Saturday, November 22, 2025

சரித்திர நாளா? தரித்திர நாளா?

44 தொழிலாளர் நல சட்டங்கள் (laws), நான்கு சட்டத் தொகுப்புகளாக (codes) 2019 இல் மாற்றியமைக்கப்பட்டு, அதற்கான விதிகளும் (rules) 2020 வாக்கில் உருவாக்கப்பட்டு, 01.04.2021 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் சொல்லப்பட்டது. இதை முன்னறிந்து, இராணிப்பேட்டை BHEL/BAP எம்ளாயீஸ் யூனியன் 14.03.2021 அன்று மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர்களுக்கான பயிற்சி வகுப்பில் நான் ஆற்றிய உரையை அன்றே ஒரு தொடராக ஊரான் வலைப்பூவில் வெளியிட்டதோடு, அமேசானில் மென் நூலாகவும் வெளியிட்டிருந்தேன். 

“வேளாண் சட்டத்திருத்தங்களின் ஆபத்துகளைப் புரிந்து கொண்ட விவசாயிகள் தங்களது உயிரைக் கொடுத்து டெல்லியில் போராடி வருகின்றனர். விவசாயிகள் விழித்துக் கொண்டார்கள். அவர்களது போராட்டம் ஆட்சியாளர்களால் கண்டு கொள்ளப்படாமல்கூட போகலாம். ஆனால் வஞ்சிக்கப்படுகிற மக்கள் எப்படிப் போராட வேண்டும் என்பதை அவர்கள் உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வேளாண் சட்டங்களைவிடக் கொடிய தொழிலாளர்களுக்கான புதிய சட்டத் தொகுப்புகளின் ஆபத்தை இந்தியத் தொழிலாளி வர்க்கம் புரிந்து கொண்டு களமாடவில்லை என்றால் எதிர்காலம் உங்களை மன்னிக்காது” 

என்று அந்தத் தொடரின் இறுதியில் எழுதி இருந்தேன். 

வேளாண் திருத்தச் சட்டங்கள் வந்த உடனேயே தாமதம் செய்யாமல் விவசாயிகள் உடனுக்குடன் களத்தில் இறங்கிப் போராடி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வைத்தனர். 

சரித்திர நாளா? தரித்திர நாளா?

தொழிலாளர் நல சட்டத் திருத்தங்கள்  21.11.2025 முதல் நடைமுறைக்கு வந்து விட்டன. முதலாளிகளுக்கு இது சரித்திர நாள். பாடுபடுவோருக்கு இது தரித்திர நாள். 

"முதலாளிகள் தொழில் செய்வதை சுலபமாக்குகிற (ease of doing business) அதே வேளையில், தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் உரிய நேரத்தில் ஊதியப்பட்டுவாடா உள்ளிட்ட  பல்வேறு நலன்களை இந்தச் சட்டத் திருத்தங்கள் உறுதி செய்கின்றன.  மகளிர் ஆற்றல் (Nari Shakti) மற்றும் இளைஞர் ஆற்றல்கள் (Yuva Shakti) மூலம் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் (Viksit Bharat)  முடுக்கிவிட இச்சட்ட திருத்தங்கள் உதவும்" என கதை அளந்துள்ளார் மோடி.

தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் நவீன அடிமை முறையை தோற்றுவிப்பதோடு, கார்பரேட் பெரு முதலாளிகளின் நலன்களைப் பாதுகாக்கவே இச்சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதோடு, இச்சட்ட திருத்தங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோருவதோடு, அதற்காக சில போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளன. 

மோடி கொடுத்த ஐந்தாண்டு கால அவகாசத்தை தொழிலாளி வர்க்கம் வீணடித்துவிட்டு, தற்போது கண்டனக் குரல் எழுப்புவது ‘கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ என்பது போல் ஆகிவிட்டது. இப்பொழுதும்கூட ஒன்றும் குறைந்துவிடவில்லை. தொழிலாளி வர்க்கம் உணர்வு பெற்றால், எதிரிகள் எல்லாம் எம்மாத்திரம்?

மனுதர்ம சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தொழிலாளர் நல சட்டத்திருத்தங்களை திரும்பப் பெறவில்லை என்றால் வெகுவிரைவில் இந்தியா ஒரு ஆண்டான்-அடிமைச் சமூகமாக உருமாறி நிற்கும். சமூகத்தைப் பின்னோக்கி இழுப்பது சனாதனிகளின் வேலை என்றால் அதை உடைத்தெறிந்து தொழிலாளி வர்க்கத்தை நிமிரச் செய்வது நம் அனைவரின் கடமை அல்லவா? 

ஊரான்

குறிப்பு: சட்டத் திருத்தங்களின் சாதக-பாதக அம்சங்களை விரிவாகத் தெரிந்து கொள்ள, ஊரான் வலைப்பூவில் வந்த தொடர் கட்டுரைகளையும், அமேசானில் உள்ள மென்நூலையும் வாசிக்கவும்.

No comments:

Post a Comment