Thursday, April 17, 2014

தேர்தல் களம்-4: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!



“இத்தகைய உறவுகளை (அதாவது முற்றிலும் சுயேச்சையான கட்டு திட்டம் ஏதுமற்ற) நாம் இயல்பானவையாக கருத முடியுமா? பதவிக்காலம் முடியும் முன்பாகவே கூட மக்கள் பிரதிநிதிகள், மக்களால் திருப்பி அழைக்கப்படலாம். அவர்கள் எத்து வேலை செய்தால், மக்களை சார்ந்திருக்க மறுத்தால், பாதை விலகிப் போனால், மக்கள் அவர்களை திருப்பி அழைக்கலாம்; அவர்களுக்கு கல்தா கொடுத்து வீட்டுக்கு அனுப்பலாம்.” 

மேலும் அவர் தொடர்கிறார். 

“நமது அரசியல் சட்டம் அருமையானது. மக்கள் பிரதிநிதி தெரிந்து வைத்திருக்க வேண்டிய விசயம் என்ன தெரியுமா? மக்களுக்கு அவர் ஒரு வேலையாள்தான்….மக்கள் அவருக்கு என்ன கட்டளையிட்டுள்ளனரோ, அதன்படி நடக்க கடமைப் பட்டவர்தான். அவ்வாறு இல்லாமல், அவர் பாதை விலகிப் போனால், புதிதாகத் தேர்தல் நடத்தக் கோரும் உரிமை மக்களுக்கு உண்டு; பாதை விலகிப் போன பிரதிநிதிகளைப் பொருத்தவரையில், அவரை மூட்டைக் கட்டி வீட்டுக்கு அனுப்பும் உரிமை வாக்காளர்களுக்கு உண்டு. (வெடிச் சிரிப்பும் கை தட்டலும் ஒலிக்கின்றன).
 
அருமையிலும் அருமையானதொரு சட்டமிது. வாக்காளர்களாகிய உங்களுக்கு, வேட்பாளர் என்ற முறையிலான அறிவுரையை நான் கூறுகிறேன். வாக்காளர்களுக்கான இந்த உரிமையை நீங்கள் எப்போதும் மறக்காதீர்கள். பதவிக்காலம் முடியும் முன்னரே, உங்கள் பிரதிநிதியைத் திரும்ப அழைக்கும் உரிமை உள்ளது என்பதை மறக்காதீர்கள். உங்களுடைய பிரதிநிதிகளைக் கண்காணியுங்கள். அவர்கள் மீது உங்கள் கட்டுப்பாட்டைச் செலுத்துங்கள். பாதை விலகலாம் என்கிற நினைப்பு அவர்களுக்கு வருமானால் அவர்களைக் கழித்துக் கட்டுங்கள். இதற்காகப் புதியத் தேர்தலை நடத்தக் கோருங்கள். நீங்கள் அப்படிக் கோருவீர்களானால், புதிய தேர்தல்களை நடத்துவது அரசின் கடமையாகும். இந்தச் சட்டத்தை நினைவில் கொள்ளுங்கள்;. தேவை ஏற்பட்டால் இந்தச் சட்டத்தை உங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதுதான் எனது அறிவுரை”.

இந்த வேட்பாளர் மக்களுக்கு வாக்குறுதி எதையும் தரவில்லை; மாறாக அறிவுரையை மட்டுமே வழங்குகிறார். 

அடுத்து மக்களின் கோரிக்கைகள் பற்றி அவர் பேசுகிறார்.

“உங்களுடைய பிரதிநிதிகளிடமிருந்து பொதுவாக நீங்கள் கோரக்கூடியவை என்ன? எல்லாக் கோரிக்கைகளிலும் அடிப்படையானவையாக, நீங்கள் மிகவும் அவசியமாக கோரக்கூடிய தெரிந்தெடுத்த கோரிக்கைகள் எவை? இவற்றைப் பற்றியதுதான் வேட்பாளராகிய நான் உங்களுக்குக் கூறும் இன்னுமொரு அறிவுரை -  கடைசி அறிவுரை.

மக்கள் பிரதிநிதிகள் தமது கடமைகளை நிறைவேற்றும் ஆற்றல் உள்ளவர்களாக, திராணி உள்ளவர்களாக இருக்க வேண்டுமென மக்கள் தவறாமல் கோர வேண்டும். தமது கடமைகளை ஆற்றுகையில், அரசியல் அற்பர்களின் மட்டத்துக்கு அவர்கள் சரிந்து விடக்கூடாது என்று நீங்கள் அவர்களிடம் கோர வேண்டும். பதவிகளில் இருக்கையில், நமது தலைவரின் இரகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளாக இருக்க வேண்டுமென நீங்கள் கோர வேண்டும். அரசியல்வாதிகள் என்ற முறையில், நமது தலைவரைப் போலவே, தெளிவாகவும் திட்டவட்டமாகவும் இருக்க வேண்டுமெனக் கோர வேண்டும். (கை தட்டல்). நமது தலைவரைப் போலவே,  போராட்டங்களில் அச்சமின்றியும் எதிரிகளிடம் ஈவிரக்கமின்றியும் இருக்க வேண்டுமெனக் கோர வேண்டும்.

விசயங்கள் / நிலைமைகள் சிக்கலாகும்போது, ஏதோ ஆபத்துகள் / நெருக்கடிகள் தோன்றும் போது, நமது தலைவரைப் போலவே பீதி இல்லாமல், பீதியின் சாயல்கூட கிஞ்சித்தும் இல்லாமலிருக்க வேண்டுமெனக் கோர வேண்டும். (கரவொலி). சிக்கலானப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில், முற்றும் தெளிந்த முறையில் சாதக பாதகங்கள் அனைத்தையும் சீர்தூக்கிப் பார்க்கவும் வேண்டும். நமது தலைவரைப் போலவே, சான்றாண்மையுடனும் அறிவுக் கூர்மையுடனும் இருக்க வேண்டுமென நீங்கள் கோர வேண்டும். (கை தட்டல). நமது தலைவரைப் போல அப்பழுக்கற்றும் நேர்மையாகவும் இருக்க வேண்டுமெனக் கோர வேண்டும். (கரவொலி). நமது தலைவர் மக்களை எப்படி நேசித்தாரோ, அதேபோல மக்களை நேசிக்க வேண்டுமென நீங்கள் உங்கள் பிரதிநிதிகளிடம் கட்டாயமாகக் கோரவேண்டும். (கை தட்டல்).”

எல்லா வேட்பாளர்களுமே, நமது தலைவரின் இரகத்தைச் சோந்த பொது வாழ்வினர் என்று நம்மால் கூற முடியுமா? இதை நான் அவ்வளவு உறுதியாகச் சொல்ல மாட்டேன். உலகில் பலவகைப்பட்ட மக்கள் இருக்கிறார்கள். இது போலவே பலவகைப்பட்ட அரசியல் பிரமுகர்களும் உலகில் உள்ளனர். இவர்கள் இப்படிப்பட்டவர்கள்தான் என்று உங்களால் அறுதியிட்டுக் கூற முடியாதவர்கள் எவ்வளவோ பேர் உள்ளனர். அவர்கள் நல்லவர்களா அல்லது கெட்டவர்களா, வீரர்களா அல்லது கோழைகளா என்று உங்களால் சொல்ல முடியாது. அவர்கள் முழு மனதுடன் மக்களுக்கு நிற்பவர்களா என்று உங்களால் சொல்ல முடியாது. இத்தகைய மக்களும் இருக்கிறார்கள், தலைவர்களும் இருக்கிறார்கள். நம்மிடையேயும் இத்தகையவர்கள் காணப்படுகிறார்கள். ஒவ்வொரு மந்தையிலும் கறுப்பு ஆடும், ஒவ்வொரு சமுதாயத்திலும் புல்லுறுவிகளும் இருப்பதை நீங்கள் அறிந்தே இருக்கிறீர்கள். (வெடிச் சிரிப்பும் கைதட்டலும் அரங்கில் கேட்கின்றன). இப்படி என்னற்ற இரகத்தைச் சேர்ந்த நபர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அரசியல்வாதிகளாக இருப்பதைவிடவும் அரசியல் அற்பர்களாக இருக்கிறார்கள்.”

இப்படி இனங்காண முடியாத, நிச்சயமாகக் கூறமுடியாத இரகத்தினரைப்பற்றி ”தெளிவற்ற இரகத்தினர்; இந்த இரகமோ அந்த இரகமோ, என்னவென்றே புரிந்து கொள்ள முடியாத புதிரானவர்கள்". இத்தகைய மனிதர்களையும், பொது வாழ்வினரையும் பற்றிப் பொருத்தமாகக் கூறும் ஜனரஞ்சகமான கூற்றுகளும் உள்ளன. “இரண்டுங் கெட்டான்கள்; இவர்கள் பாம்பும் அல்ல மீனும் அல்ல” என இத்தகையவர்களைப் பற்றி நமது வேட்பாளர் எச்சரிக்கை செய்கிறார்.

மேலும் அவர் தொடர்கிறார்.

“நமது வேட்பாளர்கள் மத்தியிலும், அரசியல் பிரமுகர்கள் மத்தியிலும் அரசியல் அற்பர்களின் வகையைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்று என்னால் நிச்சயமாகவும் உறுதியாகவும் கூறமுடியாது.

எனவே, உங்களுடைய பிரதிநிதிகள் மீது நீங்கள் இடையறாது செல்வாக்கு செலுத்த வேண்டுமென நான் விழைகிறேன்.

தோ்தல்கள் முடிந்தவுடன் வாக்காளர்களின் கடமைகள் முடிந்த விடுவதில்லை. தேர்ந்தெடுக்கப்படும் பதவிக்காலம் முழுவதும் வாக்காளர்களின் கடமைகள் தொடர்கின்றன. மக்கள் பிரதிநிதிகள் சரியானப் பாதையிலிருந்து மாறிப் போவார்களானால், அவர்களுடைய பதவிக்காலம் முடியுமுன்னரே வாக்காளர்கள் அவர்களை திருப்பி அழைப்பதற்கான உரிமையை வழங்கும் சட்டத்தை நான் ஏற்கனவே குறிப்பிட்டேன். எனவே, மக்கள் பிரதிநிதிகளை தமது இடையறாத கண்காணிப்பில் வைத்திருப்பது வாக்காளர்களின் கடமையும் உரிமையும் ஆகும்; எந்தச் சூழ்நிலையிலும் பிரதிநிதிகள், அரசியல் அற்பர்களின் மட்டத்துக்கு வீழ்ந்துவிடாமல் வாக்காளர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்; நமது தலைவரைப் போலவே அவர்கள் கட்டாயம் இருந்தே தீரவேண்டுமென்பதை பிரதிநிதிகள் மனதில் பதிய வைக்க வேண்டும். (கை தட்டல்).
 
வாக்காளர்களாகிய உங்களுக்கு வேட்பாளராகிய நான் கூறும் இரண்டாவது அறிவுரை இதுவே!”

(உரத்த மற்றும் தொடர்ச்சியான கரவொலியும் வாழ்த்தொலிகளும் ஒலிக்கின்றன. மேடையிலிருந்து நமது வேட்பாளர் இறங்குகிறார். அனைவரும் எழுந்து அவரை வைத்த கண் வாங்காமல் பார்க்கின்றனர். அரங்கம் முழுக்க வாழ்த்தொலிகள் கேட்கின்றன. “தலைவர் நீடூழி வாழ்க! தலைவர் நீடூழி வாழ்க!”) 

இந்த வேட்பாளர் வேறு யாருமல்ல. மகத்தான சோவியத் ரஷியாவை கட்டியமைத்த ஸ்டாலின்தான் அந்த வேட்பாளர். சோவியத் அவைக்கு நடைபெற்ற தேர்தலில் தான் வேட்பாளராக போட்டியிட்ட போது டிசம்பர் 11, 1937 ல் மாஸ்கோ மாநகரின் போல்ஷாய் கலையரங்கில் வாக்காளர்களிடையே ஆற்றிய உரையின் சுருக்கத்தைத்தான் நான் இதுவரை உங்களிடம் பகிர்ந்துள்ளேன். சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பே ஆற்றிய இந்த உரையின் சாரத்தை தற்போது இந்தியாவில் நடைபெறும் 16 வது மக்களவைத் தேர்தலோடு ஒப்பிட்டுப் பாருங்கள். குடிதண்ணீரைக்கூட வழங்க வக்கற்ற இந்தியப் பாராளுமன்ற ஜனநாயகம் கடந்த 66 ஆண்டுகளாக ஏன் இப்படி இருக்கிறது என்பது புரியும். எனவே, நாம் தேட வேண்டியது ஸ்டாலின் அவர்கள் தனது இரண்டாவது அறிவுரையில் நமது தலைவரைப் போல” என சுட்டிக்காட்டும் தலைவர் லெனினைப் போன்ற அரசியல்வாதிகளையும், மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களை திருப்பி அழைக்கும் உரிமையை வாக்காளர்களுக்கு வழங்கும் சோவியத் முறையிலான ஆட்சி வடிவத்தையும்தான் என்பது சொல்லாமலேயே விளங்கும். 

முற்றும்.

 
லெனின்              ஸ்டாலின்

தொடர்புடைய பதிவுகள்: 

தேர்தல் களம்-3: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தேர்தல் களம்-2: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தேர்தல் களம்-1: நாம் தேட வேண்டியதும் நாட வேண்டியதும்!
தமிழகமே திருமங்கலமாக மாறுமா?
சாபமா? வரமா? கேப்டனுக்கு எது பலிக்கும்?
கேப்டன் கேடட் ஆன கதை!
"முள்ளுக்காட்டில் மல்லுக்கட்டு!" த்ரில்லர் பட கருத...
மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு!
எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை ஒழிக்க முடியாது!...
யாருக்கும் வெட்கமில்லை!
கொள்ளையடிப்பதில் கெட்டிக்காரன் யார்? வடக்கத்தியானா..

 விலை ரூ.10
புதிய ஜனநாயகம் வெளியீடு
110, இரண்டாம் தளம்
63, என்.எஸ்.கே.சாலை
கோடம்பாக்கம்
சென்னை - 600 024

No comments:

Post a Comment