Saturday, July 11, 2015

கொலைகார மண்டலமாக கொங்கு மண்டலம்!

அந்தந்த வர்ணங்களுக்குள்தான் மணம் செய்து கொள்ள வேண்டும் என மனு விதி வகுத்த காலத்திலேயே நான்கு வர்ணங்களுக்குள் (பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர்) கலப்பு மணங்கள் ஏறாளமாக நடந்துள்ளன. கலப்பு மணம் புரிந்தவர்களின் வாரிசுகள் வர்ண சேர்க்கைக்கு ஏற்ப புதிய சாதிகளாக அறியப்பட்டனர்.

அன்று வர்ணங்களுக்குள் சமத்துவம் இல்லை; ஒவ்வோரு வர்ணமும் படி நிலையில் சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. வர்ணத்தின் நீட்சியாக அமைந்துள்ள இன்றைய பார்ப்பனர் முதல் அருந்ததியர் வரை உள்ள சாதிய அமைப்பு முறையும் படி நிலையில் சமத்துவமின்மையையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. சமத்துவமின்மையே இந்து மதத்தின் சாரமாக இருப்பதால். இந்து மதத்தை ஏற்றுக் கொண்ட எவரும் இந்த சமத்துவமின்மை கோட்பாட்டையே நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

தனக்குக்கீழே உள்ள சாதிக்காரன் தன்னைவிட அதிகம் படித்துவிடக்கூடாது; தன்னைவிட உயர் பதவிகளில் அமர்ந்துவிடக்கூடாது. தன்னைவிட அதிகம் சொத்து சேர்த்துவிடக்கூடாது; தனது வீட்டைவிட உயரமான வீடு கட்டிவிடக்கூடாது; தன்னைவிட அரசியலில் உயர்ந்துவிடக்கூடாது; இப்படித்தான் ஒவ்வொரு சாதிக்காரனும் நினைக்கிறான்.

இத்தகைய மனநிலையில்தான் தென்மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட பள்ளர் சாதி மக்களின் மீதான தாக்குதல்கள் அறங்கேறின. அதன் விளைவு 1990 களில் போக்குவரத்துக் கழகங்கள், சாலைகள், அரசு கட்டடங்கள், தெருக்களுக்கு சூட்டப்பட்டிருந்த தலைவர்களின் பெயர்களை தி.மு.க அரசு நீக்க வேண்டி வந்தது. தீண்டப்படாத சாதியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் பெயரைத்தாங்கிக் கொண்டு பேருந்து ஓடுவதா என்கிற சாதி வன்மமே தென்மாவட்டக் கலவரங்களுக்கு வித்திட்டது.

தனது மகன் தன்னைவிட ஒரு உயர்நிலை சாதிக்காரப் பெண்ணை காதலித்தால் ஏற்றுக் கொள்ளும் ஒருவன் தனது மகள் தன்னைவிட கீழ்நிலை சாதிக்காரப் பையனைக் காதலித்தால் ஏற்க மறுக்கிறான். அதிலும் குறிப்பாக தீண்டப்படாத சாதிப்பையனாக இருந்தால் தனக்குள்ள சாதி பலத்தைக் கொண்டு ஒன்று தனது மகளைக் கொன்று விடுகிறான்; இல்லையேல் தன் மகள் காதலித்த பையனைக் கொன்று விடுகிறான். சாதி பலம் இல்லை எனில் தற்கொலை செய்து கொள்வேன் என மகளை மிரட்டுகிறான். ஆனால் பிற்படுத்தப்பட்ட மற்றும் உயர்நிலை சாதிகளுக்கள் நடக்கும் காதல்கள் இவ்வாறெல்லாம் கொலையில் முடிவதில்லை.

கீழ்நிலை சாதிக்காரப் பையனைக் காதலிக்கும் தனது மகளின் காதலை ஏற்றுக்கொள்ளும் பலர் இருக்கவே செய்கின்றனர். ஆனால் சாதிவெறி அமைப்புகள்/அரசியல் கட்சிகள் தங்களது அரசியல் ஆதாயத்திற்காக இத்தகைய காதலை உடைப்பதை ஒரு தொழிலாகவே செய்து வருகின்றனர்.

இதன் விளைவுதான் இன்று தமிழகத்தில் நடந்தேறிவரும் கௌரவக் கொலைகள்.

வட மாவட்டங்களில் தீண்டப்படாத பறையர் சாதியினர் மீதான வன்னிய சாதி வெறியர்களின் தாக்குதல் இளவரசன் – திவ்யா காதல் விவகாரத்தின் போது மிகக் கொடூரமாக அரங்கேறியது. தீண்டப்படாத பறையர் சாதிப் பையன் வன்னியப் பெண்ணைக் காதலிப்பதா என்கிற ஆதிக்கச் சாதி வெறியே வடமாவட்டக் கலவரங்களுக்கு காரணமாக அமைந்தது.

அமைதியாக, அதே நேரத்தில் மிகவும் வன்மமாக சாதித் தீயை கக்குவதில் கொங்கு வெள்ளாள கவுண்ட சாதி வெறியினர் கைதேர்ந்தவர்கள். வன்னிய கவுண்டப் பையன் வெள்ளாளக் கவுண்டப் பெண்ணைக் காதலித்தாலே ஊர்விலக்கம் செய்யும் இவர்கள் தீண்டப்படாத சாதியைச் சேர்ந்த கோகுல்ராஜை சும்மா விடுவார்களா? இன்று கோகுல்ராஜை கொலை செய்ததன் மூலம் இன்று  கொங்கு மண்டலம் கொலைகார மண்டலமாக  பெயரெடுத்துள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பிற உயர்சாதிக்காரர்கள் கடைபிடிக்கும் தீண்டாமையே இதற்கெல்லாம் காரணம். தீண்டாமை ஒழிக்கப்படவில்லை; அது இன்னும் மிக மூர்க்கமாக நவீன வடிவத்தில் நடைமுறையில் நீடிக்கிறது என்பதையே இன்றைய தமிழகமும் இந்தியாவும் உணர்த்தும் உண்மையாகும்.

No comments:

Post a Comment