Saturday, November 1, 2014

அப்ரண்டிஸ்களும் ஆயுட்கால அடிமைகளும்!



அன்று அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்து ஓலமிட்டவர்கள் இன்று நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு அயல் நாடுகளை நோக்கி ஓடுகின்றனர். ஏற்கனவே இங்கு முதலீடு செய்த நோக்கியாக்கள் கை நிறைய காசு பார்த்துவுடன், நம்பியவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு விண்ணில் பறக்கின்றனர். அன்று பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு பாதை போட்டு கொடுத்தான் காங்கிரஸ்காரன். இன்று அதே பாதையில் பட்டுக் கம்பளம் விரித்து பாதையை செப்பணிட்டுத் தருகிறான் பாரதிய ஜனதா கட்சிக்காரன். எண்ணூர் பாய்லர் ஆர்டரை ‘பெல்’லுக்கு கொடுத்தது சட்ட விரோதம் என சென்னையிலேயே வழக்கு தொடுக்கிறான் சீனாக்காரன். தாராள மயத்தை தடுக்காவிட்டால் தெரு நாய்கூட நம்மை நோக்கி உச்சா அடிக்காது என்பதற்கு ஏதேனும் உத்தரவாதம் உண்டா? மோடி அரசு போகும் வேகத்தைப் பார்த்தால் இனி ஆலைகளும் நமக்கில்லை; ஆயுள் காப்பீடும் நமக்கில்லை என்பது மட்டும் நிச்சயம்.

தொழிற்சாலை ஆய்வாளர்கள், இனி ஆலைகளை ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை; ஆலை முதலாளிகள் ஆன்லைனில் சமர்ப்பிக்கும் தற்சான்றிதழே போதும் என மகுடி ஊதுகிறார் மோடி.

மின் ஆற்றலை பயன்படுத்தாத நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் எண்ணிக்கையை 10 லிருந்து 20 ஆகவும், மின் ஆற்றலை பயன்படுத்தும் நிறுவனங்கள் 20 லிருந்து 40 ஆகவும் உயர்த்திக் கொள்ளவும் மோடி வழிவகை செய்துவிட்டார். இனி இவர்கள் முறையே 19 மற்றும் 39 ஊழியர்களை மட்டுமே நிரந்தரப் பணிகளில் அமர்த்திக் கொண்டு ஏட்டளவில் உள்ள தொழிற்சாலை சட்டங்களிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொள்ளவும் கேள்வி கேட்பாரின்றி ஊழியர்களின் உழைப்பைச் சுரண்டவும் பச்சைக் கொடி காட்டியாகிவிட்டது.

இரவு நேரப் பணிகளில் பெண்களை அமர்த்திக் கொள்ளவும், கடினமான எந்திரங்களில் பெண்களை வேலையில் ஈடுபடுத்தவும் இனி தடை இல்லை என அறிவித்ததன் மூலம் இனி பெண் ஊழியர்களை வரைமுறையின்றி சுரண்டவும் பாதை வகுத்தாகிவிட்டது.

குறைந்த ஊதியத்தில் ஊழியர்களை அமர்த்திக்கொண்டு, அதன்பிறகு மிகை நேரப்பணி செய்தால் கூடுதல் ஊதியம்; அதன் மூலம் அதிக ஊதியம் என்கிற ஆசையை காட்டி ஏற்கனவே ஊழியர்களின் உழைப்பு சுரண்டப்படும் நிலையில் மூன்று மாத காலத்திற்கான மிகை நேரப் பணியை 50 மணியிலிருந்து 100 மணி நேரமாகவும் மற்றும் சில பணிகளில் 75 மணியிலிருந்து 125 மணி நேரமாகவும் மிகைநேரப் பணி நேரத்தை உயர்த்தியதன் மூலம் உழைப்புச் சுரண்டலை  தீவிரப்படுத்தி உள்ளது மோடி அரசு. இனி ஆலைகள் அருகில் இருந்தாலும் ஆறுமாதம் கழித்துதான் வீட்டிற்குப் போகமுடியும். அன்று இந்தியர்கள் பிழைப்பு தேடி கொத்தடிமைகளாக பர்மாவுக்கும் ஆப்ரிக்காவுக்கும் சென்றதைத்தான் இந்த சட்டதிருத்தங்கள் நினைவு படுத்துகின்றன.

ஏற்கனவே நிரந்தரத் தொழிலில் ஒப்பந்த முறையைப் புகுத்தி, உழைப்பைச் சுரண்ட வழி வகுத்தான் கதர் சட்டைக்காரன். ஆனால் உயிர் வாழ்வதற்காக குறைந்த பட்ச கூலிக்கு உத்தரவாதமாவது செய்து வைத்தான் அவன். இன்று ஆன மட்டும் பயிற்றுனர்களை (Apprentice) பயன்படுத்திக் கொள்ள வழி வகுத்துவிட்டான் காவித்துண்டுக்காரன். இனி உழைப்பாளிகள் அனைவரும் செக்கில் பூட்டப்பட்ட அப்ரண்டிஸ் அடிமைகள்கள்தான். அடிமைகள் துவண்டு போகும் போது அவர்கள் உடலில் உயிர் ஒட்டி இருக்க அவ்வப் பொழுது நாவை நனைத்துக் கொள்ள அவர்களுக்கு ஸ்டைபண்டு கொடுப்பார்கள். அதைக்கூட அரசாங்கத்திடமிருந்து முதலாளிகள் ரீபண்டு செய்து கொள்ளலாம். இனி அப்ரண்டிஸ்களுக்கு கால வரையறை ஏதும் கிடையாது. அவர்களின் ஆயுளே இனி பயிற்சிக்கான கால வரையறையாக அமையும். பிறகென்ன? ஈசி சேரில் முதுகை சாய்த்து முட்டைகோஸ் பக்கொடாவை கொரித்துக் கொண்டே “ஐ ஆம் எ பாரத் பாய்! மம்மி, நான் வளர்கிறேனே!” என எலும்பு துருத்தி நரம்பு புடைக்கும் அப்ரண்டிஸ்களை இனி சின்னத் திரையில் காணலாம்.

3 comments:

  1. சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    ReplyDelete
  2. சின்னத்திரையில் இனி ஒவ்வொரு வீடுகளிலும் நேரடியாகக் இனி காணலாம்

    ReplyDelete