Thursday, January 19, 2012

உறவுகளை அறுத்தெறியும் அரசு!

பண்டிகைகள் தேவைதானா?

எதற்காகப் பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும் என்கிற கேள்வி பல ஆண்டுகளாகவே என்னுள் எழுந்த வண்ணம் உள்ளது. 

"பண்டிகைகள் நம் பாரம்பரியம் அல்லவா, விட்டுவிட முடியுமா?"

"உறவுகள் அப்போதுதானே ஒன்றுபட முடியும்!"

"நம்மை வாழவைக்கும் விலங்குகளுக்கும், இயற்கைக்கும், கடவுளுக்கும் நன்றிக்கடனை செலுத்தவேண்டாமா?"

"பண்டிகை இல்லை என்றால் பிறகு எப்படித்தான் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது?”

"உறவுகளையும் நட்பையும் பண்டிகைகள்தானே புதுப்பிக்கின்றன!"

இப்படி பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கான 'நியாயங்கள்' மக்களிடையே இருக்கத்தான் செய்கின்றன.

விழாக்கள் நுகர்வுக்கானவைகளா?

ஆனால் வியாபாரிகளுக்கு பண்டிகைகள் கொண்டாடுவதற்கான காரணங்கள் இரண்டாம் பட்சமானவை. கல்லாப் பெட்டி நிறைகிறதா என்பதே அவர்களின் கவலை.சமீப காலமாக முதலாளிகளும் வணிகர்களும் கல்லா நிறைவதற்கான புதுப் புது யுக்திகளை கையாளத் தொடங்கிவிட்டார்கள். இத்தகைய யுக்திகள் மேற்சொன்ன நியாயங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டன. அனுபவிப்பதற்காகத்தான் பண்டிகைகள் என்கிற நுகர்வு பண்பாட்டை திணித்து வருகின்றனர். "நாங்க எஞ்சாய் பண்ண வந்திருக்கோம்" என விழாக்களின் போது மக்கள் அளிக்கும் பேட்டிகள் இதை உறுதி செய்கின்றன. 

நியாயங்கள் பல சொல்லப்பட்டாலும் ஒரு சில காரணங்களுக்காக சில பண்டிகைகைளை நாமே கொண்டாடுவதில்லை. எமது மிக முக்கியமான மூதாதையர் ஒருவர் பொங்கல் அன்று இறந்து விட்டாராம். ஆகையினால் பெரும் பொங்கல் என்று சொல்லக்கூடிய மிக முக்கியமான பொங்கல் விழாவையே எனக்குத் தெரிந்து கடந்த ஐம்பது ஆண்டுகளாக எமது உறவினர்கள் யாரும் கொண்டாடுவதில்லை.

ஒரு சில பண்டிகைகளை-விழாக்களை சிலர் கொண்டாடுவதில்லை என்றாலும் திருமண விழா மட்டும் அவரவர் சக்திக்கேற்ப கண்டிப்பாக நடத்தப் படுவதுண்டு. பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கிற திருமணங்களாக இருந்தாலும் சரி அல்லது பெற்றோர்கள் எதிர்த்த போதும் அதையும் மீறி காதல் மணம் புரிந்தோருக்கு அதை முறைப்படுத்துவதற்கு அதன் பிறகு நடக்கும் திருமண வரவேற்பு விழாவாக இருந்தாலும் சரி இவ்விழாக்கள்தான் உறவுகளை ஒன்றிணைக்கவும் நட்பை பலப்படுத்தவும் உதவுகின்றன.

முன்பெல்லாம் கைநிறைய ஊதியத்துடன் கூடிய அரசு வேலை கிடைத்தால்தான் சொந்த ஊரை விட்டு வெளியூருக்குச் செல்வார்கள். இப்படி 'பிழைக்கச் செல்வோர்' ஒரு சிலர்தான்.  அந்த ஒருசிலர்கூட திருமண விழா உள்ளிட்ட எந்த விழாவாக இருந்தாலும் தொலை தூரத்தில் இருந்தாலும் குடும்பத்தோடு வந்து கலந்து கொள்வார்கள். அதற்காக ஆகும் செலவை அவர்கள் ஒரு பெரிய சுமையாகக் கருதவில்லை. அவர்களும்கூட பணி ஓய்வு பெற்ற பிறகு சொந்த ஊருக்கே வந்து நிரந்தரமாய் தங்கிவிடுவார்கள். மற்றபடி ஆகப் பெரும்பாலானோர் சொந்த பங்தங்களோடும் நண்பர்களோடும் வாழுகின்ற சூழல் அன்று நிலவியது.   

உறவுகளைத் துறத்தும் உலக மயம்

ஆனால் இன்றோ நிலமை தலைகீழாக மாறிவிட்டது. உலக மயம் நடைமுறைக்கு வந்த பிறகு விவசாயமும் கிராமப்புற சிறுதொழில்களும் நலிவடைந்தன. வேளாண்மைக்குத் தேவையான நீர் ஆதாரம் குறைந்து போனதாலும், விளை பொருளுக்கு உரிய விலை கிடைக்காமையாலும் பலர் வேளாண்மையைக் கைவிட்டனர். வேறு வழி இன்றி பிழைப்புக்காக பலர் கிராமங்களை விட்டு வெளியேறி நகரங்களில் தஞ்சமடைந்தனர். சொல்லிக் கொள்ளும் படியான வருவாய் இல்லை என்றாலும் எப்படியோ வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்ற நம்பிக்கையோடு நகரங்களிலேயே நிரந்தமாகத் தங்கத் தொடங்கி விட்டனர்.

வயித்துக்கும் வசிப்பிடத்திற்குமே எட்டாத போது நல்லது கெட்டதுகளுக்கு கிராமங்களை எட்டிப் பார்ப்பதும் குறைந்து போனது. உறவுகளும் நட்பும் குறைந்து போனாலும் இதுவரை உறவு அறுந்து போகாமல்தான் இருந்து வருகிறது. கடன ஒடன வாங்கியாவது உறவையும் நட்பையும் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தொடர் வண்டிப் பயணம்!

இந்தச் சூழலில் தை பிறந்தது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். ஆனால் இந்தத் தையில் பலருக்கு வழியே அடைபட்டுவிட்டது. ஒரு சிலருக்கு வழி இருந்தாலும் பாதை கல்லும் முள்ளுமாக மாறி விட்டது. 

சுமார் 530 கிலோமீட்டர் தொலைவிலிருந்து ஒரு பெரிய தொழிற்சாலையில் பயிற்சி எடுக்க வந்த பயிற்சி மாணவன் (apprentice) இந்தப் பொங்கலுக்கு தனது சொந்த ஊருக்குச் சென்றுவந்தான். தொழிற்சாலை உணவகத்தில் (canteen) வழங்கப்படும் பூரியைக்கூட ஏற்றுக் கொள்ள முடியாத பலகீனமான உடல்வாகு உள்ளவன். 

வசதி குறைவான குடும்பம் என்பதால்தான் பொறியியல் பட்டயப் படிப்பு (diploma) படித்துவிட்டு மாதம் மூவாயிரம் ஊக்கத் தொகை கிடைத்தாலும் பரவாயில்லை என்று தொலைதூரமாக இருந்தாலும் பயிற்சி பின்னாளில் பயனளிக்கும் என நம்பி வந்துள்ளான். ஊரைவிட்டு வந்து மூன்று மாதம் ஆகிவிட்டது. பொங்கலுக்கு கண்டிப்பாக போக வேண்டும் என முடிவெடுத்து பயணமானான். நேரடிப் பேருந்து வசதி இருந்தாலும் தொடர் வண்டியில் செல்ல முடிவெடுத்து உட்கார இடம் கிடைக்க வில்லை என்றாலும் இடிபடாமல் நிற்க முடிந்ததே என தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு நான்கு மணி பயணத்திற்குப் பிறகு ஈரோடு சென்றடைந்தான்.

விருது நகர் செல்லும் தொடர் வண்டியிலாவது உட்கார இடம் கிடைக்குமா என்கிற கவலை,தொலைந்து போன தூக்கத்தின் வேதனையை மறக்கடித்துவிட்டது. தொடர் வண்டியும் வந்தது. ஏறவே முடியாத அளவுக்கு கூட்டம் ஏற்கனவே நிரம்பி வழிந்ததால் உட்கார்ந்து செல்லலாம் என்கிற கனவும் தகர்ந்து போனது. அலைமோதிய கூட்டத்தைக் கண்டு ரயில்வே நிருவாகம் சரக்குப் பெட்டியைத் திறந்துவிட மொத்தக் கூட்டமும் திபு திபு வென அப்பெட்டிக்குள் நுழைந்தது. இவனோ பலகீனமானவன். எப்படியோ தட்டுத்தடுமாறி பெட்டியில் ஏறிவிட்டான். மூட்டைகளுக்குப் பதிலாக மனிதர்கள் அடைக்கப்பட்ட பெட்டியை இழுத்துக் கொண்டு வண்டியும் நகர்ந்தது. மூண்று மணி நேரம் மூச்சுவிட முடியவில்லை என்றாலும் எப்படியோ தம் கட்டிக் கொண்டு மதுரை வந்து சேர்ந்தான். 

மதுரையிலாவது இடம் கிடைக்குமா என ஏங்கியவனுக்கு அடுத்த பேரிடி காத்துக் கொண்டிருந்தது. சரக்குகளை ஏற்ற வேண்டும் என சரக்குப் பெட்டியிலிருந்த அனைவரையும் கீழே இறக்கிவிட்டார்கள். இங்கே சரக்குக்கு இருந்த மதிப்புகூட மனிதர்களுக்கு தரப்படவில்லை. மற்ற பெட்டிகளிலும் கூட்டம் அலைமோதியது. என்ன செய்ய? ஊர்ப் போய்ச் சேர வேண்டுமே! பொங்கலை மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்ற புத்துணர்வு இவனை உந்தித்தள்ள, எப்படியோ முண்டியடித்து படியில் தொத்திக் கொண்டான். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு படியின் பிடியிலிருந்து சொந்த ஊரான விருதுநகரில் விடுபட்டான்.

இந்த அனுபவத்தை அவன் என்னிடம் பகிர்ந்து கொண்ட போது பொங்கலைக் கொண்டாடச் சென்றானா இல்லை வேதனையை சுமக்கச் சென்றானா என்பதை அவனது முகமே எனக்கு உணர்த்திவிட்டது.

முன்பதிவு செய்துவிட்டு பேசாமல் பேருந்தில் சென்றிருந்தால் இத்தகைய வேதனைகள் வந்திருக்காதே என நான் கேட்ட போது, "சார் பஸ்சில் சென்றால் போக வர ரூ.800. அதுவே ரயிலில் சென்று வர ரூ.320 தான். ஆனால் ரயிலில் இவ்வளவு கூட்டம் இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை" என்றான். 480 ரூபாய்தான் இவனது பயணத்தை கல்லும் முள்ளும் நிறைந்த கரடு முரடான பயணமாக மாற்றி விட்டது. இவனைப் போலதானே மற்றவர்களும் இதை ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.

சொகுசுப் பேருந்துப் பயணம்!

மலரத் துடிக்கும் மொட்டுகள் கூட பஞ்சாங்கப் பரதேசிகளால் மார்கழியில் உறைந்து, பிறகு தையில்தானே மலர்கின்றன. தை பிறந்து விட்டதால் பல மொட்டுகள் ஒரே நேரத்தில் மலர்வதால் மணவிழாக்களோ எக்கச் சக்கம். இதனால் பேருந்துகளிலும் தொடர் வண்டிகளிலும் கூட்ட நெரிசல் குறையவில்லை. அலுப்புத் தெரியாமல் இருப்பதற்காக முன்பெல்லாம் தொடர்வண்டிப் பயணத்தை தேர்வு செய்வார்கள். சமீப காலமாக தொடர் வண்டிகளில் கூட்டம் நிரம்பி வழிவதால்,தொடர் வண்டிப் பயணம் அலுப்பாய்தான் இருக்கிறது. அலுப்பாய் இருந்தாலும் இன்று பலர் தொடர் வண்டியில்தான் பயணிக்கிறார்கள்.

நண்பரின் மகனுக்குத் திருமணம். எனக்கும் மணவிழா அழைப்பு வந்தது. குடும்பத்தோடு வர வேண்டும் என கண்டிப்பாய் கூறிவட்டார். திருமணமோ திருச்சியில். ஏழு மணி நேரம் பயணிக்க வேண்டும். உடல் நலம் குன்றி இருந்தாலும் திருமணத்தை புறக்கணிக்க முடியாது. தொடர் வண்டி வசதி இருந்தால் படுக்கை வசதியுடன் கூடிய பெட்டியில் சற்று கூடுதல் கட்டணமாக இருந்தாலும்-பேருந்து கட்டணத்தைவிட குறைவுதான்-சென்று வரலாம். அதற்கும் வழி இல்லை. எனவே சொகுசுப் பேருந்தில் சென்று வர தீர்மானித்து முன்பதிவு செய்துவிட்டேன். 

முதல் நாள் செல்லும் போது இரவுப் பயணம். அடுத்த நாள் திரும்பி வரும் போதும் இரவுப் பயணம்தான். 500 ரூபாய் கட்டணத்தில் சொகுசுப் பேருந்தில்தான் பயணம். இருக்கையில் முப்பது டிகிரியில் சாய்ந்து கொண்டால் சொகுசாய் தூங்கலாம் என கண்களை மூடினால் கொக்கிகள் - window lock- இல்லாத சன்னல்களின் கண்ணாடிகள் பேருந்து ஓடும் வேகத்தின் அதிர்வுகளால் விலகி உஸ் என்ற பனிக்காற்று உள்ளே நுழைந்து "உறங்காதே" என எனக்கு பயணம் முடியும் வரை வேலை கொடுத்து வந்தது. மற்றவர்களும் இதையேதான் செய்து வந்தனர். 

உறக்கம் தொலைந்ததால் ஒட்டிக் கொண்ட அலுப்பு, மணவிழாவில் பழைய நண்பர்களைக் கண்டபோது எங்கோ ஓடி ஒளிந்து விட்டது. நண்பர்களைப் பிரியும் போது ஓடி ஒளிந்த அலுப்பு மீண்டும் நம்மை ஒட்டிக் கொள்ளும். இது தவிர்க்க முடியாதது. 

மணவிழாவுக்கு அழைத்திருந்த நண்பரைக் கண்டபோது,  "என்ன நீங்க மட்டும் வந்திருக்கீங்க. வீட்ல வரலையா, பிள்ளைங்க வரலயா?" என அவர் வினவும் போது அவரைப் பொருத்தவரையில் நட்பில் ஒரு கீரல் விழுந்து விட்டது என்றுதான் பொருள். என்னைப் பொருத்தவரையில், என் ஒருவனுக்கே பேருந்துக் கட்டணம் 500 ரூபாய் -முன்பு இதுவே 200 ரூபாய்தான்-நான்கு பேர் கொண்ட குடும்பம் என்றால் ரூ.2000. என்றுதான் என் மனம் கணக்குப் போடும். என் மனம் போடும் இந்தக் கணக்கு எதார்த்தமானது உங்களுக்கும்தான்.

ஏதோ சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக நம்மால் ஒரு திருமணவிழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனால் காரணத்தைச் சொல்லி சமாளித்துவிடலாம்.

நட்போ உறவோ இங்கு கணக்கு என்னவோ ஒன்றுதான். அடிக்கடி இப்படி திருமணங்களுக்குச் செல்ல நேர்ந்தால் "இனி முடியுமா?" என்றுதான் எண்ணத் தோன்றும். திருமணங்களுக்குச் செல்வது மெல்ல மெல்ல குறைந்து பிறகு நின்றே போய்விடும். அன்றே உறவும் நட்பும் அறுந்து போகும்.

7 comments:

 1. நிஜம் தான். பயணங்கள் சிரமத்தையும், செலவையும் கூட்டுகின்றன.
  யதார்த்தமான பதிவு.
  நன்றி.

  ReplyDelete
 2. ஊரான் வணக்கம்.
  வருத்தம் நிறைந்த இந்தப் பதிவு உங்களின் அனுபவம் மட்டுமல்ல.
  பலரின் அனுபவம்தான்.
  இன்றைய பண உலகத்தில் மனங்கள் நினைப்பதை செய்ய முடியாத நியிக்குத் தள்ளப் பட்டு விட்டோம்.
  என்றாவாது இது மாறியே ஆக வேண்டும்.

  ReplyDelete
 3. பண்டிகைகள், பண்டிகைகளுக்கான பயணங்கள், பயணங்களுக்கான போராட்டங்கள்.... ஒரு பாமரன் இனி சொந்த ஊருக்குப்போவதும்கூட சோகக்கதையாகிவிடலாம்... இந்தக் கட்டுரையின் பாதிப்போடு, எனது கதையொன்றையும் பகிர்ந்துகொள்ள விருப்பம்.
  http://puthiyapaaamaran.blogspot.com/2011/10/blog-post_26.html

  ReplyDelete
 4. பண்டிகை காலங்களில் கூட்டத்திற்க்கு பயந்து ஊருக்கு போகாமல், சென்னையிலேயே தங்கி விட்டால் இன்னொரு பிரச்சனை இருக்கிறது. பண்டிகை தினங்களில் மூடப்பட்டிருக்கும் உணவகங்கள் மற்றும் குறைந்தது ஒரு வாரத்திற்க்கு மேல் கிடைக்கும் தனிமை! கட்டுரையில் வரும் விருதுநகர் இளைஞரை போல நானும் பலமுறை இந்த பண்டிகை கால தொந்தரவை அனுபவித்துள்ளேன். அப்போதெல்லாம் பண்டிகைகளின் மீது கடும் எரிச்சல் வரும், இது கிட்டத்தட்ட இன்றைய இளைஞர்கள் அனைவர் வாழ்விலும் நிகழும் ஒரு பிரச்சனை. கட்டுரையின் வரிகளில் கடந்த காலத்திற்க்கு சென்று வந்தேன், சிறப்பான கட்டுரை. எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

  ReplyDelete
 5. மற்றுமொரு செய்தியையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். நிரம்பி வழியும் தொடர் வண்டிப் பயணங்களில் மற்றுமொரு ஆபத்தும் நம்மை நாடி வருகிறது. கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்ட பிறகு பயணிக்கும் நான்கு மணி நேரத்திற்கு எங்கும் நகர முடியாது. சிறு நீர் முட்டினாலும் அடக்கித்தான் ஆகவேண்டும். அப்படி அடக்கிக் கொள்வதால் என்னென்ன வியாதிகள் நமக்கு வரும் என்பது அப்போதைக்குத் தெரியாது.

  நான் இந்தக் கட்டுரையை வெளியிட்டு இரண்டு நாட்கள்கூட ஆகவில்லை. அவ் விருதுநகர் இளைஞன் கடுமையான மஞ்சள் காமாலை நோயால் தாக்குண்டு விருதுநகரில் தனியார் மருத்துவ மனை ஒன்றில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.

  பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டு அஞ்சி தொடர் வண்டியில் பயணித்தால் செலவு குறையுமே என எண்ணியது தப்பாப் போச்சு. இப்போது அவ்விளைஞனுக்கு சில ஆயிரங்கள் காலியானதுதான் மிச்சம்.

  இந்த அரசு உறவுகளை முறிப்பது மட்டுமல்ல உயிரைக்கூட எடுத்துவிடும்.

  கருத்துக்களைப் பகிர்ந்த ராஜபாட்டை ராஜா, ரத்னவேல் ஐயா, அப்பு, புதிய பாமரன் மற்றும் சீனிவாசன் ஆகிய அனைவருக்கும் எனது நன்றி!.

  ReplyDelete