பதிவெழுதி
ஒரு மாதகாலத்திற்கு மேல் ஆகிவிட்டது. கடந்த ஒரு மாத காலத்தில் தட்ப வெட்ப
நிலைகளில், அரசியல் தளங்களில், ஆட்சியாளர்களின் கொள்கைகளில், சமூக நடப்புகளில் இமயம்
முதல் குமரி வரை பல்வேறு பாரிய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. மேற்கண்ட மாற்றங்கள்
குறித்து அன்றாடம் ஒரு பதிவு எழுதி இருந்தால்கூட குறைந்தது ஒரு முப்பது பதிவுகளாவது
எழுதி இருக்க முடியும். என்ன செய்ய! கணினிக் கோளாறு என்னைக் கட்டிப்போட்டுவிட்டது.
கனமழை
மற்றும் வெள்ளப் பெருக்கினால் கடந்த ஆண்டு
உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட சேதாரம் அதைத் தொடர்ந்து முடுக்கிவிடப்பட்ட மீட்புப் பணிகளைப்
போல கடந்த மாதம் ஜம்மு - காஷ்மீரத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளப்
பெருக்கின் போது முடுக்கிவிடப்பட்டதா
என்கிற கேள்வி என்னுள் மட்டுமள்ள காஷ்மீரத்தின் சேதாரத்தை உற்று நோக்கியவர்கள்
அனைவருக்குள்ளும் எழுந்திருக்கும் என்றே கருதுகிறேன். காஷ்மீர் சேதாரத்திற்கு
நிவாரணப் பொருட்களை சேகரிக்க முனைந்த பல்கலைக்கழக பேராசியர்கள் மீது பீகாரில் சங்பரிவார
‘தேசபக்தர்கள்’கள் தொடுத்த தாக்குதலின் போது இந்தக் கேள்விக்கான விடை கிடைத்தது மட்டுமல்ல
‘பாரதத்தின்’ ‘சகோரத்துவ’ லட்சணமும் பளிச்சென வெளிப்பட்டது. வேண்டுதல்
நிறைவேறினால் கோவிலுக்குச் சென்று காணிக்கை செலுத்தும் செல்வந்தன் வெளியே வரும்
போது வாசலில் தட்டேந்தும் பிச்சைக்காரர்களின் தட்டில் வீசப்படும் சில்லரைகள்
போலத்தான் சியாச்சின் சென்று திரும்பிய குஜராத்தின் முன்னாள் கோமகனும் பாரதத்தின்
இந்நாள் பிதாமகனும் கொஞ்சம் சில்லரைகளை பனிமலையின் வாசலிலும் வீசிவிட்டு
வந்துள்ளார்.
வடக்கே
பனிமலை மட்டுமல்ல; சுனாமியால் கொத்துக் கொத்தாய் மக்கள் தென் கோடியில் அன்று மாண்ட
போதும், அதைத் தொடர்ந்து தானே புயல் சீற்றத்தால் தமிழகத்தின் கடலூர் உள்ளிட்ட சில
மாவட்டங்களில் ஒரு தலைமுறை சேதாரம் ஏற்பட்டபோதும்கூட ‘இந்தியாவின்’ லட்சணமும்
இப்படித்தான் இருந்தது.
அக்டோபர்
மாதத்தில் தென்மேற்குப் பருவ மழை முடிவுக்கு வந்து, வடகிழக்கு பருவமழையும் தொடங்கி
விட்டது. வழக்கத்தைவிட இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை குறைவாகப் பெய்துள்ளது என
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள போதும் இந்த மழை குறைவு வரும் காலங்களில்
எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பது பற்றி ஆட்சியாளர்கள் எவரும்
கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இடையே “வூட் வூட்“ புயலும் வந்தது; விசாகப்படடிணத்தை
புரட்டிப் போட்டது. வழக்கத்தைப் போலவே நட்டக் கணக்கும் போடப்பட்டு அடுத்த புயலை
எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு ஆயத்தமாகிவிட்டனர் ஆட்சியாளர்கள்.
வட
கிழக்குப் பருவ மழை தொடங்கிய சில நாட்களிலேயே தமிழகத்தின் 19 மாவட்டங்களில்
கூடுதல் மழை என ரமணன் வாசிக்கும் அறிக்கை மட்டுமே நமக்கு மழை பற்றிய மதிப்பீடைத்
தருகிறது. ஆனால் திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் போதிய மழை
இன்மையால் விவசாய வேலைகள் முடங்கிப் போய் விவசாயிகள் மாடுகளை மேய்த்துக் கொண்டு
எஞ்சிய நேரத்தில் தாயம் ஆடிக் கொண்டிருக்கின்றனர் என்கிற உண்மை எத்தனை பேருக்குத்
தெரியப் போகிறது? வரும் நவம்பரிலும் மழை பொய்த்துப் போனால் இம்மாவட்டங்கள்
வறட்சியின் பிடியிலிருந்து தப்பிக்கவே முடியாது.
‘அக்கினி
பகவானும்’, ‘வருண பகவானும்’ குடியானவனின் வயிற்றில் நெருப்பையும் மண்ணையும்
வறட்சியாய்-புயலாய் மாறி மாறி கொட்டும் போது அவன் எரிந்து போனானா இல்லை புதைந்து
போனானா என எட்டிப் பார்க்கக்கூட நாதி இல்லை.
அரிசி,
பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தால் அதற்கு பெட்ரோல்
- டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டுவார்கள் ஆட்சியாளர்கள். இப்போது பெட்ரோல் -
டீசல் விலை குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலைதான் இதற்குக் காரணம் என்றாலும் விலை
குறைப்புக்கு நாங்கள்தான் காரணம் என ஒரு பக்கம் மார் தட்டுகிறார்களே; பெட்ரோல் -
டீசல் விலை குறைந்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் குறைய வேண்டுமே என
கேள்வி கேட்டால் கள்ள மௌனத்தையே பதிலாகத் தருகிறார்கள் தமிழிசைகள். என்ன செய்ய? ”மாமியார்
உடைத்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்” என சண்ட மாருதம் செய்யும்
தமிழிசைகளிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்!
‘அக்கினி பகவானும்’, ‘வருண பகவானும்’ குடியானவனின் வயிற்றில் நெருப்பையும் மண்ணையும் வறட்சியாய்-புயலாய் மாறி மாறி கொட்டும் போது அவன் எரிந்து போனானா இல்லை புதைந்து போனானா என எட்டிப் பார்க்கக்கூட நாதி இல்லை.----
ReplyDeleteநன்றி!
Deleteசிறந்த திறனாய்வுப் பார்வை
ReplyDeleteதொடருங்கள்
நன்றி!
Delete