Tuesday, July 5, 2011

வாழ்க்கை என்பது போராட்டமா? பூந்தோட்டமா?

நம்மை சுருக்கெனக் கடிக்கும் எறும்பை நசுக்கிக் கொல்கிறோம்; மிதிக்க வரும் யானையை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுகிறோம். நமது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அனைத்து விலங்குகளையும் நமது பலத்தால் கொன்றுவிடுகிறோம். இல்லை என்றால் விலங்குகளால் நாம் கொல்லப் படுவோம்.பலமானவைகள் மட்டுமே உயிர் வாழ முடியும். பலவீனமானவைகள் அனைத்தும் அழிந்து போகும். இது இயற்கை விதி.

விலங்குகளைப் பொருத்தவரை உயிர் வாழ்வதற்காகப் போராடுவதைத் தவிர வேறு நோக்கங்கள் கிடையாது. உயிர் வாழவும், இனப்பெருக்கம் செய்யவும் விலங்குகளுக்கு உணவு தேவை. தன்னைவிட பலமான எதிரி விலங்குகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளவும், இயற்கை சீற்றங்களை எதிர் கொள்ளவும் பாதுகாப்பான வசிப்பிடம் தேவை. சில விலங்குகள் தாங்களாகவே தங்களுக்கான வசிப்பிடங்களை உருவாக்கிக் கொள்கின்றன. ஒரு சில விலங்குகள் பாதுகாப்பான இடங்களைத் தேர்வு செய்து கொள்கின்றன. ஆக விலங்குகள் அனைத்தும் உயிர் வாழ்வதற்காக அன்றாடம் போராடித்தான் ஆக வேண்டும். அவைகளுக்கு வாழ்க்கையே ஒரு போராட்டம்தான். மனிதனுக்கும்தான். அதனால்தான் போராடுதல் (struggle) விலங்குகளின் தலையாயப் பொதுப் பண்பு என பிரபல ஹோமியோபதி மருத்துவர் இராஜன் சங்கரன் வரையறுக்கிறார்.  

ஆனால் மனிதன் என்கிற விலங்கு மட்டும் உயிர் வாழ்வதற்காக மட்டும் போராடுவதில்லை. அதற்கும் மேலே ஏறாளமான ஆசாபாசங்களை வளர்த்துக் கொண்டு அவைகளுக்குாகப் போராடுவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. விலங்குகளுக்கு, உணவும் பாதுகாப்பான இடமும் இருந்துவிட்டால் வாழ்க்கை வளமானதுதான். ஆனால் மனிதனுக்கோ தேவைகள் ஏறாளம். எவ்வளவு போராடினாலும் பலருக்கு வாழ்க்கை வளமாவதில்லை. எனவே மேலும் மேலும் போராட்டத்தை தீவிரப் படுத்துகிறான். இன்றைய உலகமயச் சூழலில் தேவைகள் அதிகரித்துள்ள அதே வேளையில் அவைகளைப் பெருவதற்கான போராட்டங்களும் மூர்க்கத் தனமாக மாறி வருகின்றன. அதனால்தான் கொலை, கொள்ளை, வரதட்சணை போன்ற கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

முயற்சி செய்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்கிறார்கள். இந்த முயற்சியேகூட போராட்டத்தின் ஒரு வடிவம்தானே. என்னதான் போராடினாலும் வழுக்கி விழுந்து எழ முடியாதவர்களே ஏராளம். எழ முயல வேண்டுமானால் மீண்டும் போராடித்தான் ஆகவேண்டும்.

போராடிப் போராடி அலுத்துப் போன மக்களுக்கு வாழ்க்கை என்றுமே பூந்தோட்டமாக இருந்ததில்லை. மக்களின் போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாற விவேகானந்தரைப் போல ஆன்மீகத்தை நாடுவதுதான் ஒரே வழி என சமீபத்தில் ஒரு பட்டி மண்டபத்தில் நடுவராக வீற்றிருந்த சுகி.சிவம் தீர்ப்பு எழுதி முடித்து வைத்தார். பட்டி மண்டபத் தீர்ப்புகள் மேல் முறையீடுகள் ஏதும் இல்லாத இறுதித் தீர்ப்பாயிற்றே! யார் கேள்வி கேட்க முடியும்?  

அரங்கில் குழுமியிருந்த சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவருமே ஆன்மீகத்தில் ஈடுபாடு உடையவர்கள்தான். இந்தியா ஒன்றும் நாத்திக நாடல்லவே. ஆன்றாடம் இறைவனை உள்ளன்போடு வழிபட்டு தங்கள் துன்பம் நீங்காதா என முறையிடும் மக்கள் நிறைந்த ஆன்மீக நாடுதானே இந்தியா. ஏற்கனவே ஆன்மீகத்தில் ஈடுபட்டும் இவர்களின் வாழ்க்கை ஒன்றும் பூந்தோட்டமாக மாறவில்லையே!

சுகி.சிவம் சொல்கின்ற ஆன்மீகம் விவேகானந்தரின் ஆன்மீகம் போல என்றால் அனைவரும் காவித் துண்டை போர்த்திக் கொண்டு ஆன்மீகம் வளர்க்க கிளம்பிவிட்டால் பிறகு யார் பயிர் வளர்ப்பார்கள்? யார் சோறு போடுவார்கள்? யார் ரோடு போடுவார்கள்? ஒரு வேளை காற்றை சுவாசித்து உயிர் வாழும் கலையைக் கற்றுக் கொடுப்பார்களோ! இப்பொழுதே அதைக் கற்றுக் கொடுத்தால் பட்டினியால் மாண்டு போகும் ஒரிசாவின் ஏழைகளைக் காப்பாற்றலாமே!

வாழ்க்கையை பூந்தோட்டமாக மாற்றியமைத்துக் கொண்டவர் விவேகானந்தராம்.  உண்மையான ஆன்மீகவாதியாக, அதாவது சாமியாராக மாறிவிட்டால் வாழ்க்கை எப்பொழுதுமே பூந்தோட்டமாம்.

பொதுவாக சாமியார்கள் திருமணம் செய்து கொள்வதில்லை. ஆகவே குடும்பம் இல்லை. கணவன் மனைவிக்கு இடையிலான போராட்டம் இல்லை. பிள்ளை குட்டிகள் இல்லை என்பதால் மழலையர் பள்ளிக்குப் படையெடுக்கும் வேலை இல்லை. உயர் கல்வி பயில சேர்த்த சொத்தை எல்லாம் இழந்து நடுத் தெருவில் நிற்க வேண்டியதில்லை. பெண் பிள்ளைகள் இல்லை என்பதால் மூட்டை மூட்டையாக வரதட்சணையும் சீர் செனத்தையும் சேகரிக்க வேண்டியதில்லை.

விண்ணை முட்டும் விலைவாசியை சமாளிக்க வேண்டியதில்லை. ஏன் என்றால் செல்லும் இடமெல்லாம் வாய் ருசிக்க ஓசியிலேயே வயிறு முட்டத் தின்றுவிடுவதால் உணவுக்கான போராட்டம் இல்லை. நியாய விலைக் கடைக்கும் மளிகை, காய்கறி கடைகளுக்கும் மஞ்சள் பையை எடுத்துச் சென்று கால் கடுக்க நிற்க வேண்டிய அவசியமில்லை. பால் விலை ஏறினால் இவர்கள் ஏன் போராடப் போகிறார்கள்? பாலைத்தான் சுண்டக் காயச்சி பாதாம் கலந்து கொடுத்து விடுகிறார்களே! பெட்ரோல், டீசல், எரிவாயு விலை ஏறினால் இவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? 

பேருந்து நிலையத்துக்கும், இரயிலடிக்கும் ஓட வேண்டிய அவசியமில்லை. போக்கு வரத்து நெரிசலில் சிக்காமல் 'சொய்ங்' என விண்ணில் பறந்து நகரங்களைக் கடப்பவர்கள், சாலைப் புழுதியில் சிக்காமல் குளு குளு மகிழுந்தில் உடல் கலைப்பின்றி பயணிப்பவர்கள்.

வரவு செலவு திட்டம் போட்டா இவர்கள் வாழ்க்கை நடத்துகிறார்கள்? சம்பளக்காரன் மாதாந்திர வரவு செலவு கணக்குப் போட வேண்டும். தவறினால் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும். சம்பளக்காரன் நடுத் தெருவுக்கு வந்தால் சமூகம் ஏளனமாய்ப் பார்க்கும். ஆனால் சாமியார்கள் நடுத் தெருவுக்கு வந்தால் பண மழை கொட்டும். 

சாலை வசதி, மின்சாரம், குடிநீர், சுகாதாரம், மருத்துவ வசதி போன்ற அடிப்படைத் தேவைவகள் கூட கிடைக்காததால் மக்கள் அன்றாடம் போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டம் இல்லாமல் எதுவுமே கிடைப்பதில்லை. ஆன்மீகத்தை நாடிவிட்டால் இவை எல்லாம் கிடைத்து விடுமா? வாழ்க்கை பூந்தோட்டமாக மாறிவிடுமா? அவ்வளவு ஏன்? குறைந்த பட்சம் கொசுத் தொல்லையிலிருந்தாவது மக்களை விடுவிக்க முடியுமா? இதைப் பற்றி கேள்வி எழுப்பினால் இதற்கும் ஒரு முல்லா கதையை கை வசம் வைத்திருப்பார்கள். கதை சொன்னால்தான் நம்மாளு கவுந்து விடுகிறானே!

சொற்பொழிகளும் ஆசிர்வாதங்களும்தான் இவர்களின் மூலதனம். இம்மூலதனம் 'ரெக்கரிங் டெபாசிட்' போல குட்டி போடுவதால் இவர்களின்  வாழ்க்கை எப்பொழுதும் பூந்தோட்டம்தான்.'ஷேர் மார்க்கெட்டில்' பணம் போட்டவன்கூட திவாலாகிவிடுகிறான். ஆனால் என்றுமே திவாலாகாத தொழில் ஆன்மீகம் ஒன்றுதான். ஆன்மீகத்தை நம்புகிறவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆன்மீகத்தை போதிப்பவர்கள் சொகுசாய் வாழ்கிறார்கள். இல்லாத ஒன்றை நோக்கி மக்களை இழுத்துச் செல்வதுதான் ஆன்மீகம். பட்டிமண்டபங்கள் நடத்தி, சொற்பொழிவுகளைப் பொழிந்து ஆன்மீகத்திற்கு புத்துயிரூட்ட சுகி.சிவம் போன்ற நவீன ஆன்மீகவாதிகள் சுற்றுலா செல்கிறார்கள்.

ஆன்மீகத்தை வளர்க்கவே விவேகானந்தர் அன்று ஊர் ஊராய் பிரசங்கம் செய்தார். அதே வேலையை இன்று சுகி.சிவம் போன்ற ஆன்மீக விற்பனையாளர்கள் கையில் எடுத்துக் கொண்டார்கள். இன்றைய ஆன்மீகம் மிகவும் 'மாடர்னானது'; ரொம்பவும் 'காஸ்ட்லியானது'. ஆயிரங்களை காலில் வைத்தால்தான் சாமியார்கள் கையை உயர்த்துவார்கள்;சுகி.சிவம் போன்றவர்கள் 'மைக்கை' பிடிப்பார்கள்.  ஆன்மீகமே சும்மா கிடைக்காத போது வாழ்க்கை மட்டும் சும்மா கிடைத்துவிடுமா?

சாமான்யனுக்கு வாழ்க்கை என்பது எப்பொழுதும் போராட்டம்தான். 

14 comments:

 1. சாமான்யனுக்கு வாழ்க்கை என்பது எப்பொழுதும் போராட்டம்தான். இதுதான் மாறாத அனுபவ உண்மை

  ReplyDelete
 2. இன்னும் சாஷே பாக்கெட்டுகளில் போட்டு விற்றாலும் விற்பார்கள் இந்த ஆன்மீகத்தை..

  ReplyDelete
 3. சாமியார்கள் நடுத் தெருவுக்கு வந்தால் பண மழை கொட்டும். சாமான்ய சாமியார்க்கெல்லாம் பணமழை கொட்டுலதில்லை சாமி.

  ReplyDelete
 4. சாமான்ய சாமியார்கள் ஆன்மீகம் வளர்க்க ஊர் ஊராகச் செல்வதில்லை. இவர்கள் நடுத்தெருவுக்கு வந்தால் பாதி தேங்காய் மூடிதான் கிடைக்கும். இவர்களுக்கு பணமழை கொட்டாது என நீங்கள் சொல்வது சரிதான். அவர்களைப் பற்றி நாம் இங்கே பேசவில்லை. ஆன்மீகத்தை வளர்ப்பதையும் மீட்டெடுப்பதையும் தொழிலாகக் கொண்ட சாமியார்களைப் பற்றித்தான் நாம் பேசுகிறோம்.

  ReplyDelete
 5. தங்களையும் இந்த பதிவையும் வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழ் உள்ள முகவரியில் வந்து பார்க்கவும்.

  http://blogintamil.blogspot.com/2011/10/5102011.html

  ReplyDelete
 6. தங்களையும் இந்த பதிவையும் வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழ் உள்ள முகவரியில் வந்து பார்க்கவும்.

  http://blogintamil.blogspot.com/2011/10/5102011.html

  ReplyDelete
 7. தங்களையும் இந்த பதிவையும் வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழ் உள்ள முகவரியில் வந்து பார்க்கவும்.

  http://blogintamil.blogspot.com/2011/10/5102011.html

  ReplyDelete
 8. தங்களையும் இந்த பதிவையும் வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழ் உள்ள முகவரியில் வந்து பார்க்கவும்.

  http://blogintamil.blogspot.com/2011/10/5102011.html

  ReplyDelete
 9. தங்களையும் இந்த பதிவையும் வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழ் உள்ள முகவரியில் வந்து பார்க்கவும்.

  http://blogintamil.blogspot.com/2011/10/5102011.html

  ReplyDelete
 10. போராட்டமே வாழ்க்கை.. அனைவரும் பணக்காரர் ஆக முடியாது ஆனால் ஒரு சிலர் பணக்காரராகவும் ஒரு சிலர் ஏழ்மையிலும் உழல வேண்டிய அவசியம் இல்லை... அதை எதிர்த்து போராடுவதே வாழ்க்கை

  ReplyDelete