Monday, October 28, 2024

பண்டிகைக் கால வாழ்த்துகள்!

பண்டிகைக் காலங்கள் என்றாலே வாழ்த்துகளுக்குப் பஞ்சமில்லை. இதோ தீபாவளி வந்துவிட்டது. தலைவர்கள் எல்லாம் வரிசை கட்டிக் கொண்டு வாழ்த்துச் சொல்லுவார்கள். மக்களின் வாழ்க்கையில் இருள் அகன்று ஒளி பிறக்கட்டும் என்பார்கள். தீபாவளிக்கு முதல்வர் ஏன் வாழ்த்துச் சொல்வதில்லை என்று இதில் சிலருக்கு அங்கலாய்ப்பு வேறு.

கண்ணுக்குப் புலப்படும் மின்காந்த அலைகளைத்தான் ஒளி என்கிறார்கள். பூமியின் சுழற்சியில், வெளிச்சமும்-இருளும், பகலும்-இரவும் இயற்கையான நிகழ்வுகள்தானே?
 
இருளகன்று ஒளிவீச வேண்டும் என்று வாழ்த்தும்போது, நாம் இருளைக் கெட்டதாக உருவகப்படுத்துகிறோம். இருள் இல்லையேல் உலகு இல்லையே? எனவே, இருளை இழிவாக உருவகப்படுத்துவது இயற்கைக்கு முரணானது அல்லவோ? வேண்டுமானால், வாழ்க்கை வளம் பெறட்டும் என்று வாழ்த்தலாம். இப்படிகூட வாழ்த்துகிறவர்களும் இருக்கவே செய்கின்றனர்.


போதிய மழை இல்லை என்றாலும், அதீத மழை என்றாலும், உரம் பூச்சி மருந்துகளுக்கு அதிக செலவு ஆவதாலும், விளைவித்தப் பொருளுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்காததாலும் வேதனையில் உழலும் விவசாயிகளின் வாழ்க்கையைப் பண்டிகைகளால் மாற்ற முடியுமா?
 
கல்விக்கான கட்டமைப்பு வசதிகள், போதுமான திறமையான ஆசிரியர்களின் பற்றாக்குறை இருப்பதால்தானே மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய தரமானக் கல்வி மறுக்கப்பட்டு, அவர்கள் உயர் கல்விக்குச் செல்வதற்கோ வேலைக்குச் செல்வதற்கோ இயலாமல் போகிறது? பண்டிகைகளால் இந்த இயலாமையை எப்படிப் போக்க முடியும்?
 
இத்தகைய சூழ்நிலையிலும் விடாமுயற்சியோடு படித்து வெளியே வரும் இளைஞர்களுக்கு வேலைக்கான உத்தரவாதம் இருக்கிறதா? நிரந்தரமான வேலை கிடைக்கிறதா? கிடைக்கின்ற வேலையைப் பற்றிக் கொண்டு, ஓடாய் உழைக்கும் தொழிலாளர்களுக்கு
போதுமான ஊதியம் கிடைக்கிறதா? ஓய்வு கிடைக்கிறதா? இதற்கெல்லாம் பண்டிகைகளால் ஏதாவது செய்ய முடியுமா?
 
விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் போதிய வருவாய் இல்லாத போது இவர்களை நம்பி சிறுதொழில் செய்வோர், சிறு வியாபாரிகளின் வாழ்க்கை மட்டும்
பண்டிகைகளால் வளம் பெற்று விடுமா?
 
வேளாண்மை உள்ளிட்ட வேறு எந்த ஆக்கபூர்வமான தொழில்களையும் செய்ய வசதி வாய்ப்புகள் இல்லாத சூழலில்தானே, அழிவுக்கு வழிவகுக்கும் பட்டாசுத் தொழிலில் தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள் வாழ வழியற்ற சிவகாசி மக்கள்? பட்டாசுகள் எழுப்பும் ஓசையில் முதலாளிகளின் வாழ்க்கையில் வேண்டுமானால் சிவரஞ்சனி  தென்றலாய் வீசலாம், ஆனால், தொழிலாளர்களின் 
வாழ்க்கையில் சக்கரவாகம்தானே தவழுகிறது.
 
அலுவலகங்களில், பொதுவெளியில் அன்றாடம் அரங்கேறி வரும் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்களும் தீண்டல்களும் முடிவுக்கு வருமா? அல்லது வரதட்சணைக் கொடுமைகளால் வாடும் புதுமணப் பெண்களின் வாழ்க்கை மலர்ந்து விடுமா?
 
நேற்று வரை உழைத்துக் களைத்த முதியோர்கள், இனி இருக்கப் போகும் சொற்ப காலத்தில் குறைந்தபட்சம் நடமாடவாவது போதுமான உதவிகளோ ஓய்வூதியமோ கிடைத்து விடுமா?
 
சாதி மதப் பாகுபாடுகளால் ஒடுக்கக்கப்படும் மக்கள் அச்சமின்றி வாழ இந்தப் பண்டிகைகள் மக்களிடையே சகோதரத்துவத்தை வளர்த்துவிடுமா?
 
உதட்டளவில் உதிர்க்கப்படும் பண்டிகைக் கால வாழ்த்துகள் உள்ளத்தளவில் வேண்டுமானால் ஒரு நாள் உங்களை மகிழ்விக்கலாம். ஆனால் அன்றாடம் நாம் சந்திக்கும் நமது வாழ்க்கைப் பிரச்சினைகளை இந்தப் பண்டிகைகள் தீர்த்து வைத்ததாக இதுவரை ஏதாவது வரலாறு உண்டா?
 
உண்மையிலேயே நமது வாழ்க்கையில் ஒளி வீச வேண்டும் என்றால், வாழ்க்கை வளம் பெற வேண்டும் என்றால் விவசாயம் உள்ளிட்ட தொழில்கள் செய்வதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள், தரமான கல்வி, வேலைக்கான உத்தரவாதம், போதுமான ஊதியம், கட்டுக்குள் இருக்கும் விலைவாசி, அமைதியான சமூகச் சூழல் இவற்றை உத்தரவாதப் படுத்தும் ஒரு சமூக அமைப்பு இருந்தால்தானே முடியும்?
 
பண்டிகைகளால் பெரு முதலாளிகள், பெரு வியாபாரிகள் உள்ளிட்ட ஒரு சிலரின் வாழ்க்கை வளம் பெறலாமே ஒழிய, பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை இப்பொழுது இருப்பதைப் போலத்தான் தொடரும். இந்தத் தொடருக்கு முற்றுப்புள்ளி வைக்கப் புருவத்தை நெரிக்கலாமே?
 
ஊரான்

தொடர்புடைய பதிவுகள் 

No comments:

Post a Comment