Thursday, February 13, 2014

சாபமா? வரமா? கேப்டனுக்கு எது பலிக்கும்?

16 - வது மக்களவைத் தேர்தல் திருவிழா நெருங்குகிறது.

“வாங்க சார்! வாங்க!

ஒண்ணு வெச்சா பத்து!!

பத்து வெச்சா நூறு!!!

வாங்க சார்! வாங்க!!!!”

என கூவிக் கொண்டிருக்கின்றன பரிவாரங்கள்.

‘இளம் தாமரை’ என திருச்சியில் கடை விரித்தார்கள். ‘கடல் தாமரை’ என ராமேஸ்வரத்தில் கடை போட்டார்கள். வண்டலூரிலும் டேரா அடித்தார்கள். சக்கரத்தை சுழற்றிவிட்டு எவனாவது காசு வைப்பானா என கடை விரித்து காத்துக்கிடக்கின்றனர்.
 
சாதி வெறி முகத்தில் வழியும் ஈஸ்வரன்கள். சில்லரை பொறுக்குவதற்காகவே தோளில் தொங்கும் துண்டை தரையில் விரிக்கும் கலிங்கப்பட்டி காளைகள். புறம்போக்கிலேயே புது நீதி கண்ட நீதியரசர்கள். கேடிக்கு கார் ஓட்டும் கோடி வேந்தர்கள் என ஒரு சில சில்லரைகள் மட்டுமே கடை பக்கம் சென்றுள்ளனர். காடுவெட்டி  தைலாபுர தடியன்கள்கூட பரிவாரக்கடை ஓனர் எடுப்பாய் இருக்கிறான் என்று சொல்கிறார்களே ஒழிய இன்னமும் கடை அருகில் செல்லவில்லை. இவர்கள் வைக்கும் சில்லரைக் காசு மொத்தத்தையும் சேர்த்தால்கூட கல்லா கட்டா முடியாது என்பதால்  கேப்டனுக்காக உரக்க உரக்க கூவுகின்றன பரிவாரங்கள்.
சாதாரணக் கடைக்காரன் கூவுவதைப் போல கூவினால் கடை பக்கம் பசை உள்ளவர்கள் வரமாட்டார்கள் என்பதற்காக கூவுவதெற்கென்றே தனியாக ஒரு ஆளையே நியமித்துள்ளனர். அவன் அடுக்கு மொழியில் அள்ளித் தெளிக்கும் புள்ளிவிரக் கணக்குகள் பேரருவியாய் கொட்டுவதைப் பார்த்தாலே ஒரு முறை காசு வைத்துப் பார்க்கலாமே என எண்ணத் தோன்றும். அவன் கூவுவதில்தான் எத்தனை ஒரு நேர்த்தி. பரிவாரக்கடையில் போணி மட்டும் சிறப்பாக நடந்து விட்டால் அருவிக்காரன் காட்டில் பனியாரத்துக்குப் பஞ்சம் இருக்காது.
 
“தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கோபாதாபங்களை வெளிக்காட்டக்கூடிய யதார்த்தமான மனிதர். மற்ற அரசியல்வாதிகளைப் போல அவருக்கு நடிக்கத் தெரியாது” என காமெடி நடிகன் ஆசை காட்டுகிறான்.
 
“பா.ஜ.க கூட்டணியில் தே.மு.தி.க உறுதியாக இணையும்” என தே.மு.தி.க நிச்சயம் எட்டிப்பார்க்கும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார் பொன்னார்.
 
”தி.மு.க கூட்டணியில் இணைவதே தே.மு.தி.க வுக்கு நல்லது” என அருள் வாக்கு கொடுக்கிறார் திருமா. “காங்கிரசுக்கு நெருக்கமான கட்சி தே.மு.தி.க”  என ஆசை காட்டுகிறார் ஞானதேசிகன். தங்களது கடை பக்கம் கேப்டனை ஈர்க்க மற்ற கடைகாரர்கள் கொடுக்கும் வரமும் கேப்டன் காதில் விழாமலா போகும்.
 
கேப்டன் சிக்கினால் கொத்தாக அள்ளிவிடலாம் என நாக்கில் ஜொள்ளு ஒழுக கூவி வருகின்றனர். ஆனால் கேப்டனோ  திருவிழாவில் போடப்பட்டுள்ள கடைகள் அனைத்தையும் பார்த்து விட்டுத்தான்   எந்தக் கடைக்குச் செல்வது என்பதை முடிவு செய்ய முடியும் என்பது போல “கூட்டணி விசயத்தில் அவசரப்பட மாட்டேன்” என பேசிக் கொண்டே பரிவாரக் கடையை எட்டிக்கூட பார்க்காமல் மற்ற கடைகளை நோட்டமிட செல்வதைப் பார்த்து இப்போது பரிவாரக் கடைக்காரன் உச்சஸ்தாயில் கத்த ஆரம்பித்து விட்டான்.
 
ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்திவிட்டு இப்போது டெல்லிக்கு படை எடுப்பதால் தே.மு.தி.க கட்சிக்கு என்ன கொள்கை என்பது அந்தக் கட்சித் தலைவருக்கே  தெரியாது என கேப்டன் மீதே மண்ணை வாரி தூற்றுகிறான் பரிவாரக் கடைக்காரன். “தி.மு.க வுடன் இணைந்தால் தே.மு.தி.க காணாமல் போய்விடும்” என பைந்தமிழில் சாமியாகிறான்.
 
கலர் கலராய் பலர் கடை விரித்துள்ளனர். இதில் தங்களது கடை மட்டும் தனியாகத் தெரிய வேண்டும் என்பதற்காக இவர்கள் கடையில் எல்லாமுமே காவி மயம்தான்  கோடையின் தாக்கம் இப்போதே தெரியத் தொடங்கி விட்டதால் இவர்களின் காவிகூட தற்போது சற்றே வெளுக்கத் தொடங்கிவிட்டது. போதாக் குறைக்கு ஆம் ஆத்மிகாரன் வேறு இந்தியா முழுக்க கடை போடப் போவதாக மிரட்டுகிறான். கூட்டுறவு கடை போட முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் மூன்றாம் அணியினர். இதுவெல்லாம் நடக்கும் பட்சத்தில் கேப்டனுக்கு இட்ட சாபம் பலிக்கிறதோ இல்லையோ,  முழுக் கோடையில் பரிவாரங்களின் காவி வெளுக்காமல் இருந்தால் சரி! கல்லா கட்டவில்லை என்றாலும் கடையாவது மிஞ்சும். 
 
தொடர்புடைய பதிவுகள்:
 
 

No comments:

Post a Comment