்னுரை

"தல்ஸ்தோய் மரணமடைந்து விட்டால் என்னுடைய வாழ்க்கையில் மாபெரும் சூன்யம் ஏற்பட்டு விடும்.... அவர் இல்லை என்றால் நம்முடைய இலக்கியம் மேய்ப்பவன் இல்லாத ஆட்டுக்கிடையாகிவிடும்" என்கிறார் அந்தோன் சேகவ்.

"தல்ஸ்தோய் மரணம் அடைந்தால் முற்போக்கான அறிவுஜீவிகள் அனாதைகளாகி விடுவார்கள்" என்கிறார் துர்கேனெவ்.

"சமூக நடவடிக்கைகள் மூலமாகவே ஒரு எழுத்தாளனைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள முடியும்.  தல்ஸ்தோயைப் பொறுத்தவரை தன்னுடைய மொத்த வாழ்க்கையையும் மக்களிடையே கழித்துள்ளார்" அதனால்தான் அவர் ஒரு மாபெரும் படைப்பாளியாக மக்கள் மனங்களில் இடம் பிடித்துள்ளார்.

குளு குளு அறைகளில் குந்திக்கொண்டு, ஏடுகளை மட்டுமே புரட்டி இலக்கியம் படைக்கும் சிலர் இங்கு எனக்கு நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. 

"தல்ஸ்தோய் எப்பொழுதுமே அநீதியான முறையில் திரட்டப்பட்ட செல்வத்துக்கு எதிராக, சோம்பலுக்கும் ஒடுக்கு முறைக்கும் எதிராகப் போராடியவர். கிழடாகிப் போன நாகரிகத்தின் ஒன்று திரட்டப்பட்ட கோரங்களுக்கு எதிராகப் போராடியவர். தன் காலத்தில் ஆதிக்கம் செலுத்திய கருத்துக்களை எதிர்த்து நீந்தியவர்"

"தல்ஸ்தோயின் கண்கள், மக்களுடைய கடும் உழைப்பையும், தாங்க முடியாத துன்பங்களையும் பார்த்துக் கொண்டிருந்தன. மக்களுடைய வேதனைகளையும் துயரப் பாடல்களையும் அவருடைய காதுகள் கேட்டுக் கொண்டிருந்தன. அதனால்தான் அவர் இலக்கிய உலகில் பத்தரை மாற்றுப் பசும்பொன் போல ஒளி வீசிக் கொண்டிருக்கிறார்"

இந்தக் கூற்று மிகையல்ல. இதை அவரது படைப்புகளில் காண முடிகிறது.

அவருடைய எழுத்துக்கள் அவர் வாழ்ந்த காலத்தைப் பிரதிபலிக்கக் கூடியவை என்றாலும், இன்றும்கூட அதன் பொருத்தப்பாட்டை ஒரு வாசகன் என்ற முறையில் என்னால் உணர முடிகிறது. 

"அவருடைய மாபெரும் படைப்புகளில் சில குறைகள் இருந்தாலும், உண்மையைத் தேடுபவர்கள், அந்தக் குறைகளைக் கண்டு ஒதுங்க மாட்டார்கள். யாரும் உண்மையை பரிசுத்தமான வடிவத்தில் சந்திப்பதில்லை"

இந்த நூலில்,

இரண்டு ஹுஸ்ஸார்கள் 
குடும்ப மகிழ்ச்சி 
கெஜக்கோல் 
இவான் இலியீச்சின் மரணம்
கிரேய்ஸர் சொனாட்டா நடனத்திற்கு பிறகு

என ஆறு கதைகள் உள்ளன. இவை குறித்து அடுத்து பார்ப்போம். 

தொடரும்

ஊரான்

No comments:

Post a Comment