Tuesday, November 26, 2024

பூத் பங்களா!

நண்பரின் தாயார் உடல் நலமின்றி மருத்துவமனையில் இருப்பவரை சென்று பார்க்கவில்லையே என்ற குற்ற உணர்வு என்னை உறுத்திக் கொண்டே இருந்தது. இன்று எப்படியாவது சென்று பார்த்துவிடுவது என்ற எண்ணத்தோடு காலை ஒன்பது மணிக்குப் புறப்பட்டேன். போகும் வழியில் வழக்கமான மாத்திரையை வாங்கிக் கொள்ளலாம் என நான் பணியாற்றிய பொதுத்துறை நிறுவன மருத்துவமனையை நோக்கிப் பயணமானேன்.

நகரப் பேருந்தில் ஏழு ருபாய் கொடுத்து  அடுத்தப் பேருந்தைப் பிடிக்க முத்துக்கடையில் இறங்கியபோது, நான் ஏற வேண்டிய இடத்தில், பேருந்து நிலையத்திற்குள்ளேயே சிலர் கூடாரம் அமைத்திருந்தனர். கிட்டே சென்று பார்த்தால் அது நாம் தமிழர் தம்பிகளின் “இலவச பொது மருத்துவ முகாம்” கூடாரம் என்பதை அறிந்த போது, ஒருபக்கம் சீமானின் கூடாரமே காலியாகும் போது, இவர்கள் எதற்கு இங்கே கூடாரம் அமைத்து யாரைக் காப்பாற்றப் போகிறார்கள் என்று எண்ணியபோது என்னுள் எழுந்த நகைப்பைக் கட்டுப் படுத்திக் கொண்டு பேருந்துக்காகக் காத்திருந்தேன். 


பேருந்து நிற்க வேண்டிய இடத்தில் கூடாரம் இருந்ததால், பேருந்து உள்ளே வருமா, சாலையிலேயே ஜகா வாங்கி விடுமா என்ற குழப்பம் மனதில் ஓட, பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கூடாரம் போட காவல் துறை எப்படி அனுமதி கொடுத்தது என்ற ஐயங்கள் என்னுள் எழ, நிலையத்திற்கு வெளியே வந்து சாலையில் வரும் பேருந்துகளின் பெயர்ப் பலகைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  

லேசானத் தூறல் வேறு. கையில் குடையையும் கொண்டு வரவில்லை. முன்பு 'டானா' புயல் தமிழகத்தை ஒதுக்கிவிட்டு, எட்டியே சென்று விட்டதால் கடந்த ஒரு மாத காலமாக அடைமழை காலத்திலும் பிசிறுதான் தமிழ்நாட்டில் எஞ்சியிருந்தது.  ஊட்டியை உறைபனி சூழ சென்னைகூட மூடுபனியால் மூழ்கிப் போனது. அடைமழை காலத்தில் இது என்னடா காலக்கொடுமை என்று எண்ணுவதற்குள் கார்த்திகையும் வந்து விட்டது. 


தூறலைப் பார்த்தபோதுதான் வடகிழக்கு வங்கக்கடலில் தாழ்வுப் பகுதி நினைவுக்கு வர, கூகுளில் 'அக்குவெதரைத்' தட்டினேன். “வரும்.. ஆனா வராது” போலத் தோன்றினாலும், ஒரு வேளை தாழ்வுப் பகுதி புயலாக மாறினால் அதற்குப் பெங்கல் (Fengal) எனப் பெயரும் சூட்டிவிட்டார்கள் வானவியலாளர்கள். காதலர்களின் கடைக்கண் பார்வையிலேயே பிறக்கப் போகும் குழந்தைக்குப் பெயர் சூட்டலா என  எண்ணியவாறு பயணத்தைத் தொடர்ந்தேன். 

குடியிருப்பு வளாக பேருந்து நிறுத்தத்தில் ஓய்வு பெற்ற ஊழியர் நலச் சங்கத் தலைவரை சந்தித்து, ‘மிகவும் விலை குறைந்த வழக்கமான (regular medicine) மருந்து மாத்திரைகளைப் பெறுவதற்குக்கூட இரண்டாவது முறை வரச் சொல்கிறார்களே? எழுபதைத் தொடுபவர்களுக்கு இது தொந்தரவில்லையா”?  என முதியோர்களின் ஆதங்கத்தை அவரிடம் பகிர்ந்து கொண்டு மருத்துவமனையை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

மூப்பு அடைய அடைய குருதி ஓட்டக் குறைவால்  நடைகூட தடுமாறும் என்பதால் செருப்புக்குப் பதிலாய் 'கேன்வாஸ் ஷூ' அணிவதால்  சற்றே மிடுக்காய் நடக்கலாம் என்பதால் நானும் அவ்வாறே நடப்பது வழக்கம்.

குடியிருப்புக்குள் நுழைந்து வலப்பக்கம் சாலையில் நடந்தபோது இடப்பக்கம் எனது பிள்ளைகள் பயின்றத் தமிழ்வழி பள்ளிக்கூடம். “ஏன் நெற்றியில் திருநீறு இல்லாமல் வந்தாய்”, என எனது இளைய மகனை வகுப்புக்கு வெளியில் நிறுத்த , “ஏன்?” என்று நேரில் சென்று நான் பள்ளித்தாளாளரை வினவ, “திருநீறு வைப்பது ஒழுக்கத்திற்காக” என அவர் எனக்கு வகுப்பெடுக்க, “ஒழுக்கம் திருநீரால் வருவதில்லை, அது வளர்ப்பால் வருவது, அதை நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் படிப்பைப் பாருங்கள்” என நான் அவருக்கு வகுப்பெடுக்க, “இனி திருநீறு குறித்து எனது பிள்ளையிடம் கேட்கக்கூடாது” என நான் வலியுறுத்த, அதை அவரும் ஏற்க, அந்த நினைவுகள் என்னுள் வந்துபோக பள்ளியைக் கடந்து நடக்கலானேன்.

சாலையின் இருபுறங்களிலும் திருமண மண்டப வளாகத்திலும் மொத்தத்தில் குடியிருப்பு வளாகத்திலும் பருத்து ஓங்கி வளர்ந்திருக்கும் மரங்கள் நம்மை அமேசானுக்குள் அழைத்துச் சென்றுவிடும். 2018 இல் பணி ஓய்வு பெற்ற பொழுது நான் ஊன்றிய புங்கையும் இன்று அமேசானில் அடர்த்தி காட்டுகிறது. 

மூப்படைந்தவர்கள் மெல்ல மெல்ல மெலிந்து தேய்ந்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் வைத்த மரங்களோ மேலும் மேலும் வளர்ந்து செழுமை சேர்க்கின்றன. அதுபோல நாங்கள் உழைத்து வளர்த்த ஆலையிலும், அதிக அளவில் இளைஞர்களை சேர்த்தால், நாங்கள் நட்ட மரங்களைப் போல ஆலையும் செழித்தோங்குமே என்ற ஏக்கம் மட்டும் எப்பொழுதும் எல்லோரிடமும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆளும் ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையால் பொதுத்துறைகளின் வளர்ச்சி குன்றி, ஊழியர்களும் குறைந்து போனதால் குடியிருப்புகள் எல்லாம் செல்களின் மாளிகைகளாய் மாறி வருகின்றன. மருத்துவமனை செல்லும் சாலையின் இடப்புறம் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இரு 'டி' வகை உயர்தரக் குடியிருப்புகள், மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட்டதால் அவை பொலிவோடு காட்சி அளிக்கின்றன. வலப்புறம் உள்ள வீடுகள் படர்ந்து தவழும் மரக்கிளைகளின் பாரம் தாங்காமல் பெருமூச்சு விட்டவாறு பூத் பங்களாக்களாக மாறி வருகின்றன. 

நிரந்தரப் பணியாளர்கள் இருந்த இடத்தில் இன்று  மருத்துவர்கள் உள்ளிட்ட பெரும்பாலான ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்கள். ஒப்பந்த முறை என்பது, அதுவும் மருத்துவ மனையில், அது நோயை விலை கொடுத்து வாங்குவதற்கு ஒப்பாகும் என்ற எண்ணம் மனதில் ஓட, எனக்கான மாத்திரைகளைச் பெற்றுக் கொண்டு திரும்பும் போது ஓங்கி வளர்ந்த அந்த மரங்கள் என்னை மீண்டும் அமேசானுக்குள் அழைத்துச் சென்றன.

பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது படபடவென மழைத் தூறல். நண்பரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. நண்பர் இருப்பதோ தென் திசையில் நூறு கிலோ மீட்டருக்கு அப்பால். தாழ்வு மண்டலம், 'பெங்கலாக' மாறுமா என்ற அச்சம் என்னைக் கவ்விக் கொள்ள, செல்ல முடியவில்லையே என்ற உறுத்தல் மட்டும் நெஞ்சைக் குடைய, பிரிதொரு நாளில் நண்பரைக் காணச் செல்வதே உசிதம் எனக் கருதி வீடு திரும்பினேன்.

ஊரான்

No comments:

Post a Comment