Tuesday, May 20, 2014

மோடி லேகியம் வேலை செய்ய வேண்டுமென்றால் 'இறைவன்' அருள் புரிய வேண்டுமாம்!



வளர்ச்சிப் பாதையில் இந்தியாவை இட்டுச் செல்லவும், ஊழலற்ற திறமையான நிர்வாகத்தை உறுதி செய்யவும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் நரேந்திர மோடிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர் அமைக்க இருக்கும் அமைச்சரவை சகாக்களும் அதற்கு ஒத்துழைப்புத் தந்தால்தான் அது சாத்தியமாகுமாம்.
  
மக்களவை உறுப்பினர்களில் இளைஞர்கள் குறைவாம். படித்தவர்கள் குறைவாம். குற்றப் பின்னணி உள்ளவர்கள் அதிகமாம். கோடீஸ்வரர்கள் அதிகமாம்.

அதனால்,

சாமானியனின், அடித்தட்டு வர்க்கத்தினரின், அன்றாடம் கஞ்சிக்கு வழியில்லாமல் தெருவோரம் தஞ்சமடைந்திருக்கும் பராரியான ஏழைகளின் பிரச்னைகள் எப்படி முன்னுரிமை பெறும்? தாகத்திற்குக் "கோக்' குடிப்பவர்கள், பசிக்குத் கேப்பைக் கூழ் குடிப்பவர்களின் பிரச்னைகள் பற்றி கவலைப்படமாட்டார்களாம்.

கோடீஸ்வரர்களும், தொழிலதிபர்களும், கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் அதிக அளவில் இருக்கும் போது எந்த அளவுக்கு சாமானியர்களுக்குச் சாதகமாகவும், ஆதரவாகவும் அந்த ஆட்சி செயல்படும் என்கிற நியாயமான ஐயப்பாடும், பயமும் ஏற்படுகிறதாம்.

கோடீஸ்வரர்களுக்கும், கிரிமினல் பின்னணி உடையவர்களுக்கும்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று சொன்னால், அதற்குக் காரணம் ஏமாளி வாக்காளர்கள்தானாம். இப்படிப்பட்வர்களை வேட்பாளர்களாக நிறுத்திய கட்சிகள் கிடையாதாம்? இப்படிப்பட்டவர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு, நல்லாட்சி அமையவில்லை என்று ஓலமிடுவதில் அர்த்தம் இல்லையாம்.

அதிக அளவில் இளைஞர்களும், விழிப்புணர்வுடன் வாக்காளர்களும் நல்லாட்சி அமைய வேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன், நரேந்திர மோடி என்கிற தனிமனிதன்மீது அதீத நம்பிக்கை வைத்து வாக்களித்திருக்கிறார்களாம். இத்தனை கோடீஸ்வரர்களையும், கிரிமினல் பின்னணியாளர்களையும் மீறி மோடி செயல்பட்டாக வேண்டுமாம். அதற்கு இறைவன் அருள்புரிய வேண்டுமாம்.

மக்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனைகளுக்கும் மோடி லேகியம் ஒன்றுதான் சர்வரோக நிவாரணி என மக்களிடம் அதீத நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டு இப்போது மக்கள் மீதே பழியைப் போடுவதோடு மற்றவர்களின் ஒத்துழைப்பு இல்லை என்றால் மோடி லேகியம் வேலை செய்யாது என  பத்தியக் கட்டுப்பாடு வேறு! இதற்குப் பேர்தான் ஊடக நரித்தனம் என்பதோ! தினமணியின் இன்றைய (20.05.2014) தலையங்கம் இதைத்தான் உணர்த்துகிறது. (யார் மீது தவறு?)

No comments:

Post a Comment