Sunday, September 14, 2014

சங்கரராமன் கொலை வழக்கு: அப்பீலுக்கு ஆப்பு!

2004 ம் ஆண்டு காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர் சங்கரரராமன் கொலை வழக்கில் எதிரிகள் குற்றமற்றவர்கள் என புதுச்சேரி நீதிமன்றத்தால் நவம்பர் 23, 2013 ல் விடுவிக்கப்பட்டனர். தீர்ப்பை எதிர்த்து 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். ஆனால் புதுச்சேரி அரசு மேல்முறையீடு செய்ய விரும்பாததால், மேல்முறையீடு செய்யாமல் விட்டுவிட்டது. 

அதைத் தொடர்ந்து புதுச்சேரி ஆளுநர் மேல்முறையீடு செய்ய பரிந்துரைத்ததையடுத்து இந்தப் பரிந்துரையை நடுவண் அரசின் அட்வகேட் ஜெனரலின் கருத்தை அறிய உள்துறை அமைச்சகத்தின் மூலம் அனுப்பி வைத்தது பதுச்சேரி அரசு. இவ்வழக்கு மேல்முறையீட்டுக்கு உகந்த வழக்கு அல்லவென்றும், மீறி மேல்முறையீடு செய்தால் உயர்நீதி மன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாவோம் என்பதனால் மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியமில்லை என அட்வகேட் ஜெனரல் கருத்து தெரிவித்திருந்தார்.
 
தற்போது புதுச்சேரி அரசு அட்வகேட் ஜெனரலின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு  சங்கரராமன் கொலை வழக்கில் மேல்முறையீடு செய்வதில்லை என முடிவு செய்துவிட்டதால் இவ்வழக்கு ஒரேயடியாக ஊத்திமூடப்பட்டுவிட்டது என்பது உறுதியாவிவிட்டது.
சங்கரராமன் இப்போது உயிரோடு இல்லை; செத்துப் போனது என்னவோ உண்மை. அதுவும் கொலை செய்யப்பட்டு செத்துப் போனார் என்பது உலகத்துக்கே வெளிச்சம். இவ்வழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள் கொலையாளிகள் இல்லை என்பது நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுவிட்டது. மேல்முறையீட்டுக்கான கதவும் மூடப்பட்டு விட்டதால் கீழமை நீதி மன்றம் தவறான தீர்ப்பு வழங்கியிருக்குமோ என்பதற்கான கேள்விக்கும் இனி இடமில்லை.

சங்கரராமன் கொலை வழக்கில் ஒருவரும் தண்டிக்கப்படவில்லை. அப்படியானால் உண்மையான கொலையாளிகளை கண்டுபிடிக்கின்ற திறனை இழந்துவிட்டதா நமது காவல் துறை? உலகிலேயே ஸ்காட்லாந்து காவல்துறைக்கு அடுத்து மிகவும் திறமை வாய்ந்தது நமது காவல்துறைதான் என்பதெல்லாம் ஏட்டுச்சுரைக்காய்தானா? அப்படி எல்லாம் நமது காவல் துறையை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

சாதி – மத அடிப்படையிலும், ஏழை - பணக்காரன் என்கிற வர்க்க அடிப்படையிலும் மக்கள் வேறுபட்டு இருக்கும் ஒரு சமுதாயத்தில் பொதுவான நீதிக்கு வாய்ப்பே கிடையாது. இந்த வழக்கில் மட்டுமல்ல, பல்வேறு வழக்குகளிலும் பொதுவான நீதி நிலைநாட்டப்படுவதில்லை என்பதை மறுக்க முடியாது. சாதி – மதம் மற்றும் ஏழை – பணக்காரன் என்கிற அம்சங்களை கணக்கில் கொண்டே தீர்ப்புகள் எழுதப்படுகின்றன. இப்பொழுது மட்டுமல்ல, வரலாறு நெடுகிலும் இதுதான் நடைமுறையாக இருந்துள்ளது; இருந்தும் வருகிறது.

”பிராமணன் சட்டம் தெரிந்தவனாகையால், எந்தக் குற்றங்களையும் அரசன் பார்வைக்கு கொண்டு வரவேண்டியதில்லை; மாறாக தனக்குள்ள அதிகாரத்தைக் கொண்டு தன்னைக் காயப்படுத்தியவனை தண்டிக்கலாம்” (மனு: 11-31).

“தனக்குள்ள அதிகாரம், அரசனின் அதிகாரத்தைவிட வலுவானதாகையால், ஒரு பிராமணன் தனது எதிரிகளை தனக்குள்ள அதிகாரத்தைக் கொண்டே தண்டிக்கலாம்” (மனு: 11-32).

சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள், சங்கரராமனை மேற்குறிப்பிட்ட மனுதர்ம சட்டப்பிரிவுகளின் கீழ் கொலை செய்து தண்டித்திருக்கலாம். அப்படி தண்டித்திருந்தால் மனுதர்ம சட்டப்படி எதிரிகள் குற்றம் செய்ததாகக் கருத முடியாதே!

“ஒரு பிராமணன் குற்றம் செய்து விட்டால் அதற்குத் தண்டனையாக அவனது தலையை மழித்தாலே போதும்; அதுவே, அவனை தூக்கிலேற்றியதற்கு ஈடான தண்டனையாகும். ஆனால் மற்ற சாதியினர் குற்றம் செய்துவிட்டால் அவர்களை கண்டிப்பாக தூக்கிலிட வேண்டும்” (மனு: 8-379).

ஒரு வேளை சங்கரராமன் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள் தாங்கள் செய்த குற்றத்திற்காக தங்களது தலையை மழித்துக் கொண்டிருக்கலாம். அப்படி அவர்கள் மழித்துக் கொண்டிருந்தால் அதுவே, அவர்களை தூக்கிலேற்றியதற்கு ஈடான தண்டனையாகிவிடுகிறதே! பிறகு மீண்டும் எப்படி தண்டனை கொடுக்க முடியும்? இதையும் மீறி தண்டிப்பது ஒரு குற்றத்திற்கு இரண்டு முறை தண்டனை கொடுக்கின்ற பாபத்திற்கு நீதித்துறை ஆளாகிவிடக் கூடாதல்லவா? இக்கூற்றின்படிகூட  இவ்வழக்கு மேல்முறையீட்டுக்கு உகந்ததல்லதானே!

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. சங்ரராமனை வேறு சாதியினர் எவரும் கொன்றிருந்தால் அவர்களுக்கு தூக்கு நிச்சயம் கிடைத்திருக்கும்.

சொத்து குவிப்பு வழக்கில் என்ன நடக்கிறது என செப்டம்பர் 20 அன்று பார்ப்போம்! இவ்வழக்கிலும் ‘எதிரி’ விடுவிக்கப்பட்டுவிட்டால் மனுதர்ம சட்டம் அமுலுக்கு வந்து விட்டது; தொகாடியாக்கள் சொல்வது போல இந்தியா 'ஹிந்து' நாடுதான் என உறுதியாக நம்பலாம்.

6 comments:

 1. விவாதக்கலை வலைப்பூவில் தங்களின் கருத்தை அன்புடன் தெரிவிக்கவும்
  http://vivadhakalai.blogspot.com/

  ReplyDelete
  Replies
  1. தங்களது வலைப்பூவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!

   Delete
 2. //உலகிலேயே ஸ்காட்லாந்து காவல்துறைக்கு அடுத்து மிகவும் திறமை வாய்ந்தது நமது காவல்துறைதான் என்பதெல்லாம் ஏட்டுச்சுரைக்காய்தானா? //

  தமிழக காவல்துறைக்கு இந்த தரச் சான்றிதழைத் தந்தது யாரு?
  எவனோ பொறம்போக்கு பெருமைக்கு பீத்தினா அதையே எல்லோரும் பிடிச்சுட்டு அலையலாமோ?

  அதுக்கு மின்னாடி ஸ்காட்லாந்து *யார்ட்* காவல்துறைதான் சிறந்ததுன்னு சொன்னவன் யாரு?

  ReplyDelete
  Replies
  1. காவல்துறையின் செயற்பாட்டின்மையையோ அல்லது ஒருதலையான செயல்பாட்டையோ சுட்டிக்காட்டுவதற்காகவே இது போன்ற ஒப்புமைகள் கையாளப்படுவது வழக்கம். சிறந்தது என்று சான்றிதழ் வழங்குவதற்காக அல்ல.

   நன்றி!

   Delete