சனிப்பெயர்ச்சியையொட்டி ராசி பலன் குறித்து தொடர்ந்து மூன்று பதிவுகளை எழுதிவிட்டேன். இனியும் ராசி பலனைப் பற்றி எழுதவேண்டுமா என சலிப்புற்ற போது இந்தப் புத்தாண்டு வந்து என்னை மீண்டும் ராசி பலனைப் பற்றி எழுத வைத்தவிட்டது.
இன்று (01.01.2012) விஜய் தொலைக்காட்சியில் "12 ராசிக்காரர்களுக்கு 2012 எப்படி இருக்கும்?" என்பது பற்றி கோபிநாத்தின் "நீயா? நானா?" நிகழ்ச்சியில் காரசாரமான விவாதம் வேறு நடந்தது. வேறு வழியில்லை, எழுதித்தான் ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
மக்கள் சந்திக்கும் இன்றைய பிரச்சனைகளின் சாரத்தை வார்த்தைகளாவும், வரிகளாகவும் வடித்து ராசிகளுக்கிடையில் இடம் மாற்றிப் போட்டு இதுதான் உங்களின் ராசிபலன் என்று எழுதுகிறார்கள். உண்மையில் இவர்கள் வடிக்கும் வார்த்தைகளும்,வரிகளும் மக்கள் அனைவரும் அன்றாடம் சந்திக்கும் சம்பவங்களும் பிரச்சனைகளும்தான். எதைப் போட்டாலும் அது நமக்குப் பொருந்தும்.
இவ்வாறு இவர்கள் போடும் ராசி பலனில் உள்ள முரண்பாடுகளை ஒப்பிட்டுப் பார்த்தாலே ராசி பலன் ஒரு மோசடி என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
புத்தாண்டான இன்று 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலன் பற்றி தினமணி நாளேட்டிலும் ஒரு நாட்காட்டியிலும் வெளியாகியுள்ள ராசி பலன்களை மட்டும் இங்கே ஒப்பிட்டுள்ளேன். நீங்களே பரிசீலனை செய்து பாருங்கள். ராசி பலன் ஒரு மோசடி என்பது தெளிவாகப் புரியும்.
01.01.2012 அன்றைய ராசி பலன்.
ராசி | தினமணி | நாட்காட்டி |
மேஷம் | ஆர்வம் | பொறுமை |
ரிஷபம் | தோல்வி | ஆக்கம் |
மிதுனம் | வரவு | மேன்மை |
கடகம் | கவலை | சந்தோஷம் |
சிம்மம் | வெற்றி | சுகம் |
கன்னி | முயற்சி | நம்பிக்கை |
துலாம் | போட்டி | ஜெயம் |
விருச்சிகம் | நட்பு | லாபம் |
தனுசு | நன்மை | அமைதி |
மகரம் | சுகம் | இன்பம் |
கும்பம் | கவனம் | ஆதாயம் |
மீனம் | மேன்மை | பாசம் |
மேற்கண்ட ராசி பலன்களில் உள்ள முரண்பாடுகளை விளக்க வேண்டியதில்லை.கடக ராசிக்காரனுக்கு தினமணியில் கவலையும் நாட்காட்டியில் சந்தோஷமும் பலனாக சொல்லப்பட்டிருக்கிறது. இது அபத்தம் இல்லையா? ராசிபலன் என்பது 'அறிவியல்பூர்வமானது', 'துல்லியமானது' என வாதாடும் ஜோசியக்காரர்களின் சட்டையைப் பிடித்துக் கேளுங்கள் - ஏன் இத்தகைய முரண்பாடுகள் என்று?
வார்த்தைகளை இடம் மாற்றிப் போட்டு அதையே அடுத்த நாளுக்கான பலனாக எழுதுகிறார்கள். சிலர் இதையே விரிவு படுத்தி வாக்கியங்களாக்கி வார ராசி பலன், மாத ராசி பலன், ஆண்டு ராசி பலன் என எழுதுகிறார்கள்.
வார்த்தைகளை இடம் மாற்றிப் போட்டு அதையே அடுத்த நாளுக்கான பலனாக எழுதுகிறார்கள். சிலர் இதையே விரிவு படுத்தி வாக்கியங்களாக்கி வார ராசி பலன், மாத ராசி பலன், ஆண்டு ராசி பலன் என எழுதுகிறார்கள்.
ராசி பலனை மக்கள் ரொம்பவேதான் நம்புகிறார்கள். ராசி பலனை நம்புவது நீடிக்கும் வரை மக்கள் தங்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கான உண்மையான காரண காரியங்களைக் கண்டறிய முடியாது. காரண காரியங்கள் தெரியாத போது அதற்கான தீர்வுகளும் கிடைக்கப் போவதில்லை. எனவே ராசிபலன் பார்ப்பதும் நிற்கப் போவதில்லை.
உண்மைதான். ஆனால் மனித மனசுகளுக்கு எதாவது ஆறுதல், என்ன ரூபத்திலாவாது தேவைப்படுதே!
ReplyDeleteஇளமைக்காலத்தில் என் தோழிகளில் யாருக்கு 'நண்பர்களால் செலவு' என்று வருகிறதோ அவர்தான் அன்று மற்ற தோழிகள் அனைவருக்கும் காஃபி வாங்கித் தரவேண்டும் என்று 'கொள்கை'[ வைத்துக்கொண்டு இருந்தோம்:-)))))))
ஒரு தொடர்கதை போல ஒன்றை எழுதுங்களேன். பல பதிவுகளில் உங்கள் எழுத்தாற்றல் சிறப்பாக உள்ளது.
ReplyDeleteராசி பலன்கள் அங்கிகரிக்கப்பட்ட மோசடியா? அங்கீரப்படாத மோசடியா?
ReplyDeleteதுளசி கோபால் அவர்களுக்கு,
ReplyDeleteராசிபலன்கள், 'நண்பர்களால் செலவு' என்பதால் காஃபி வாங்கிக் கொடுக்கும் 'கொள்கை'யோடு முடிகின்ற ஒன்றல்ல.
மனிதனின் துன்பங்களுக்கான காரண காரியத்தை அறிவதற்கும் அதை களைவதற்கு வழி தேடுவதற்கும் முட்டுக்கட்டை போட்டு மனிதனை விரத்திக்குள் தள்ளிவிடுவதைத்தான் ராசி பலன்கள் செய்து வருகின்றன.
தடைகளைத் தாண்டும் போதுதான் நிரந்தமான மன ஆறுதலைப் பெறமுடியும். அதற்கு ராசி பலன்கள் எப்போதும் உதவுவதில்லை.
ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு,
தொடர்கதை போல ஒன்றை எழுதுவது என்னைப் பொருத்தவரை அவ்வளவு எளிதானதல்ல. எனினும் எதிர்காலத்தில் முயற்சிக்கிறேன். ஊக்கமளித்தமைக்கு நன்றி!
வலிபோக்கன் அவர்களுக்கு,
ராசி பலன்கள் அங்கீகரிக்கப்படாத மோசடிகளே.
எதை எதையோ ஒழித்துக்கட்ட சட்டங்கள் இயற்றுகிறார்கள். மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்கும் ராசி பலன்களை ஒழித்துவிட்டால் மக்களிடம் தன்னம்பிக்கையாவது வளரும். செய்வார்களா?