Showing posts with label முல்லை. Show all posts
Showing posts with label முல்லை. Show all posts

Tuesday, August 1, 2023

பாட்டி ஊருக்கு ஒரு பயணம்! "உயிரைப் பணயம் கேட்கும் முல்லைகள்!" தொடர் - 4

இது முல்லை அரும்புகள் முகிழ்க்கும் காலம். 
கணவன் மனைவி இருவரும் அதிகாலை மூன்று மணிக்கு தலைச்சுடரொளியை (head torch light) மாட்டிக் கொண்டு ஐந்து செண்ட் அளவுள்ள முல்லைத் தோட்டத்திற்குள் நுழைகிறார்கள். தலைச்சுடரொளியின் சிறு ஒளிவட்டத்தில் வெண்மையாய் உள்ள முல்லை அரும்புகளை மட்டும் மென்மையாய்ப் பறித்து மடியிலே போடுகிறார்கள். 

கடலைச் செடியை பிடுங்கும் போதும், கடலையைப் பறிக்கும் போதும் கரடு முரடாய் இயங்கும் விரல்கள், முல்லையைத் தொட்ட உடன் மென்மையாகி விடுகின்றன. இல்லையேல் அரும்புகள் நைந்து போகுமென காய்த்துப் போன விரல்கள்கூட உணர்கின்றனவே!? கனகாம்பரத்தைப் பறிக்கும் போது மேலும் மேலும் மென்மை தேவை. 

பார்வை சற்றே பிசகினால், மறுநாள் பறிக்க வேண்டிய முகிழ்க்கா அரும்புகளும் கையில் சிக்கிவிடும். என்னதான் உற்று உற்றுப் பார்த்து பறித்தாலும், சில முகிழ்த்த மொட்டுக்கள் இலைகளுக்கிடையில் ஒளிந்து கொள்ளும். அவைகள் அடுத்த நாள் பூத்துக் குலுங்கி வீணாய்ப் போகும். 

சில சமயம் கொடிய வஞ்சகர்கள்கட தோட்டத்திற்குள் வாசம் செய்ய முயல்வர். வஞ்சகர் இருக்கும் பக்கம் நீங்கள் காலடி எடுத்து வைத்தால் அவைகள் 'உஸ்! உஸ்!' என ஒலி எழுப்பும். எச்சரிக்கையாய் இல்லையெனில் அவை உங்களை போட்டுத் தள்ளும். 

குரல் எழுப்பி, கும்மிருட்டில் வயல் வரப்புகளுக்கிடையில் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே, கொடிய நாகனின் நஞ்சு உங்கள் கதையை முடித்திருக்கும். வசீகரிக்கும் வாசமும் வெண்மையும் நிறைந்த முல்லைக்குப் பின்னே உள்ள ஆபத்து யாருக்குத் தெரியும்? உயிரைப் பணயம் வைத்தல்லவா மங்கையரை மகிழ்விக்கிறான் விவசாயி.

இளைய மகளின் இரண்டு வயதுக் குழந்தையை வீட்டில் தூங்கவைத்துவிட்டு, கதவை சரியாகத் தாழிடாமல், தாயும் தாத்தா பாட்டியும் அதிகாலையில் தோட்டத்துக்குச் சென்றுவிட, கண்விழித்தக் குழந்தை இவர்களைத் தேடி தோட்டத்தை நோக்கிச் சென்று 'அம்மா' என குரல்  எழுப்ப, அதிர்ந்து போய் குழந்தையை அரவணத்தச் செய்தியை அவர்கள் சொல்லும் போது யாரால்தான் பதறாமல் இருக்க முடியும்? வரும் வழியில் புற்களும் புதர்களும் நிறைந்த வாய்க்கா வரப்புகளில் ஏதேனும் தீண்டியிருந்தால், வரப்பை ஒட்டி மதிர்ச்சுவரில்லா ஆழ்கிணற்றில் இடரி விழுந்திருந்தால்....? அப்பப்பா, நினைத்தாலே நமக்கே நெஞ்சம் பதறுகிறதே! பெற்ற தாய் என்ன பாடுபட்டிருப்பாள்?

கீழ் வானம் சிவக்கும் வேளையில்  மொட்டுக்கள் பறிப்பதை நிறுத்திவிட்டு பசு மாட்டைத் தட்டிக் கொடுத்து பால் கறக்க வேண்டும். கறந்த பாலை பால்காரிடம் சேர்த்து விட்டு மீண்டும் தோட்டத்திற்குச் சென்று மீதமுள்ள மொட்டுக்களை பறித்து வந்து, எடை போட்டு ஏழு மணிக்கெல்லாம் காட்டோர கூட்ரோட்டுக்கு ஓடோடிச் சென்று முல்லைப் பாக்கெட்டை பேருந்தில் சேர்க்க வேண்டும். அது கோணாகுட்டை கேட்டில் உள்ள இடைத்தரகரிடம் சென்று, பிறகு  அங்கிருந்து செங்கம் அல்லது திருவண்ணாமலை நகரில் உள்ள மொத்த பூ வியாபாரிகளைச் சென்றடையும். இறுதியாக அங்கே எடை பார்த்து பின் மாதம் கழித்து கணக்குப் பார்த்து காசு கொடுப்பார்கள். 

நிலம் உழுது, குழி தோண்டி, எருவிட்டு, செடி நட்டு, உரமிட்டு, நீர் பாய்ச்சி, களை எடுத்து, கவ்வாத்து பண்ணி, வறட்சி என்றால் குடம் சுமந்து நீர் ஊற்றி, பெருமழை என்றால் நீர் வடித்து பாதுகாத்து வளர்த்த முல்லையல்லவா? முல்லை முகிழ்த்தலுக்குள் எத்தனை உழைப்பு? உழைப்புக்கான பலன் கிடைக்கும் என  எல்லாவற்றையும் நம்பித்தான் விவசாயி உழைத்துக் கொண்டிருக்கிறான்.


குடும்பமே மூன்று மணி நேரம் இடுப்பொடிய, கால்கடுக்க நின்று பறித்தாலும், இரண்டு கிலோவைத் தாண்டுவதே சிரமம். வெளிச்சந்தையில் ஒரு கிலோ ஐநூறோ ஆயிரமோ விற்றாலும் மொத்த வியாபாரிகள் வைப்பதே விலை. இதில் விவசாயிக்கு நூறு இருநூறு கிடைத்தாலே பெரிது. கூலிக்கு ஆள் வைத்து பறித்தால் கிலோவுக்கு ரூபாய் ஐம்பதைக் கூலியாகத் தரவேண்டுமே என்பதால் இங்கேயும் குடும்பமே உழைக்கிறது, ஏதாச்சும் மிச்சப்படுத்த முடியாதா என்று! 

பூக்களுக்கு மட்டுமல்ல விவசாயிகள் விலைவிக்கின்ற பொருளுக்கு விலையைத் தீர்மானிக்கிற உரிமையும் அதை சந்தைப்படுத்துகிற வசதியும் கிடைக்காத வரை இடைத்தரகர்களும், மொத்த வியாபாரிகளும் கொழுப்பார்களே ஒழிய விவசாயிக்கு என்ன கிடைக்கப் போகிறது? 'உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது' என்று அதனால்தான் அன்றே சொல்லி வைத்தானோ?

பூ உற்பத்தி ஒன்றும் மனிதனுக்கு அத்தியாவசியமானதல்ல. அதில் செலுத்தப்படும் உழைப்பு அர்த்தமற்ற உழைப்புதான். அர்த்தமற்ற உழைப்பிலிருந்து மனித சமூகத்தை விடுவிக்காத வரை அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி நகர முடியாது என்பான் மக்சிம் கார்க்கி. என்ன செய்ய? இங்கு, இன்று, இந்தப் பூக்களாவது பாடுபடும் விவசாயப் பாட்டாளிகளின் அடிவயிற்றை ஈரப்படுத்துகிறதே என்று இப்போதைக்கு ஆறுதலடைவதைத் தவிர? 

சோப்பு, சீப்பு, கண்ணாடி, கைபேசி, சுண்ணாம்பு, சிமெண்ட், பெயிண்ட், சேலை, சுடிதார், செருப்பு, ஜட்டி, சட்டை, பேண்ட் என மக்கள் பயன்படுத்தும் பொருட்களைத் தயாரிக்கும் உற்பத்தியாளர்களே அதற்குரிய விலையை தீர்மானித்து சந்தைப்படுத்தும் உரிமை இருக்கும் பொழுது விவசாயிக்கு மட்டும், தான் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான விலையை நிர்ணயித்து சந்தைப்படுத்தும் உரிமை ஏன் இல்லை என்று கேட்க நாதி இல்லை. 

தொடரும்

ஊரான்


Sunday, July 30, 2023

பாட்டி ஊருக்கு ஒரு பயணம்! தொடர் - 1

அத்திமூரான் கொட்டாயிலிருந்து நான்கு கிலோமீட்டர் நடந்து சென்று நாகப்பாடியில் பேருந்தைப் பிடித்து பாட்டி ஊருக்குப் பயணித்த காலம் நினைவில் நிழலாட இந்த ஆண்டு, ஆடியிலே ஒரு நாள் வாலாஜாவிலிருந்து பாட்டி ஊருக்குப் பேருந்தில் பயணமானேன்.  

செங்கத்துக்கு முன்னால் செய்யாறு. அன்று ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கிடையாது, தரைப்பாலம் மட்டும்தான். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் மழைக்காலங்களில் பேருந்துகள் அக்கரைக்குச் செல்ல முடியாது என்பதால் இக்கரையிலேயே இறக்கி விடுவார்கள். அக்கரைக்குச் சென்றால்தான் அடுத்தப் பேருந்தைப் பிடித்து அய்வேல் (பாட்டி ஊரின் பெயர்) செல்ல முடியும். 

எனக்கு 7-8 வயது இருந்த போது ஒரு முறை, ஆற்றில் இடுப்பளவு தண்ணீர். அம்மா இடுப்பில் மூட்டை முடிச்சு, நானோ சிறுவன்.  நாலனாவோ எட்டனாவோ - சரியாக நினைவில்லை - பெற்றுக் கொண்டு எங்களை அக்கரையில் சேர்த்துவிட்டார் ஒருவர். ஆற்றைக் கடக்க இது ஒன்றுதான் அன்றைய வழிமுறை.

அம்மா கொண்டு வந்த சுமையை அவர் தனது வலது தோளில் வைத்துக் கொண்டார். இடது கையால் எனது இடுப்பைப் பிடித்துக் கொண்டார்.  எனது கால்களோ வெள்ளத்தில் மிதக்கின்றன. அவரது பிடி விலகினால் நான் ஆற்றில் அடித்துச் செல்லப்படுவது நிச்சயம் என்பதால் அவர் என்னை இறுக்குமாய்ப் பிடித்துக் கொள்ள, எனது தாய் அவருக்கு மேல்பக்கமாய் உடன் வர பாதுகாப்பாய் மறுகரை சேர்ந்தோம். 

அந்தக் காட்சி இன்றும் என்னுள் நேர்க்காட்சியாய் நிலவுகிறதே, ஏன்? அது ஒரு கண்டம் என்பதாலா? 

ஒரு முறை, எனக்கு நீச்சல்  தெரியாத காலத்தில் கிணற்றில் விழுந்து தத்தளித்த போது, என்னை எனது அக்கா காப்பாற்றிய  காட்சியும் அதே போல  இன்றும் என்னுள் நேர்க்காட்சியாய் நிலவுகிறது. மரண பயம்தான் எத்துனை வலுவானது?

இன்றோ நேர்த்தியான சாலைகள்; நெடுஞ்சாலைகளில் பாலங்களுக்குப் பஞ்சமில்லை. குறுக்கே வரும் சாலைகளைக் கடக்கவே மேம்பாலங்கள் கட்டும் காலமல்லவா இது! 

கோடை மழையால் ஈரமான நிலங்கள் சித்திரை-வைகாசியில் ஆழ உழுது பண்படுத்தப்பட்டு, ஆனியிலே விதை விதைத்து, முளைவிட்டு மண் பிளந்து செடியாய் மலர்ந்து, இதழ் விரித்து, ஆடியிலே பூக்கும் மானாவாரி கடலைச் செடிகளின் கண்கொள்ளாக் காட்சிகளை இன்று அதிகமாகக் காண முடியவில்லை. 

கடந்த நான்கு ஆண்டுகளாக நல்ல மழை பொழிவு, நீர் வளம் காரணமாக பயணித்த வழி நெடுகிலும் வேர்க்கடலைக்குப் பதிலாக, பரவலாக நெல்லும், ஆங்காங்கே கரும்பு-மரவள்ளி-முல்லைகளையேக் காண முடிந்தது. 

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

ஊர்ப் பயணம்! காலை நேர அனுபவம்!

ஊர்ப் பயணம்! கலைஞருக்கு 'ஓட்டு' விழுமா?

ஊர்ப் பயணம்! ஐயர் வந்தார். அள்ளிச் சென்றார்!

மார்கழி மழை: கர்ப்பத்தைக் கலைக்குமா? - தொடர் - 1

மார்கழி மழை: கர்ப்பத்தைக் கலைக்குமா? - தொடர் - 2

மார்கழி மழை: கர்ப்பத்தைக் கலைக்குமா? ... தொடர் - 3

மார்கழி மழை:கர்ப்பத்தைக் கலைக்குமா? ---இறுதிப் பகுதி

Friday, July 21, 2023

அடி வயிற்றை நனைக்கும் மென் பூக்கள்!

பருவம் பார்த்து 
நிலம் உழுது 
உரமிட்டு பண்படுத்தி 
பக்குவமாய் 
நாற்றூன்றி 
நீர்ப்பாய்ச்சி 
கோடை என்றால் 
குடம் சுமந்து- பெரு
மழை என்றால் 
நீர் வடித்து
செடிகளைக் காக்க 
மண் கிளறி 
களை எடுத்து 
நோய் கண்டால் மருந்தடித்து,

சில பூக்கும் தருவாயில் 
சில பூத்த பிறகு
முல்லை மல்லி 
கனகாம்பரம் ரோசாவென.....
சேவல்கள்கூட ஆழ்ந்துறங்கும்
பின்னிரவு அதிகாலை வேலைகளில்
கால் கிலோ ஒரு கிலோ 
பறிப்பதற்குள்
கால்கடுத்து முதுகொடிந்து
பெரும் உழைப்பை உள்வாங்கி
இருள் நீக்கும் நெற்றி 
டார்ச் லைட்டின்- சிறு 
ஒளிவட்டத்தில்
மாந்த விரல்களின் ஸ்பரிசத்தோடு
செடிகளை 
கொடிகளை விட்டேகி,




நாற்திக்கிலிருமிருந்து 
நகர் நோக்கி 
பக்குவமாய் 
பைகளில் பயணித்து
பூ மார்க்கெட்டில் சங்கமித்து -அங்கே எடைபார்த்து - பின் 
சில்லரையில் ஊர் பரப்பி,

சரங்களாய் 
மாலைகளாய் உருமாறி
பெண்களை 
பிணங்களை
படங்களை 
சிலைகளை.....
அலங்கரித்து - பின் 
காய்ந்து சருகாகி 
குப்பையில் குவியும் போது 
மனித உழைப்பு 
அர்த்தமற்றதாய் ஆகிறதே?
ஆதங்கம் ஒரு பக்கம்!
ஆனாலும் - இங்கே
பல வேளாண் குடிகளின் 
அடிவயிற்றை 
நனைக்கிறதே இம் மென் பூக்கள்
என்கிற தேறுதல் மறுபக்கம்!

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Monday, February 1, 2016

பசிக்குதான் உணவே தவிர பகட்டுக்கு அல்ல!

31.01.2016 ஞாயிறு அன்று நன்பகல் நகரப் பேருந்துக்காக நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள ஒரு கிராமப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். அருகாமை நகரிலிருந்து 12.45 மணிக்கு வரவேண்டிய நகரப் பேருந்து உரிய நேரத்தில் வரவில்லை. நான் செல்லுகின்ற அதே ஊருக்கு வரவேண்டிய நண்பர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாங்கள் செல்ல வேண்டிய இடத்தைக் குறிப்பிட்டு அங்கே சென்று விட்டீர்களா? என்றார்.

நான் எந்தப் பேருந்துக்காக காத்திருந்தேனோ அந்தப் பேருந்து -  நிலையத்திற்கு அரைமணி நேரம் தாமதமாக வந்ததாகவும் தற்போது அவர் அந்தப் பேருந்தில் உட்கார்ந்திருப்பதாகவும் பேருந்து சற்று நேரத்தில் புறப்பட்டுவிடும் என்றும் கூறினார்.

ஒரு பதினைந்து நிமிடத்தில் பேருந்து வந்தது. பேருந்தில் ஏறி எட்டு ரூபாய் கொடுத்து பயணச்சீட்டு பெற்றுக்கொண்டு பயணித்தேன். செல்ல வேண்டிய இடம் 14 கி.மீட்டர் தூரம்தான் என்றாலும் அரைமணி நெரம் ஆகிவிட்டது. தமிழகத்தின் தொலைதூர கிராமங்களுக்கு – அதாவது குக்கிராமங்களுக்கு – தமிழக போக்குவரத்துக் கழக பேருந்தில் பயணிப்பவர்களுக்குத் தெரியும் ஏன் இவ்வளவு நேரம் ஆகிறது என்று!

சமீபத்திய மழை தமிழகத்தை புரட்டிப் போட்டிருந்தாலும் நான் பயணித்த சாலையையொட்டி இருந்த பகுதிகளில் நெற்பயிர்கள் அரிதாக இருந்ததைக் கண்டு இப்பகுதியில் இயல்பைவிட குறைவான மழைதான் பெய்துள்ளது என்பதை புரிந்து கொண்டேன். ஆனாலும் மாந்தோப்புகள் பூக்கத்  தொடங்கியிருந்தன. தென்னைகள் புத்துயிர் பெற்றிருந்தன. இவைதான் இப்பகுதியில் முக்கிய விவசாயம் என்பது புரிந்தது. முல்லைக்குத் தேர் கொடுத்த மண் என்பதால் இங்கு மல்லிக்குக் குறைச்சல் இல்லை. சில இடங்களில் மங்கையரை மகிழ்வித்த மல்லிகைக் கட்டைகள் பூவிழந்து அடுப்படிக்குத் தயாராகிக் கொண்டிருந்தன.

பொதுவாக கிராமச் சாலைகளின் இருமருங்கிலும் கிராமத்திற்குள் நுழையும் இடங்களில் நரகல் அப்பியிருக்கும். ஆனால் இங்கு அப்படி எதுவும் இல்லை. மாறாக மிளகாய்ச் செடி நடுவதற்கு செப்பனிடப்பட்ட புழுதிக் கொல்லையைப் போல சுத்தமாய் காட்சியளித்தன சாலை ஓரங்கள்.  

நாங்கள் இறங்க வேண்டிய கிராமம் வந்தது. பேருந்தில் இருந்து இறங்கியபோது ஒரு சிலரை நிச்சயம் சந்திப்போம் என கருதி வந்தத் தலைகளைக் கண்டதில் அகமகிழ்ச்சி. நாங்கள் செல்ல வேண்டிய இடம் இன்னும் ஒரு கி.மீ தூரம் என்பதால் குறுக்குச் சாலையில் பாதங்களில் அம்மண்ணின் பொடி படிய நடந்தோம்.

மண்சாலை முடிந்து மீண்டும் தார்ச்சாலை. அதில் ஒரு அரை கி.மீ தூரம் நடந்தோம். அழுக்குச் சட்டைக்கு பழகிப்போன காளை ஒன்று என்முடன் வந்த உஜாலாவாய் வந்தவரை முட்ட முயன்ற போது காளைக்குச் சொந்தக்காரர் அதன் தாம்புக் கயிரை கெட்டியாய் இழுத்துப் பிடித்ததால் அவர் தப்பித்தார்.

இன்னும் குளிர் காலம் முடியவில்லை என்றாலும் உச்சி வெயில் உரைக்கத் தொடங்கியது. நாங்கள் செல்லும் இடம் குறித்த ஏக்கம் எம்மை ஆக்கிரமித்திருந்ததால் உச்சி வெயில்கூட உரைந்து போனது. கதிரவனின் உரைபனி எம் நெஞ்சை ஈரமாக்கியதால் களைப்பும் அலுப்பும் எம்மை அண்டவில்லை.

கண் எட்டும் தூரத்தில் ஒரு பேருந்தும் ஒரு சிற்றுந்தும் தொலைதூரம் பயணித்த களைப்பில் சாலையின் ஓரம் ஓய்வை நாடியிருந்தன. மாலையில் ஒளிக்கதிர்களை வீசுவதற்காக குழல்விளக்குகள் சாலைஓரம் நின்று கொண்டு கதிரவனின் ஒளிகீற்றுகளை உள்வாங்கிக் கொண்டிருந்தன.

கதிரவனின் ஒளிக்கற்றைகள் கண்களை கூசச் செய்தாலும் வண்ணத் தோரணங்கள் சாலையின் ஓரமாய் ஒதுங்கி நின்று லேசான காற்றில் அசைந்தாடி கூசும் கண்களுக்கு நாங்கள் செல்ல வேண்டிய திசையைக் காட்டின.

தார்ச்சாலையிலிருந்து வலதுபக்கமாக வண்ணத் தோரணங்கள் காட்டிய வழியில் மெல்ல நடந்த போது அங்கே வண்ணமயமாய் அமைக்கப்பட்டிருந்த சாமியானா நாங்கள் வந்து சேர வேண்டிய இடத்தை உறுதி செய்தது.

மேடையை ஒட்டி அமைந்திருந்த சாமியானா பந்தலின் நிழலில் சிலர் உட்கார்ந்திருந்தனர். அங்கு நடைபெறும் நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த புத்தகக் கடையை சிலர் மொய்த்துக் கொண்டு புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தனர். புழுதியைப் புரட்டிப் போடும் இடத்தில் புத்தகங்களைப் புரட்டியது ஓர் அரிய நிகழ்வுதானே!

என்னதான் உள்ளம் மகிழ்ந்திருந்தாலும் உணவு நேரம் என்றால் உடல் வாடித்தானே போகிறது. மணி பிற்பகல் இரண்டை நெருங்கிவிட்டதால் நேராகப் பந்திக்குச் சென்றோம். மற்றொரு சாமியானா பந்தலுக்கீழே வாடகைக்கு எடுத்துவரப்பட்ட நாற்காலி – மடிப்பு மேசை என எளிய திறந்தவெளி டைனிங் எம்மை ஈர்த்தது. பந்தியில் இலை விரித்தோம். கொஞ்சம் கேசரி, ஒரு போண்டா, தேவையான அளவு பிரிஞ்சி சோறு, அதற்கு பொருத்தமாக வெங்காய பச்சடியும் சாம்பாரும் என பகல் விருந்து எளிமையாய், அதே நேரத்தில் திருப்தியாய் முடிந்தது. ஒவ்வோரு இலையிலும் ஒரு பருக்கைகூட வீணாகவில்லை. பசிக்குதான் உணவே தவிர பகட்டுக்கு அல்ல என்பதை உணரவைத்த விருந்து.


தொடரும்….

Monday, November 22, 2010

முகூர்த்த நாளில் மணம் முடித்தால்தான் பிள்ளை குட்டிகள் பிறக்குமா? ....தொடர்ச்சி-2

முகூர்த்த நாளில் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிவதையும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதையும் பெரும்பாலும் மக்கள் இயல்பாகத்தான் எடுத்துக் கொள்கின்றனர். அனால், இதுவே மாநாடுகள்-பேரணிகள் என்றால் அது, விலைவாசி உயர்வை எதிர்த்ததாய் இருந்தாலும் போக்குவரத்து நெரிசலுக்காகத் திட்டித் தீர்ப்பார்கள்.

முகூர்த்த நாள் என்றால் போக்குவரத்து நெரிசல் மட்டுமா? மாதத்தில் ஒருசில நாட்களே முகூர்த்த நாட்கள் என்பதால் பலருக்குத் திண்டாட்டம். சிலருக்கோ கொண்டாட்டம்.

முகூர்த்த நாள் என்றால் ஆட்டோ-வேன்களுக்கு கிராக்கி, காய்கறிகளுக்கு கிராக்கி, பாலுக்கு கிராக்கி, மல்லிகை-முல்லை மலர்களுக்கு கிராக்கி, இசைக்கச்சேரி நடத்துவோருக்கு கிராக்கி, மேடை ஜோடனைக்காரருக்கு கிராக்கி, சமையல் காரருக்கு கிராக்கி,  எல்லாவற்றிற்கும் மேலாக ஐயருக்கு கிராக்கி என எல்லாமே கிராக்கியாகி விடுகிறது. புதுமனை புகுவிழா போன்ற வேறு சில விழாக்கள் முகூர்த்த நாளில் வந்து விட்டால் கிராக்கியெல்லாம்  படுகிராக்கியாகிவிடும்.

ஆறு மாதத்தில் வரன் பார்த்து முடித்தாலும் மண்டபத்திற்காக மேலும் ஆறு மாதம் காத்திருக்க வேண்டியுள்ளது.

இவ்வளவு கிராக்கிக்கு மத்தியிலும் முழம் முப்பது ரூபாயானாலும் மலர்கள் இல்லாமல் பெண்கள் மண்டபம் செல்லமாட்டார்கள் . மண்டபம் நடந்து செல்லும் தூரமே என்றாலும் சொந்தமாகக் கார் இருந்தால் காரிலும், இல்லை என்றால் காசானாலும் பரவாயில்லை என ஆட்டோவிலும் சென்று தங்கள் கௌரவத்தை நிலை நாட்டுவோரும் உண்டு.

இத்தனை நெருக்கடிகளுக்கும் என்ன காரணம்? முகூர்த்த நாள் பஞ்சம்தானே? இந்த ஆண்டு மொத்தமே 55 நாட்கள்தான் முகூர்த்த நாட்கள் என ஒரு பஞ்சாங்கம் வரையறுத்திருக்கிறது. ஆடியிலும், மார்கழியிலும் முகூர்த்தமே கிடையாது. இந்த ஒரு பஞ்சாங்கம் மட்டுமே 'அத்தாரிட்டி' கிடையாது. வேறு சில பஞ்சாங்கங்களில் ஒரு சில நாட்கள் மாறுபடலாம். அனால் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இதே அளவு எண்ணிக்கையில்தான் முகூர்த்த நாட்கள் தீர்மானிக்கப்படுகின்றன.

முகூர்த்த நாட்களில் எல்லா நேரத்திலும் திருமணம் செய்துவிட முடியாது. காலை 4.30-6.00, 6.00-7.30, 7.30-9.00, 9.00-10.30 ஆகிய நேரங்களில் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும்.

பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ள முகூர்த்த நாள் மற்றும் நேரத்திலும்கூட ஒருவர் திருமணம் செய்து விட முடியாது. ஜாதகப் பொருத்தம் பார்த்த பிறகே தேதியும் நேரமும் தீர்மானிக்கப்படுகிறது. எனவே திருமண நாட்கள் இன்னும் சொற்ப நாட்களாகிவிடுகின்றன.

ஒரு திருமணத்திற்கு சாராசரியாக இரண்டு நாட்கள் என பதிவு செய்தாலும் ஒரு மண்டபம் ஓர் ஆண்டில் 110 நாட்களுக்கு மட்டுமே பயன் படுத்தப்படும். பல லட்சங்களைப் போட்டு மண்டபம் கட்டியவர் 365 நாட்களில் எடுக்க வேண்டிய வருமானத்தை 110 நாட்களில் எடுக்க வேண்டும் என்றால் வாடகை எகிறாதா என்ன?

முகூர்த்த நாளையும் நேரத்தையும் தவிர்த்து வேறொரு சாதாரண நாளிலும், நேரத்திலும் ஏன் திருமணம் செய்யக் கூடாது? அவ்வாறு செய்தால் என்னவாகும்?

தொடரும்

ஊரான்