Monday, November 22, 2010

முகூர்த்த நாளில் மணம் முடித்தால்தான் பிள்ளை குட்டிகள் பிறக்குமா? ....தொடர்ச்சி-2

முகூர்த்த நாளில் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிவதையும் போக்கவரத்து நெரிசல் ஏற்படுவதையும் பெரும்பாலும் மக்கள் இயல்பாகத்தான் எடுத்துக் கொள்கிறார்கள். அனால், இதுவே மாநாடுகள்- பேரணிகள் என்றால் அது விலைவாசி உயர்வை எதிர்த்ததாய் இருந்தாலும் போக்குவரத்து நெரிசலுக்காக திட்டித் தீர்ப்பார்கள்.

முகூர்த்த நாள் என்றால் போக்குவரத்து நெரிசல் மட்டுமா? மாதத்தில் ஒருசில நாட்களே முகூர்த்த நாட்கள் என்பதால் பலருக்குத் திண்டாட்டம். சிலருக்கோ கொண்டாட்டம்.

முகூர்த்த நாள் என்றால் ஆட்டோ-வேன்களுக்கு கிராக்கி,  காய்கறிக்கு கிராக்கி, பாலுக்கு கிராக்கி, மல்லிகை-முல்லை மலர்களுக்கு கிராக்கி, இசைக்கச்சேரி நடத்துவோருக்கு கிராக்கி, மேடை ஜோடனைக் காரருக்கு கிராக்கி, சமையல் காரருக்கு கிராக்கி,  எல்லாவற்றிற்கும் மேலாக ஐயருக்கு கிராக்கி என எல்லாமே கிராக்கியாகி விடுகிறது. புதுமனை புகு விழா போன்ற வேறு சில விழாக்கள் முகூர்த்த நாளில் வந்து விட்டால் கிராக்கியெல்லாம்  படுகிராக்கியாகிவிடும்.

ஆறு மாதத்தில் வரன் பார்த்து முடித்தாலும் மண்டபத்திற்காக மேலும் ஆறு மாதம் காத்திருக்க வேண்டியுள்ளது.

இவ்வளவு கிராக்கிக்கு மத்தியிலும் முழம் முப்பது ரூபாயானாலும் மலர்கள் இல்லாமல்பெண்கள் மண்டபம் செல்லமாட்டார்கள் . மண்டபம் நடந்து செல்லும் தூரமே என்றாலும் சொந்தமாகக் கார் இருந்தால் காரிலும், இல்லை என்றால் காசானாலும் பரவாயில்லை என ஆட்டோவிலும் சென்று தங்கள் கௌரவத்தை நிலை நாட்டுவோரும் உண்டு.

இத்தனை நெருக்கடிகளுக்கும் என்ன காரணம்? முகூர்த்த நாள் பஞ்சம்தானே. இந்த ஆண்டு மொத்தமே 55 நாட்கள்தான் முகூர்த்த நாட்கள் என ஒரு பஞ்சாங்கம் வரையறுத்திருக்கிறது. ஆடியிலும், மார்கழியிலும் முகூர்த்தமே கிடையாது. இந்த ஒரு பஞ்சாங்கம் மட்டுமே 'அத்தாரிட்டி' கிடையாது. வேறு சில பஞ்சாங்கங்களில் ஒரு சில நாட்கள் மாறுபடலாம். அனால் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இதே அளவு எண்ணிக்கையில்தான் முகூர்த்த நாட்கள் தீர்மானிக்கப்படுகின்றன.

முகூர்த்த நாட்களில் எல்லா நேரத்திலும் திருமணம் செய்து விட முடியாது. காலை 4.30-6.00, 6.00-7.30, 7.30-9.00, 9.00-10.30 ஆகிய நேரங்களில் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும்.

பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ள முகூர்த்த நாள் மற்றும் நேரத்திலும்கூட ஒருவர் திருமணம் செய்து விட முடியாது. ஜாதகப் பொருத்தம் பார்த்த பிறகே தேதியும் நேரமும் தீர்மானிக்கப்படுகிறது. எனவே திருமண நாட்கள் இன்னும் சொற்ப நாட்களாகிவிடுகின்றன.

ஒரு திருமணத்திற்கு சாராசரியாக இரண்டு நாள் என பதிவு செய்தாலும் ஒரு மண்டபம் ஓர் ஆண்டில் 110 நாட்களுக்கு மட்டுமே பயன் படுத்தப்படும். பல லட்சங்களைப் போட்டு மண்டபம் கட்டியவர் 365 நாட்களில எடுக்க வேண்டிய வருமானத்தை 110 நாட்களில் எடுக்க வேண்டும் என்றால் வாடகை எகிராதா என்ன?

முகூர்த்த நாளையும் நேரத்தையும் தவிர்த்து வேரொரு சாதாரண நாளிலும், நேரத்திலும் ஏன் திருமணம் செய்யக் கூடாது? அவ்வாறு செய்தால் என்னவாகும்?


தொடரும்........




1 comment:

  1. நல்லக் கருத்துக்கள் யார் கேட்பார்கள்...? பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete