Tuesday, August 2, 2011

சாமியார்களின் வலையில் விழும் பெண்கள்!

இந்து மதத்தை இழிவு படுத்துவதாக நித்தியானந்தா மீது குற்றம் சாட்டி அவரைக் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி 'தீவிரமாகப்' போராடி வருகிறது. நித்தியானந்தாவை எதிர்த்து யார் போராடினாலும் அவை ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து விடுகின்றன. இதற்கெல்லாம் காரணம் நித்தியானந்தா-ரஞ்சிதா விவகாரம்தான் என்றால் அது மிகையல்ல.  

ஒரு இளம் வயது ஆண், ஒரு இளம் வயது பெண்ணை ஈர்ப்பதென்பது அதிசயமானதல்லதான்.திருமணமாகாதோர் புரியும் காதலும், திருமணமானவர்கள் புரியும் கள்ளக் காதலும் இத்தகைய ஈர்ப்பிலிருந்து வருவதுதான். சரியான காதல் முறைப்படுத்தப் படுவதால் பின்னர் அது சமூக அங்கீகாரத்தைப் பெறுகிறது.  முறைப்படுத்த முடியாத கள்ளக் காதல் சமூக இழிவைத் தேடிக் கொள்கிறது. ஆனால் இளம் வயது நித்தியானந்தா இளம் வயது ரஞ்சிதாவைக் கவர்வது மட்டும் எப்படி அதிசயமாகி விட்டது?. சமூகத்தில் அன்றாடம் நடைபெறும் ஒரு சம்பவத்தைப் போன்றதுதான் இவ்விருவரின் ஈர்ப்பும். ஒருசாதாரண சம்சாரி செய்திருந்தால் அதை யாரும் பொருட்படுத்தி இருக்கமாட்டார்கள். ஊடகங்களில் ஒரு நாள் செய்தியாக முடிந்து போயிருக்கும். ஆனால் ஒரு பிரம்மச்சாரி cum பரதேசி செய்ததால்தான் அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, தொடர் செய்தியாகவும் ஆகிவிட்டது. 

ரஞ்சிதா என்ற இளம் பெண் மட்டுமல்ல, இவரைப் போன்ற ஏராளமான இளம் பெண்கள் நித்தியானந்தா மட்டுமல்ல ஏனைய பல சாமியார்களிடமும் மயங்குறார்கள். மருத்துவ மாணவியை மயக்கிய போலிச்சாமியார்,  இளம் பெண்ணிடம் நகை மோசடி செய்த சாமியார், கருவறையை பள்ளியறையாக மாற்றிய தேவனாதன்கள் என அவ்வப் போது செய்திகள் நம் காதுகளையும் எட்டத்தான் செய்கின்றன.

இளம் வயது பெண்கள் மட்டுமல்ல, பிற பெண்களும் சாமியார்களை அதிகம் நாடுகின்றனர். நாடிய பிறகு சாமியார்கள் இவர்களை நெருங்கி விடுகின்றனர். இளம் பெண்கள் என்றால் இச்சைக்காகவும், முதிர் பெண்கள் என்றால் சொத்துக்காகவும் சாமியார்களால் சூறையாடப்படுகின்றனர். தாங்கள் சூறையாடப்படுவோம் அல்லது சூறையாடப்படுகிறோம் என்பதை அவர்களால் அப்போதைக்கு உணர முடிவதில்லை. எல்லாம் போனபிறகே பதறுகின்றனர். 

பெண்கள், சாமியார்கள் பக்கம் சாய்வதற்கு அவர்களின் பக்தி மட்டும் காரணமல்ல. பொதுவாக இச்சமூகத்தில் பெண்களே அதிக துன்பங்களுக்கும், துயரங்களுக்கும், மனச்சோர்வுக்கும் ஆளாகின்றனர். இத்தகைய துன்ப- துயரங்களிலிருந்து விடுபட முடியாமல் மன அழுத்தத்தால் தவிக்கின்றனர். இந்தத் தவிப்பு தான், ஆறுதலாய் வரும் சாமியார்களின் வார்த்தைகள் பெண்களை சாமியார்கள் பக்கம் இழுக்கிறது. 

ஆண்களுக்கு இத்தகைய பிரச்சனைகள் இல்லையா என நீங்கள் கேட்பது புரிகிறது. கஞ்சா, சாராயம், குடி, கூத்தி என இதற்கெல்லாம் ஆண்களால் வடிகால் வெட்டிக்கொள்ள முடிகிறது. ஆனால் பெண்களால் இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. இப்படிச் சொல்வதால் இத்தகைய வடிகாலை பெண்களும் வெட்டிக் கொள்ளலாம் என நான் கூற வரவில்லை.

எனக்கில்லாத திறமை உங்களிடம் இருந்தால், எனக்கு உங்கள் மீது மதிப்புக் கூடுகிறது. இந்த மதிப்பு நாளடைவில் என்னை உங்களின் இரசிகனாக மாற்றுகிறது. இத்தகைய இரசனை மேலும் தீவிரமடைந்து பக்தியாக வளர்கிறது. இந்த பக்திதான் ரஜினிக்கு பாலாபி ஷேகம் செய்யும் அளவுக்கு ரசிகனை மாற்றுகிறது. பக்தி எனும் பித்தம் தலைக்கேறிய பிறகு, அவன், தான் நேசிக்கும் நபரை கடவுளாக மதிக்கத் தொடங்குகிறான். பிறகென்ன? கடவுளுக்கு எதையும் அற்பணிக்கத் தயாராகிவிடுகிறான். கடவுளுக்கு தொண்டு செய்வதைத்தானே சிறந்தது என நமது மதங்கள் தொடர்ந்து போதித்து வருகின்றன. இப்போது மட்டும் பக்தனை கடிந்து கொள்வதில் பொருளேதுமுண்டா?

சாதாரணமானவர்களைவிட தாங்கள் அறிவாளிகள்,  திறமைசாலிகள் என்பதைக்காட்டி பிறரின் கவனத்தை ஈர்க்க பல நூல்களை சாமியார்கள் படிக்கிறார்கள்.  சமீபத்திய நாட்டு நடப்பை, உலக நடப்பை, மனிதர்களின் துன்ப-துயரங்களை அறிந்து வைத்துள்ளார்கள். சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் அறிவை 'அப்டேட்' செய்து கொள்கிறார்கள். சில சாகசச் செயல்களைக் கற்றுக் கொள்கிறார்கள். இதற்காக புதிய புதிய யுக்திகளைக் கையாள்கிறார்கள். இவைதான் சாமியார்களின் பலம்.

ஒப்பீட்டளவில் ஆண்களைவிட பெண்களை பின்தங்கியவர்களாகவே இச்சமூகம் வைத்துள்ளது. அதிலும், அதிக துன்பங்களுக்கு உள்ளாகும் போது பெண்கள் மேலும் பின்தங்கியவர்களாகி விடுகின்றனர். இந்த அடிப்படைதான் பெண்கள் அதிக அளவில் சாமியார்களை நோக்கி செல்வதற்குக் காரணம்.

மாதவிடாய் என்கிற இயற்கை நிகழ்வை 'தீட்டு' என பட்டம் கட்டியதால் கடவுளுக்கு பூஜை செய்ய அருகதையற்றவர்கள் பெண்கள் என மதக் கோட்பாடு தடைவிதித்தது. அதை உடைத்து பெண்களுக்கும் பூஜை செய்யும் உரிமையை கொடுத்ததால் மேல்மருதவத்தூரில் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. பூஜை செய்யும் இந்த ஒரு உரிமையின் மூலம் தங்களின் பெரும்பாலான துன்ப துயரங்களை மறந்து 'அம்மா'விடம் சரணடைகிறார்கள் பெண்கள்.

சாமியார்கள் திறமைசாலிகளா?

சில சாமியார்கள் தங்களின் திறமையின் மூலம் மக்களைக் கவர்கிறார்கள். வெறுங்கையில் விபூதி வரவழைப்பது, லட்டு-எலுமிச்சை வரவழைப்பது, வாயிலிருந்து லிங்கம் எடுப்பது, நாவில்லாத மணியிலிருந்து ஓசை எழுப்புவது என பலப் பல திறமைகளைக் காட்டி புகழின் உச்சாணிக்குச் சென்று பிறகு சில-பல காரணங்களால் உளுத்துப்போன புட்டபர்த்தி சாய்பாபா மற்றும்  பிரேமானந்தாக்களின் கதை இதுதான். இப்படி பிரபலமான ஒருவரின் கதையைப் பார்ப்போம்.  

 குழந்தை பிறக்கவில்லை என்றால் அதற்குக் காரணம் கணவனின் குறைபாடா அல்லது மனைவியின் குறைபாடா என இருதரப்பையும் கண்டறிந்து அதற்குரிய மருத்துவத்தை பலர் நாடுவதில்லை. அவ்வாறு செய்தால் தனது ஆண்மைத்தன்மை அம்பலமாகிவிடும் என்கிற அச்சத்தால் பெரும்பாலும் ஆண்கள் அதற்கு ஒப்புக் கொள்வதில்லை. இது அவரது ஆண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கிவிடுமாம். அதனால்தான் மனைவியை பலிகடாவாக்குகிறார்கள். குழந்தை பிறக்கவில்லை என்றால் பெண்களுக்கு மட்டும்தான தோஷம் இருக்குமாம். ஆனால் அத்தகைய தோஷம் ஆண்களுக்கு ஏன் இருக்கக்கூடாது என கேள்வி எழுப்ப யாரும் தயாரில்லை. 

ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் முன்பு ஒரு சாமியார் இருந்தார். பிள்ளை வரம் கொடுப்பதில் அன்றைக்கு அவரே இந்தியாவின் முன்னோடி. குழந்தையின்மைக்கான காரணத்தை அறிய மருத்துவரிடம் செல்வதைவிட சாமியார்களிடம் செல்வோர்களே அதிகம். பிள்ளைப் பேறு இல்லாத பெண்ணை இந்தச் சாமியாரிடம் அழைத்துச் செல்வார்கள். அப்பெண்ணுக்கு தோஷம் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிந்த பிறகே மேற்கொண்டு எதுவும் செய்ய முடியும் என்று கூறிவிடுவார்.  அதற்காக கழுத்தமைப்புடைய ஒரு குண்டு செம்பு, அது நிறையும் அளவுக்கு அரிசி, வெங்காயம் நறுக்குகிற அல்லது பழம் வெட்டுகிற ஒரு கூர்மையான கத்தி இவற்றுடன் சாமியாரைப் பார்க்க வேண்டும்.

பெண்ணை சாமியார் முன் அழைத்துச் செல்ல வேண்டும். அரிசியை செம்பில் கொட்ட வேண்டும். அரிசி நிரப்பப்பட்டுள்ள அந்த செம்பின் நடுவில் கூர்மையான கத்தியைச் சொருகி கத்தியின் கைப்பிடியைப் பிடித்துத் தூக்க வேண்டும்.  தூக்கும் போது கத்தியோடு அரிசியுடன் செம்பும் சேர்ந்து வர வேண்டும். அப்படி வந்து விட்டால் தோஷம் இல்லை என்று பொருள். யார் குத்தித் தூக்கினாலும் முதலில் கத்தி மட்டும்தான் கையோடு வரும். சாமியார் மீண்டும் முயற்சி செய்யச் சொல்வார். முடிவு அதேதான். 

இப்படியாக கத்தியால் குத்தி குத்தி செம்பில் உள்ள அரிசி மெல்ல மெல்ல இருகி கத்தியை இருகிப்பிடிக்கும் அளவுக்குச் செல்லும் போது குத்துவதை நிறுத்தச் சொல்லிவிடுவார். பெண்ணுக்கு தோஷம் இருப்பது உறுதி செய்யப் படும். தோஷத்தை யார் போக்க முடியும்? அதற்கான ஆற்றல் பெற்றவர் சாமியார்தானே! அதை நம்ப வைப்பதற்காக ஏற்கனவே குத்தி குத்தி இருகிப் போன செம்பில் உள்ள அரிசியில் கத்தியைச் சொருகித் தூக்குவார். என்ன அதிசயம்? இம்முறை கத்தியோடு செம்பும் சேர்ந்தே வரும். இதற்கு மேலும் ஆதாரம் வேண்டுமா சாமியார் சக்தி படைத்தவர் என்பதற்கு?  இப்பொழுது சாமியார் எதைச் சொன்னாலும் செய்யத் தாயாராகிவிடுகின்றனர். "இரவு நடைபெறும் சிறப்பு பூஜையில் பெண்ணுக்கு தோஷம் நீக்க வேண்டும். எனவே பெண்ணை ஆசிரமத்தில் விட்டுவிட வேண்டும். உடன் வந்தவர்கள் வெளியில் தங்க வேண்டும்" என்று கூறிவிடுவார்.

இரவு பூஜை நடைபெறும். மறுநாள் பெண்ணை அழைத்துக் கொண்டு ஊர் வந்து சேர்வார்கள். பத்து மாதம் கழித்து கண்டிப்பாய் குழந்தை பிறக்கும். அங்கு சென்று வந்தவர்களில் ஆகப் பெரும்பாண்மை பெண்களுக்கு குழந்தை பிறக்கிறதே, எப்படி? என ஒரு பெண் மருத்துவருக்கு ஐயம் எழ, அவருக்கும் 'குழந்தை வரம்' கேட்டு அங்கு செல்கிறார். வழக்கமாக நடைபெறும் அனைத்து வழிமுறைகளும் நடைபெறுகின்றன. இரவு நெருங்குகிறது. பூஜை நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். எங்கும் சாம்பிராணி உள்ளிட்ட வாசனை மூக்கைத் துளைக்கிறது. அங்கு செல்வோர் தன் நிலையை இழக்கும் ஒரு சூழல் நிலவுகிறது. பிறகு அரை இருட்டாய் இருக்கும் ஒரு அறைக்குள் தள்ளி விடுகின்றனர்.  திகைத்து நின்றவரின் தோளை வலுவான கரம் ஒன்று பற்றுகிறது. சுதாரித்துக் கொண்ட அவர், இடுப்பில் மறைத்து வைத்திருந்த இரும்புக் கம்பியால் கரங்களுக்குச் சொந்தக்காரனான ஒரு முரடனின் மண்டையைப் பிளக்கிறார். மருத்துவர் அங்கிருந்து தப்பி வந்து அங்கு நடக்கும் அப்பட்டமான வன்புணர்ச்சியை வெளி உலகுக்கு அம்பலப்படுத்துகிறார்.

இப்படி சாமியார்களின் அசாத்தியத் திறமைகளைக் கண்டு மதிகெட்டு மானம் இழப்பதை யார்தான் வெளியில் சொல்வார்கள். வாழ்நாள் முழுக்க மலடிப் பட்டத்தைச் சுமக்கும் இழிவைவிட ஒரு நாள் நடக்கும் இவ்விழிவை மறைப்பதில் தவறேதும் இல்லை என்கிற முடிவுக்கு வருகின்றனர். இதுவே சாமியார்களின் பலமாகவும் மாறிவிடுகிறது.

மக்களை, அதிலும் அதிக அளவில் பெண்களை துன்ப துயரங்களுக்கு உள்ளாக்கும் இச்சமூக அமைப்பை மாற்றுவதும், ஒவ்வொரு செயலின் காரண- காரியங்களை அறிந்து கொள்வதும், பொதுவாக மக்கள் தங்களின் அறிவு மட்டத்தை உயர்த்திக் கொள்வதன் மூலம் மட்டுமே இத்தகைய சாமியார்களை ஒழித்துக் கட்ட முடியும்.

2 comments:

  1. காமாலைக் கண்ணனுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாம்.

    ReplyDelete
    Replies
    1. காவிப் புழுதி கண்ணை மறைக்கும் போது உங்களைப் போன்றவர்களுக்கு எதுவும் தெரியாதுதான்.

      Delete

There was an error in this gadget