இந்தியப் பொதுவுடமையர்கள் சரியில்லை, அவர்கள் பார்ப்பனியத்தைக் கேள்விக்குள்ளாக்கவில்லை, எதிர்த்துப் போராடவில்லை, பார்ப்பனியத்தை ஒழிக்காமல் அதாவது சாதிய ஏற்றத்தாழ்வுகளை உள்ளடக்கிய இந்து மதத்தை ஒழிக்காமல் பொதுவுடமை சாத்தியமில்லை என்று சுயமரியாதை பேசுவோரும்,
சுயமரியாதைக்காரர்கள் இந்திய விடுதலையை ஆதரிப்பதற்குப் பதிலாக, ஆங்கிலேய அடிமை ஆட்சியை ஆதரித்தவர்கள், இவர்கள் பணக்காரர்களின் பாதுகாவலர்கள், சாதியும் மதமும் சமூக உற்பத்தி முறையின் மேல் கட்டுமானமாக இருப்பதால், இந்த மேல் கட்டுமானத்திற்கு அடிப்படையாக உள்ள அடித்தளத்தை மாற்றி அமைக்காமல் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க முடியாது என்று பொதுவுடமை பேசுவோரும் இரு முகாம்களாக நின்று,
ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டைகளை சுமத்தி அண்மைக் காலமாக சமூக ஊடகங்களில் சேற்றைவாரி இறைத்துக் கொள்கின்றனர்.
சாதியை ஒழிக்காமல் பொதுவுடமை சாத்தியமில்லை, அடித்தளத்தை மாற்றி அமைக்காமல் சாதியை ஒழிக்க முடியாது என்று இரு தரப்பினரும் எழுதி வருகின்றனர்.
பொதுவுடமைத் தலைவர்களையும் இயக்கங்களையும் சுயமரியாதைக்காரர்கள் எள்ளி நகையாடுவதையும், சுயமரியாதைத் தலைவர்களையும் இயக்கங்களையும் பொதுவுடமையர்கள் எள்ளி நகையாடுவதையும் இருதரப்புமே குதூகலத்தோடு செய்து வருகின்றனர்.
கடந்த காலங்களில், இருதரப்பிலும், இயக்கப் போக்கில் கொள்கைப் போதாமையும், நடைமுறையில் போதியத் தெளிவும் இல்லாமல்கூட இருந்திருக்கலாம். அவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு இப்போதைக்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு மாறாக ஒருவருக்கொருவர் முட்டுக்கட்டை போட்டு வருவது வேதனை அளிக்கிறது.
‘மார்க்சிய நெறியினராக இல்லாத பெரியாரே’ என்று பெரியாரையும், சுயமரியாதை இயக்கத்தையும் மார்க்சியத்துக்கு எதிராக நிறுத்த சுயமரியாதைக்காரர்களே முயற்சிப்பது பரிதாபத்திற்குரியது. இவர்களுக்கு பொதுவுடமை பிடிக்காமல் இருக்கலாம், அதற்காக பெரியாரை ஏன் இவர்கள் துணைக்கழைக்க வேண்டும்?
தங்களை அடிமைப்படுத்தும் பார்ப்பனியத்தை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்ற நிலையில், அந்த மக்கள் வெள்ளைக்காரனிடமிருந்து விடுதலை பெற யோக்கியத்தை உடையவர்கள் என்று எந்த மூடனாவது ஒப்புக்கொள்ள முடியுமா என்று கேள்வி எழுப்பி,
“இவற்றையெல்லாம் பார்த்துதான் இந்த நாட்டுக்கு வேண்டியது சமதர்மமும் பொதுவுடமைத் தத்துவமும் என்ற முடிவுக்கு வந்தேமேயொழிய வேறில்லை. பார்ப்பனர் அல்லாத மக்கள் அறிவோடு, மானத்தோடு நடந்து கொள்ள யோக்கியதை உடையவர்கள் என்றால், பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்து பார்ப்பனரல்லாதார் ஆதிக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பதில் அர்த்தமுண்டு; அப்படிக்கில்லாமல் பார்ப்பனீயத்தை அழித்து பார்ப்பன அடிமை கையில் ஆதிக்கத்தைக் கொடுப்பதற்குப் பாடுபடுவதென்றால், அது கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையை சொரிந்து கொள்வதேயாகும். என்றாலும் எல்லாக் காரியத்தையும் ஏககாலத்தில் செய்கின்ற முயற்சியில்தான் நாம் இருக்கிறோமேயொழிய அவற்றை அடியுடன் விட்டுவிடவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று 22.10.1933 இல் குடியரசு எழுதுகிறது. (பக்கம் 11, 12, 13).
பார்ப்பனியத்தை ஒழித்துக் கட்டி சமதர்மத்தை நிறுவுவதையும், சுரண்டலை ஒழித்துக் கட்டி பொதுவுடமை நிறுவுவதையும் ஏககாலத்தில் முன்னெடுக்க வேண்டும் என்பதைத்தான் சுயமரியாதை இயக்கம் வலியுறுத்தியது.
பொதுவுடமையைப் படைப்பதற்காக போராடும் அதே வேளையில், ஆர்.எஸ்.எஸ் அதிகாரம் கோலோச்சும் இன்றைய காலகட்டத்தில் பார்ப்பனியத்திற்கு எதிரானப் போராட்டத்தையும் முன்னெடுக்க வேண்டும் என்பதைப் பொதுவுடமையர்கள் புரிந்து கொண்டு அதற்கேற்பத் தங்களுடைய செயல் திட்டத்தை வகுத்துக் களமாடி வருகின்றனர். அதேபோல பார்ப்பனியத்திற்கு எதிராகப் போராடிவரும் சுயமரியாதைக்காரர்களும், இன்று நாளுக்கு நாள் பெருகி வரும் சுரண்டல் ஒடுக்கு முறைக்கு எதிராகவும் களமாடி ஒரு பொதுவுடமைச் சமூகத்தைப் படைக்க வேண்டும் என்கிற அவசியத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல் திட்டம் வகுத்து போராட வேண்டும் என்பதைத்தான் பொதுவுடமையர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மார்க்சையும், பெரியாரையும் எதிரெதிராக நிறுத்தும் போக்கு சமதர்மத்திற்கும், பொதுவுடமைக்கும் போடும் முட்டுக்கட்டை!
"பார்ப்பானை ஒழித்து பணக்காரன் கையில் ஆதிக்கத்தை வாங்கிக் கொடுக்க சுயமரியாதை இயக்கம் இருக்கிறது என்று சொல்லுவதானால் கஷ்டப்படும் மனித சமூகத்துக்கு இவ்வியக்கத்தினால் எவ்விதப் பலனும் ஏற்படாதென்பதே நமது அபிப்பிராயம்" (மேற்கண்ட குடியரசு கட்டுரை)
இதுதான் எனது அபிப்பிராயமும்கூட!
ஊரான்
.jpeg)
No comments:
Post a Comment