"திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் அடுத்த கழிக்குளம்
கிராமத்தைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி வேலு மற்றும் அவரது சகோதரர் மூர்த்தி
இவர்கள் இருவரது வீட்டுக்கு இடையே உள்ள பொதுப் பாதையைப் பயன்படுத்துவதில் ஏற்பட்டப்
பகையால் வேலுவை அவரது அண்ணன் மகன் மணிகண்டன் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை
செய்திருக்கிறான்.”
“திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த
ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்கிற விவசாயிக்கு இரண்டு மனைவிகளாம். அவருக்கு 35 சென்ட் விவசாய நிலம் உள்ளதாம். விவசாயி
இறந்துவிட்டதால் அவரின் விவசாய நிலத்தை இரண்டாவது மனைவியின் இரண்டு மகன்களும் போலி
வாரிசுச் சான்றிதழ் பெற்று, அந்த நிலத்தை அபகரித்துக்
கொண்டதால், முதல் மனைவியின் வாரிசுகள் அந்தப் போலி வாரிசுச்
சான்றிதழை இரத்து செய்யக்கோரி சாலை மறியல் செய்து ஒரு பெண் தீக்குளிக்கவும்
முயற்சி செய்திருக்கிறாம்.”
மேற்கண்டவை 20.11.2024
அன்று இந்து தமிழ் திசை நாளேட்டில் வந்த செய்திகள்.
“இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புரா மந்தைவெளி பகுதியைச்
சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி, வேறு ஒரு நபருடனான தனது கூடா
நட்பிற்கு கணவனும் மகனும் இடையூறாக இருந்ததால் இருவரையும் கொலை செய்த
குற்றத்திற்காக இராணிப்பேட்டை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் அவளுக்கு இரட்டை
ஆயுள் தண்டனை விதித்துள்ளதாம்”.
“ஓசூர் நீதிமன்றத்தில் பணியாற்றும் ஆனந்தகுமார் என்கிற ஒரு குமாஸ்தாவின் மனைவியான
ஒரு பெண் வழக்கறிஞருக்கும், அதே நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப்
பணிபுரியும் கண்ணன் என்கிற வழக்கறிஞருக்கும் தவறான நட்பு இருந்ததால், நீதிமன்ற வாயிலேயே கண்ணனை அறிவாளால் வெட்டியுள்ளார் ஆனந்தகுமார். இந்தத் தாக்குதலைக் கண்டித்து ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.”
இவை 21.11.2024
அன்று இந்து தமிழ் திசை நாளேட்டில் வந்த செய்திகள்.
நாளேடுகளையும், தொலைக்காட்சி ஊடகங்களையும் புரட்டிப் பார்த்தால்
எங்கும் பொய்யும், பித்தலாட்டமும், ஏமாற்றும், சீரழிவும், ஒழுக்கக் கேடுகளும், அடிதடியும், கொலையும் என முடை நாற்றம் வீசுகிறது.
தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படும் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கு
ஏற்ப சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாதுதான். ஆனால், ஒழுக்கக்கேடர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதற்கு முன்பு ஓராயிரம் முறை
யோசிக்க வேண்டாமா?
ஒழுக்கம் உயிரைவிடச் சிறந்தது என்றான் வள்ளுவன். ஒழுக்கக்கேடர்கள் மட்டுமல்ல ஒழுக்ககேடர்களுக்குக் குரல் கொடுப்பவர்களும் உயிரற்றவர்கள் என்பது புரிந்தால் சரி!
ஊரான்
No comments:
Post a Comment