Monday, December 31, 2012

நவீன ரவுடிகள்!

ஒடிசா மாநில அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் மின் உற்பத்தி செய்வதற்கான மின்கலங்களை நிர்மானிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எல்லா வேலைகளையும் அந்நிறுவன ஊழியர்களைக் கொண்டே செய்துவிட முடியாது என்பதால் சில வேலைகளை அயல் பணிகள் என்ற பெயரில் (out sourcing) ஒப்பந்ததாரர்கள் மூலம் செய்து முடிப்பார்கள். ஒப்பந்ததாரர்களோ தொழில் அனுபவமுள்ள ஆட்களை வைத்து வேலைகளை முடிப்பார்கள். அவ்வாறு வேலை நடபெறும் போது திடீரென ஒரு கும்பல் வருகிறது. “பந்த் கரோ” என கூச்சலிடுகிறது. வேலையாட்கள் திகைத்து நிற்கிறார்கள். “எங்கள் ஆட்கள் 15 பேருக்கு வேலை கொடு. இல்லையேல் வேலை செய்ய விடமாட்டோம்” என மிரட்டுகிறது. உள்ளூர் ஆட்களை வைத்துதான் வேலை செய்ய வேண்டும் என்கிறது அக்கும்பல். ஏற்கனவே போதுமான ஆட்கள் இருக்கும் போது வேலை தெரியாத புதிய ஆட்களை வைத்து என்ன செய்ய முடியும்? இறுதியில் 15000 ரூபாயை பிடுங்கிக்கொண்டு அக்கும்பல் சென்றுவிடுகிறது. பிறகு யார் என விசாரித்தால் அவர்கள் ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கவாதிகளாம். அதேபோல மறு நாள் ஒரு கும்பல் வருகிறது. அவர்களும் “பந்த் கரோ” என்கிறார்கள். இறுதியில் பணம் கைமாறுகிறது. இவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் பி.எம்.எஸ். தொழிற்சங்கவாதிகளாம். தொழிற்சங்கத்தின் பெயரால் இப்படி தொழிற்சங்கப் போர்வையில் பணம் பறிப்பது வடக்கே.

இங்கே எப்படி?

ஒரு குறிப்பிட்ட சாதிக்கட்சியின்  காஞ்சிபுரம் மாவட்ட துணைச் செயலாளர் ஒருவர் சமீபத்தில்  வெட்டிக் கொலை செய்யப்பட்டதை பெரும்பாலும் அறிந்திருப்பீர்கள். இவரை ஆதிக்கச்சாதி வெறியினர் கொலை செய்துவிட்டார்கள் என முதலில் வீர வசனம் பேசியவர்கள் பிறகு இது கட்டப்பஞ்சாயத்து மோதலில் தனது சொந்தக்கட்சியினராலேயே செய்யப்பட்ட கொலை என தெரிய வந்ததும் அமுங்கிப்போனார்கள்.

ஒரு வன்னியரிடமிருந்து ஒரு தாழ்த்தப்பட்டவர் வாங்கிய கடனும் வட்டியுமாக சேர்த்து 1 கோடியே 39 லட்சத்ததை எட்டுகிறது. கடனைத் திருப்பிக் கேட்டபோது வாங்கியவர் தொகையைத் தராமல் இழுத்தடிக்கிறார். பெரும்பாலும் கொடுக்கல் வாங்களில் நடக்கின்ற ஒன்றாக இருந்தாலும் இது பெருந்தொகையாயிற்றே! கொடுத்தவர் சும்மா இருப்பாரா? நெருக்கடி கொடுக்கிறார். கடன் வாங்கியவர் மேற்கண்ட சாதிக்கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளரை அனுகி தன்னை ‘டார்ச்சர்’ செய்வதாக முறையிடுகிறார். “கடனை திருப்பித் தர முடியாது என சொல்” என உசுப்பிவிடுகிறார். பணத்தை எப்படியாவது திரும்பப் பெற்றுவிட வேண்டும் என்பதற்காக கடன் கொடுத்தவர் காஞ்சிபுரத்தில் உள்ள பிரபலமான வன்னிய  சாதி தாதாவை அனுகுகிறார். இப்பிரச்சனை முற்றுகிறது.  பணத்தைப் பெறுவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் குறிப்பிட்ட சாதிக்கட்சியின்  மாவட்டத் துணைச் செயலாளரை போட்டுத்தள்ள திட்டம் வகுக்கப்படுகிறது.

அண்ணன் எப்போ சாவான். திண்ணை எப்போ காலியாகும்”  எனக் காத்துக்கொண்டிருக்கிற அந்தக்கட்சியின் அடுத்த மட்டத் தலைவர்களைக்கொண்டே போட்டுத்தள்ள திட்டம் தீட்டப்பட்டு அவ்வாறே கொலையும் நிறைவேற்றப்படுகிறது. இதில் கடன் கொடுத்தவரும் கடன் வாங்கியவரும் இருவேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தவிர இதில் சாதியப் பிரச்சனை ஏதுமில்லை. இந்தக் கொலையால் காஞ்சிபுரமே கொலை பீதியில் உரைந்து போகிறது.

இக்கொலையில் ஈடுபட்ட கூலிப்படையினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் கைமாறியிருக்கிறதாம். கோடிகளை திரும்பப் பெறவேண்டுமானால் லட்சங்கள் பெரிதல்லவே!

சொந்தக்கட்சித்தலைவனையே இங்கே கொலை செய்கிற அளவுக்கு அந்தக் கட்சியின். அணிகள் துணிந்துவிட்டார்கள் என்றால் அதற்கான அடிப்படை என்ன  என்பதே இங்கு முக்கியம்.

தனியார் மயம் - தாராள மயம் – உலக மயக்கொள்கையின் விளைவாக சுங்குவார்சத்திரம் – திருப்பெரும்புதூர் - படப்பை - செய்யாறு சிப்காட் என காஞ்சிபுரத்தைச் சுற்றிதான் பல்வேறு தொழிற்சாலைகள் அமைந்திருக்கின்றன. இங்குள்ள ஆலைகளில் உள்ள ‘ஸ்கிராப் மெட்டீரியல்’களின் ஏலத்தை கட்டுப்படுத்தக்கூடியவர்கள் கொலையுண்டவரின் கட்சியினர்தானாம். ‘ஸ்கிராப்பை’  யார் ஏலம் எடுத்தாலும் அந்ததந்த தொழிற்சாலைகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை மாமூல் என்கிற வகையில் மாவட்டத் தலைமைக்குத் தானாகவே வந்து சேருமாம். இத்தொகை மட்டுமே ஒரு மாதத்திற்கு சுமார் ஐம்பதாயிரம் தேருமாம். உட்கார்ந்த இடத்திற்கே ஐம்பதாயிரம் வருகிறது என்றால் அந்தப்பதவியை யார்தான் அடைய விரும்பமாட்டார்கள்? இந்தச் சூழலில்தான் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார்கள் மாவட்டத் தலைமைக்கு வரமுயன்றவர்கள். கொலையுண்டவர் அந்தக் கட்சியின் முழு நேர ஊழியராம். அம்பேத்கரியத்தையும் - பெரியாரியத்தையும் - மார்க்சியத்தையும் படித்து குறிப்பெடுத்து அணிகளுக்கு அறைக்கூட்டம் நடத்தவா இவர் முழுநேர ஊழியராக வேலை செய்தார்?

இவர்களின் சட்டவிரோதச் செயல்கள் காவலர்களுக்குத் தெரியாதா? அவர்கள் இவற்றை எல்லாம் தடுக்கலாமே என சிலர் நினைக்கலாம். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பதைத்தவிர இதில் சொல்வதற்கு என்ன இருக்கு?

ஒரு விபத்து நடந்துவிட்டால் போதும். அன்று இவர்களுக்கு வேட்டைதான். சமீபத்தில் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் ஒரு விபத்து நடந்தது. முட்டை லாரி ஒன்று இருசக்கர வாகனத்தில் மோதியதில் அதில் பயணித்த பள்ளி மாணவர்களில் ஒருவனுக்கு லேசான காயம். மற்றவனுக்கு பலமான அடி இல்லை என்றாலும் மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டிய அளவுக்கான காயம். தேசிய நெடுஞ்சாலை என்பதால் கூட்டம் கூடுகிறது. இதைக் கேள்விப்பட்ட காஞ்சிபுரத்தில் கொலையுண்ட அந்த சாதிக்கட்சியின் அல்லக்கைகள் அங்கே வருகிறார்கள். “என்ன வேடிக்கை?” என மிரட்டி அங்கே கூடியிருந்த கூட்டத்தையும் -  “உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டியது தப்பு” என மாணவர்களையும் மிரட்டி விரட்டிவிட்டு லாரி ஓட்டுனரிடம் 15000 ரூபாயை பிடுங்கிக் கொண்டு லாரியை விடுவிக்கிறார்கள். காவலர்களிடம் முறையிடலாமே என இங்கேயும் கேள்வி எழுப்பலாம்! ஆனால் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பதைத்தவிர இதில் சொல்வதற்கு என்ன இருக்கு?

மேற்கண்ட இரு நிகழ்வுகளும் சில வகை மாதிரிகள்தான். திருச்சி கல்லுக்குழி கந்தனைப்போல, தாராநல்லூர் சந்திரனைப்போல முன்பெல்லாம் கட்டப் பஞ்சாயத்துக்கென சிறப்பு பயிற்சி பெற்ற தனி நபர்கள் இருந்தார்கள். இன்றோ இவர்கள்  ஓட்டுச்சீட்டு – சாதியக் கட்சிகளின் தலைவர்களாக இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள ஓட்டுச்சீட்டு  - சாதியக் கட்சிகள் அனைத்துமே இவ்வாறுதான் உள்ளன.

இன்றைய உலக மயம் உருவாக்கியுள்ள நவீன ரவுடிகள் இவர்கள். மிரட்டலும் - உருட்டலும் - கொலையுமே இவர்களின் அன்றாடத் தொழில். குடியும் - கூத்தியுமே இவர்களின் பொழுது போக்கு. முன்பு இவர்கள் ‘டாடா சுமோ’க்களில் திரிந்தார்கள். இன்று ‘ஸ்கார்பியோ’க்களிலும், ‘இனோவா’க்களிலும் கட்சிக்கொடிகளை கட்டிக்கொண்டு வலம் வருகிறார்கள். வெள்ளை வேட்டியும் மடிப்புக் கலையாத கதர் சட்டையுமே இவர்களின் சீருடைகள். ஊராட்சி - பேரூராட்சி - நகராட்சி – மாநகராட்சி - வருவாய் ஆய்வாளர் - துணைக் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தொடங்கி ஏட்டு – எஸ்.ஐ – டி.எஸ்.பி – எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகளே இவர்களின்  மிக நெருங்கிய நண்பர்கள். இவர்களுக்கு எழுத்துக் கூட்டி படிக்கத் தெரியவில்லை என்றாலும் நண்பர்கள் வட்டம் பெரிதென்பதால் இவர்கள் ‘சட்டம்’ தெரிந்த “நாட்டு வக்கீல்கள்”. இவர்களின் நடை – உடை – பாவனை – தோரணை – பேச்சு – பந்தா மற்றும் வாகன வசதிகளைப்பார்த்து நாம் மூக்கின் மேல் விரல் வைத்து வாய் பிளந்து நிற்கின்றோம்.

நம் மூக்கின் மேல் உள்ள விரல் அல்லக்கைகளின் கண்களை குறிபார்த்தால் மட்டுமே பெருகி வரும் கொலை பீதிக்கு முடிவு கட்ட முடியும்.

இதுவே எனது புத்தாண்டுச் செய்தி!

4 comments:

 1. பசிவந்தால் பத்தும் பறக்கும் இது பழையது
  பணமிருந்தால் பதினொன்றும் செய்யலாம் இது புதியது :)

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்துக்கும்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி!

   Delete
 2. இவ்வளவு தூரம் விரிவா எழுதிய நீங்கள் கொலையுண்டவரின் சாதிக்கட்சியின் பெயரை தைரியமாகவே வெளியிட்டிருக்கலாம். உண்மையை சொல்ல அச்சம் எதற்கு.

  ReplyDelete
  Replies
  1. நவீன ரவுடிகள் வளர்வதற்கான பின்னணியை வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கம். கொலையுண்டவரின் சாதிக்கட்சி எது என்கிற உண்மையை வாசகர்கள் அறிந்தே இருப்பார்கள்.

   நன்றி!

   Delete

There was an error in this gadget