Showing posts with label பிரேமானந்தா. Show all posts
Showing posts with label பிரேமானந்தா. Show all posts

Thursday, October 19, 2023

பங்காரு அடிகளார் மரணம்: உணர்த்தும் பாடம் என்ன?

"1980 களில் மேல் மருவத்தூர் 'அம்மா' பிரபலமானபோது, இவரைத் தூக்கி நிறுத்தியவர்கள் வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் அவரது சாதியைச் சேர்ந்த வன்னிய சமூகத்தினர்."

2011 ஆண்டு, பிப்ரவரி மாதம் சாமியார்கள் குறித்த எனது கட்டுரையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டேன்.

தற்போது பங்காரு அடிகளார் மறைந்து விட்ட நிலையில், அரசு மரியாதையோடு அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளதால் அவரது மறைவு குறித்து பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
பங்காரு அடிகளார்

ஒரு நபர் சமூகத்தில் பிரபலமடைந்துவிட்டால், அவரது கடந்த காலத்தையும் மறந்து, அவரது தொழில் இரகசியத்தையும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல மக்கள் பழகிக் கொண்டு விட்டார்கள். தொடக்க காலத்தில் கொலைக் குற்றசாட்டுக்கு ஆளான பங்காருவும் இதில் அடக்கம். 

பெண்கள் சூத்திரர்களுக்கு ஒப்பானவர்கள், மாதவிடாய் பெண்கள் தீட்டுக்குரியவர்கள் என்று எந்த சனாதன இந்து மதம் பெண்களை இழிவுபடுத்தி ஓரங்கட்டியதோ, அதே இந்துப் பெண்களை நேரடியாக பூஜை செய்வதற்கு அனுமதித்ததன் மூலம் பங்காரு அடிகளார் இந்து மதத்தில் ஒரு 'புரட்சியை' ஏற்படுத்தினார் என்பதனால் அவரை ஏன் ஆதரிக்கத் கூடாது என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. பங்காரு அடிகளாருக்கு முன்பிருந்தே எண்ணற்ற குல தெய்வங்களுக்கு பெண்கள் பூஜை செய்வது நடந்து கொண்டுதான் இருந்தது; தொடர்ந்து நடக்கவும் செய்கிறது.

மக்களின் உளவியலைப் புரிந்து கொண்டவர்கள்தான் சாமியார்களாக வளர முடிகிறது. அந்த வகையில் வட மாவட்டங்களில் குறிப்பாக வன்னியர் சாதிப் பெண்களின் உளவியலை நன்றாகப் புரிந்து கொண்ட பங்காரு அடிகளார் அதை அறுவடை செய்து கொண்டார். 

பூஜை செய்கிற பெண்கள், தாங்கள் சனாதனத்திற்கு எதிராகச் செயல்படுகிறோம் என்பதும் அவர்களுக்குத் தெரியாது; பங்காருவும் அத்தகைய எண்ணத்தோடு பெண்களை பூஜையில் ஈடுபடுத்தவில்லை. அப்படி ஒரு எண்ணம் அவருக்கு இருந்திருக்குமேயானால் சங் பரிவார கும்பலுக்கு எதிராக தன்னுடைய பக்தர்களை வளர்த்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படி எதுவும் செய்ததாகச் சான்றுகள் இல்லை. மாறாக,  வன்னிய சாதி மக்கள் சங் பரிவாரக் கும்பல் பக்கம் சாய்ந்து வருவதுதான் மிச்சம். இதில் அன்புமணியின் பங்கும் உண்டு என்பதையும் மறந்து விடக்கூடாது.

ஏராளமான கல்வி நிறுவனங்களைத் தொடங்கி, அதன் மூலம் எண்ணற்ற ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கல்வி-மருத்துவச் சேவையை செய்துள்ளார் என்றும் பங்காருவைப் புகழ்கின்றனர். இது உண்மை என்றாலும்கூட அவரால் இதை எப்படிச் செய்ய முடிந்தது என்பதை பரிசீலிக்க வேண்டும். ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் கல்வி-மருத்துவம் வழங்க வேண்டியது அரசினுடைய கடமை. அதை ஒரு சாமியார் செய்கிறான் என்பதற்காக நான் வெட்கப்பட வேண்டுமே ஒழிய பெருமைப்படுவதற்கு ஒன்றுமில்லை.

ஏழை எளிய மக்கள் அன்றாடம் பல்வேறு துன்ப துயரங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். அதிலிருந்து விடுபட வேண்டுமானால், ஏதாவது பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே மூடநம்பிக்கைகள் அவர்களிடைய ஆழமாக ஊன்றப்பட்டுள்ளது. தங்களது துன்ப துயரங்களுக்கு நிரந்தரமானத் தீர்வு கிடைக்காதா என்ற ஏக்கப் பெருமூச்சோடு காணிக்கைகளை அள்ளிக்கொண்டு சாமியார்களை நோக்கி ஓடுகிறார்கள் அப்பாவி மக்கள். அங்கே, சாமியார்களின் உண்டியலும் தொந்தியும் பெருகுகிறது. மனதை மட்டும் நிறைத்து கொண்டு பக்தர்கள் வீடு திரும்புகிறார்கள்; வந்த பிறகு மீண்டும் அதே வாழ்க்கை. 

ஒவ்வொரு முறையும் தனக்குத் துன்ப துயரம் நேரும் பொழுது, மீண்டும் மீண்டும் சாமியார்களையும் கோவில்களையும் நோக்கி ஓடுகிறார்கள். ஆனால், அவர்களின் துன்ப துயரங்கள் முடிவுக்கு வந்தபாடில்லை. மாறாக, ஆழமான மூடநம்பிக்கைகள் மேலும் மேலும் அவர்களை ஆட்கொண்டு விடுகிறது. மக்களின் மூடநம்பிக்கைகள்தான் சாமியார்களின் மூலதனம். மூடநம்பிக்கைகள் பெருகப் பெருக மூலதனமும் பெருகத்தானே செய்யும். அப்படித்தான் கோடிக்கணக்கிலே பங்காருவிடம் சொத்துக்கள் குவிந்தன.

மக்களின் சிந்தனை மட்டத்தை எவன் உயர்த்துகிறானோ அவனது மரணத்தைத்தான் பேரிழப்பாகக் கருத முடியும். பரோபகாரியாக இருப்பதனால் மட்டும் ஒருவன் போற்றுதலுக்கு உரியவனாகிவிட மாட்டான். 

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Sunday, March 19, 2023

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-5

V

ஹர்ஷத் மேத்தா

தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற பெயரில் இந்தியச் சந்தையை உலகச் சந்தைக்கு திறந்துவிட்ட 1990-களின் காலகட்டத்தில், ஹர்சத் மேத்தா என்கிற பங்குச் சந்தைத் தரகரின், பங்குச் சந்தை மோசடி இந்திய முதலீட்டாளர்களை நிலைகுலையச் செய்தது. முறைகேடுகளில் ஈடுபட்ட ஹர்சத் மேத்தா மீதான 23 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட ஹர்சத் மேத்தா அங்கேயே மாண்டு போனார். ஆனால் பங்குச் சந்தையில் முதலீடு செய்த பலர் தங்களுடைய சுமார் ரூ.3542 கோடி மதிப்பிலான சொத்தை இழந்து நடைபிணமாய் வீதியில் வீசப்பட்டனர்.

விஜய் மல்லய்யா

எப்பொழுதும் அழகிகளோடு ஆட்டம் போடும் பிரபல கிங்பிஷர் சாராய அதிபரும், யுனைட்டடு பிரீவரீஸ் நிறுவனத்தின் முதலாளியுமான விஜய் மல்லய்யாவை அறியாதோர் உண்டோ? சாராயத் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டே, 2005 ஆம் ஆண்டு வாக்கில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் என்ற பெயரில் ஒரு விமான சேவை நிறுவனத்தைத் தொடங்குகிறார். அதற்காக பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பலகோடி ரூபாயைக் கடனாகப் பெறுகிறார். ஆனால் அடுத்த மூன்று ஆண்டுகளிலேயே போதிய வருவாய் இல்லை என்கிற காரணத்தைக் காட்டி கிங்பிஷர் ஏர்லைன் நிறுவனத்தை இழுத்து மூடுகிறார். கடன் கொடுத்தவர்கள் கடனைத் திருப்பி அடைக்க நெருக்குதல் கொடுத்த போது, 2016 மார்ச் 6 அன்று இந்தியாவைவிட்டு தப்பிஓடி இங்கிலாந்தில் அடைக்கலமாகிறார்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB), ஐடிபிஐ (IDBI), பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட 17 பொதுத்துறை வங்கிகளிடமிருந்து அவர் கடனாகப் பெற்ற சுமார் ரூ.9000 கோடியில் ஒருபைசாவைக்கூட இன்றுவரை திரும்பப் பெறமுடியவில்லை. உண்மையில் விஜய் மல்லய்யா ஏப்பம் விட்ட இந்தியாவின் சொத்து மதிப்பு ரூ.30000 கோடி என்கிறது ஒரு புள்ளி விவரம். இதில் வேடிக்கை என்னவென்றால், ஊழலை ஒழிப்பதற்காகவே அவதாரம் எடுத்ததாகக் கூப்பாடு போடும் மோடியால் இன்றுவரை இங்கிலாந்தில் சல்லாபமாக வாழ்ந்து வரும் மல்லய்யாவின் ஒரு மயிரைக்கூடத் தொடமுடியவில்லை.

கைலாசா

முதலாளிகள் மட்டுமல்ல சாமியார்கள்கூட இந்தியப் பணத்தைச் சுருட்டிக் கொண்டு வெளிநாடுகளுக்கு ஓட்டம் பிடித்து சல்லாபமாய் கூத்தடிக்கின்றனர் என்பதை நித்தியானந்தா நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.  பலஆயிரம் கோடி சொத்துக்களோடும் சில நூறு அழகிகளோடும் ஒருவன் இந்தியாவைவிட்டு ஓடுவது மோடி கூட்டத்திற்குத் தெரியாதா என்ன? பாகிஸ்தான் எல்லையில் அந்நாட்டு இராணுவக்காரன் ஒருவன் விடும் குசுவைக்கூட மோப்பம் பிடிக்கத் தெரிந்த நமது புலாய்வுப் புலிகளுக்கு நித்தியானந்தா எங்கிருக்கிறான் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லையாம்!  ஐ.நா சபையிலேயே கைலாசா சார்பாக பேச முடிகிறது என்றால் நாம் எத்தகைய கேணயர்கள் என்பதை நாம்தான் உணர வேண்டும். நித்தியானந்தா வெறும் கோவணத்தோடு ஓடியிருந்தால் யாரும் பொருட்படுத்தப் போவதில்லை. அவன் இந்தியாவின் சொத்துக்களை அள்ளிச் சென்றிருக்கிறான் என்பதற்காகத்தான் நாம் கவலைப்பட வேண்டி உள்ளது. இந்த வரிசையில் அடுத்து இந்தியாவை விட்டு ஓடக்கூடியவன் ஜக்கியா அல்லது பதஞ்சலி இராம்தேவா என்பது நமக்குத் தெரியாது.

ஆலைகளை அமைத்து தொழில் செய்யும் ஒரு சில  முதலாளிகள் சில லட்சம் ரூபாய்களை சம்பாதிப்பதற்கே அல்லாடும் போது, வெறும் கோவணத்தைக் காட்டியே இவர்களால் பல ஆயிரம் கோடிகளைச் சுருட்ட முடிகிறது என்றால், அது அவர்களின் திறமையினாலா அல்லது நமது இளிச்சவாய்த் தனத்தினாலா? சிந்திக்க வேண்டும். 

தொடரும்...... 

பொன்.சேகர்

(குறிப்பு: ஹிண்டன்பர்க் அறிக்கையையொட்டி அதானி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, 10.03.2023 அன்று காலை 10 மணி அளவில்,  எல்ஐசி அலுவலகத்திற்கு முன்பாக இராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட  கட்டுரைத் தொடர் இது).

தொடர்புடைய பதிவுகள்

Tuesday, August 2, 2011

சாமியார்களின் வலையில் விழும் பெண்கள்!

இந்து மதத்தை இழிவு படுத்துவதாக நித்தியானந்தா மீது குற்றம் சாட்டி அவரைக் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி 'தீவிரமாகப்' போராடி வருகிறது. நித்தியானந்தாவை எதிர்த்து யார் போராடினாலும் அவை ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து விடுகின்றன. இதற்கெல்லாம் காரணம் நித்தியானந்தா-ரஞ்சிதா விவகாரம்தான் என்றால் அது மிகையல்ல.  

ஒரு இளம் வயது ஆண், ஒரு இளம் வயது பெண்ணை ஈர்ப்பதென்பது அதிசயமானதல்லதான்.திருமணமாகாதோர் புரியும் காதலும், திருமணமானவர்கள் புரியும் கள்ளக் காதலும் இத்தகைய ஈர்ப்பிலிருந்து வருவதுதான். சரியான காதல் முறைப்படுத்தப் படுவதால் பின்னர் அது சமூக அங்கீகாரத்தைப் பெறுகிறது.  முறைப்படுத்த முடியாத கள்ளக் காதல் சமூக இழிவைத் தேடிக் கொள்கிறது. ஆனால் இளம் வயது நித்தியானந்தா இளம் வயது ரஞ்சிதாவைக் கவர்வது மட்டும் எப்படி அதிசயமாகி விட்டது?. சமூகத்தில் அன்றாடம் நடைபெறும் ஒரு சம்பவத்தைப் போன்றதுதான் இவ்விருவரின் ஈர்ப்பும். ஒருசாதாரண சம்சாரி செய்திருந்தால் அதை யாரும் பொருட்படுத்தி இருக்கமாட்டார்கள். ஊடகங்களில் ஒரு நாள் செய்தியாக முடிந்து போயிருக்கும். ஆனால் ஒரு பிரம்மச்சாரி cum பரதேசி செய்ததால்தான் அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, தொடர் செய்தியாகவும் ஆகிவிட்டது. 

ரஞ்சிதா என்ற இளம் பெண் மட்டுமல்ல, இவரைப் போன்ற ஏராளமான இளம் பெண்கள் நித்தியானந்தா மட்டுமல்ல ஏனைய பல சாமியார்களிடமும் மயங்குறார்கள். மருத்துவ மாணவியை மயக்கிய போலிச்சாமியார்,  இளம் பெண்ணிடம் நகை மோசடி செய்த சாமியார், கருவறையை பள்ளியறையாக மாற்றிய தேவனாதன்கள் என அவ்வப் போது செய்திகள் நம் காதுகளையும் எட்டத்தான் செய்கின்றன.

இளம் வயது பெண்கள் மட்டுமல்ல, பிற பெண்களும் சாமியார்களை அதிகம் நாடுகின்றனர். நாடிய பிறகு சாமியார்கள் இவர்களை நெருங்கி விடுகின்றனர். இளம் பெண்கள் என்றால் இச்சைக்காகவும், முதிர் பெண்கள் என்றால் சொத்துக்காகவும் சாமியார்களால் சூறையாடப்படுகின்றனர். தாங்கள் சூறையாடப்படுவோம் அல்லது சூறையாடப்படுகிறோம் என்பதை அவர்களால் அப்போதைக்கு உணர முடிவதில்லை. எல்லாம் போனபிறகே பதறுகின்றனர். 

பெண்கள், சாமியார்கள் பக்கம் சாய்வதற்கு அவர்களின் பக்தி மட்டும் காரணமல்ல. பொதுவாக இச்சமூகத்தில் பெண்களே அதிக துன்பங்களுக்கும், துயரங்களுக்கும், மனச்சோர்வுக்கும் ஆளாகின்றனர். இத்தகைய துன்ப- துயரங்களிலிருந்து விடுபட முடியாமல் மன அழுத்தத்தால் தவிக்கின்றனர். இந்தத் தவிப்பு தான், ஆறுதலாய் வரும் சாமியார்களின் வார்த்தைகள் பெண்களை சாமியார்கள் பக்கம் இழுக்கிறது. 

ஆண்களுக்கு இத்தகைய பிரச்சனைகள் இல்லையா என நீங்கள் கேட்பது புரிகிறது. கஞ்சா, சாராயம், குடி, கூத்தி என இதற்கெல்லாம் ஆண்களால் வடிகால் வெட்டிக்கொள்ள முடிகிறது. ஆனால் பெண்களால் இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. இப்படிச் சொல்வதால் இத்தகைய வடிகாலை பெண்களும் வெட்டிக் கொள்ளலாம் என நான் கூற வரவில்லை.

எனக்கில்லாத திறமை உங்களிடம் இருந்தால், எனக்கு உங்கள் மீது மதிப்புக் கூடுகிறது. இந்த மதிப்பு நாளடைவில் என்னை உங்களின் இரசிகனாக மாற்றுகிறது. இத்தகைய இரசனை மேலும் தீவிரமடைந்து பக்தியாக வளர்கிறது. இந்த பக்திதான் ரஜினிக்கு பாலாபி ஷேகம் செய்யும் அளவுக்கு ரசிகனை மாற்றுகிறது. பக்தி எனும் பித்தம் தலைக்கேறிய பிறகு, அவன், தான் நேசிக்கும் நபரை கடவுளாக மதிக்கத் தொடங்குகிறான். பிறகென்ன? கடவுளுக்கு எதையும் அற்பணிக்கத் தயாராகிவிடுகிறான். கடவுளுக்கு தொண்டு செய்வதைத்தானே சிறந்தது என நமது மதங்கள் தொடர்ந்து போதித்து வருகின்றன. இப்போது மட்டும் பக்தனை கடிந்து கொள்வதில் பொருளேதுமுண்டா?

சாதாரணமானவர்களைவிட தாங்கள் அறிவாளிகள்,  திறமைசாலிகள் என்பதைக்காட்டி பிறரின் கவனத்தை ஈர்க்க பல நூல்களை சாமியார்கள் படிக்கிறார்கள்.  சமீபத்திய நாட்டு நடப்பை, உலக நடப்பை, மனிதர்களின் துன்ப-துயரங்களை அறிந்து வைத்துள்ளார்கள். சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் அறிவை 'அப்டேட்' செய்து கொள்கிறார்கள். சில சாகசச் செயல்களைக் கற்றுக் கொள்கிறார்கள். இதற்காக புதிய புதிய யுக்திகளைக் கையாள்கிறார்கள். இவைதான் சாமியார்களின் பலம்.

ஒப்பீட்டளவில் ஆண்களைவிட பெண்களை பின்தங்கியவர்களாகவே இச்சமூகம் வைத்துள்ளது. அதிலும், அதிக துன்பங்களுக்கு உள்ளாகும் போது பெண்கள் மேலும் பின்தங்கியவர்களாகி விடுகின்றனர். இந்த அடிப்படைதான் பெண்கள் அதிக அளவில் சாமியார்களை நோக்கி செல்வதற்குக் காரணம்.

மாதவிடாய் என்கிற இயற்கை நிகழ்வை 'தீட்டு' என பட்டம் கட்டியதால் கடவுளுக்கு பூஜை செய்ய அருகதையற்றவர்கள் பெண்கள் என மதக் கோட்பாடு தடைவிதித்தது. அதை உடைத்து பெண்களுக்கும் பூஜை செய்யும் உரிமையை கொடுத்ததால் மேல்மருதவத்தூரில் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. பூஜை செய்யும் இந்த ஒரு உரிமையின் மூலம் தங்களின் பெரும்பாலான துன்ப துயரங்களை மறந்து 'அம்மா'விடம் சரணடைகிறார்கள் பெண்கள்.

சாமியார்கள் திறமைசாலிகளா?

சில சாமியார்கள் தங்களின் திறமையின் மூலம் மக்களைக் கவர்கிறார்கள். வெறுங்கையில் விபூதி வரவழைப்பது, லட்டு-எலுமிச்சை வரவழைப்பது, வாயிலிருந்து லிங்கம் எடுப்பது, நாவில்லாத மணியிலிருந்து ஓசை எழுப்புவது என பலப் பல திறமைகளைக் காட்டி புகழின் உச்சாணிக்குச் சென்று பிறகு சில-பல காரணங்களால் உளுத்துப்போன புட்டபர்த்தி சாய்பாபா மற்றும்  பிரேமானந்தாக்களின் கதை இதுதான். இப்படி பிரபலமான ஒருவரின் கதையைப் பார்ப்போம்.  

 குழந்தை பிறக்கவில்லை என்றால் அதற்குக் காரணம் கணவனின் குறைபாடா அல்லது மனைவியின் குறைபாடா என இருதரப்பையும் கண்டறிந்து அதற்குரிய மருத்துவத்தை பலர் நாடுவதில்லை. அவ்வாறு செய்தால் தனது ஆண்மைத்தன்மை அம்பலமாகிவிடும் என்கிற அச்சத்தால் பெரும்பாலும் ஆண்கள் அதற்கு ஒப்புக் கொள்வதில்லை. இது அவரது ஆண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கிவிடுமாம். அதனால்தான் மனைவியை பலிகடாவாக்குகிறார்கள். குழந்தை பிறக்கவில்லை என்றால் பெண்களுக்கு மட்டும்தான தோஷம் இருக்குமாம். ஆனால் அத்தகைய தோஷம் ஆண்களுக்கு ஏன் இருக்கக்கூடாது என கேள்வி எழுப்ப யாரும் தயாரில்லை. 

ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் முன்பு ஒரு சாமியார் இருந்தார். பிள்ளை வரம் கொடுப்பதில் அன்றைக்கு அவரே இந்தியாவின் முன்னோடி. குழந்தையின்மைக்கான காரணத்தை அறிய மருத்துவரிடம் செல்வதைவிட சாமியார்களிடம் செல்வோர்களே அதிகம். பிள்ளைப் பேறு இல்லாத பெண்ணை இந்தச் சாமியாரிடம் அழைத்துச் செல்வார்கள். அப்பெண்ணுக்கு தோஷம் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிந்த பிறகே மேற்கொண்டு எதுவும் செய்ய முடியும் என்று கூறிவிடுவார்.  அதற்காக கழுத்தமைப்புடைய ஒரு குண்டு செம்பு, அது நிறையும் அளவுக்கு அரிசி, வெங்காயம் நறுக்குகிற அல்லது பழம் வெட்டுகிற ஒரு கூர்மையான கத்தி இவற்றுடன் சாமியாரைப் பார்க்க வேண்டும்.

பெண்ணை சாமியார் முன் அழைத்துச் செல்ல வேண்டும். அரிசியை செம்பில் கொட்ட வேண்டும். அரிசி நிரப்பப்பட்டுள்ள அந்த செம்பின் நடுவில் கூர்மையான கத்தியைச் சொருகி கத்தியின் கைப்பிடியைப் பிடித்துத் தூக்க வேண்டும்.  தூக்கும் போது கத்தியோடு அரிசியுடன் செம்பும் சேர்ந்து வர வேண்டும். அப்படி வந்து விட்டால் தோஷம் இல்லை என்று பொருள். யார் குத்தித் தூக்கினாலும் முதலில் கத்தி மட்டும்தான் கையோடு வரும். சாமியார் மீண்டும் முயற்சி செய்யச் சொல்வார். முடிவு அதேதான். 

இப்படியாக கத்தியால் குத்தி குத்தி செம்பில் உள்ள அரிசி மெல்ல மெல்ல இருகி கத்தியை இருகிப்பிடிக்கும் அளவுக்குச் செல்லும் போது குத்துவதை நிறுத்தச் சொல்லிவிடுவார். பெண்ணுக்கு தோஷம் இருப்பது உறுதி செய்யப் படும். தோஷத்தை யார் போக்க முடியும்? அதற்கான ஆற்றல் பெற்றவர் சாமியார்தானே! அதை நம்ப வைப்பதற்காக ஏற்கனவே குத்தி குத்தி இருகிப் போன செம்பில் உள்ள அரிசியில் கத்தியைச் சொருகித் தூக்குவார். என்ன அதிசயம்? இம்முறை கத்தியோடு செம்பும் சேர்ந்தே வரும். இதற்கு மேலும் ஆதாரம் வேண்டுமா சாமியார் சக்தி படைத்தவர் என்பதற்கு?  இப்பொழுது சாமியார் எதைச் சொன்னாலும் செய்யத் தாயாராகிவிடுகின்றனர். "இரவு நடைபெறும் சிறப்பு பூஜையில் பெண்ணுக்கு தோஷம் நீக்க வேண்டும். எனவே பெண்ணை ஆசிரமத்தில் விட்டுவிட வேண்டும். உடன் வந்தவர்கள் வெளியில் தங்க வேண்டும்" என்று கூறிவிடுவார்.

இரவு பூஜை நடைபெறும். மறுநாள் பெண்ணை அழைத்துக் கொண்டு ஊர் வந்து சேர்வார்கள். பத்து மாதம் கழித்து கண்டிப்பாய் குழந்தை பிறக்கும். அங்கு சென்று வந்தவர்களில் ஆகப் பெரும்பாண்மை பெண்களுக்கு குழந்தை பிறக்கிறதே, எப்படி? என ஒரு பெண் மருத்துவருக்கு ஐயம் எழ, அவருக்கும் 'குழந்தை வரம்' கேட்டு அங்கு செல்கிறார். வழக்கமாக நடைபெறும் அனைத்து வழிமுறைகளும் நடைபெறுகின்றன. இரவு நெருங்குகிறது. பூஜை நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். எங்கும் சாம்பிராணி உள்ளிட்ட வாசனை மூக்கைத் துளைக்கிறது. அங்கு செல்வோர் தன் நிலையை இழக்கும் ஒரு சூழல் நிலவுகிறது. பிறகு அரை இருட்டாய் இருக்கும் ஒரு அறைக்குள் தள்ளி விடுகின்றனர்.  திகைத்து நின்றவரின் தோளை வலுவான கரம் ஒன்று பற்றுகிறது. சுதாரித்துக் கொண்ட அவர், இடுப்பில் மறைத்து வைத்திருந்த இரும்புக் கம்பியால் கரங்களுக்குச் சொந்தக்காரனான ஒரு முரடனின் மண்டையைப் பிளக்கிறார். மருத்துவர் அங்கிருந்து தப்பி வந்து அங்கு நடக்கும் அப்பட்டமான வன்புணர்ச்சியை வெளி உலகுக்கு அம்பலப்படுத்துகிறார்.

இப்படி சாமியார்களின் அசாத்தியத் திறமைகளைக் கண்டு மதிகெட்டு மானம் இழப்பதை யார்தான் வெளியில் சொல்வார்கள். வாழ்நாள் முழுக்க மலடிப் பட்டத்தைச் சுமக்கும் இழிவைவிட ஒரு நாள் நடக்கும் இவ்விழிவை மறைப்பதில் தவறேதும் இல்லை என்கிற முடிவுக்கு வருகின்றனர். இதுவே சாமியார்களின் பலமாகவும் மாறிவிடுகிறது.

மக்களை, அதிலும் அதிக அளவில் பெண்களை துன்ப துயரங்களுக்கு உள்ளாக்கும் இச்சமூக அமைப்பை மாற்றுவதும், ஒவ்வொரு செயலின் காரண- காரியங்களை அறிந்து கொள்வதும், பொதுவாக மக்கள் தங்களின் அறிவு மட்டத்தை உயர்த்திக் கொள்வதன் மூலம் மட்டுமே இத்தகைய சாமியார்களை ஒழித்துக் கட்ட முடியும்.

Monday, February 21, 2011

கோயில் மாடும் பிரேமானந்தாவின் மரணமும்.

1990 களில் கொலை மற்றும் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட மக்கள் விரோத நடவடிக்கைகளால் பொது மக்களின் செருப்படிக்கு ஆளானவன் பிரேமானந்தா சாமியார். ஆண்டுகள் பல ஆனாலும் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள் இவனது பித்தலாட்டங்களை இன்னும் மறந்திருக்க மாட்டார்கள்.

இவனது குற்றச் செயலுக்கு நீதி மன்றம் இரட்டை ஆயுள் தண்டை வழங்கிய போது மகிழ்ச்சியடையாதவர்களே கிடையாது. காவல் துறை பாதுகாப்பு அளித்திராவிட்டால் பொதுமக்களாலேயே அவன் அடித்துக் கொல்லப்பட்டிருப்பான். அன்றே செத்துத் தொலைய வேண்டியவன் அரசுக்கு ஏராளானமாக பொருட் செலவை ஏற்படுத்திவிட்டு இப்பொழுது நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பலனின்றி செத்துப் போயுள்ளான். இவனுக்காக யாராவது கண்ணீா் வடிப்பார்களா?

ஆனாலும் ஒருவர் கண்ணீர் வடித்துள்ளார். பிரேமானந்தா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமாம். கோவையில் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்குக்கூட தமிழக அரசு பொது மன்னிப்பு வழங்கியதாம். ஆனால் பிரேமானந்தா சாமியாருக்கு மருத்துவச் சிகிச்சைக்குக்கூட விடுதலை செய்யவில்லையாம். அதாவது நோய்வாய்ப்பட்டுவிட்டால் விடுதலை செய்ய வேண்டுமாம்.

இது இந்து மக்கள் கட்சி (தமிழகம்) மாநிலத் தலைவர் அர்ஜீன் சம்பத்தின் கவலை. இது இன்றைய தினமணிச் செய்தி.

இவரது கூற்றுப்படி அரசு நடந்து கொண்டால் பித்தலாட்டக்காரன் ஒருவன்கூட சிறையில் இருக்க மாட்டான். கைது என்றவுடனே நெஞ்சுவலி வருவதுதானே பித்தலாட்டக்காரர்களுக்குக் கைவந்த கலை.

பிரேமானந்தா சாமியாருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை என சந்தேகம் எழுந்துள்ளதாம். எனவே பிரேமானந்தாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமாம். அவன் அடிக்கடி மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான் என்கிற செய்திகள் அவ்வப்பொழுது ஊடகங்களில் வரத்தானே செய்தன. பிறகு எப்படி அர்ஜீன் சம்பத்துக்கு மட்டும் சந்தேகம் வருகிறது. மருத்துவ வசதியே செய்திருக்கவில்லை என்றால் அவன் பத்து ஆண்டுகளுக்கு முன்பே செத்துப் போயிருப்பான். தமிழக அரசின் தயவால் அவன் பத்து ஆண்டுகள் அரசுக்கு செலவு வைத்துவிட்டுத்தான் செத்திருக்கிறான்.

பிரேமானந்தாவின் மரணம் குறித்து நீதி விசாரணை கேட்பது மட்டுமல்ல பிரேமானந்தாவோடு சிறையில் அடைக்கப்பட்ட சுவாமி கமலானந்தா உள்பட அனைவருக்கும் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டுமாம். 

ஏனய்யா கோயில் மாடுகளை சிறையில் அடைக்கிறீர்கள் என்று கேட்கிறார். கோயில் மாடுகள் என்ன செய்தாலும் அது குற்றமாகாது என்பதுதானே இந்து மதம் மக்களுக்கு போதித்துள்ள நீதி். கோயில் மாடுகள் வயலை மேய்ந்தாலோ, தோட்டங்களை சேதப்படுத்தினாலோ அதை யாரும் அடிக்கக்கூடாது. அப்படிச் செய்தால் அது தெய்வக் குற்றம். இப்படித்தானே கிராமப் புறங்களில் இன்றும் கோயில் மாடுகள் நடத்தப்படுகின்றன.

ஊர்ப் பயிரை மேய்ந்து தின்று கொழுத்து தன் விருப்பம் போல பசுக்களையும், கெடேரிகளையும் வன்புணர்ச்சி கொள்வதே கோயில் மாடுகளின் ஒரே தலையாயப் பணி. இதே நீதிதான் சாமியார்களுக்கும் வழங்கப்பட வேண்டுமாம். இந்த நீதியைத்தான் அர்ஜீன் சம்பத் நிலைநாட்ட விரும்புகிறார். கோயில் மாடுகளுக்கு இருக்கும் சுதந்திரம் சாமியார்களுக்கு இல்லையே என ரொம்பவும்தான் வருத்தப் படுகிறார் அர்ஜீன் சம்பத்.