விரைந்து
செல்லும் வாகனங்களால் சட்டெனப் பறந்து மறையும் இலைச் சரகுகள் அக்டோபர் 2 அன்று
மட்டும் எப்பொழுதும் தூய்மையாக காணப்படும் டெல்லி பாராளுமன்ற வளாக சாலைகளிலும்,
சென்னையின் ராஜ்பவன் சாலைகளிலும் அகல மறுத்து அடம் பிடித்தன. காய்ந்த பின்
உதிரவேண்டிய பச்சை இலைகள்கூட அன்று சரகாய் மாறி சாலைகளை அலங்கறித்தன. மோடியின்
துடைப்பம் மயிலிரகாய் சரகுகளை இதமாய் வருடியபோது “ஆனந்த யாழை மீட்டுகிறாய்” என முணுமுணுத்தவாறு
ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி மெய்சிலிர்த்து குதூகலித்தன சரகுகள்.
சுற்றுச்சூழலை
மாசுபடுத்தி, மக்களிடம் கொள்ளை நோயை உண்டு
பண்ணும் பாலிதின் பைகளும், பிளாஸ்டிக் பாட்டில்களும், ஆலைகளின் இரசாயணக்
கழிவுகளும், ஊராட்சி - நகராட்சிகளின் கக்கூசு – சாக்கடைக் கழிவுகளும் மலை
மலையாய்க் குவிந்து கோபுரம் கட்டி வாழும் போது அவைகளைச் சீண்டுவதற்கு திராணி இன்றி,
செடி - கொடி - மரங்களுக்கு எருவாய், பயிர்களுக்கு உரமாய், ஏன் எதிர்கால சந்ததிக்கு
நிலக்கறியாய் மாறி பன்முகப் பயன்பாட்டைத் தரும் தம்மை, ஏன் இவர்கள் ஊர்கூடி ஒழிக்க
நினைக்கிறார்கள் என்கிற ஐயம் மட்டும் சரகுகளுக்குள் எழுந்த வண்ணம் இருந்தன.
வீட்டுக்
குப்பையைக் கூட்டுவதற்கே வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ளும் கோமான்களும்
சீமாட்டிகளும் தெருவைக்குகூட்ட துடைப்பம் ஏந்தி
“வாருங்கள்! பாரதத்தை தூய்மைப்படுத்துவோம்!” என வானதியாய்-லட்சுமியாய்
வடிவெடுத்து மெரினாவை மென்மையாய் வருடுவதைப் பார்க்கும் போது இவர்கள்
“சொல்வதெல்லாம் உண்மை” தானா என்கிற ஐயம் உயிரற்ற சரக்குகளுக்கே எழும் போது ஆறறிவு
படைத்த மனிதனுக்கு மட்டும் எழாதா என்ன?
இந்த
பேஷன் ஷோ பெரேடில் ஒய்யாரம் காட்ட தேச பக்தர்கள் துடைப்பக் கட்டையோடு பூங்காக்களை
மொய்க்கிறார்கள்; பீச்சுகளை மேய்கிறார்கள். வேலூர் கோட்டைப் பூங்காவில் வி.ஐ.டி யின் இளவலும், ஐதராபாத் சினிமா
ஸ்டுடியோவில் சிரஞ்சீவியும் இதில் முந்திக் கொண்டனர்.
இதே
நிலை நீடித்து பேஷன் ஷோவில் எதிர்க்கட்சிக்காரன் பரிசு பெற்றுவிட்டால் அது
முதலுக்கே மோசம் என்பதால் இது குறித்து நடுவண் அரசின் அமைச்சரவை உடனடியாகக்கூடி
ஆலோசித்ததாம். குப்பை கூட்டுபவர்களுக்கு படிப்பறிவும் போதாது; திறமையும் போதாது
எனவே குறைந்த பட்ச கல்வித்தகுதியுடைய திறமையானவர்களைக் கொண்டு குப்பை கூட்டினால்
மட்டுமே இந்தியாவைத் தூய்மைப்படுத்த முடியும் என முடிவெடுத்து குப்பை மேலாண்மை
குறித்த படிப்பை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கல்வி அளவில்
அறிமுகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். சி.பி.எஸ்.சி பள்ளிகளிலும்
இந்தப்பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுமாம்.
மேல்நிலைப்
பள்ளிக் கல்வி அளவில் ஒவ்வொரு சாதியிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் பட்டியல்
தயாரிக்கப்பட்டு மதிப்பெண் சான்றிதழ் பெறும் போதே வேலையில் சேருவதற்கான ஆணையும்
கையோடு வழங்கப்படுமாம். பாரத தேசத்தை குப்பையற்ற தேசமாக மாற்றும் வல்லமை 60 லட்சம்
இளைஞர்களின் கையில்தான் இருக்கிறது என ராஜ்நாத் சிங் கண்டறிந்துள்ளதால்தான் இந்த வேலையை
இளைஞர்கள் கையில் ஒப்படைப்பதோடு அதைக் கட்டாயப் பணியாகவும் அறிவித்துள்ளார்களாம்.
மீறுவோர் நாடற்றவர்கள்களாக அறிவிக்கப்பட்டு பாரதத்தை விட்டே விரட்டப்படுவார்களாம்.
இந்த
வேலை வாய்ப்பில் திறமைக்கு மட்டுமே முன்னுரிமை என நடுவண் அரசு அறிவித்த போது
அதற்கு இதர பிற்பட்ட வகுப்பினரிமிருந்து (OBC) கடுமையான எதிர்ப்பு கிளம்பியதாலும்
குப்பை கூட்டும் இந்தப் பணி புனிதமானது என்பதாலும் விகிதாச்சார அடிப்படையில்
அனைத்து சாதியினருக்கும் வேலை வாய்ப்புகள்
பகிர்ந்து அளிக்கப்படும் என நடுவண் அரசு தெளிவு படுத்தி உள்ளதாக தகவல்கள்
கூறுகின்றனவாம். அனைத்து சாதிகளிலும் உள்ள பெண்களுக்கும் இந்த வேலை வாய்ப்பில் 50
சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. மேலும் ஒவ்வொரு
குடும்பத்திலும் உள்ள ஒருவர் இந்த வேலை
வாய்ப்பினை பெறுவதற்கு ஏற்ப சுழற்சி முறையும் கடைபிடிக்கப்படுமாம். இளைஞர்கள் இல்லாத
குடும்பங்களிலிருந்தும் ஒருவர் கட்டாயமாக இந்தப் பணியை செய்ய வேண்டுமாம். அவர்கள்
பிற பணிகளில் இருந்தாலும்கூட டெப்புடேஷனில் வந்து இப்பணியை மேற்கொள்ள வேண்டுமாம்.
தெருவோர
சாக்கடைகளை சுத்தம் செய்தல், ஊராட்சி – நகராட்சி, ரயில் நிலைய – பேருந்து நிலைய
கழிவறைகளை கழுவுதல், பாதாள சாக்கடை கழிவு நீர்த்தொட்டிகளில் மூழ்கி அடைப்புகளை
அகற்றுதல் போன்ற வேலைகளைச் செய்ய தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மூன்று மாதம் முறையான
பயிற்சி அளிக்கப்படுமாம். ஓராண்டு வேலை செய்த பிறகு இவர்கள் அனைவரும்
விடுவிக்கப்படுவார்களாம். இவர்கள் விட்டுச் சென்ற பிறகு, இப்பணியை தொடர மேற்கண்டவாறு
புதியவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்களாம்.
ReplyDeleteசிறந்த கருத்துப் பகிர்வு
தொடருங்கள்
நன்றி!
ReplyDelete