நேற்றுவரை ஏதோ சமூக நீதிக்காக அதிமுக செயல்பட்டது போலவும் அது இன்று எடப்பாடி போன்றோரால் மதிப்பிழந்து போனதாகவும் சிலர் அங்கலாய்க்கின்றனர். சனாதனத்திற்கு எதிரான சிந்தனை கொண்டுள்ள ஒரு சில அதிமேதாவிகளும் இதில் அடங்குவர் என்பதுதான் மிகப்பெரிய அவலம்.
சனாதன எதிர்ப்பில் பார்ப்பனர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த கலைஞரை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே சோ போன்ற பார்ப்பன 'அறிவாளி'களால் உருவாக்கப்பட்டதுதான் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக. எம்ஜிஆரின் மறைவிற்குப் பிறகு ஜெயலலிதாவை முன்னிறுத்தி அதிமுகவை பாதுகாத்து வந்தனர். எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் மக்களை ஈர்க்கக்கூடிய கவர்ச்சிகரத் தலைவர்களாக இருந்ததால் பார்ப்பனர்களுக்கு அவர்கள் தேவைப்பட்டனர்.
பிண்டம்
ஏற்கனவே பெரியார், அண்ணா இருவரின் திராவிடக் கருத்தியல் மற்றும் சமூக நீதிக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டிருந்த தமிழக மக்களை நம்பவைப்பதற்காகவே திராவிடத்தையும் சமூக நீதியையும் அரிதாரமாக அதிமுக அன்று பூசிக் கொண்டது என்பதைத் தாண்டி அன்றிலிருந்து இன்று வரை திராவிடம் மற்றும் சமூக நீதிக்கும் அதிமுகவுக்கும் எள்ளவும் தொடர்பில்லை. ‘திராவிடம்னா என்னன்னு படிச்சவங்களதான் கேட்கணும்’ என்று எடப்பாடி போட்டுடைத்த அன்றே அதிமுகவின் திராவிடம் அம்பலத்தில் ஏறியது.
இன்றைய எடப்பாடி தலைமையிலான அதிமுகவோ கலைஞர் வழியிலான ஸ்டாலினை வீழ்த்துவதற்கான ஆற்றலை இழந்துவிட்டதால் அது இனிமேலும் பார்ப்பனர்களுக்குத் தேவைப்படாத ஒரு அழுகிய பிண்டம். எனவே, தேவையில்லாத இந்தப் பிண்டத்தை அறுத்தெறிந்து விட்டு அந்த இடத்தில் வேறு ஒரு பிண்டத்தை ஒட்ட வைப்பதற்கு பார்ப்பனர்கள் முயல்கின்றனர்.
தாது புஷ்டி லேகியம் எல்லாம் கொடுத்து வத்திப்போன ‘பாட்சா’வின் பிண்டத்தை ஒட்ட வைக்க முயன்றார்கள். ஆனால் அது துருத்தி நிற்க பல முறை முயன்று முயன்று கடைசியில் அறுந்தே விழுந்தது.
வேறு வழி இல்லாததால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை குறைப் பிரசவத்தால் நைந்து கிடக்கும் தங்களின் ‘டிமோ’ வின் பிண்டத்திற்கு நாலுகால பூசை செய்து வேதமந்திரம் ஓதி 'அரோகரா' போட்டு உசுப்பிக்க முயல்கின்றனர். அதற்காக அக்காவையும் ஆட்டுக்குட்டியையும் இறக்கி வேலி தாண்டியாவது மேய்ந்து வந்தால் நைந்துபோன பிண்டத்தில் குருதி ஏறும் என்று எதிர்பார்த்தனர். வேலி தாண்டி ஆடு மேய்ந்ததே ஒழிய பிண்டம் பிதுங்கியதாகத் தெரியவில்லை. அக்காவும் எம்பி எம்பிப் பார்த்தது. எதிரில் இருந்தவர்களுக்கோ 'போடிய'த்திற்கு மேலே பரட்டைதான் தெரிந்ததே ஒழிய பிண்டம் தெரியவில்லை.
குறைப் பிரசவம் குறைப் பிரசவம்தான். நோஞ்சான் நோஞ்சான்தான். நைந்து போனது நைந்து போனதுதான்.
இனி இதை நம்பிப் பயனில்லை என்பதனால் கொஞ்சம் தசைப் பிடிப்பான மினுமினுப்பான ஒரு பிண்டத்தைக் கண்டெடுத்து புறவாசல் வழியாக ஊட்டச்சத்தை எல்லாம் கொடுத்து உசுப்பேற்றி வருகின்றனர். ஊட்டம் அதிகம் கிடைப்பதனால் இந்த சதைப் பிண்டமும் ‘கில்லி’யாய் துள்ளாட்டம் போட்டு வருகிறது.
‘கில்லி’கள் திரையில் ஜொலிக்கலாம் ஆனால் நிஜத்தில்…?
பார்ப்போம்! 2026க்குப் பிறகு வேறு ஒரு பிண்டம் அவர்களுக்குத் தேவைப்படலாம்!
பிண்டங்கள் ஜாக்கிரதை!
ஊரான்