Monday, April 6, 2015

அதளபாதாளமும் மன்மத ஆண்டும்!

14.04.2015 அன்று உத்திராயண புண்ணிய காலத்தில் வசந்த ருது, செவ்வாயக்கிழமை,, கிருஷ்ண பட்சம் (தேய்பிறை) தசமி திதி அவிட்ட நட்சத்திரம் 2 ம் பாதம், மகர ராசி, சுபநாம யோகம், பத்திரை கரணம், சித்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில், நண்பகல் 01.50 மணிக்கு கடக லக்னத்தில் கும்ப நவாம்சத்தில் பிறக்கிறதாம் தமிழ் ஆண்டுகளில் இருபத்தொன்பதாக வரும் மன்மத ஆண்டு.

“வெளி நாடுகளில் குறிப்பாக, மேற்கத்திய நாடுகளில் நமது நாட்டின் கௌரவம் உச்ச கட்டத்தை எட்டிவிடும். இரும்பு, தாதுப் பொருட்கள் நிலக்கரி சிமெண்ட் போன்ற தொழில்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடையும். நீதித்துறையில் உன்னதமான மாற்றங்கள் நிகழும். ஆணவத்தால் தலைக்கனம் பிடித்திருந்தவர்களும் பகல் வேஷம் போடுபவர்களும் அதளபாதாளதிற்குத் தள்ளப்படுவார்கள்” என சென்னையைச் சேர்ந்த சோதிடர் கே.சி.எஸ். ஐயர் என்பவர் ஆண்டுப்பலன் கணித்துள்ளார். (வெள்ளிமணி / தினமணி / ஏப்ரல் 03 2015)

இதை ஒரு சோதிடனின் கணிப்பாக மட்டும் ஒதுக்கிவிட முடியாது. இது பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு தொலைக்காட்சி விவாதங்களில் அரசியல் விமர்சகர் என்ற முகமூடியோடு அறிமுகமாகி இன்று பா.ஜ.க பிரமுகராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ராமசுப்பிரமணியன் என்பவரின் கூற்றும் கே.சி.எஸ். ஐயரின் கணிப்பும் வேறு வேறு அல்ல.

பா.ஜ.க வினர் சொல்வது கருத்து! சோதிடன் சொல்வது கணிப்பு.!மொத்தத்தில் இருவரும் சொல்வது பா.ஜ.க ஆட்சியை மனதில் வைத்துதான்.

ஒரு பத்து லட்ச ரூபாய் கோட்டாலேயே ஜோட்டால அடிச்ச மாதிரி மேற்கத்திய நாடுகளில் நமது நாட்டின் கௌரவத்தை ஏற்கனவே நிரூபித்துவிட்டார்கள். புத்தாண்டு பிறப்பதற்குள்ளாகவே முதல் பலன் பலித்துவிட்டது.

நிரக்கரி சுரங்க ஒதுக்கீடு மற்றும் கனிம வளங்களை கொள்ளையடிக்க அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் மலைகளையும் காடுகளையும் ஏற்கனவே ஏலம் போட்டுவிட்டதால் இரும்பு, தாதுப் பொருட்கள் நிலக்கரி சிமெண்ட் போன்ற தொழில்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என்பதையும் நம்பலாம். இதனால் ஆதாயம் அடையப் போவது சாமான்யர்கள் அல்ல; அதானிகளும் அம்பானிகளும் என்பதும் உண்மைதான்.

தொழிலாளர் சட்டங்கள் முதல் நிலம் கையகப்படுத்தும் சட்டங்கள் வரை பல்வேறு சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டு வருவதால் பாதிக்கப்படும் சாமான்யர்கள் நீதி மன்றமே செல்ல முடியாது என்பதால் நீதித்துறையில் உன்னதமான மாற்றங்கள் நிகழும் என்பதையும் நம்பலாம். ஒரு வேளை அடுத்த ஓராண்டுக்குள் இடஒதுக்கீட்டுக்கு ஆப்பு அடிக்கப்பட்டாலும் படலாம். இதை மனதில் வைத்துக் கொண்டுகூட பலன் சொல்லியிருக்கலாம்.

கடைசியாக “ஆணவத்தால் தலைக்கணம் பிடித்திருந்தவர்களும், பகல் வேஷம் போடுபவர்களும் அதளபாதாளதிற்குத் தள்ளப்படுவார்கள்”  என்பது மட்டும் வௌங்கல.

இங்கே ஆணவத்தால் தலைக்கணம் பிடித்தவர்கள் என்று யாரைச் சொல்கிறார்? பகல் வேஷம் போடுபவர்கள் யார்?

இந்த மன்மத ஆண்டில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடக்க வாய்ப்பிருப்பதால் ஆணவத்தால் தலைக்கனம் பிடித்தவர்கள் - பகல் வேஷம் போடுபவர்கள் அதளபாதாளத்திற்கு தள்ளப்படுவார்கள் என்றால் யாரோ சிலருடைய தேர்தல் தோல்வியை மனதில் வைத்துதான் ஐயர் இப்படி சொல்கிறார் என்று புரிந்து கொள்வதா? அப்படியானால் அதளபாதாளத்திற்கு தள்ளப்படப் போவது யார்?

நமக்குத் தெரிந்து ஆணவமும் தலைக்கனமும் பிடித்தவர் என்று பார்த்தால் மக்களின் முதல்வர்தான் இத்தகைய தகுதிகளோடு இருப்பவர். அவர் அதளபாதாளத்திற்குச் செல்ல ஐயர் ஒரு போதும் விரும்பமாட்டார். அப்படியானால் மாறன் சகோதர்களைச் சொல்கிறாரா? பகல் வேஷம் போடுபவர்கள் என்று கலைஞரை மனதில் வைத்து சொல்கிறாரா? இந்த அதளபாதாளத்திற்கு தள்ளப்படுபவர்களை மட்டும் கொஞ்சம் தெளிவுபடச் சொல்லியிருந்தால் வௌங்கியிருக்கும்!

4 comments:

  1. இந்த மன்மத ஆண்டில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடக்க வாய்ப்பிருப்பதால் ஆணவத்தால் தலைக்கனம் பிடித்தவர்கள் - பகல் வேஷம் போடுபவர்கள் அதளபாதாளத்திற்கு தள்ளப்படுவார்கள் என்று ஊத்தவாய் ஐயர் சொல்வது பலிக்கவா போகிறது?????

    ReplyDelete
    Replies
    1. ஐயர் தனது விருப்பத்தைத்தான் ஆண்டுப்பலனாக சொல்கிறார் போலும்! பொதுவாக அரசியல் குறித்து பலன் சொல்பவர்களெல்லாம் தங்களின் விருப்பத்தை சொல்லக்கூடும். அல்லது நிலவுகிற அரசியல் சூழலை புரிந்து கொண்டு அதற்கேற்ப சொல்லக் கூடும்.

      Delete